பல்லக்கில் பவனி வந்த மதுரை ஆதீனம்!- முடிசூட்டிய நாளிலேயே வெடித்த சர்ச்சை


கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

மதுரை ஆதீன மடத்தின் 292-வது ஆதீனமாக இருந்த அருணகிரிநாத சுவாமிகள் மறைவைத் தொடர்ந்து, அடுத்த ஆதீனமாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த பரமாச்சாரிய தேசிக சுவாமிகள் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார். அருணகிரிநாத சுவாமிகள் காலத்தில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய மதுரை ஆதீனம், இப்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது.

ஆகஸ்ட் 23-ல் நடந்த முடிசூட்டு விழாவில் ஞானசம்பந்த பரமாச்சாரியருக்கு தருமை ஆதீனம் வில்வ இலைகளால் கிரீடம் செய்து முடிசூட்ட, திருவாடுதுறை, பேரூர், திருப்பனந்தாள் உட்பட பல்வேறு சைவ மடங்களின் மடாதிபதிகள் கலந்துகொண்டு புதிய ஆதீனத்தை வாழ்த்தினார்கள். சற்று தாமதமாக வந்த குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பீடத்தில் இருந்த மதுரை ஆதீனத்துக்கு நின்றபடியே பெரிய மாலை மற்றும் பட்டு அங்கவஸ்திரத்தை அணிவித்து வாழ்த்தினார். அதை உட்கார்ந்தபடியே ஆதீனம் பெற்றுக்கொண்டதைக் கண்டு, “பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்கத் தெரியாதவரா இருக்காரே” என்று குன்றக்குடி பக்தர்கள் முணுமுணுத்தார்கள்.

போதாக்குறைக்கு, மாலையில் ஆதீனம் பல்லக்கில் பவனி வந்ததும் பல்வேறு தரப்பினர் மத்தியில் விமர்சனத்துக்கு வழிவகுத்
திருக்கிறது. 292-வது ஆதீனத்தின் உடல் அடக்கத்துக்காக எடுத்துச் செல்லப் பயன்படுத்தப்பட்ட அதே பல்லக்கு சீரமைக்கப்பட்டு புதிய பதாகைகள், அழகிய துணி வேலைப்பாடு களுடன் புதிய ஆதீனத்துக்காகத் தயார் செய்யப்பட்டிருந்தது. அதில் அவர் ஏறிக்கொண்டதும், மீனாட்சி அம்மன் கோயிலின் நான்கு ஆடி வீதிகளிலும் அவரைத் தூக்கிக்கொண்டு வலம் வந்தார்கள் ஆதீன பக்தர்கள். தோள் வலி காரணமாக, அவ்வப்போது பல்லக்குத் தூக்கிகள் சுழற்சி முறையில் மாறிக்கொண்டார்கள்.

இந்நிலையில், திராவிடர் விடுதலைக் கழகம் இதைக் கடுமையாக விமர்சித்திருக்கிறது. கழகத்தின் மதுரை மாவட்ட நிர்வாகி கா.தமிழ்பிரபாகரன் இதுகுறித்துக் கூறுகையில்,  “யாரும் யாரைவிடவும் உயர்ந்தவரும் இல்லை. யாருக்கும் யாரும் தாழ்ந்தவரும் இல்லை. முந்தைய மதுரை ஆதீனம் அப்படித்தான் வாழ்ந்தார். இஸ்லாமியர்களையும், ஒடுக்கப்பட்டவர்களையும் அவர் சரிநிகர் சமானமாக நடத்தியதால்தான், சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து எல்லோரும் அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். நாத்திக அமைப்புகளைச் சேர்ந்தோரும் இரங்கல் தெரிவித்தோம். அவர் ஆதீனமாக இருந்த காலம்வரையில், மதுரை வீதிகளில் பல்லக்கில் பவனி வந்தது கிடையாது. காரில்தான் பயணம் செய்வார். ஆனால், புதிய ஆதீனம் மனிதர்களைத் தூக்கச் சொல்லி பல்லக்கில் அமர்ந்து பயணம் செய்தது சரியான நடைமுறை அல்ல. அது மதுரை ஆதீன வழக்கமாகவும் தெரியவில்லை. அவரது இந்தச் செயலுக்காக எங்கள் கண்டனத்தைப் பதிவு செய்கிறோம். இன்னொரு முறை அவர் பல்லக்கில் பயணித்தால், நாங்கள் போராட்டம் நடத்துவோம். 2000-ல் தருமபுரம் ஆதீனத்தின் புதிய ஆதீன கர்த்தராகப் பொறுப்பேற்ற மாசிலாமணி தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் இதேபோல பல்லக்கில் பட்டணப் பிரவேசம் செல்லவிருப்பதாக அறிவித்தபோது, அதற்கு எதிராக திராவிடர் கழகம் போராட்டம் அறிவித்தது. உடனே, அவர் அதை ரத்து செய்துவிட்டார். அந்த ஆதீனம்தான் ஞானசம்பந்த பரமாச்சாரியருக்கு முடிசூட்டியிருக்கிறார். எனவே, இது அறியாமல் நடந்ததாகச் சொல்ல முடியாது” என்றார்.

இதுகுறித்து மதுரை ஆதீனத்தின் செய்தித் தொடர்பாளரும், வழக்கறிஞருமான ஜெயச்சந்திரனிடம் கேட்டபோது, “புதிய ஆதீனங்கள் முடிசூட்டிக்கொண்டதும் சாமி தரிசனத்துக்குப் பல்லக்கில் செல்வது ஆயிரம் ஆண்டு காலப் பழக்கம். அதன்படிதான் சந்நிதானம் பல்லக்கில் சென்றார். மீனாட்சி அம்மன் கோயிலுக்கும் ஆதீன மடத்துக்கும் இடையே 100 மீட்டர் தொலைவுதான் இருக்கும். தொலைதூரப் பயணத்திற்கு அவர் பல்லக்கில் சென்றாலோ, அதைத் தூக்கும் பணியில் பக்தர்களை ஈடுபடுத்தினாலோ சங்கடம் தரும் செயல் என்று சொல்லலாம். இது ஆதீனச் சம்பிரதாயம். அதுவும்கூட விருப்பமின்றிதான் அவர் பல்லக்கில் பயணம் செய்தார்” என்றார்.

மதுரை ஆதீன மடத்தையும் சர்ச்சைகளையும் பிரிக்கவே முடியாது போலும்!

படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

x