சிறகை விரி உலகை அறி 12: அறிவு வளர்ச்சிக்கு உதவும் வரலாறு


வரலாற்றுத் தரவுகளை விரும்பித் தேடுகிறவர்கள் நம்மிடையே இருக்கிறார்கள். தங்கள் குடும்பத்தின் நதிமூலம் தொடங்கி உலக
வரலாறுவரை தேடலை விரிவுபடுத்துகிறார்கள்; எண்ணற்ற மக்களையும் கலாச்சாரத்தையும் அறிந்து தங்களைப் பக்குவப்படுத்திக்கொள்கிறார்கள். வரலாறு அறிதலின் முக்கியத்துவத்தை, சயாம்-பர்மா மரண ரயில் பாதையின் மீதான பயணம் எனக்கும் உணர்த்தியது.

இந்தியர்கள் பங்கேற்கவில்லையா?

காலையில் பயணம் தொடங்கியபோதே, மரண ரயில் பாதை தொடர்பான வரலாற்றைச் சுற்றுலா வழிகாட்டி சொல்லத் தொடங்கினார்.

“பிரிட்டன், அமெரிக்கா, டச்சு, போலந்து, ஆஸ்திரேலிய நாடுகளைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான போர் வீரர்கள், ஜப்பானிடம் போர்க் கைதிகளானார்கள். இந்த ரயில் பாதையை அமைக்கும் பணியில் எண்ணற்ற வீரர்கள் உயிரிழந்தார்கள்” என மீண்டும் மீண்டும் சொன்னார். அப்போது கை உயர்த்திய நான், “இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், குறிப்பாக இந்தியர்களும் தமிழர்களும் உயிரிழந்திருக் கிறார்களே?” என்று கேட்டேன். அவருக்குக் கோபம் வந்துவிட்டது. “குறுக்கே பேசாதீர்கள். வேறு எந்த நாட்டினரும் இதில் இறக்கவில்லை” என்றார். “இல்லை சகோ! நான் வாசித்திருக்கிறேன்” என்றதும் அவருக்குக் கோபம் இன்னும் அதிகரித்தது. சரி, சுற்றுலா வந்துள்ள மற்றவர்களின் மனநிலையைக் குலைக்க வேண்டாம் என அமைதியாக இருந்தேன். இருப்பினும் அடிக்கடி பேச்சினூடே, “இந்தியாவில் இருந்து யாருமே வரவில்லை” எனக் குத்திக்காட்டிக்கொண்டே இருந்தார் வழிகாட்டி.

போர்க் கைதிகளை மட்டுமே அவர் கணக்கில் எடுத்துக்கொண்டார். கட்டாயத்தினாலும் வறுமையின் துயரத்தாலும் இந்த ரயில் குழியில் அழிந்த பொதுமக்களைப் பற்றி பேசுவதற்கு வழிகாட்டி விரும்பவில்லையா அல்லது அவருக்குத் தெரியவில்லையா என யோசித்தேன். உடன் பயணித்த மற்ற பயணிகளும் வழிகாட்டியின் குணத்தைக் கண்டு முகம் சுளித்தார்கள்.

குவாய் ஆற்றின் மீதுள்ள ரயில் பாலம்

ஜீத் போர் அருங்காட்சியகத்திலிருந்து குவாய் ஆற்றின் மீதுள்ள ரயில் பாலத்தை அடைந்தோம். இப்பாலத்தை மரக் கட்டைகளால் முதலில் கட்டவைத்த ஜப்பான், பிறகு இரும்புத் தூண்களால் கட்டச் செய்தது. விரைந்து ஓடும் தண்ணீருக்குள் நின்றும், பாரம் தூக்கும் இயந்திரங்கள் ஏதுமின்றியும் பாலத்தைக் கைதிகளும் மக்களும் எழுப்பினார்கள். போருக்குத் தேவையான ஆயுதங்கள் ஜப்பானுக்குக் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காக, அடர்ந்த காடுகளுக்குள் இருந்த ரயில் பாதைகளை அமெரிக்கா அழித்தது. குறைந்தது பத்து தடவைகளுக்கு மேல் இந்த ரயில் பாலமும் குண்டு வீசி தகர்க்கப்பட்டது. ஆனாலும், ஜப்பான் மீண்டும் மீண்டும் ரயில் பாதையையும் பாலங்களையும் கட்டி எழுப்பியது. போர் முடிந்த பிறகு, 1946-ல், 40 கிலோமீட்டர் தூரப் பாதையை பிரிட்டன் ராணுவம் அழித்ததாலும் பல கிலோமீட்டருக்குக் காடுகள் வளர்ந்துவிட்டதாலும் ரயில் பாதையின் பெரும்பாலான பகுதிகள் சிதைந்து விட்டன. இருப்பினும், பாங்காக்கில் இருந்து காஞ்சனாபுரி வரை உள்ள ரயில் பாதையைப் புனரமைத்து தாய்லாந்து அரசு ரயில் இயக்குகிறது.

சுற்றுலாவின் ஒரு பகுதியாக, மரண ரயில் பாதையில் ஓடும் ரயிலில் பயணித்து மதிய உணவு சாப்பிடும் இடத்துக்குச் செல்ல வேண்டும். ரயில் புறப்பட்டபோது பெட்டிகள் நிரம்பி வழிந்தன. எங்கள் குழுவில் இருந்த ஜெர்மன் நாட்டு தம்பதியரும் நானும் ஒரு பெட்டியில் இருந்தோம். ரயில் நின்றதும் இறங்கினோம். கூட்டத்தில் எங்கள் குழுவினர் யாரும் கண்ணில் படாததால் மீண்டும் ஏறினோம். ரயில் புறப்பட்ட பிறகுதான் தெரிந்தது, நாங்கள் மீண்டும் ஏறியிருக்கக் கூடாது என்பது. வழிகாட்டியின் அலைபேசி எண் எங்களிடம் இல்லை. சுற்றுலா முன்பதிவு சீட்டில் உள்ள எண்ணுக்குத் தொடர்புகொண்டோம். அவர்கள் வழிகாட்டியபடி அடுத்த நிறுத்தத்தில் இறங்கிக் காத்திருந்தோம். எங்கள் மகிழுந்து வந்து எங்களை அழைத்துச் சென்றது. மதிய உணவு முடித்து பயணத்தின் மூன்றாவது இடத்துக்குப் புறப்பட்டோம்.

போர் வீரர்களுக்கான கல்லறை

ரயில் பாதை கட்டும்போது இறந்த போர்க் கைதிகளையும், பொதுமக்களையும் பாதையின் ஓரங்களில் அல்லது குறிப்பிட்ட இடங்களில் புதைத்திருந்தார்கள். போர் முடிந்ததும், அமெரிக்க வீரர்களின் மிச்சங்களை அமெரிக்கா தங்கள் நாட்டுக்குக் கொண்டு சென்றது. மற்ற போர் வீரர்களின் உடல்கள் பர்மாவின் தம்புஷயாத், தாய்லாந்தின் சுங்கி மற்றும் காஞ்சனாபுரி எனும் மூன்று இடங்களில் புதைக்கப்பட்டன. காஞ்சனாபுரியில் ஏறக்குறைய 7 ஆயிரம் கல்லறைகள் உள்ளன. காலரா மேலும் பரவக்கூடாது என்பதற்காக இறந்த 300 உடல்களை எரியூட்டிய சாம்பலை இங்கே இரண்டு கல்லறைகளில் புதைத்துள்ளார்கள். கல்லறைகளை வணங்கிவிட்டு பாங்காக் நோக்கிப் பயணித்தோம் 

தாய்லாந்து அறிவுப் பூங்கா

இந்த இரண்டு நாள் பயணத்தில் நான் பார்க்க விரும்பிய மற்றொரு முக்கியமான இடம், ‘தாய்லாந்து அறிவுப் பூங்கா’ (Thailand Knowledge Park). இரவு எட்டு மணிவரைதான் திறந்திருக்கும் என்பதால், எப்படியாவது பார்த்துவிட வேண்டும் எனும் பரபரப்புடன் இருந்தேன். நேரம் ஆகிக்கொண்டே சென்றது. பாங்காக் நகரம் வாகன நெரிசலில் தத்தளித்தது. இப்படியே சென்றால் சென்று சேர முடியாது என்பதை உணர்ந்து, ஓட்டுநரிடம் சொல்லிவிட்டு இறங்கினேன். அரை மணி நேரத்துக்கு மேல் நடந்து சென்ட்ரல் வேர்ல்ட் வணிக வளாகத்துக்குள் நுழைந்தேன். அங்கு எட்டவது மாடியில் ‘தாய்லாந்து அறிவுப் பூங்கா’ செயல்படுகிறது.
“மணி 7.30 ஆகிவிட்டதால், நுழைவுக் கட்டணம் வேண்டாம். உள்ளே சென்று பாருங்கள்” என அனுமதித்தார்கள். 21-ம் நூற்றாண்டு மாணவர்களை மனதில் வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த அறிவுப் பூங்கா, நவீன நூலகத்தின் அடையாளமாகத் திகழ்கிறது. ‘இப்படித்தான் அமர்ந்து படிக்க வேண்டும்’ என்கிற கட்டுப்பாடுகளைப் புறந்தள்ளிவிட்டு, குழந்தைகளுக்கான சுதந்திரத்துடன் வடிவமைத்திருக்கிறார்கள்.

குழந்தைகளுக்கான அழகியல் நூலகம்

ஒரு செயற்கை மரத்தின் கிளைகளில் சிறு சிறு கூடாரங்கள் இருக்கின்றன. படிகளில் ஏறி கிளைகளில் அமர்ந்து படிக்கலாம். அறுகோண வடிவில் பல்வேறு நிறங்களில் 36 இருக்கைகள் உள்ளன. சுவர்போல் எழும்பி நிற்கும் அந்த இருக்கைகளில், குழந்தைகள் தங்களுக்குப் பிடித்த இடத்தில் சாய்ந்துகொண்டு குத்துக்கால் வைத்தபடி புத்தகம் வாசிக்கலாம். மெத்தைகளில் படுத்தபடி படிக்கலாம். ‘குழந்தைகளின் முற்றம்’ என்கிற இடத்தில், குழந்தைகளின் கைகளுக்கு எட்டும் உயரத்தில் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. சிறு குழந்தைகள் ஏறி அமரும் உயரத்தில் மெத்தைகள், விளையாட்டின் வழியாக கற்றுக்கொள்ள படங்கள் மற்றும் உருவங்கள் அங்கே உள்ளன.

குழந்தைகளின் கற்பனைக்கான முற்றம்

பாடல், நடனம், நாடகம், ஓவியம் வழியாக வெளிக்காட்ட விரும்பும் குழந்தைகளுக்காக ‘கனவு முற்றம்’, தாங்கள் கற்றறிந்ததை பிறருடன் பகிர, கலந்துரையாட தனி அறை, குறும்படம் மற்றும் பயனுள்ள திரைப்படங்களை ஒளிபரப்ப நாற்பரிமாணம் (4D) உடைய சிறு திரையரங்கம், எண்ணற்ற குறுந்தகடுகளுடன் அமைந்துள்ள இசை நூலகம் மற்றும் பல்லூடகவியல் (Multimedia) அறை என புதுமையான கற்றல் சூழ்நிலையில் எல்லா வயதினரையும் வரவேற்கிறது தாய்லாந்து அறிவுப் பூங்கா.

சூரிய ஒளி இல்லாமல் உலகம் இருளை அணிந்திருந்த அந்த நேரத்திலும் குழந்தைகள், புத்தகங்களை வாசித்ததையும், தலையணி (Headphone) அணிந்து கேட்டதையும், இணையதளத்தில் ஏதோ தேடியதையும் கண்டேன். கட்டணம் கட்டித்தான் ஒவ்வொருவரும் உறுப்பினராக இருக்கிறார்கள் என்பதை அறிந்தபோது, குழந்தைகளின் பொறுப்புணர்வு புரிந்தது.

அந்நேரத்தில் என்னைச் சந்திக்க வந்த, தாய்லாந்தில் வாழும் பிலிப்பைன்ஸ் நாட்டு குடும்பத்தினருடன் இரவு உணவு சாப்பிட்டேன். அவர்களே என்னை விமான நிலையத்துக்கு அழைத்துச் சென்றார்கள். மனம் நிறைந்த அனுபவங்களுடன் தாய்லாந்துக்கு விடை கொடுத்தேன்.

புதைந்து கிடக்கிறது நம் வரலாறு!

சயாம் பர்மா மரண ரயில் பாதைத் திட்டத்தில், இந்தியர்கள் எவ்விதப் பங்களிப்பும் நல்கவில்லை என்றார் வழிகாட்டி. ஆனால், போர் வீரர்களுக்கான கல்லறை நுழைவாயிலின் வலது புறத்தில் உள்ள தகவல் பலகையில், ‘இந்தியா பிரிவதற்கு முன்பு ஒரே நாடாக இருந்தபோது இங்கு வந்து போரிட்டு இறந்த 11 பேர் முஸ்லிம் கல்லறைகளில் புதைக்கப்பட்டார்கள். அவர்களின் கல்லறைகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை’ என்கிற குறிப்புடன் அவர்களின் பெயர்களும் பொறிக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில், ஐரோப்பிய, அமெரிக்க வீரர்களுக்கும் மக்களுக்கும் அவர்களின் அரசு மரியாதை செய்துள்ளது. ஆனால், அநியாயமாகக் கொல்லப்பட்ட இந்தியர்களுக்கு அங்கே நினைவிடம் ஏதும் இல்லை. இப்போதும் ஆயிரக்கணக்கான இந்தியர்களின் உடல்கள் ரயில் பாதையின் ஓரத்திலும் தனி இடங்களிலும் புதைந்து கிடக்கின்றன. ஆங்கில போர்க் கைதிகளைக் குறித்து ‘The Bridge on the River Kwai’ எனும் திரைப்படமே வந்தது. ஆனால், எவ்வித நினைவிடமும் இல்லாமல் புத்தகத்தின் அடிக்குறிப்பாக மட்டுமே இருக்கிறது தமிழர்களின் வரலாறு!

(பாதை நீளும்)

x