ஈருடல் ஓருடை!- நட்பின் அடையாளம் சொல்லும் நல் நண்பர்கள்


என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

உண்மையான நண்பர்கள் எதிரெதிர் திசையில் பயணித்தாலும், என்றைக்கும் அருகருகேதான் இருப்பார்கள் என்பது சான்றோர் வாக்கு. ஆனால், எப்போதும் ஒரே இடத்திலேயே இருக்கும் கூடுதல் வரத்தைப் பெற்றிருக்கிறார்கள் கேரளத்தின் ரவீந்திரனும் உதயகுமாரும். தையல் கலைஞர்களான இவர்கள் இருவரும் இணைபிரியாத நட்பின் அடையாளமாக, தனித்தனியே இயங்கிவந்த தங்கள் தையற்கூடங்களை ஒன்றாக இணைத்திருக்கிறார்கள். கடந்த 25 ஆண்டுகளாக இருவரும் ஒரே மாதிரியாக உடை அணிவதன் மூலம், உற்ற நட்புக்கு உதாரணர்களாகியிருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, திருக்குறள் வகுத்த நட்பின் நெறிமுறைகளுக்கேற்ப இருவரும் வாழ்ந்துவருகிறார்கள்.

‘நட்புக்காக’ படத்தில் வரும் சரத்குமார், விஜயகுமார் நட்புக்கே சவால்விடும் இந்த மலையாள நண்பர்களைப் பற்றிக் கேள்விப்பட்டு, கேரளத்தின் காயங்குளத்துக்குச் சென்றோம். அங்கே நண்பர்கள் இருவரும் அருகருகே அமர்ந்து தையல் வேலையில் ஈடுபட்டிருந்தனர்.

நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டதும், உற்சாகமாகப் பேசத் தொடங்கினார் ரவீந்திரன்.

“1982-ல் என்னோட நண்பர் திலகன் தான் முதன்முதலில் உதயகுமாரை அறிமுகப்படுத்தினார். ஒரு கனவுபோல் இருக்கிறது. வேகமாக எங்கள் இருவரது நட்பும் வளர்ந்துவிட்டது. ஒருகட்டத்தில் குடும்ப உறவுகளையெல்லாம் தாண்டி எங்கள் சிநேகம் அளவுகடந்த ப்ரியம் ஆகிவிட்டது. நகமும் சதையும் போல எனச் சொல்வார்களே அந்த மாதிரி நண்பர்கள் ஆகிவிட்டோம்.

தமிழ்ப் புலவர் திருவள்ளுவரை எங்கள் இருவருக்குமே பிடிக்கும். மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூல் எங்கள் தையல் கடையில் எப்போதும் இருக்கும். தன் ஆடை கழன்று விழும்போது எப்படி கை அனிச்சையாக வந்து பிடிக்குமோ, அதேபோல் நண்பனுக்கு ஒரு பிரச்சினை என்றால் ஓடிவருவது தான் நட்பு என்கிறார் வள்ளுவர். அப்படித்தான் எங்கள் நட்பு இருக்கிறது. இந்தக் குறளின் வழியிலேயே எங்கள் நட்பு, ஆடை தைக்கும் தொழில் ஆகியவை இருப்பதால் ஒரே வண்ண உடைகளை உடுத்தத் தீர்மானித்தோம்” என ரவீந்திரன் சொல்ல, நண்பர் விட்ட இடத்திலிருந்து பேச்சைத் தொடர்கிறார் உதயகுமார்.

“ஆடை தைக்கும் முன்பு ஒரே துணிதான் எடுப்போம். நாங்கள் நண்பர்களான ஆறாவது ஆண்டிலேயே தனித்தனியாக இருந்த தையல் கடைகளை மூடிவிட்டு ஒன்றாக ‘பி.கே டெய்லர்ஸ்’ என சேர்ந்தே கடையைத் தொடங்கிவிட்டோம். அப்போது, மலையாள முன்னணி இதழ் ஒன்றில் வெளியான பச்சு மற்றும் கோவலன் எனும் இரண்டு கார்ட்டூன் கேரக்டர்கள் ரொம்பவும் பிரபலம். எங்களின் நட்பைப் பார்த்துவிட்டு உள்ளூர்க்காரர்கள் எங்களை ‘பச்சு’, ‘கோவலன்’ என்றே அழைக்கத் தொடங்கினார்கள். அந்தக் கேரக்டர்களின் முதல் எழுத்துக்களை எடுத்தே ‘பிகே டெய்லர்ஸ்’ எனத் தொடங்கினோம். கார்ட்டூன் பாத்திரங்களை மக்கள் எங்களுக்குச் சூட்டியதில் நாங்கள் வருத்தப்படவில்லை. எங்கள் நட்பின் அங்கீகாரம் என்றே கருதினோம். எங்கள் இருவரின் குடும்பத்தினரும் எங்கள் நட்பின் ஆழத்தை உணர்ந்து எங்கள் முயற்சிகளுக்குத் துணைநிற்கிறார்கள்” என்றார் உதயகுமார்.

கடைகளை இணைத்து ஒன்றாக்கியது மட்டுமல்ல, இருவரும் அருகருகே வசிப்பது என்றும் முடிவெடுத்தது இன்னொரு ஆச்சரியம். முதலில் கடையில் அருகருகே இருந்து தையல் தொழில் செய்துவந்த இருவரும், கடையைப் பூட்டிச் சென்ற பின்னர், தற்காலிகமாகப் பிரிந்திருப்பதைக்கூட பாரமாகக் கருதத் தொடங்கினர். இருவரது வீட்டிற்கும் இடையில் ஒருகிலோ மீட்டர் தூரம்தான் என்றாலும், இவர்கள் நட்புக்கு முன் அது வெகுதூரமாகத் தெரிந்தது. இதையடுத்து, உதயகுமாரின் வீட்டுக்கு அருகிலேயே அடுத்த இடத்தை விலைக்கு வாங்கி வீடுகட்டி குடியேறிவிட்டார் ரவீந்திரன். ஆரம்பத்தில் இரு குடும்ப உறுப்பினர்களும்கூட ஒரே மாதிரியான உடை அணிந்து வந்திருக்கிறார்கள். ஆனால், பெண்களுக்கு ஒரே மாதிரியான உடைகளைக் கண்டுபிடிப்பது மிகவும் சவாலாக இருந்ததால் அந்த முயற்சியைக் கைவிட்டுள்ளனர்.

சரி, இருவரும் அன்றாடம் ஒரே மாதிரியான உடை அணிவதை எப்படித் திட்டமிடுகிறார்கள்? தினமும் உதயகுமார் அன்றைக்கு அணிய வேண்டிய பேன்ட்டைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு, ரவீந்திரனின் வீட்டுக்குச் செல்வார். ரவீந்திரன் அதற்குப் பொருத்தமான சட்டையைத் தேர்வு செய்வார். “நட்புதான் என்றாலும் அதில் இருவருக்குமான சமப்பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் அல்லவா!” என்று சிரிக்கிறார்கள் இருவரும்.

“எங்களிடம் அனைத்து வண்ணங்களிலும் சட்டைகள் இருக்கின்றன. மஞ்சள் நிறத்தில் மட்டும் இல்லை. ஏனென்றால், மஞ்சள் நிறம் என் நண்பன் உதயகுமாருக்குப் பிடிக்காது. அதனாலேயே எனக்கும் பிடிக்காது. எங்களது நட்பு முழுக்க அன்பால் மட்டுமே ஆனது. ஒரே மாதிரியான உடை என்பது தோற்றத்தில் தெரியும் விஷயம். அவ்வளவே! ஆனால், எங்கள் உள்ளமும்கூட அப்படித்தான். கோயில்களுக்குப் போனால்கூட நான் அவருக்காகவும், அவர் எனக்காகவும் பிரார்த்தனை செய்துகொள்வோம்” என நெகிழ்ச்சியோடு சொல்கிறார் ரவீந்திரன்.

ஒரே நிறத்தில் ஆடை அணியும் நண்பர்கள் என்று புகழ்பெற்று விட்டதால், காயங்குளம் முழுவதும் இவர்களின் ‘பி.கே டெய்லர்ஸ்’ கடையும் பிரபலம் ஆகிவிட்டது. இருவரில் யார் அதிகமாக ஆடைகள் தைத்தாலும், கிடைக்கும் வருமானத்தில் சரிசமமாகப் பங்கு வைத்துக்கொள்கின்றனர். நெருக்கடியான நேரத்திலும், குடும்பப் பொருளாதாரச் சிக்கல்களின் போதும் ஒருவருக்கொருவர் கைபிடித்து தூக்கிவிடுகின்றனர்.

தோள்கொடுக்கும் நல்ல நட்பு அமைந்துவிட்டால் வானமும் வசமாகும். அப்படித்தான் இந்த நண்பர்களின் வாழ்க்கையும் வசந்தமாகியிருக்கிறது.

x