அதிமுக, பாஜகவைச் சேர்ந்த பாலியல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை தேவை


‘அதிமுக மற்றும் பாஜகவைச் சேர்ந்த பாலியல் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கே.டி. ராகவன் குறித்த ஒரு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஜோதிமணி, டிஜிபி சைலேந்திரபாபுவை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து அளித்துள்ள மனுவில், 2 கட்சிகளையும் சார்ந்த பிரமுகர்கள் பலர்மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள் இருப்பதை பட்டியலிட்டுக் காண்பித்து, நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவரது மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது..,

சில மாதங்களுக்கு முன்பு பாரதிய ஜனதா கட்சியின் விழுப்புரம் மாவட்ட தலைவர் கலிவரதன் மீது, அதே கட்சியைச் சேர்ந்த மகளிர் அணி பொதுச் செயலாளர் திருமதி காயத்ரி, கலிவரதன் தன்னை தொடர்ந்து பாலியல் வல்லுறவு செய்ததாகவும், ஏமாற்றி பணம் பறித்ததாகவும் காவல் துறையிடம் புகார் அளித்தார். இதுதொடர்பாக அவர்கள் இருவரும் பேசும் ஆடியோவும் வெளியானது.

அதேபோல பாரதிய ஜனதா கட்சியின் மாணவர் அமைப்பான அகில இந்திய வித்யா பரிஷத்தின் தலைவர் சண்முகம் சுப்பையா, அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்த ஒரு பெண்ணிடம் ஆபாசமாகவும் பாலியல் வக்கிரத்துடனும் நடந்துகொண்ட வீடியோ தமிழகத்தில் வெளியாகி மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இப்பொழுது தன்னை கடவுள் பக்தர், தனது கட்சியே கடவுளை காப்பாற்ற வந்த கட்சி என்று பொய் பேசி, ஊரை ஏமாற்றிவந்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கே.டி. ராகவன், பூசை அறை அருகில் நின்றுகொண்டு, ஒரு பெண்ணிடம் தகாத வகையில் ஆபாசமாக பாலியல் வக்கிரத்துடன் நடந்துகொண்டுள்ளார்.

ஆனால், பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து பெண்களுக்கு எதிரான கடும் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் தங்கள் தலைவர்களை தொடர்ந்து காப்பாற்றி வருவது மட்டுமல்லாமல் பாலியல் குற்றவாளிகளை ஊக்குவித்தும் வருகிறது. கலிவரதன் கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் வேட்பாளரானர். சண்முகம் சுப்பையா தமிழக மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் மீறி மதுரையில் இன்னும் துவங்கப்படாத எயம்ஸ் மருத்துவமனை நிர்வாகக் குழு உறுப்பினராக மாண்புமிகு நரேந்திர மோடி அரசால் நியமிக்கப்பட்டார்.

அன்று ஆட்சியில் இருந்த அதிமுக, பாஜகவைச் சேர்ந்த பாலியல் குற்றவாளிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழகப் பெண்களின் பாதுகாப்பிற்கும், கண்ணியத்திற்கும் ஆபத்து ஏற்படுத்தும் வகையில் இந்த குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுக்காமல் அதிமுக அரசு மூடி மறைத்துவிட்டது.

பாஜக தலைவர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்கள் மிரட்டப்பட்டார்கள். புகார்களை திரும்பப் பெறுமாறு அழுத்தம் தரப்பட்டது. அதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் அதிமுக , பிஜேபி அரசுகளின் அதிகார துஷ்பிரயோகத்திற்கும், அராஜகத்திற்கும், மிரட்டலுக்கும் பயந்து புகார்களை திரும்பப் பெற்ற அவலமும் நடந்தேறியது.

பொள்ளாச்சியில் நூற்றுக்கணக்கான பெண்கள், அதிமுக தலைவர்களால் கொடுமையான பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு பல ஆண்டுகளாக சீரழிக்கப்பட்டனர். இந்த வழக்கு ஒன்றிய பாஜக அரசின்கீழ் இயங்கும் சிபிஐக்கு மாற்றப்பட்டது. அந்த வழக்கில் இன்றுவரை எவ்வித தீவிரமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பெயரளவிற்கு அதிமுக நிர்வாகிகள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அன்றைய துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு நெருக்கமானவர்கள் உள்ளிட்ட அதிமுகவின் முக்கிய தலைவர்களுக்கு இந்த கொடுமையான பாலியல் வல்லுறவு வழக்கில் தொடர்பு இருக்கலாம் என்கிற சந்தேகம் பரவலாக மக்கள் மத்தியில் எழுந்தது. ஆனால் உண்மையான குற்றவாளிகள் அதிகார பலத்தோடு இன்னும் வெளியில் தான் இருக்கிறார்கள்.

கடந்த அதிமுக ஆட்சியில் காவல்துறையின் மிக உயரிய பொறுப்பில் இருப்பவர்களே சட்டத்தை மீறி பாதிக்கப்பட்டு, புகார் அளித்த பெண்ணின் பெயரை வெளியே சொன்ன அவலமும் நிகழ்ந்தது. இது மற்ற பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நேரடியாக விடப்பட்ட எச்சரிக்கையில்லாமல் வேறென்ன?

கே.டி. ராகவன் உள்ளிட்ட பாஜக, அதிமுகவைச் சேர்ந்த பாலியல் குற்றவாளிகளை இந்த அரசு உடனடியாக விசாரணை நடத்தி கைது செய்யவேண்டும். நீதியின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தரவேண்டும். அப்பொழுதுதான் தமிழ்நாட்டில் பெண்களாகிய நாங்கள் பாதுகாப்புடனும், கண்ணியத்துடனும் தலைநிமிர்ந்து நடக்க முடியும்.

கடந்த ஆட்சியில் மூடி மறைக்கப்பட்ட பொள்ளாச்சி பாலியல் வன்புணர்வு குற்றங்கள் உள்ளிட்ட கொடுமையான பாலியல் வண்புணர்வு குற்றங்களையும், அதிமுக, பிஜேபி அரசுகளால் பாதுகாக்கப்பட்ட பாலியல் குற்றவாளிகளையும், இந்த அரசு உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கும் என்கிற உத்திரவாதத்தை, நம்பிக்கையை இந்த அரசு தமிழக மக்களுக்கு அளிக்கும் என்று நம்புகிறோம் என்று ஜோதிமணி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

x