சமயம் வளர்த்த சான்றோர் 36: பக்த ஆண்டாள்


கே.சுந்தரராமன்
sundararaman.k@hindutamil.co.in

பன்னிரு வைணவ ஆழ்வார்களுள் ஒருவரான ஆண்டாள், தனது திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகிய நூல்கள் மூலம் வைணவத்தை தழைக்கச் செய்தவர். பூமிப் பிராட்டியின் அவதாரமாகக் கருதப்படும் இவர், இறைவன் மீது கொண்ட பக்தியால், அவருடனேயே இரண்டறக் கலந்தார். திரேதா யுகத்தில் ஜனகன் மகளாகத் தோன்றிய ஆண்டாள், கலியுகத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்தார்.

மதுரைக்கு அருகே உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில், 7-ம் நூற்றாண்டில் விஷ்ணுசித்தர் (பெரியாழ்வார்) என்ற வைணவப் பெரியவர் வாழ்ந்து வந்தார். நந்தவனம் அமைத்து, அதில் பூக்கும் பூக்களைப் பறித்து, மாலையாகக் கோர்த்து, வடபத்ரசாயி பெருமாளுக்கு அணிவிக்கும் சேவையை (திருத்துழாய் / துளசி கைங்கர்யம்) செய்து வந்தார் விஷ்ணுசித்தர்.  

ஓர் ஆடிப்பூர நட்சத்திர தினத்தில் நந்தவனத்தில் பூக்களைப் பறித்துக் கொண்டிருந்தபோது, துளசிச் செடி அருகே ஒரு பெண் குழந்தை இருப்பதைக் கண்டார் விஷ்ணுசித்தர். தனக்காகவே திருமால் அளித்த கொடையாக நினைத்து, குழந்தையை தன் இல்லத்துக்கு கொண்டு செல்கிறார். குழந்தைக்கு ‘கோதை’ என்று பெயர் சூட்டி வளர்த்து வருகிறார்.

இளம் வயதில் இருந்தே, திருமால் மீது அதிக பக்தி கொண்டிருந்தார் கோதை. தன் மகளும், தன்னைப் போலவே சமயம், தமிழ் ஆகியவற்றில் ஆர்வத்துடன் இருப்பதைப் பார்த்து விஷ்ணுசித்தர் மகிழ்ந்தார். கண்ணன் மீது பக்தி, அவர் மீது பாடல்கள் பாடுவது, வைணவப் பெரியோரின் பாடல்களை இசைப்பது என்று இருந்தார் கோதை.  கண்ணனை பேச்சிலும் மூச்சிலும் கொண்டார். கண்ணனை வண்ண மலர்களால் பூஜித்தார். தனது தோழிகளுடன் தினம் காலையிலும் மாலையிலும் வடபத்ர சாயி பெருமாளை வணங்கி வந்தார் கோதை.  

தந்தையுடன் நந்தவனம் சென்று, பூக்களைப் பறித்து மாலையாகத் தொடுத்து, வடபத்ரசாயி பெருமாளுக்கு அணிவித்து மகிழ்ந்த கோதை, கண்ணனின் உருவத்தை மனதில் பதித்துக் கொண்டார். தினமும் மாலை கோர்த்து பெருமாளுக்கு அணிவிக்கிறோமே, ஒருநாள் நாம் அந்த மாலையை அணிந்து பார்த்தால் என்ன என்று நினைத்து, தந்தைக்கு தெரியாமல் ஒருநாள், தான் வடபத்ர சாயி பெருமாளுக்காக தொடுத்த மாலையை அணிந்து கொள்கிறார் கோதை. தந்தை வந்துவிடப் போகிறாரே என்று நினைத்து, உடனே அந்த மாலையை எடுத்து, பூக்கூடையில் வைத்து விடுகிறார்.

அன்றைய தினம் முதல், பெருமாளுக்கு தொடுத்த மாலையை, முதலில் தான் அணிந்து பார்ப்பதும், பிறகு பூக்கூடையில் வைப்பதும், அந்த மாலையை, பெரியாழ்வார் எடுத்துச் சென்று வடபத்ர சாயி பெருமாளுக்கு அணிவிப்பதும் தொடர்கிறது. வடபத்ர சாயி பெருமாளும், சூடிக் கொடுத்த சுடர்க்கொடியின் பூமாலையை, விருப்பத்துடன்  ஏற்றுக் கொண்டார்.  

கிருஷ்ண ஜெயந்தி (கோகுலாஷ்டமி) அன்று ஊரே திருவிழாக் கோலம் பூண்டது. தன் மனதுக்குப் பிடித்த கண்ணனுக்கு பிறந்தநாள். பட்டாடை அணிந்திருந்த கோதை, பூக்கூடையில் இருந்த மாலைகளை ஒவ்வொன்றாக அணிந்து மகிழ்ந்து, தன்னை மறந்த நிலையில் இருந்தார். அப்போது, அங்கு வந்த பெரியாழ்வார், தன் மகளின் நிலை கண்டு அதிர்ந்தார். “என் கோவிந்தனுக்கு கோதையால் அபச்சாரம் நேர்ந்து விட்டதே” என்று மனம் வருந்தினார். கோதையைக் கடிந்து கொண்டார்.

ஒன்றும் செய்வதறியாமல், வேறு மாலைகளை தொடுத்து எடுத்துக் கொண்டு, வடபத்ர சாயி பெருமாள் கோயிலுக்குச் சென்றார் பெரியாழ்வார். மாலைகளை பெரியாழ்வாரிடம் இருந்து பெற்றுக் கொண்ட அர்ச்சகர், மாலைகளில் வழக்கமாக உள்ள பொலிவும் நறுமணமும் இல்லையே என்று கேட்டார். பெரியாழ்வாருக்கும் அவ்வாறே தோன்றியது. ஆனால், நடந்த சம்பவத்தை அவரிடம் கூற இயலாதே என்று நினைத்து, அச்சம்பவத்துக்காக வடபத்ர சாயி பெருமாளிடம் வருத்தம் தெரிவித்தார் பெரியாழ்வார்.

அன்றிரவு பெரியாழ்வாரின் கனவில் தோன்றிய பெருமாள், “கோதை சூடிக் கொடுத்த மாலையே எனக்குப் பெருமை சேர்ப்பது. அவற்றையே நான் விரும்புகிறேன்” என்று அருள்கிறார். திடுக்கிட்டு எழுந்த பெரியாழ்வார், அருகில் உறங்கிக் கொண்டிருந்த கோதையை எழுப்பி தான் கண்ட கனவைப் பற்றி கூறினார். மேலும், “என்னை மன்னித்துவிடு. உன்னைக் கடிந்து கொண்டேன். நீ மலர் மங்கையின் அவதாரம். ‘சூடிக் கொடுத்த சுடர்க்கொடி நாச்சியார்’ என்று உன்னை இனி இந்த உலகம் போற்றட்டும்” என்றார்.  

தான் சூடிக் கொடுத்த  மாலையை ஏற்ற அனந்தனை நினைத்து மகிழ்ந்தார் கோதை. அன்று முதல் கோதை, பூமாலைகளை தொடுத்து, சூடிக் கொடுத்த பின்னர், பெரியாழ்வார் அவற்றை வடபத்ர சாயி பெருமாள் கோயிலுக்கு எடுத்துச் சென்று, அவருக்கு அணிவித்து மகிழ்வது வழக்கமாயிற்று.

ஆழ்வார்கள், பரமனின் மீதுள்ள பக்தியால், நாயகி பாவத்தில் பாமாலைகள் தொடுத்து வணங்குவது உண்டு. ஆனால் கோதை, நாயகியாகவே இருந்து பரமன் மீது பாமாலைகள் தொடுத்தார். தோழிகளோடு சேர்ந்து மார்கழி மாதத்தில் கார்த்தியாயினி நோன்பு இருந்தார். ஸ்ரீவில்லிபுத்தூரை ஆயர்பாடியாக நினைத்து, தோழியரை கோபியராக பாவித்து, 30 நாட்களும் நோன்பிருந்து, 
30 பாடல்கள் (திருப்பாவை) புனைந்து தாமோதரனுக்கு தூது விடுத்தார்.  

மணப்பருவம் அடைந்த கோதைக்கு மணம் முடிக்க எண்ணினார் பெரியாழ்வார். அப்போது, நாராயணனே தன் மணாளன் என்று உரைக்கிறார் கோதை. கோதையின் மனநிலையை உணர்ந்த பெரியாழ்வார், அவரை அழைத்துக் கொண்டு, தல யாத்திரை புறப்படுகிறார். இருவரும் திருமாலிருஞ்சோலை, திருவேங்கடம் என்று அனைத்து திருமால் தலங்களுக்கும் சென்று திருமாலை வணங்குகின்றனர். திருவரங்கத்துக்கு வந்தபோது, கோதையின் மகிழ்ச்சியைக் கண்ட பெரியாழ்வார், அரங்கனே கோதையின் மணாளன் என்று முடிவு செய்கிறார். அரங்கன் தரிசனத்துக்குப் பிறகு இருவரும் வில்லிபுத்தூர் திரும்புகின்றனர்.  

பெரியாழ்வார் கோதையிடம், “மணிவண்ணன் 108 தலங்களில் கோயில் கொண்டுள்ளார். இதில் நீ எத்தலத்து பெருமாளை நாயகனாக கைத்தலம் பற்ற விரும்புகின்றாய்” என்று கேட்கிறார். ஒவ்வொரு தல பெருமாளைப் பற்றியும் தனக்குக் கூறும்படி பெரியாழ்வாரிடம் வேண்டுகிறார் கோதை.  

அதன்படி ஒவ்வொரு திவ்யதேசத்து பெருமாளின் அருங்குணங்களை, கோதைக்கு எடுத்துரைக்கிறார் பெரியாழ்வார். திருவரங்கத்து பெருமாளைப் பற்றி பெரியாழ்வார் கூறத் தொடங்கியதும், தன்னிலை மறந்தார் கோதை. குடதிசை முடியில் வைத்து, குணதிசை பாதம் நீட்டி, வடதிசை பின்பு காட்டி, தென்திசை இலங்கை நோக்கி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அரங்கனை மனதில் இருத்தினார் கோதை. அரங்கனின் வடிவழகை இதயத்தில் எண்ணி மகிழ்ந்தார் கோதை. அவர் நினைவாகவே துயில் கொண்டார். உறக்கத்தில் கனவு கண்டார்.

மறுநாள் காலை களிப்பு பொங்க துயிலெழுந்தார் கோதை. தான் கண்ட கனவைப் பற்றி தன் தோழிகளிடம் கூறச் சென்றார். கோதையின் மகிழ்ச்சியைக் கண்ட தோழியர், அவரது குதூகலத்துக்கான காரணம் குறித்து வினவினர்.  

“தோழியரே! நான் ஒரு கனவு கண்டேன். வாரணமாயிரம் சூழ வலம் செய்து, நாரணன் நம்பி நடக்கின்றான், எனக்கெதிரே பூரண பொற்குடம் வைத்துப் புறம் எங்கும் தோரணம் நாட்டக் கனாக் கண்டேன்” என்று தொடங்கி 143 பாசுரங்களை ஒவ்வொன்றாகப் (நாச்சியார் திருமொழி) பாடினார் கோதை.  

கோதையின் பாசுரங்களில் சொக்கிப் போன தோழிகள், அவரது மகிழ்ச்சிக்கான காரணத்தை உணர்ந்து கொண்டனர். இவ்வாறு சில காலம் சென்றதும் கோதையின் நிலை குறித்து கவலை கொண்டார் பெரியாழ்வார். தக்க பருவத்தில் கோதைக்கு திருமணம் செய்விக்க வேண்டும் என்ற நினைவில் மூழ்கினார்.

அன்று இரவு பெரியாழ்வாரின் கனவில் தோன்றிய பள்ளி கொண்ட பரமன், “பக்தா! இனி கோதை குறித்த கவலை உமக்கு வேண்டாம். அவள் என் மனதை ஆண்டாள். அவளை மணம் முடிக்க யாம் திருவுள்ளம் கொண்டோம். அவளை அழைத்துக் கொண்டு திருவரங்கம் வரவும்” என்று அருளினார்.  

தனது கனவு குறித்து ஆண்டாளிடம் தெரிவித்தார் பெரியாழ்வார். இருவரும் திருவரங்கம் செல்ல ஆயத்தமாயினர். பெரியாழ்வார் கனவில் தோன்றிய பரந்தாமன், திருவரங்கத்து கோயில் கைங்கர்யக்காரர்களின் கனவிலும் தோன்றி, “அன்பரே! எமக்கு திருத்துழாய் கைங்கர்யம் செய்துவரும் பக்தர் விஷ்ணுசித்தர், தமது திருமகளுடன் இங்கு வரவுள்ளார். அவரது மகளை யாம் மணம் புரிய உள்ளோம். இன்னிசை வாத்தியங்களுடன், பூரண பொற்கும்ப கலசங்கள் ஏந்தி, அவர்களை எமது தலத்துக்கு அழைத்து வருவீர்களாக” என்று பணித்தார். விண்ணவர் கோமான் (இந்திரன்), பாண்டிய மன்னர் வல்லப தேவன் கனவிலும் தோன்றி, ஆண்டாள் திருமணம் குறித்து தெரிவித்தார் பள்ளி கொண்ட பெருமாள்.  

வழக்கம்போல் வடபத்ர சாயி பெருமாள் கோயிலுக்குச் சென்று திரும்பிய பெரியாழ்வாரும் ஆண்டாளும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். அவர்கள் வசிக்கும் தெருவே திருவிழாக் கோலம் பூண்டு காணப்பட்டது. ஒருபுறம் வல்லப தேவன் தன் நால்வகைப் படைகள் புடைசூழ, முத்துப் பல்லக்கு, ஒட்டகம், யானை, குதிரைகளுடன் இவர்களது வரவை எதிர்நோக்கிக் காத்திருந்தார். மறுபுறம் திருவரங்கத்து கோயில் அறங்காவலர்கள், வேத விற்பன்னர்கள், திருத்தொண்டர்கள், கோயில் பிரசாதங்களுடன், மேள வாத்தியங்கள் முழங்க, வேதங்கள் ஓதியபடி, அனந்தனின் ஆயிரம் நாமாக்களை கூறியவண்ணம், இவர்களது வரவை எதிர்நோக்கி காத்திருந்தனர்.

அனைவரையும் வரவேற்ற பெரியாழ்வார், அவர்கள் வந்ததற்கான காரணம் குறித்து வினவினார். பெரியாழ்வாரையும் ஆண்டாளையும் திருவரங்கம் அழைத்து வருமாறு, அரங்கன் இட்ட கட்டளையைக் குறித்து கூறியதும், பெரியாழ்வாரும் ஆண்டாளும் அளவிலா ஆனந்தம் அடைந்தனர்.  

புனித நதிகளின் நன்னீர் கொண்டு, ஆண்டாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. பள்ளி கொண்ட பெருமாள் அணிந்திருந்த மாலைகள், ஆண்டாளுக்கு சூட்டப்பெற்றன. நவரத்தின மாலைகள், முத்து மாலைகள் சூட்டப்பட்டன. தோழியர் ஆண்டாளுக்கு ஆரத்தி எடுத்து மகிழ்ந்து, அவரை முத்துப் பல்லக்கில் எழுந்தருளச் செய்தனர். பெரியாழ்வாரும் ஒரு பல்லக்கில் ஏறிக் கொண்டார்.  

ஸ்ரீவில்லிப்புத்தூரில் தொடங்கிய ஆண்டாளின் மணவிழா ஊர்வலம், திருவரங்கத்தை வந்தடைந்தது. மேள தாள இன்னிசை வாத்தியங்கள், வேதங்கள் முழங்க, பல்லக்கில் இருந்து இறங்கிய ஆண்டாள், அரங்கன் முன் அழைத்து வரப்பட்டார். அரங்கனை நோக்கிய ஆண்டாள், பெரியாழ்வாரை வணங்கி எழுந்தார். சீரடி சிலம்புகள் ஆர்க்க, திருக்கர வளையல்கள் குலுங்க, மைவிழிகள் அரங்கனை கண்டுகளிக்க, அரங்கனை நோக்கி நடந்தார் ஆண்டாள்.  

அரங்கன் அருகே சென்று, தான் சூடிக்கொண்டிருந்த ஒரு மாலையை எடுத்து, அரங்கனுக்கு சூட்டினார் ஆண்டாள். கண்களில் நீர்மல்க, குன்றம் ஏந்தி ஆயர்குலம் காத்த அமரர் தலைவனான திருவரங்கத்து அரவணையில் பள்ளி கொண்ட மாயோனின் பாதமலர் வருடி, அரங்கனோடு ஐக்கியமானார் ஆண்டாள்.  

ஆண்டாளின் திருமணத்துக்குப் பிறகு ஸ்ரீவில்லிபுத்தூர் திரும்பிய பெரியாழ்வார், வடபத்ர சாயி பெருமாள் கோயிலில், ஆண்டாளுக்கு விக்கிரக பிரதிஷ்டை செய்ய எண்ணினார். தனது விருப்பத்தை பாண்டிய மன்னர் வல்லபதேவனிடம் தெரிவிக்க, கொற்றவனும் அதை சிரமேற்கொண்டு செயல்படுத்தினார்.  திருவரங்கம், திருமாலிருஞ்சோலை, திருக்கண்ணபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர், திருவேங்கடம், துவாரகை, வடமதுரை, திருவாய்ப்பாடி, திருப்பாற்கடல் ஆகியவை, ஆண்டாள் நாச்சியாரால் பாடப்பெற்ற தலங்கள் ஆகும்.  

வேதாந்த தேசிகர், ஆண்டாளைப் போற்றி 29 ஸ்லோகங்கள் கொண்ட ‘கோஸ்துதி’ பாடியுள்ளார். அனைத்து வைணவக் கோயில்களிலும், ஆடிப்பூர உற்சவம், போகி திருக்கல்யாண வைபவம், திருவாய்மொழி, நாச்சியார் திருமொழி சேவாகாலம் ஆண்டு தோறும் நடைபெறுகின்றன.  

ஆண்டாள் திருவடிகளே சரணம்!

x