கனகராஜன்: 1980களில் தொடங்கி வெகுஜன மற்றும் இலக்கிய இதழ்களில் தொடர்ந்து எழுதி வருபவர். நெகிழ்ச்சியான அனுபவமும், முதிர்ச்சியும் கொண்ட இவரின் கவிதைகள், சிறுகதைகள் யாவும் பேசப்பட்டவை; பேசப்படுபவை. அவரின் படைப்புகள் ‘வானம்’ என்ற தலைப்பிலான வலைப்பூவை அலங்கரிப்பவை.. அப்படியான ஒரு கவிதையே இந்த ‘இழவு ஆள்’.
எப்போதாவது வருவார்
இழவு சொல்ல சொக்கமுத்து
‘சாமீயேய்ய்…’ கதவிற்கு
பத்தடி தூரம் நின்ற அவர்
குரல் அடையாளமாய் ஒலிக்க
‘இப்போது யாரோ…?’
பயத்துடன் முகம் தூக்கும்.
‘பட்டாளத்துப் பண்ணாடி
போயிட்டாருங்க…’ என்பார்.
‘அடப்பாவமே…’ வேதனையில்
வெடிக்கும் அப்பாவின் குரல்
‘நேத்து ரவைக்குப்
பண்ணெண்டு மணிக்குங்கோ…
ஒரு வாரமா கெடையில
கெடந்தாருங்கோ…’
கையில் அஞ்சோ பத்தோ
வாங்கிக் கொண்டு போவார்
வழிச் செலவுக்கு
அதற்குப் பின்னால்
கிராமம் நோக்கிய
பயண ஏற்பாடுகள்
கல்வாழை இலையில்
ஈர்க்குச்சிகள் கோர்த்து
சாப்பிடுகிற செல்லமுத்து
மொட்டையடித்து
காது குத்திய சின்ன வயதில்
அதட்டி மிரட்டியது
இன்னும் மனசுள்
பயம் நிரம்பி நிற்கிறது
இழவு சேதிக்காக மட்டுமல்லாமல்
எப்போதேனும் விசேஷ
சேதிகள் சொல்லவும்
வருகிறவர்தான்
சொக்கமுத்துவின்
வருகை நின்று போய்
அவரை மறந்து போன
ஒரு நாளில்
சொக்கமுத்துவின் மகன் மாரி வந்தான்
‘தெக்காலக் காட்டு அத்தை
காலமாயிட்டாங்க…’ என்றான்
‘மாரி சொக்கமுத்து வரலையா?’
‘அப்பன் செத்து
ஒரு மாசம் ஆச்சுங்க…’ என்றான்.
கனகராஜின் படைப்புகளைக் காண இங்கே க்ளிக் செய்யவும்