கன்னியாகுமரி எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான தளவாய் சுந்தரத்திடம் உதவியாளராக இருந்தவர் கிருஷ்ணகுமார். ஆரல்வாய்மொழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவராக இருக்கும் இவர் முந்தைய அதிமுக ஆட்சியில் கோலோச்சியவர். தோவாளை ஒன்றிய செயலராகவும் இருந்த இவர், கடந்த ஆட்சியில் மிகவும் செல்வாக்குடன் வலம் வந்தார்.
இந்நிலையில் இவரது அந்தரங்க வீடியோ ஒன்றை சொந்தக் கட்சிக்குள் இருந்த இவரது எதிர்தரப்பு ரிலீஸ் செய்ய, தளவாய் சுந்தரம் இவரை ஒதுக்கிவைத்தார். கூடவே இவரது ஒன்றிய செயலர் பொறுப்பும் பறிக்கப்பட்டது. குமரிமாவட்டத்துக்கு தேர்தல் பரப்புரைக்கு வந்த மு.க.ஸ்டாலினும், இவரது பெயரைக் குறிப்பிட்டுப் பேசினார். இதனிடையே கிருஷ்ணகுமார் கமிஷன் பற்றிப் பேசிய ஆடியோ ஒன்றும் வைரலானது. திமுக ஆட்சி மலர்ந்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை முறைப்படி இணைத்துக்கொண்ட கிருஷ்ணகுமார், யார் நிழலில் இத்தனை ஆண்டுகள் அரசியல் செய்துவந்தாரோ அந்த தளவாய் சுந்தரத்துக்கு கடும் குடைச்சலைக் கொடுத்துவருகிறார்.
அதிமுகவில் தளவாய் சுந்தரத்துக்கு நெருக்கமாக அவரது ஆதரவாளராக இருப்பவர்களை திமுக முகாம் நோக்கி நகர்த்திவருகிறார். ஏற்கெனவே தளவாய் சுந்தரத்தின் ஆதரவாளர்களாக இருந்த முன்னாள் எம்எல்ஏ ராஜன், நாஞ்சில் டொமினிக் உட்பட பலரும் முகாம் மாறிய நிலையில், அண்மையில் குலசேகரபுரம் பஞ்சாயத்துத் தலைவர் சுடலையாண்டியை திமுகவில் இணைத்தார். இந்த ஊராட்சியில் சுடலையாண்டி ஊராட்சித் தலைவராகவும், அவரது மனைவி கவுன்சிலராகவும் உள்ளனர். இருவரும் வெற்றிபெற்றதற்காக தளவாய் சுந்தரத்தின் ஏற்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமியிடமே சென்று ஆசி பெற்று வந்தனர். அந்த அளவுக்கு தளவாய் சுந்தரத்தின் ஆதரவாளராக இருந்த சுடலையாண்டியை திமுக பக்கம் நகர்த்திய கிருஷ்ணகுமார், அடுத்த கட்டமாக அதிமுக வசம் இருக்கும் 15 ஊராட்சி தலைவர்களை திமுக பக்கம் இழுக்கும் முனைப்பில் உள்ளார்.
இதை ஈடுசெய்யும் வகையில் அதிமுக முகாமும் தீவிர களப்பணியில் ஈடுபட்டு வருகிறது. முன்னாள் அமைச்சருக்கு முன்னாள் உதவியாளர் குடைச்சல் கொடுப்பது குமரி அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.