முடிவுக்கு வந்தது மதுரை கலைஞர் நூலக சர்ச்சை


பென்னி குவிக் சில காலம் வாழ்ந்ததாக கூறப்படும் கட்டிடத்தை இடித்துவிட்டு கலைஞர் நூலகம் கட்டுவதா என்று அதிமுக எதிர்ப்பு தெரிவித்துவந்த நிலையில், "அப்படி அங்கே வாழ்ந்தததற்கு எந்த ஆதாரமும் இல்லை. அப்படியே அங்கே அவர் வாழ்ந்திருந்தாலும் அந்தக் கட்டிடத்தை இடித்துவிட்டு நூலகம் கட்டுவதை அவர் வரவேற்றிருப்பார்" என்று பென்னி குவிக்கின் சந்ததியர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தைப் போலவே, மதுரையில் ரூ.70 கோடியில் கலைஞர் நூலகம் கட்டப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இதற்காக உலகத் தமிழ்ச் சங்க வளாகம் உள்பட 7 இடங்களை ஆய்வு செய்த அமைச்சர்களும், அதிகாரிகளும் கடைசியில் பி.டி.ஆர். சிலை அருகே நத்தம் சாலையில் உள்ள பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான இடம் ஒன்றைத் தேர்வு செய்தார்கள்.

அங்குள்ள பழைய ஓட்டுக் கட்டிடமானது பென்னி குவிக் வாழ்ந்த வீடு என்று கூறி மதுரையில் சிலர் சர்ச்சையைக் கிளப்பினார்கள். சட்டமன்றத்தில் கருணாநிதி படத்திறப்பு விழாவுடன், இந்த நூலகத்திற்கான அடிக்கல் நாட்டுவிழாவும் திட்டமிடப்பட்டு இருந்ததால், அந்த சர்ச்சையின் அடிப்படையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அவசர அவசரமாக கண்டன அறிக்கை வெளியிட்டனர்.

இந்தச் சர்ச்சையால் மதுரைக்கு வரவேண்டிய பிரமாண்ட நூலகம் வராமல் போய்விடுமோ என்று தமிழ் ஆர்வலர்களும், வாசிப்பை நேசிப்போரும் கவலைப்பட்ட நிலையில், லண்டனின் வசிக்கிற பென்னி குவிக்கின் சந்ததியினரான டாக்டர் டயானா கிப் மற்றும் டாம் கிப் ஆகியோரைத் தொடர்பு கொண்டு அவர்களின் கருத்தைக் கேட்டார் மதுரையைச் சேர்ந்த எழுத்தாளரும், சமூக செயற்பாட்டாளருமான அ.முத்துகிருஷ்ணன்.

"இந்தச் சர்ச்சை தேவையற்றது. இந்த நூலகம் கட்டுவதற்கு பென்னி குவிக் குடும்பத்தார் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. எங்கள் பாட்டனார் (பென்னி குவிக்) மதுரைப் பகுதியின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டவர். மதுரையையும் இந்த மொத்த பகுதியையும் அவர் மிகவும் விரும்பினார். இதன் வளர்ச்சிக்காகவே பெரியாறு அணையை முழு ஈடுபாட்டுடன் கட்டினார். அந்த கட்டிடத்தில் எங்கள் தாத்தா வாழவில்லை என்று ஆவணங்கள் சொல்கின்றன. ஒருவேளை அவரே அங்கே வாழ்ந்திருந்தாலும், இப்போது அந்தக் கட்டிடத்தை இடித்துவிட்டு நூலகம் கட்டுவதை அவர் வரவேற்றிருப்பார். எனவே, கலைஞர் நூலகம் கண்டிப்பாக அங்கே அமைய வேண்டும். இதற்கு எங்கள் குடும்பம் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதுடன், உறுதுணையாகவும் இருக்கும். இந்த நூலகத்துக்கு நாங்கள் லண்டனில் இருந்து புத்தகங்களைப் பரிசளிப்போம்" என்று கூறியுள்ளனர்.

அவர்கள் இவ்வாறு கூறியதற்கான வீடியோ பதிவையும் எழுத்தாளர் அ.முத்துகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.

அவரிடம் இதுகுறித்து கேட்டபோது, "மதுரையில் ரூ.70 கோடியில் பிரமாண்ட நூலகம் வருகிறது என்று பெருதும் மகிழ்ந்தவர்களில் நானும் ஒருவன். அதற்குத் தடை போடுவதற்காக சில வதந்திகள் திட்டமிட்டுப் பரப்பப்பட்டபோது, உள்ளபடியே ரொம்பவே தொந்தரவுக்கு ஆளாளேன். அந்த கட்டிடம் கட்டப்படுவதற்கு முன்பு திரு.பென்னிகுவிக் மறைந்துவிட்டார். பிறகெப்படி அங்கே அவர் வாழ்ந்திருக்க முடியும்? என்று அரசு ஆவணங்களையே ஆதாரமாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட பிறகும் வேண்டுமென்றே சர்ச்சை செய்கிறார்களே என்று நினைத்தபோதுதான், பென்னி குவிக்கின் சந்ததியரின் நினைவு எனக்கு வந்தது. அவரது சந்ததியர்களான மருத்துவர் டயானா கிப், ஊடகவியலாளரும், ஆவணப்பட இயக்குநருமான டாம் கிப் ஆகியோர், மதுரை வட்டார நீர்நிலைகளின் நிலையை அறிந்துகொள்வதற்காக ஏற்கெனவே மதுரைக்கு வந்திருக்கிறார்கள். எங்கள் வீட்டிலேயே தங்கி உரையாடியிருக்கிறார்கள். அதேபோல கேரள வெள்ளத்தின்போது, கம்பம் பள்ளத்தாக்கு மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காகவும் மதுரை வந்தார்கள். அவர்களுக்கு இந்தச் சர்ச்சைகள் குறித்த தகவல்களை அவ்வப்போது அனுப்பிக் கொண்டிருந்தேன். அவர்கள் ரொம்பவே வருத்தப்பட்டார்கள். எங்கள் தாத்தா பெயரைச் சொல்லி, நல்ல திட்டத்தை எதிர்க்கிறார்களே என்று வேதனைப்பட்டார்கள். உங்கள் கருத்தை வீடியோ பதிவாக தமிழ்நாட்டு மக்களுக்கு வெளியிட முடியுமா? என்று கேட்டபோது உடனே ஒத்துக்கொண்டார்கள். அவர்களே சொல்லிவிட்டார்கள். எனவே, இனியும் தேவையில்லையாத சர்ச்சைகளை கிளப்புவதைவிட்டுவிட்டு, அங்கே நூலகம் அமைய அனைவரும் ஒத்துழைப்புத் தர வேண்டும். அதுதான் நாம் பென்னி குவிக் அவர்களுக்குத் தருகிற உண்மையான மரியாதை" என்றார்.

x