திருவள்ளுவருக்கு திருவிழா நடத்துங்கள்!- அரசுக்குக் கோரிக்கை வைக்கும் ஆய்வாளர் பத்மநாபன்


என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

‘இந்த நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளைச் சந்தித்துள்ளது’ எனும் ‘பராசக்தி’ வசனத்தைப் போலவே, ஒரு விசித்திரமான வழக்கு அது! திருவள்ளுவர் குமரி மண்ணில் பிறந்தவர் என்று எழுதப்பட்ட நூலை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு. தன் வாழ்வின் பெரும்பகுதியைத் திருவள்ளுவர் தொடர்பான ஆராய்ச்சிக்கு அர்ப்பணித்து, இப்படியான வழக்கையும் எதிர்கொண்டவர் வரலாற்று ஆய்வாளர் டாக்டர் பத்மநாபன். அதிமுக ஆட்சியில் திருவள்ளுவர் தினத்தில் அரசு விழா நடத்துவது தவிர்க்கப்பட்டு வந்த நிலையில், திமுக ஆட்சிக்காலத்திலாவது அரசு விழாவை நடத்த வேண்டும் எனக் குரல் கொடுத்துவருகிறார் பத்மநாபன்.

அதிமுக அரசு செய்த அலட்சியம்

ஸ்டேட் வங்கி வேலையில் விருப்ப ஓய்வு பெற்று, தொல்லியல், வரலாற்று ஆய்வுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் பத்மநாபன். 89 வயதாகும் இவர், இந்த வயதிலும் வள்ளுவரின் புகழ் பரப்ப சுற்றிச் சுழன்றுவருகிறார். ‘குமரி மாவட்ட வரலாற்றுப் பண்பாட்டு ஆய்வு மையம்’ எனும் அமைப்பை நடத்திவரும் இவர், ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினத்தன்று தனது அமைப்பின் மூலம் குமரி முனையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செய்துவருகிறார்.

பத்மநாபனின் கோரிக்கை தொடர்பாக அவரைச் சந்தித்துப் பேசினோம். “கடந்த 2000-ம் ஆண்டில் முக்கடல் சங்கமத்தில் வள்ளுவனுக்குச் சிலை வைத்தார் கருணாநிதி. 2001-ல் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்தது. வள்ளுவர் தினத்தன்று அரசு சார்பில் அந்த சிலைக்கு மரியாதை செலுத்த வேண்டும் என அப்போதைய அதிமுக அரசிடம் கோரிகை வைத்தேன். ‘கருணாநிதி கட்டிய சிலைக்கு நாங்கள் மரியாதை செய்வதா?’ என மறுத்து விட்டனர். உடனே, நானே தமிழ் அமைப்புகளைச் சேர்த்துக்கொண்டு பூம்புகார் கழகத்தில் படகு பதிவுசெய்து அவர்களை அழைத்துக்கொண்டு திருவள்ளுவர் சிலைக்குப் போய் மரியாதை செய்யத் தொடங்கினேன். அதிமுக ஆட்சியின்போது, பூம்புகார் கழகத்துக்கு இந்தப் படகிற்கென 25 ஆயிரம் ரூபாய் வாடகையாக வாங்குவார்கள். 2006-ல் திமுக ஆட்சி அமைந்ததும் கருணாநிதியைப் பார்த்து இதைப் பற்றிச் சொன்னேன். உடனே திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்த கட்டணமில்லாமல் செல்லும் படகினை ஏற்பாடு செய்துகொடுத்தார். மீண்டும் அதிமுக தொடர்ந்து பத்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது ஒவ்வொரு வருடமும் 25 ஆயிரம் ரூபாய் படகுக்குக் கட்டணமாகச் செலுத்தித்தான் வள்ளுவனுக்கு மரியாதை செலுத்திவருகிறோம். இப்போது திமுக ஆட்சி மலர்ந்துள்ள நிலையில் திருவள்ளுவர் தினத்தை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும்” என்று சொன்னார் பத்மநாபன்.

வள்ளுவருக்காக ஒரு வழக்கு

திருக்குறளில் வரும் குமரி மாவட்ட வட்டார வழக்குகளைத் தொகுத்து, தரவுகளின் அடிப்படையில் வள்ளுவர் குமரி நிலத்தைச் சேர்ந்தவர் என வாதிட்டும், புத்தகங்கள் எழுதியும் வருபவர் பத்மநாபன். ஆனால், திருவள்ளுவர் பாசம் இவரை நீதிமன்றப் படியேற்றிவிட்டது. அதைப் பற்றியும் பேசினார் பத்மநாபன்.

“குமரி மண்ணில் பேசப்படும் 150 வார்த்தைகளைத் தன் குறட்பாக்களில் திருவள்ளுவர் பயன்படுத்தியுள்ளார். ‘மடியின்மை’ என ஒரு அதிகாரத்திற்குப் பெயரே வைத்துள்ளார். சோம்பலாக இருப்பதைக் குறிப்பிட, ‘மடியா இருக்கு…’ என்றே குமரி வட்டார வழக்கில் சொல்வார்கள். இப்படியான ஆவணங்களைத் தொகுத்துத்தான் சான்றுகளுடன் ‘தென்குமரி தந்த திருவள்ளுவர்’ எனும் புத்தகத்தை எழுதினேன். ஆனால், வள்ளுவர் குமரி நிலத்தில் பிறக்கவில்லை எனவும், நான் வரலாற்றைத் திரிப்பதாகவும் நாகர்கோவில் நீதிமன்றத்தில் கேசவ சுப்பையா என்பவர் வழக்குத் தொடர்ந்தார். வழக்கு நிலுவையில் இருக்கும்போதே அவர் இறந்து விட்டதால் அந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது.

வள்ளுவர் பிறந்த ஊர் குமரி மாவட்டத்தின் திருநயினார்குறிச்சி. அந்த ஊரின் முகப்பிலேயே வள்ளுவர் பிறந்த ஊர் எனப் பதாகை வைத்துள்ளனர். அவர் வாழ்ந்து மறைந்தது தான் மயிலாப்பூர். அதனால்தான் அந்தப் புத்தகத்தை எழுதினேன். அதை எதிர்த்து வழக்கையும் சந்தித்துவிட்டேன்’’ என்றார் பத்மநாபன்.

வள்ளுவரை நேசித்த கலாம்

வள்ளுவர் குறித்த தனது வாதங்களை, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமே ஆர்வத்துடன் கேட்பார் என்றும் நினைவுகூர்கிறார் இவர். அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக இருந்தபோது இந்த வாதத்தை முன்வைத்து அவருக்குக் கடிதம் எழுதிய பத்மநாபன், ‘தென் குமரி தந்த திருவள்ளுவர்’ புத்தகத்தையும் அவருக்கு அனுப்பியிருந்தார். அதைப் படித்ததும் ஆர்வமடைந்த அப்துல் கலாம், டெல்லி வரும்போது தன்னை சந்திக்கச் சொல்லிப் பதில் கடிதம் அனுப்பினார்.

அது குறித்தும் நெகிழ்ச்சியோடு பேசினார் பத்மநாபன். “குமரி மாவட்ட ஆட்சியராக இருந்த ககன் தீப்சிங் பேடி, எனக்கு வந்த கடிதத்தைப் பார்த்துவிட்டு, ‘என்ன இது... குடியரசுத் தலைவர் கடிதம் போட்டிருக்கிறார். நீங்கள் உடனே கிளம்பிப் போயிருக்க வேண்டாமா?’ எனக் கேட்டார்.  டெல்லிக்கு வரும்போது அவரைச் சந்திக்கலாம் என்றுதானே கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். உடனே வரச் சொல்லவில்லையே என்று சொன்னேன். அதற்கு, ‘உடனே டெல்லிக்கு வந்து சந்திக்கவும் என அவர் கடிதம் போட்டால், அரசு சார்பில் உங்களுக்கு விமான டிக்கெட் வழங்க வேண்டும். அப்துல் கலாம் நேர்மையின் உச்சம் அல்லவா! தனது தனிப்பட்ட சந்திப்புக்காக அரசு சார்பில் அழைப்பு விடுக்க வேண்டாம் என்பதால்தான் இப்படிக் கடிதம் போட்டிருக்கிறார்’ என ஆட்சியர் எனக்கு விளக்கிச் சொன்னார். அவர் இப்படிச் சொன்னதும் மறுநாளே டெல்லிக்குப் போய்விட்டேன். 2 மணி நேரத்திற்கும் மேல் வள்ளுவர் குறித்து அப்துல் கலாமிடம் விவாதித்தேன். ஒரு சிறிய வள்ளுவர் சிலையையும் அவருக்குப் பரிசளித்தேன். அப்போது குடியரசுத் தலைவர் மாளிகையில் பார்வையாளர் அரங்கில் வைக்க, பெரிய அளவிலான வள்ளுவர் சிலை வேண்டும் எனக் கேட்டு அதற்குத் தனது சொந்தப் பணத்தையும் தந்தார் கலாம்.

ஆனால் அவரிடம் பணம் வாங்க மறுத்து, தமிழ் அமைப்புகள் சார்பில் நாங்களே அந்தச் சிலையை வாங்கிக்கொடுத்தோம். அந்தச் சிலையைப் பார்வையாளர் அரங்கில் வைத்து தினமும் வழிபட்டுவந்தார் அப்துல் கலாம். இப்போதும் அது பார்வையாளர் அரங்கில் கம்பீரமாக இருக்கிறது. வள்ளுவர் நமக்குத் தந்த நெறிமுறைகளையும் அந்தச் சிலை பறைசாற்றுகிறது. திருக்குறளை மட்டும் இளம் தலைமுறையினர் இறுகப் பற்றிக்கொண்டால் போதும். அவர்கள் வாழ்வு பண்பட்டதாகிவிடும்” என்று சொன்ன பத்மநாபனின் முகத்தில் பளீரிடுகிறது நம்பிக்கை வெளிச்சம்!

x