கடலூர் மாவட்ட அதிமுகவின் அசைக்கமுடியாத சக்தியாக, சர்வ வல்லமை பொருந்திய தலைவராக வலம்வந்த முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத்தின் அதிகாரங்கள் அக்கட்சித் தலைமையால் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டு வருகிறது. அவர் வசமிருந்த கடலூர் மாவட்டம் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிற புதிய கட்சிமாவட்டத்தைச் சேர்த்து மொத்தம் நான்காக பிரிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் அவரின் அதிகார எல்லை வெகுவாக சுருக்கப்பட்டிருக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன் வரை கடலூர் மாவட்டத்தின் மாவட்ட செயலாளராக ஒட்டுமொத்த அதிகாரத்தையும் தன் கையில் வைத்திருந்து ஆட்சி செய்து வந்தார் முன்னாள் அமைச்சர் எம் சி சம்பத். மாவட்ட செயலாளர் மட்டுமல்லாது அமைச்சர் பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்ட நிலையில் அதிக அதிகாரம் கொண்டவராக இருந்து வந்தார். ஆனால், அவரது செயல்பாடுகளுக்கு மாவட்டத்திற்குள் கட்சிக்காரர் களுக்கிடையே கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது.
சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்த முருகுமாறன், பாண்டியன், சத்யா பன்னீர்செல்வம் உள்ளிட்ட எம்எல்ஏ-க்களும், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அருள்மொழித்தேவன் உள்ளிட்ட மேலும் பல நிர்வாகிகளும் இவருக்கு எதிராக செயல்பட்டு வந்தனர். அமைச்சர் பங்கேற்கும் ஆய்வுக்கூட்டங்களில் கூட அவர்கள் கலந்து கொள்வது இல்லை.
இந்த நிலையில் அவர்களை சமாதானப்படுத்த மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து அருண்மொழித்தேவனுக்கு மாவட்ட செயலாளர் பதவியை அளித்தது கட்சித் தலைமை. அதன் பின்னர் கடந்த தேர்தலுக்கு முன்பாக மாவட்டத்தை மூன்றாகப் பிரித்து சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாண்டியனை ஒரு மாவட்டத்துக்கு செயலாளர் ஆக்கினார்கள்.
இதனால் அப்போதே சம்பத்தின் அதிகாரம் குறைக்கப்பட்டு கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய மத்திய மாவட்டத்துக்கு மட்டும் அவர் மாவட்ட செயலாளராக இருந்து வந்தார்.
இந்த நிலையில்தான் அதையும் இரண்டாக கூறுபோட்டு அவரது அதிகாரத்தை முற்றிலுமாக தகர்த்திருக்கிறார்கள். மத்திய மாவட்டமாக இருந்ததை தெற்கு, வடக்கு என பிரித்து, சம்பத்தை வடக்கு மாவட்ட செயலாளராக அறிவித்திருக்கிறார்கள். அதில் கடலூர் மற்றும் பண்ருட்டி ஆகிய இரண்டு தொகுதிகள் மட்டும் உள்ளன.
கடலூர் தெற்கு மாவட்டத்துக்கு கடந்த தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் நின்று தோற்றுப் போன முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சொரத்தூர் ராஜேந்திரன் மாவட்டச் செயலாளர் ஆக அறிவிக்கப் பட்டிருக்கிறார். அதில் நெய்வேலி, குறிஞ்சிப்பாடி ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் ஆகிய தொகுதிகளை உள்ளடக்கிய கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளராக சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ பாண்டியன் இருக்கிறார்.
விருத்தாசலம், திட்டக்குடி, புவனகிரி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய கடலூர் மேற்கு மாவட்ட செயலாளராக புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழித்தேவன் இருக்கிறார்.
எம்.சி.சம்பத்தின் அதிகாரம் குறைக்கப்பட்டிருக்கிறது என்பது கட்சிக்காரர்களுக்குக்கூட தெளிவாக தெரிந்தாலும், இது நிர்வாக ரீதியில் பிரிக்கப்பட்டிருக்கிறது என்று சொல்கிறது கட்சித்தலைமையின் அறிவிப்பு. அதிகாரம் குறைக்கப்பட்ட சம்பத் இதை எப்படி எடுத்துக் கொள்கிறார் என்று பார்க்கலாம்.