தமிழகத்தில் புதிய அரசு அமைந்து 100 நாட்கள் ஆன பிறகும் இன்னமும் போட்டி அரசியல் சூழல் நிலவுவதைப் பார்க்க முடிகிறது. குறிப்பாக, முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் தொழில் தொடங்க பெரு நிறுவனங்கள் அஞ்சின என்று திமுக சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பது இதை உறுதிப்படுத்துகிறது.
புதிதாக அமையும் அரசு, முந்தைய அரசின் செயல்பாடுகள் மீது விமர்சனம் வைப்பது இயல்பானதுதான். ஒருவகையில், முந்தைய அரசின் தோல்விகள் புதிய அரசுக்குப் படிப்பினையாக இருக்கும். எனினும், அந்தப் படிப்பினையிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை குறித்து கவனம் செலுத்துவதே நலம் பயக்கும்.
தமிழகத்தின் நிதிநிலை அறிக்கையை வெளியிட்ட நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வளர்ந்துவரும் துறைகளில் தமிழ்நாட்டின் பங்கை அதிகரிப்பதற்காக உயிரியல் அறிவியல், ஆராய்ச்சி மேம்பாடு, உற்பத்தி ஆகியவற்றுக்கான புதிய தொழில் கொள்கைகள் விரைவில் வெளியிடப்படும்; முதலீட்டாளர்களின் முதலீடு சார்ந்த முடிவுகளுக்கு ஆதரவு அளிக்க, மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகள் தொடர்பான தரவுத் தளம் உருவாக்கப்படும் என்பன உள்ளிட்ட நம்பிக்கையூட்டும் அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
தமிழ்நாட்டில் புதிய தொழில் கொள்கையை முந்தைய அதிமுக அரசும் 2021 பிப்ரவரியில் வெளியிட்டது. புதிய தொழில்களைத் தொடங்குவதில் தாமதங்களைத் தவிர்க்க ஒற்றைச் சாளர முறை, பின்தங்கிய மாவட்டங்களுக்குச் சலுகைகள் என்பன உள்ளிட்ட அறிவிப்புகள் அப்போது வெளியாகின. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து புதிய அரசின் மீது நம்பிக்கை கொள்ளும் வகையிலான சமிக்ஞைகள் தென்படுகின்றன.
இந்நிலையில், அரசியல் மனமாச்சரியங்களை ஒதுக்கிவிட்டு தொழில் வளர்ச்சியைத் துரிதப்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் முடங்கிப்போன சிறு குறு தொழில் துறைக்குக் கைகொடுக்க மேலும் திட்டங்கள் அறிவிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள், தொழில் துறையினரிடம் இன்னமும் இருக்கின்றன. அவற்றுக்கு முகங்கொடுத்து தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை அரசு வேகமாக முன்னெடுக்க வேண்டும்.