சமயம் வளர்த்த சான்றோர் 35: யோகி ராம் சுரத்குமார்


கே.சுந்தரராமன்
sundararaman.k@hindutamil.co.in

விசிறி சாமியார் என்று அழைக்கப்பட்ட யோகி ராம் சுரத்குமார், திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ரமண மகரிஷி, சேஷாத்ரி சுவாமிகள் ஆசிரமங்களுக்கு அருகில், ஆசிரமம் அமைத்து மக்களுக்கு பக்தி நெறி, ஞான யோகத்தை அளித்தவர். அரவிந்தர், ரமண மகரிஷி, கேரளா ராமதாசர் ஆகியோரை தனது குருவாகக் கொண்டவர் இவர்.

வாராணசி மாநகருக்கு அருகில் உள்ள நார்தாரா கிராமத்தில், ராம்தத் குவார் – குசும்தேவி தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு இரண்டாவது மகனாக 1918-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி, (கார்த்திகை – சுவாதி) ராம் சுரத்குமார் பிறந்தார். சிறுவயதில் இருந்தே ராம் சுரத்குமாருக்கு படிப்பில் நாட்டம் இல்லை. சகோதரர்கள் மரைக்கன் குவார், ராம்தகின் குவார் ஆகியோருடன் விளையாடுவதிலும், கங்கைக்கரையில் உலாவுவதிலும், இயற்கை அழகை ரசிப்பதிலும் அவருக்கு அதிக நாட்டம் இருந்தது. மனிதர்கள் மட்டுமின்றி உயிரினங்கள் மீதும் அன்பு, பாசம், இரக்கம் காட்டினார் ராம் சுரத்குமார்.  

அவ்வாறு இயற்கையை ரசித்தபடி, கங்கைக்கரை அருகே நடந்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த யோகிகள், துறவிகளுடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது. அவர்களுடன் பேசிக் கொண்டிருப்பதை அதிகம் விரும்பினார். இப்படியே சில வருடங்கள் சென்றன.
தனது பன்னிரண்டாவது வயதில், ஒருநாள் தன் தாயாருக்கு கிணற்றில் இருந்து தண்ணீர் இரைத்துக் கொண்டிருந்தார் ராம் சுரத்குமார். கிணற்றின் மறுபுறத்தில் ஒரு சின்னஞ்சிறு குருவி, சிறகை விரித்தபடி கூவிக் கொண்டிருந்தது. அதை விரட்டுவதற்காக, கையில் இருந்த தாம்புக் கயிற்றின் மறுபுறத்தை அதன் மீது வீசினார். அது குருவி மீது பட்டதால், அக்குருவி உயிரிழந்தது.  
குருவி உயிரிழந்த சம்பவம், ராம் சுரத்குமாரை மிகவும் வருத்தியது. தன்னால் ஓர் உயிர் மாய்ந்துவிட்டதே என்று அவரது உள்ளம் துடித்தது. இருப்பினும் அச்சம்பவம் அவரது மனதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. மனம் தனிமையை விரும்பியது. மனிதர்களிடம் இருந்து விடுபட்டு எங்கோ செல்லத் தூண்டியது. குடும்பப் பாசம், பந்தம் அனைத்தையும் உதறித் தள்ளிவிட்டு, வீட்டை விட்டு கால் போன போக்கில் நடக்க ஆரம்பித்தார்.  

அந்தப் பயணத்தில் எதையோ தேட எண்ணினார். அந்தப் பறவை ஞானப்பறவை போலவும், தன்னை ஞான மார்க்கத்தில் செல்ல அச்சம்பவம் தன்னை வழிகாட்டுகிறது என்றும் உணர்ந்து கொண்டார். காசி நகர் வந்து விஸ்வநாதரை வழிபட்டார். கங்கைக்கரையில் உள்ள சாதுக்களிடம் பேசியபடியே பொழுதைக் கழித்தார். துறவிகளுடனான சந்திப்பு அவருக்குள் இருந்த ஆன்மிக சிந்தனைகளை எழுப்பியது.  

சில காலம் சாதுக்களுடன் தங்கிய பிறகுதான், அவருக்கு பெற்றோர் பற்றிய நினைவு வந்தது. தான் வீட்டை விட்டு வெளியே வந்ததில் அவர்கள் வருத்தமடைந்திருப்பார்கள் என்று நினைத்தார். 1937-ம் ஆண்டு தனது வீட்டுக்குச் சென்றார் ராம் சுரத்குமார். அதன் பிறகு பெற்றோருடன் இருந்து அவர்களது விருப்பத்தைப் பூர்த்தி செய்தார். பள்ளிப் படிப்பையும் உயர் கல்விப் படிப்பையும் முடித்தார். படித்து முடித்ததும் வேலை தேடும் படலம் தொடங்கியது. ஆனால், சராசரி மனிதரைப் போல், வேலை தேடி அலைந்து, வாழ்க்கை பந்தத்தில் உழல, ராம சுரத்குமார் விரும்பவில்லை. ஞானகுருவைத் தேடுவதை பற்றியே அவரது மனம் சிந்தித்தது.  

ஞானகுருவை நினைத்தபடியே புதுச்சேரிக்கு பயணம் மேற்கொண்டார் ராம் சுரத்குமார். புதுச்சேரியில், அரவிந்தர் ஆசிரமத்தில் தங்கியிருந்து, அவரது சொற்பொழிவுகளைக் கேட்கலானார். ஒருநாள் ஆசிரமவாசி ஒருவர், ராம் சுரத்குமாரை, திருவண்ணாமலையில் இருக்கும் ரமண மகரிஷியிடம் செல்லப் பணித்தார். ஞானத் தேடலின் தொடர்ச்சியாக, திருவண்ணாமலை நோக்கி தனது பயணத்தை அமைத்துக் கொண்டார் ராம் சுரத்குமார். திருவண்ணாமலையில் உள்ள ரமண மகரிஷியின் ஆசிரமத்தில் மூன்று நாட்கள் தங்கினார். அப்போது ஒரு செய்தித்தாளில், கேரள மாநிலத்தில் உள்ள சுவாமி ராமதாசரைப் பற்றிய கட்டுரையைப் படித்தார்.  உடனே, தனது மூன்றாவது குருநாதரை சந்திக்க முடிவு செய்தார் ராம் சுரத்குமார்.

கேரள மாநிலம், கஞ்சன் காடு ஆசிரமத்தில் சுவாமி ராமதாசரை சந்தித்தார். ஆனால், அரவிந்தர், ரமண மகரிஷியை சந்தித்தபோது ஏற்பட்ட இறை அனுபவம், சுவாமி ராமதாசரை சந்தித்தபோது ராம் சுரத்குமாருக்கு ஏற்படவில்லை. சுவாமி ராமதாசர் துறவிகளின் நெறிகளைத் துறந்து, ஓர் அரச வாழ்க்கை வாழ்வது போல் தோன்றியது. அதனால், மீண்டும் வாராணசிக்கே பயணமானார் ராம் சுரத்குமார்.  

காசி வந்தடைந்தாலும், அவரது மனம் அரவிந்தரின் அருள் முகத்தையும், ரமண மகரிஷியின் ஞான முகத்தையும் நினைத்துக் கொண்டிருந்தது. சில காலம் கழித்து, 1948-ல் மீண்டும் புதுச்சேரிக்கு பயணமானார் ராம் சுரத்குமார். புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் சில நாட்கள் தங்கிவிட்டு, திருவண்ணாமலை ரமண மகரிஷியின் ஆசிரமத்தை அடைந்தார்.

ஒரு நாள் தியானத்தில் அமர்ந்தபோது, ரமணரின் விழிகளையே பார்த்துக் கொண்டிருந்தார் ராம் சுரத்குமார். அந்த சமயம் ரமணரும் ராம் சுரத்குமாரை நோக்கினார். இந்த நயன தீட்சையில் தன்னை மறந்தார் ராம் சுரத்குமார். எவ்வளவு மணிநேரம் இவ்வாறு அமர்ந்திருப்பார் என்று அவருக்குத் தெரியாது. மீண்டும் ரமண மகரிஷி, ராம் சுரத்குமாரை அழைத்தபோதுதான், அவருக்கு சுயநினைவு வந்தது.  இந்த நயன தீட்சை ராம் சுரத்குமாருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இரண்டு மாதங்கள் அங்கு தங்கியிருந்த பின்னர், சுவாமி ராமதாசரை சந்திக்க ஆர்வம் கொண்டார். அதன்படி கேரளா சென்று, அங்கு சிலநாட்கள் தங்கிவிட்டு, மீண்டும் காசிக்கே சென்றார்.  

ஞானகுருவைத் தேடி இமயமலைப் பகுதிகளிலும் அலைந்தார் ராம் சுரத்குமார். 1950-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரமண மகரிஷியும், டிசம்பர் மாதத்தில் யோகி அரவிந்தரும் வீடுபேறு அடைந்தனர். இச்செய்திகளை ஒன்றன் பின் ஒன்றாக கேள்வியுற்ற ராம் சுரத்குமாருக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. இருவருடனும் இருந்து அவர்களுக்கு சேவை செய்யும் பேற்றை இழந்ததாக வருந்தினார். தற்போது தமக்கு இருக்கும் ஒரே குருநாதர், சுவாமி ராமதாசர் மட்டும்தான் என்பதை உணர்ந்து, இமயமலையில் இருந்து கஞ்சன் காட்டுக்கு பயணமானார்.

1952-ம் ஆண்டு மூன்றாவது முறையாக கஞ்சன் காட்டுக்கு வந்த ராம் சுரத்குமார், சுவாமி ராமதாசரை சந்தித்தார். சென்ற சந்திப்புகளின்போது ஏற்படாத ஈர்ப்பு, இப்போது சுவாமி ராமதாசர் மீது ஏற்பட்டது. தன்னை சீடராக ஏற்க, சுவாமி ராமதாசர் காத்துக் கொண்டிருப்பது போன்று உணர்ந்தார் ராம் சுரத்குமார்.  

பல இடங்களில் தேடியும் கிடைக்காத ஞானகுரு, தற்போது தனக்கு கிட்டியதை நினைத்து மகிழ்ந்தார். சுவாமி ராமதாசரை, ஞானகுருவாக, ராம் சுரத்குமாரின் மனம் ஏற்றது. சீடரின் மனநிலையை உணர்ந்த சுவாமி ராமதாசர், ராம் சுரத்குமாருக்கு, ‘ஓம் ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய் ஜெய்ராம்’ என்ற ராம நாமத்தை மந்திரமாக உபதேசித்து அருளினார்.    

குருநாதர் உபதேசித்த தாரக மந்திரத்தை உச்சரிக்கும்போது, தன் உள்ளத்தில் ஆன்ம ஒளி பெருகுவதாக உணர்ந்தார் ராம் சுரத்குமார். இதை பல முறை, ஆயிரம் முறை, லட்சம் முறை, அல்லும் பகலும்  உச்சரித்தால் என்ன என்று யோசித்தார்.  எந்நேரமும் ராம நாம தாரக மந்திரத்தை உச்சரித்த வண்ணம் இருந்தால், தன்னிடம் ஞான ஒளி பெருகுவதை உணர்ந்தார். தனது எண்ணம் இவ்வளவு விரைவில் கைகூடும் என்று அவர் எதிர்பார்க்கவே இல்லை. சுவாமி ராமதாசரிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டு, பாரத யாத்திரை மேற்கொண்டார் ராம் சுரத்குமார். இமயம் முதல் குமரி வரை என்று 7 ஆண்டுகள் பயணத்தை தொடர்ந்தார். நிறைவாக, 1959-ம் ஆண்டு, திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், சேஷாத்ரி சுவாமிகள் ஆசிரமம், ரமண மகரிஷி ஆசிரமங்களுக்கு அருகே, சிறிய அளவில் ஓர் ஆசிரமத்தை அமைத்துக் கொண்டு தங்கினார்.

முதலில் திருவண்ணாமலை வந்தடைந்ததும், அண்ணாமலையாரை தரிசித்துக் கொண்டு, மரத்தடியிலும், கிரிவலப்பாதையிலும், சாலையோரத்திலும், ரயில் நிலையத்திலும், கடைகளின் குறடுகளிலும், மலைச்சரிவிலும் தங்கினார் ராம் சுரத்குமார். பிறகு அண்ணாமலையார் கோயிலின் கோபுர வாயிலுக்கு தெற்கே இருந்த ஒரு குடிலில் தங்கினார். பின்னர் குடிசை பெரிய கட்டிடமாக உருவானது. ராம் சுரத்குமாரை மகானாக நினைத்து, பலர் வந்தனர். கோயில் போன்று தாமரை வடிவில் பெரிய கட்டிடம் கட்டப்பட்டு, தியானம், இசை நிகழ்ச்சிகள், ஆன்மிக சொற்பொழிவு போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன.  

ராம் சுரத்குமாரை சந்திக்க வரும் பக்தர்களுக்கு கற்கண்டு பிரசாதமாக அளிக்கப்பட்டது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு பிரச்சினையோடு வரத் தொடங்கினர். அவர்களது அனைத்து பிரச்சினைகளையும் தனது புன்சிரிப்பால் தீர்த்து வைத்த ராம் சுரத்குமார், யோகி ராம் சுரத்குமார் என்று அழைக்கப்படலானார். கையில் எப்போதும் விசிறி ஒன்றை வைத்திருப்பதால், விசிறி சாமியார் என்றும் அழைக்கப்பட்டார்.  

பெரிய கட்டிடமாக வேத பாடசாலையுடன் ஆசிரமம், உருவெடுத்ததும், வரும் பக்தர்கள் அனைவருக்கும் உணவு அளிக்கப்பட்டது. ஒருவேளை உணவு உண்ணும் துறவிகளுக்கும் உணவு அளிக்கப்பட்டது. 40 ஆண்டு காலம் திருவண்ணாமலையில் ஆசிரமம் அமைத்து வாழ்ந்த யோகி ராம் சுரத்குமார், தனது 83-வது வயதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, 2001-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20-ம் தேதி மகா சமாதி அடைந்தார்.  

இறைவனடி சேரும் தருணத்தில் தனது சீடர்களிடம், “ஒருவரை பெயர் சொல்லி அழைத்தால் எப்படி திரும்பிப் பார்ப்பாரோ, அதேபோல், இறைவனையும் பெயர் சொல்லி அழைத்தால், ஞானத் தந்தையான அவரும் திரும்பிப் பார்ப்பார். அவரை அழைத்தாலே, உங்கள் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பார். இதற்காக தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை” என்று அருளாசி வழங்கினார்.  

திருவண்ணாமலை ஆசிரம வேத பாடசாலையில், இத்தாலியில் செய்யப்பட்ட ராம் சுரத்குமாரின் மார்பிள் சிலை வைக்கப்பட்டுள்ளது. அவர் முக்தி பெற்ற இடத்தில் ஒரு சிவலிங்கமும், முன் மண்டபத்தில் மூன்று சிலைகளும் உள்ளன. பின்புறம் அவர் பயன்படுத்திய பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.

எழுத்தாளர் பாலகுமாரன், யோகி ராம் சுரத்குமார் மீது இரண்டு நூல்கள் (விசிறி சாமியார், பகவான் யோகி ராம் சுரத்குமார்) எழுதியுள்ளார். கவிஞர் தமிழ்க்குழவி, ‘யோகி ராம் சுரத்குமார் பிள்ளைத்தமிழ்’ என்ற நூலை வெளியிட்டுள்ளார்.

யோகியை ஆச்சரியப்படுத்திய மகா பெரியவர்!

ஒரு சமயம்  காஞ்சி பெரியவரை தரிசிக்கச் சென்றபோது, எங்கோ ஒரு ஓரத்தில் நின்று கொண்டிருந்த ராம் சுரத்குமாரை கைகாட்டி, மகா பெரியவர், “பொதுவாக சிலர் வெளிமுகமாக இறையனுபவம் பெறுவார்கள். சிலர் உள்முகமாக இறையனுபவம் பெறுவார்கள். அங்கு ஓரத்தில் நின்று கொண்டிருப்பவர், உள்முகமாக இறையனுபவம் பெற்றவர்; உண்மையானவர்” என்று மக்களுக்கு அடையாளப்படுத்தினார். தன்னைப் பற்றி மகா பெரியவர் இவ்வாறு கூறியதைக் கேட்டு ஆச்சரியம் அடைந்த ராம் சுரத்குமார், அந்த வார்த்தைகளுக்கான உண்மையான அர்த்தத்தைத் தேடலானார். தேடல் ஞானத் தேடலாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். அதற்கான விடையை ஒரு ஞானகுருவால் மட்டுமே தர இயலும் என்பதை உணர்ந்தார்.

x