மீண்டும் சட்ட மேலவை... தந்தையின் கனவை நிறைவேற்றுவாரா ஸ்டாலின்?


டி.கார்த்திக்
karthikeyan.di@hindutamil.co.in

தமிழகத்தில் மீண்டும் மேலவை பற்றிய பேச்சுகள் ஒலிக்கத் தொடங்கிவிட்டன. 35 ஆண்டுகளுக்கு முன்பு கலைக்கப்பட்ட மேலவையை மீண்டும் கொண்டுவர, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தன்னளவில் கடுமையாக முயற்சிசெய்தார். ஆனால், அவரது முயற்சிகளை எல்லாம் ஜெயலலிதா முறியடித்துக்கொண்டே இருந்தார். இன்று இருவருமே இல்லை. கருணாநிதியின் புதல்வர் மு.க.ஸ்டாலின் முதல்வராக இருக்கிறார். இந்தச் சூழ்நிலையில், மேலவை அமையுமா எனும் எதிர்பார்ப்பு மீண்டும் எழுந்திருக்கிறது. அதற்கான வாய்ப்புகள் இருக்கின்றனவா? பார்ப்போம்.

மேலவையின் வரலாறு

நீதிக் கட்சியின்  ஆட்சி 1920-ல் தொடங்கியதிலிருந்தே மேலவையின் வரலாற்றையும் பேசலாம். 1861-ம் ஆண்டிலிருந்தே மேலவைக்கான வரலாறு இங்கே உண்டு என்றாலும், 1919-ல் மேற்கொள்ளப்பட்ட மாண்டேகு-செம்ஸ்போர்டு அரசியல் சீர்திருத்தமே பம்பாய், வங்காளம், மதறாஸ் மாகாணங்களில் சட்டப்பேரவையோடு கூடிய ஆட்சி முறை உருவாகக் காரணமானது. அப்படி மதராஸ் மாகாணத்தில் அமைந்ததுதான் ‘சட்ட மேலவை’ (Legislative council).  அதன் தொடர்ச்சியாக 1920-ல் நடைபெற்ற தேர்தலில் நீதிக் கட்சி ஆட்சிக்கு வந்தது. அதன் முதல் கூட்டம், 1921 ஜனவரியில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்றது (அண்மையில் தமிழக சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழா இதன் அடிப்படையில்தான் நடந்தது).

அடுத்ததாக, 1937-ல் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் இன்னொரு அரசியல் சட்டத்தின் மூலம் மாகாணங்களில் ஈரவைகள் உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டது. இதன்படி புதிதாக அமைந்ததுதான்  ‘கீழவை’ (Legislative Assembly). பழைய அவை அந்தப் பெயரிலேயே நீடித்தது.

கலைக்கப்பட்ட காரணம் என்ன?

1937-ல் மேலவை, கீழவை என இரு அவைகளோடு தொடங்கிய நம் மாநிலத்தின் சட்டப்பேரவைப் பயணம் 1986 வரை நீடித்தது. அந்த ஆண்டில்தான் மேலவை கலைக்கப்பட்டது. இதற்கு இரு வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.  திவாலான நடிகை ‘வெண்ணிற ஆடை’ நிர்மலாவை மேலவை உறுப்பினராக்க எடுத்த முயற்சி பலனளிக்காததால், மேலவையைக் கலைக்கும் முடிவை அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் எடுத்தார் என்று கூறப்படுகிறது. அந்தக் காலகட்டத்தில் கருணாநிதி மேலவை உறுப்பினராகத்தான் இருந்தார். அவர் மேலவை எதிர்க்கட்சித் தலைவராவதைத் தடுக்கவே எம்ஜிஆர் கலைப்பு நடவடிக்கையை எடுத்தார் என்று இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது.  எப்படிப் பார்த்தாலும், அரசியல் காரணங்களுக்காகவே மேலவை கலைக்கப்பட்டது. அதற்கு அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியும் ஆதரவாக இருந்தார். விளைவாக 1986 நவம்பர் 1 முதல் தமிழ்நாட்டில் மேலவை அதிகாரபூர்வமாக இல்லாமல் போனது.

முயற்சியும் முட்டுக்கட்டைகளும்

1989-ல் திமுக ஆட்சிக்கு வந்தவுடனேயே மேலவையை மீண்டும் கொண்டு வரத் தீர்மானம் கொண்டுவந்து அதற்கான முயற்சிகளில் கருணாநிதி ஈடுபட்டார். ஆனால், இரண்டே ஆண்டுகளில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டதால், அந்த முயற்சி கைகூடவில்லை. 1991-ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, மேலவை தீர்மானத்தைத் திரும்பப் பெற்றார். 1996-ல் கருணாநிதி மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு மேல
வையை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், அப்போதும் திமுக ஆட்சிக் காலத்துக்குள் மேலவையை மீண்டும் கொண்டு வர முடியவில்லை.

இறுதியாக 2006-ல் கருணாநிதி முதல்வரான பிறகு முன்பைவிட மேலவைக்கான பணிகள் சூடுபிடித்தன. காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் திமுக அங்கம் வகித்ததால், மேலவை அமைப்பதற்கான தீர்மானம் மக்களவை, மாநிலங்களவையில் நிறைவேறியது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டது. அப்போது மீண்டும் ஆட்சி மாறியது. 2011-ல் முதல்வரான ஜெயலலிதா, மீண்டும் மேலவை அமைக்கும் நடவடிக்கையைத் திரும்ப பெற்றார். இதனால், கருணாநிதியின் மூன்று முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன.

‘நாடாளுமன்றத்திலேயே மேலவை இருக்கிறதே!’

மேலவை அமைக்கும் விஷயத்தில் அதிமுகவின் அணுகுமுறை குறித்து திமுக செய்தித்தொடர்பாளர் ஆர்.ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். “எம்ஜிஆர் மேலவை உறுப்பினராக இருந்தவர். ஜெயலலிதாவும் நாடாளுமன்ற மேலவையில் இருந்தவர்தான். ஆனால், எம்ஜிஆர்தனிப்பட்ட காரணங்களுக்காக மேலவையைக் கலைத்தார். கலைஞர் கொண்டு வருகிறார் என்ற காழ்ப்புணர்ச்சியாலேயே ஜெயலலிதா அதை எதிர்த்தார். 2000-ல் நான் மதிமுகவில் இருந்தபோது கலைஞர் சொல்லி  மேலவை அமைக்கக்கோரி வழக்கு போட்டு உத்தரவுப் பெற்றேன்.

பிரிட்டிஷ் நாடாளுமன்ற ஆட்சி முறையில்தான் உலகம் இயங்குகிறது. அதிபர் ஆட்சி முறை உள்ள அமெரிக்காவிலேயே செனட், காங்கிரஸ் உள்ளன. ஈரடுக்கு ஆட்சி முறைதான் நாடாளுமன்ற ஜனநாயக ஆட்சிக்கு இலக்கணம். இந்தியாவிலேயே மக்களவை, மாநிலங்களவை என்று ஈரடுக்கு ஆட்சி முறைதானே இருக்கிறது? அந்தப் புரிதலே பல இந்திய தலைவர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் இல்லை. மேலவை வேண்டும் என்று மாநிலம் கேட்கும்போது அதைச் செய்து தர வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது” என்றார் ராதாகிருஷ்ணன்.

கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியே நீடித்ததால், மேலவை பற்றிய பேச்சே எழவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தால், மேலவை அமைக்கப்படும் என்று அதன் தேர்தல் அறிக்கையிலும் கூறப்பட்டிருந்தது. தற்போது திமுக ஆட்சிக்கு வந்துவிட்ட நிலையில் அதற்கான முயற்சிகளைத் திமுக அரசு தொடங்கிவிட்டதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. பட்ஜெட் கூட்டத் தொடரி
லேயே மேலவை அமைப்பதற்கான தீர்மானம் கொண்டு வரப்படும் என்று கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக ஆதரிக்காது

திமுக அரசின் இந்த முயற்சியைப் பற்றி அதிமுக என்ன நினைக்கிறது? “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை இருக்கும்போது மேலவை தேவையில்லை என்று எம்ஜிஆர் கலைத்தார். மேலவையை மீண்டும் கொண்டுவர கருணாநிதி முயன்றபோது அதை எதிர்த்தவர் புரட்சித் தலைவி. தற்போதும் அதே நிலைப்பாடுதான் அதிமுகவுக்கு. இந்தியாவில் தற்போது 32 மாநிலங்கள் உள்ளன. ஆந்திரம், உத்தர பிரதேசம், கர்நாடகம், பிஹார், மகாராஷ்டிரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் மட்டுமே மேலவைகள் உள்ளன. பிற மாநிலங்களில் இல்லை. அதிமுக எடுத்த நிலைப்பாட்டை மற்ற மாநிலங்களும் பின்பற்றின. மேலவை அமைக்கும் விஷயத்தில் ஆதரவு கிடையாது என்பதுதான் எங்கள்  நிலைப்பாடு” என்றார் அதிமுக செய்தித் தொடர்பாளரும் முன்னாள் அமைச்சருமான வைகைசெல்வன்.

காத்திருக்கும் மாநிலங்கள்

அசாம், மேற்கு வங்கம், ராஜஸ்தான், ஒடிசா ஆகிய மாநிலங்கள் மீண்டும் மேலவை அமைக்கத் தீர்மானங்களை நிறைவேற்றிவிட்டு, மத்திய அரசின் அனுமதிக்காகக் காத்திருக்கின்றன. ஆந்திர மாநிலத்தைப் பொறுத்தவரை,  ‘மேலவையால் அதிகம் செலவு பிடிக்கிறது. மேலவையில் மெஜாரிட்டியாக உள்ள தெலுங்கு தேசம் கட்சியால் அரசின் முடிவுகளுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது’ என்று கருதிய அந்தமாநில முதல்வர் ஜெகன்மோகன், மேலவையைக் கலைக்க கடந்த ஆண்டு தீர்மானம் கொண்டுவந்தார். இதைத் தெலுங்கு தேசம் கட்சி எதிர்க்கிறது. அதற்கு முன்பே 1985-ல் தெலுங்குதேசம் ஆட்சியில் மேலவை கலைக்கப்பட்டது. 2007-ல் காங்கிரஸ் ஆட்சியில் மீண்டும் உருவாக்கப்பட்டது.

இன்னொரு புறம், 52 ஆண்டுகளுக்குப் பிறகு மேற்கு வங்கத்தில்  மேலவை அமைக்கக் கோரி கடந்த ஜூலையில் சட்டப்பேரவை
யில் தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டு, பிரதமர் மோடியிடமே நேரில் அதை வலியுறுத்தியிருக்கிறார் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி. தமிழ்நாட்டில் மட்டுமல்ல... பல மாநிலங்களிலும் மேலவை விஷயத்தில் ஆட்சிகள் மாறும்போது காட்சிகள் மாறுகின்றன. இந்திய நாடாளுமன்றம் மக்களவை (கீழவை), மாநிலங்களவை (மேலவை) என்ற ஈரடுக்கு முறையில்தான் செயல்பட்டு வருகிறது. ஆனால், இதில் மாநிலங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமாக முடிவெடுக்கின்றன. இந்த விஷயத்தில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான கொள்கை தேவை என்பதே ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டிருப்பவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது!

x