மிது கார்த்தி
readers@kamadenu.in
“2026-ல் மீண்டும் மாற்றம், முன்னேற்றம், அன்புமணி தான். அந்தத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி கிடையாது. உள்ளாட்சித் தேர்தலில் இப்போதைய கூட்டணியே தொடரும். 2024 மக்களவைத் தேர்தலில் என்ன நிலைப்பாடு என்பதை முடிவு செய்வோம்” என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருப்பது அரசியல் அரங்கில் பேசுபொருளாகியிருக்கிறது.
உள்ளாட்சித் தேர்தலுக்கு அதிமுக கூட்டணி; 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பேசி முடிவெடுப்பது; 2026-ல் தனித்துப் போட்டி என்று மூன்று விதமான முடிவுகளை ராமதாஸ் அறிவித்திருப்பது தமிழக அரசியல் சமன்பாடுகளைக் குலைக்குமா எனும் கேள்வியும் எழுந்திருக்கிறது.
மாறிய நிலைப்பாடுகள்
திராவிடக் கட்சிகளுடன் இனி கூட்டணியே கிடையாது என அறிவித்துவிட்டு, 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து களம் கண்ட கட்சி பாமக. அந்தத் தேர்தலில் ‘மாற்றம், முன்னேற்றம், அன்புமணி’ என்ற கோஷத்தோடு போட்டியிட்ட பாமகவுக்கு ஓரிடத்தில்கூட வெற்றி கிடைக்கவில்லை. 2019 மக்களவைத் தேர்தல் வந்தபோது அப்படியே பல்டியடித்த பாமக, எந்தக் கட்சியின் ஆட்சி மீது ஊழல் புகார்களை அடுக்கியதோ அதே அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தது. 7 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்டும் வெற்றி கிட்டவில்லை. 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக, வன்னியர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு என்ற கோரிக்கையை முன்வைத்து அதிமுகவுடன் அரசியல் சடுகுடு விளையாட்டில் ஈடுபட்டது பாமக.
வட தமிழகத்தில் வெற்றிபெற பாமகவின் வாக்கும் தேவை என்று கருதிய அதிமுகவும், பாமகவின் மனம் கோணாமல் நடந்துகொண்டது. அதற்காக வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு மசோதாவைக் நிறைவேற்றித் தந்தது. அதிமுக கூட்டணியில் 23 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக, 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, அதிமுக கூட்டணியில் பாமக தொடர்ந்தாலும், பாமக – அதிமுக கூட்டணி என்பது தாமரை இலை தண்ணீர் போல் மாறியிருக்கிறது.
எதிர்பாராத திருப்பம்
“சட்டமன்றத் தேர்தலில் பாமக மட்டும் கூட்டணியில் இல்லாமல் போயிருந்தால், அதிமுக 20 இடங்களில்கூட ஜெயித்திருக்காது” என்று சொல்லி அதிமுகவை அதிரவைத்தார் அன்புமணி. இதற்கு எதிர்க்கருத்து சொல்லாமல் அமைதியாகவே இருந்தது அதிமுக தலைமை. பாமகவுக்குப் பதிலடி கொடுத்த பெங்களூரு புகழேந்திதான் கட்சியிலிருந்து கட்டம் கட்டப்பட்டார்.
இன்னொரு பக்கம் அதிமுக முன்னாள் அமைச்சர்களை ஊழல் புகார்கள் நெருக்கும் நிலையில், பாமகவிடமிருந்து சிறு சலசலப்புகூட இல்லை. மாறாக, கருணாநிதி படத்திறப்பு விழாவை அதிமுக புறக்கணித்தபோதும் பாமக அதில் பங்கேற்றது. திமுக அரசின் பட்ஜெட் தாக்கலின்போது, அதிமுக வெளிநடப்பு செய்தபோதும் பாமக உறுப்பினர்கள் அமைதியாகவே உட்கார்ந்திருந்தார்கள். கடந்த ஆட்சியில் சட்டப்பேரவையின் உள்ளேயும் வெளியேயும் திமுக என்ன முடிவை எடுத்ததோ, அதைக் காங்கிரஸும் அப்படியே பின்பற்றியது. ஆனால், அதிமுக-பாமக கூட்டணியில் அதெல்லாம் மிஸ்ஸிங்.
அதேவேளையில், வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீடுக்குத் திமுக அரசு வெளியிட்ட அரசாணை, வேளாண் பட்ஜெட் உட்பட பல விஷயங்களில் திமுகவைப் பாராட்டத் தவறவில்லை பாமக. திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் ராமதாஸுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதுபோல, இடஒதுக்கீடு விஷயத்தில் நன்றி தெரிவித்து ஸ்டாலினோடு போனில் பேசினார் ராமதாஸ். இந்தப் பரஸ்பர புரிதலால் உள்ளாட்சித் தேர்தலில் திமுக முகாமுக்குப் பாமக மாறும் என்ற பேச்சுகளும் எழுந்தன.
இப்படியான சூழலில்தான் தற்போது அதற்கு மாறாகப் பேசி அதிமுக கூட்டணியில் திரியைப் பற்ற வைத்திருக்கிறார் ராமதாஸ். இந்த அறிவிப்பின் பின்னணி என்ன? அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமியிடம் பேசினோம்.
நாம் தமிழர் கட்சியைச் சமாளிக்க…
“தமிழ் தேசிய கொள்கையில் நாம் தமிழர் கட்சி வட மாவட்டங்களில் பலமாக வேரூன்றி வருகிறது. ஈழ பிரச்சினைக்காகவும் பிரபாகரனுக்காகவும் மிக அதிகமாகப் பேசியவர் ராமதாஸ். பாமக தொண்டர்கள் தமிழ்த் தேசிய கொள்கையும் கொண்டவர்கள். நாம் தமிழர் கட்சி தொடர்ந்து தனித்துப் போட்டியிடுவதும், புலவர் கலியப்பெருமாள், பொன்பரப்பி தமிழரசன், வீரப்பன் போன்றோரை முன்னிறுத்துவதும் அக்கட்சி மீது வன்னிய இளைஞர்களின் பார்வையைத் திருப்பியிருக்கிறது. அது தன்னுடைய கட்சிக்கு எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காகவும், பாமக முதல்வர் வேட்பாளர் எப்போதும் அன்புமணிதான் என்பதை உணர்த்தவும்தான் ராமதாஸ் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்.
பாமகவின் வாக்கு சதவீதம் தொடர்ந்து குறைய அக்கட்சியின் கூட்டணி முடிவுதான் காரணம். எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என்பதை பாமக தொடர்ந்து சொன்னால், பாமக இளைஞர்கள் மெல்ல நாம் தமிழர் பக்கம் சாய வாய்ப்புகள் உள்ளன. இந்நிலையில் வாக்கு வங்கியைக் காப்பாற்றிக்கொள்ளவே ராமதாஸ் இப்படிப் பேச ஆரம்பித்திருக்கிறார்” என்கிறார் ரவீந்திரன் துரைசாமி.
வெற்றி குறித்த சந்தேகம்
எந்த ஒரு அரசியல் கூட்டணியும் தொடர்ந்து நீடித்துக்கொண்டே இருக்கும் என்று சொல்லிவிட முடியாது. சந்தர்ப்பங்கள்தான் கூட்டணியை ஏற்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுகின்றன. வழக்கமாக பாமக இடம்பெறும் கூட்டணியை ‘வெற்றிக் கூட்டணி’ என்றுதான் ராமதாஸ் அழைப்பார். ஆனால், அதிமுக-பாமக கூட்டணி 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் - விசிக கூட்டணியிடம் தோல்வியைத்தான் சந்தித்தது. “2024 மக்களவைத் தேர்தலில் கூட்டணி குறித்து பேசி முடிவுசெய்வோம்” என்று ராமதாஸ் கூறியிருப்பதன் மூலம், அதுவரை மதில் மேல் பூனையாக இருக்க பாமக முடிவு செய்திருப்பதாகவே பார்க்கப்படுகிறது.
“மக்களவைத் தேர்தலில் இரண்டு முறை திமுக கூட்டணியை எதிர்த்துப் போட்டியிட்டு பாமக தோல்வியடைந்திருக்கிறது. 2009, 2019 மக்களவைத் தேர்தல்களில் திமுக-விசிக கூட்டணி வெற்றிக் கூட்டணியாக இருந்தது. மீண்டும் அதே கூட்டணியை எதிர்த்தால், அடுத்தத் தேர்தலில் பாமகவுக்கு வெற்றி கிடைக்குமா என்ற சந்தேகம் ராமதாஸுக்கு இருக்கிறது. அதன் பின்னணியை இப்படியும் பார்க்கலாம்” என்கிறார் ரவீந்திரன் துரைசாமி.
இந்தச் சூழலில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்டங்களில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்கள் வட தமிழகத்தில்தான் வருகின்றன. இந்த மாவட்டங்களில் அதிமுக கணிசமான வாக்குகளைப் பெற, பாமக கூட்டணியும் தேவை என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு.
புதிர் விளையாட்டு
ஆனால், நான்கே முக்கால் ஆண்டுகள் கழித்து வரக்கூடிய தேர்தலுக்கு அதிமுக கூட்டணி இல்லை என்று அறிவித்து, ஒரு மாதத்தில் வரக்கூடிய தேர்தலுக்கு மட்டும் கூட்டணி உண்டு என்று ராமதாஸ் அறிவித்திருப்பது அதிமுக - பாமக இடையே எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தவே வாய்ப்புகள் அதிகம்.
“2019 மக்களவைத் தேர்தலுக்கு அதிமுக-பாமக கூட்டணி கெமிஸ்ட்ரி சரியாக இல்லை. அந்த கெமிஸ்ட்ரி 2021-ல் ஓரளவு கூடியிருந்தது. உள்ளாட்சித் தேர்தலிலும் அதை அப்படியே தக்கவைக்க வேண்டுமென்றால், அந்தப் பொறுப்பு அதிமுக, பாமக என இரு கட்சிகளுக்குமே உள்ளது” என்கிறார் ரவீந்திரன் துரைசாமி.
ராமதாஸின் மூவ் குறித்து பாமக செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞருமான பாலுவிடம் கேட்டதற்கு,“தொலைக்காட்சி பேட்டியிலேயே, தேர்தல் நேரத்தில் தான் கூட்டணியை முடிவு செய்வோம் என்பதை கடைசியில் ஐயா சொல்லியிருக்கிறாரே. கட்சியில் தீர்மானம் நிறைவேற்றி சொல்லும்போது அது வலுவானதாக இருக்கும். நீங்கள் கேட்கும் கருத்து ஒரு நேர்க்காணலில் சொன்னதுதானே. மற்றபடி உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி உண்டு என்பதையும் ஐயா தெளிவாகச் சொல்லிவிட்டாரே” என்றார்.
தமிழக அரசியல் வரலாற்றில், தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன்பு உருவான வெற்றிக் கூட்டணிகளும் உண்டு. நெருக்கமான கூட்டணியாக இருந்து திடீரென இரு துருவங்களான கூட்டணிகளும் உண்டு. ராமதாஸின் இந்த அரசியல் புதிர் விளையாட்டுக்கான விடை உள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு கிடைத்துவிடும் என எதிர்பார்க்கலாம்!