வெடிக்கப்போகுது கோடநாடு டைம் பாம்!- செல்வப்பெருந்தகை சூசகம்


கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் பதவிக்குக் கடும் போட்டி நடந்தபோது, எளிதாக அந்த நாற்காலியில் உட்கார்ந்தவர் செல்வப் பெருந்தகை. கோடநாடு கொலை - கொள்ளை விவகாரத்தை வைத்து அதிமுகவுக்குக் குடைச்சல் கொடுப்பதில், திமுகவினரை விட ஆர்வமாக இருக்கும் அவருடன் ‘காமதேனு’ இதழுக்காகப் பேசினோம்.

கோடநாடு பிரச்சினையை சட்டப்பேரவையில் எழுப்பியிருக்கிறீர்கள். அது மரபா?

கோடநாடு வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. நீதிமன்றத்தில் உள்ள வழக்கைச் சட்டமன்றத்தில் விவாதிக்கக் கூடாது என்று விதி இருப்பது எல்லோருக்கும் தெரியும்தான். நாங்களாக அதற்குள் போகவில்லை. கடந்த வாரம் முன்னாள் முதல்வரும், இன்றைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி திடீரென்று கோடநாடு வழக்கு பற்றிய பதாகையைக் கையில் ஏந்தியபடி சட்டமன்றத்துக்கு வந்தார். மற்ற அதிமுக உறுப்பினர்களும் அவருடன் சேர்ந்துகொண்டு, ‘கோடநாடு விவகாரத்தில் தவறு நடக்கிறது, கோடநாடு விவகாரத்தில் கைதுசெய்ய முயற்சி, எங்களையும் குற்றவாளியாக்க முயற்சி’ என்று கோஷம் போட்டார்கள்.

எடப்பாடி பழனிசாமி கோடநாடு பற்றி சட்டமன்றத்தில் பேசுவதற்கும் முயற்சி செய்தார். தொடர்ந்து ‘கோடநாடு... கோடநாடு!’ என்று அவர்கள் கூக்குரலிட்டார்கள். அவைத் தலைவர் பேச அனுமதிக்கவில்லை. அதிமுகவினர் வெளிநடப்பு செய்து கோஷமிட்டார்கள். தரையில் உட்கார்ந்து மறியல் செய்தார்கள். ஆளுநரைச் சந்தித்தும் புகார் கொடுத்தார்கள். பொதுவெளியில் பத்திரிகையாளர் களைச் சந்தித்தார்கள். அதனால் தான் நாங்களும் கோடநாடு விவகாரத்தை சட்டமன்றத்தில் பேசவேண்டியதாகிவிட்டது.

இவ்விஷயத்தில் நீங்கள் இத்தனை ஆர்வம் காட்டுவது ஏன்?

இதுவரையில் இந்த விவகாரத்தில் என்னுடைய பங்கு ஏதும் இல்லை. கடந்த 20-ம் தேதி ராஜீவ் காந்தி பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, கீழே இறங்கும்போது பத்திரிகையாளர்கள், “கோடநாடு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி என்ன நிலைப்பாடு எடுக்கப்போகிறது?” என்று என்னிடம் கேட்டார்கள். “அதிமுகவினர் தான் கோடநாடு பிரச்சினையை எழுப்புகிறார்கள், எனக்கு முழுமையாகத் தெரியவில்லை. ஆனால், அவர்கள் பதற்றமாக இருப்பது தெரிகிறது. எனவே, இதை நாங்கள் சட்டமன்றத்தில் எழுப்புவோம்” என்று சொன்னேன். அதன்படிதான் விதி எண் 55-ன் கீழ் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தோம். “எதற்கு எதிர்க்கட்சித் தலைவர் பதற்றமடைகிறார், என்ன பிரச்சினை, ஏதோ சொல்ல வருகிறார், ஆனால், அதை முழுமையாகச் சொல்லவில்லை. ஆளுநரைப் பார்க்கிறார், பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறார்... இது விஷயமாக நாம் விவாதிக்க வேண்டும். முன்னாள் முதல்வர் வீட்டில் நடந்த கொலை - கொள்ளை சம்பவம் என்பதால் இதுபற்றிய உண்மைகளை நாட்டு மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்” என்றேன்.

உடனே பேரவைத் தலைவர், “இல்லை இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறது. உங்கள் கோரிக்கை குறித்து ஆய்வுசெய்ய 7 நாட்கள் தேவை. சட்டமன்றம் தொடர்ந்து நடைபெறுவதால் நேரம் இருக்கிறது. பார்க்கலாம்” என்று சொன்னார். அதோடு நானும் விட்டுவிட்டேன். ஆனால், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர்களைக் கூப்பிட்டு, வாய்க்கு வந்ததை எல்லாம் பேசினார். “அச்சுறுத்துகிறார்கள், மன உளைச்சலைத் தருகிறார்கள், பயமுறுத்துகிறார்கள், இந்த விவகாரத்தை விவாதத்துக்கே எடுக்கக் கூடாது” என்றெல்லாம் சொன்னார். அவர்களது பதற்றமும், படபடப்பும் இதில் ஏதோ தவறு நடந்திருக்கிறது என்று மக்களுக்கு மேலும் மேலும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன.

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் உங்களின் தனிப்பட்ட கருத்து என்ன?

இதில் எடப்பாடி பழனிசாமிக்கு நேரடித் தொடர்பு இருக்கிறதா, இல்லையா என்று புலனாய்வுத் துறைதான் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டும். நாங்கள் எப்படிச் சொல்ல முடியும்? நான் அதை நேரில் பார்த்தவன் இல்லையே? ஆனால், நடப்பதை எல்லாம் பார்க்கிறபோது ஒரு க்ரைம் நாவல் போல மர்மமாகத், திகிலாகப் போய்க்கொண்டிருக்கிறது. கொலை, கொள்ளை, அதில் ஈடுபட்டவர்களின் மர்ம மரணம், விபத்து ஏற்படுத்தப்பட்ட விதம், தற்கொலை என எல்லாமே எதோ நடந்திருக்கிறது என்று எண்ண வைக்கின்றன.

இதுதொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் ஏதோ உண்மையைத் தமிழ்நாடு அரசு சார்பில் சொல்லப்போகிறார்கள் என்று தோன்றுகிறது. அவர்கள் என்ன சொல்லப்போகிறார்கள் என்று பார்ப்போம். காவல் துறை மானியமும் அடுத்த வாரம் வரப்போகிறது. அதில் நானும் பேசுவேன். முதல்வரும் பதிலுரை ஆற்றுவார். நடந்தது க்ரைம் நாவல் என்றால், வெடிக்கப்போவது டைம் பாம் போலத் தெரிகிறது. வெயிட் அண்ட் சீ!

எல்லாக் கட்சிகளிலும் உட்கட்சிப் பிரச்சினைகள் உண்டு என்றாலும், பாஜகவில் ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுக்க பாலியல் விஷயங்களைக் கையில் எடுக்கிறார்களே. இதுபற்றி உங்கள் கருத்து?

இது இங்கே மட்டுமல்ல, ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜக தலைவர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கள் அதிக அளவில் இருக்கின்றன. தமிழ்நாட்டில் இன்னும் மோசமாக இருக்கிறது. இதுதொடர்பாக வெளியாகிற வீடியோ, ஆடியோ எல்லாம் எந்தளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. அது உண்மையாக இருந்தால் பொதுவாழ்க்கைக்கு இதெல்லாம் அழகில்லை என்பதை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.

தமிழக பாஜகவில் தலைவர்களுக்குத் தட்டுப்பாடு இருப்பது தெரிகிறது. ஆனால், ப.சிதம்பரம், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசர், தங்கபாலு என்று நிறைய தலைவர்கள் இருந்தும் அவர்களுக்கு அசைன்மென்ட் எதுவும் கொடுக்காமல் காங்கிரஸ் கட்சி சும்மா வைத்திருக்கிறதே? கட்சியை வலிமைப்படுத்த அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளவில்லையே என்ற வருத்தம் உங்களுக்கு இருக்கிறதா?

காங்கிரஸ் கட்சி இப்போதும் வலிமையாகத்தான் இருக்கிறது. அதில் மாற்றுக் கருத்து ஏதும் கிடையாது. 50 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாவிட்டாலும்கூட எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கட்சிக்காக உழைக்கிற தலைவர்களும், தொண்டர்களும் நிறைய இருக்கிறார்கள். குழு அரசியல்தான் காங்கிரஸ் கட்சி தேக்க நிலையில் இருப்பதற்குக் காரணம் என்று தோன்றுகிறது. இந்தக் குழு அரசியலை நிராகரிக்க வேண்டும்!

தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய கட்சி இனி பாஜகதான் என்கிறார் அண்ணாமலை. இதை ஏற்கிறீர்களா?

சட்டமன்ற உறுப்பினர்கள் அடிப்படையில் பார்த்தால் தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி காங்கிரஸ்தான். வாக்கு சதவீத அடிப்படையில் பார்த்தாலும் காங்கிரஸ்தான் பெரிய கட்சி. சும்மா தன்னுடைய கட்சியினரை உற்சாகப்படுத்துவதற்காக அண்ணாமலை அப்படிப் பேசியிருப்பார் என்று நினைக்கிறேன்.

புதிய தமிழகம் கட்சியில் சில காலம் இருந்தவர் நீங்கள். ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட் போல பேசிக்கொண்டிருந்த கிருஷ்ணசாமி இப்போது ஆர்எஸ்எஸ்காரர் மாதிரி பேசுவதாகச் சொல்கிறார்களே. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

நான் அவரது சமீபத்திய பேச்சுக்கள் எதையும் கேட்கவில்லை. கேட்டுப் பார்த்த பிறகு கருத்துச் சொல்கிறேன்.

x