சூதாட்டம்... ஆபாசம்... அசகாய தந்திரம்!- ராஜ் குந்த்ராவின் ரகிட ரகிட ரகசியங்கள்


எஸ்.சுமன்
readers@kamadenu.in

பாலிவுட் கனவுடன் வாய்ப்பு தேடும் இளம்பெண்களை வெப்சீரிஸ் எனும் போர்வையில் ஆபாசமாகப் படமெடுத்தது, பாலியல் வீடியோக்களை ஓடிடி பாணியில் வலையேற்றி கொள்ளை லாபம் குவித்தது, கிரிக்கெட் சூதாட்டத்தில் முதலீடு செய்தது, மும்பை நிழலுலக தாதாக்களுடன் இணைந்து பணமோசடியில் ஈடுபட்டது... மும்பை தொழிலதிபரும் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவருமான ராஜ் குந்த்ரா மீதான குற்றச்சாட்டுகள் இப்படி  நீள்கின்றன.

போதாக்குறையாக, ஷில்பா ஷெட்டி தனது கணவருக்கு வக்காலத்து வாங்கும் முயற்சியில், பாலியல் படைப்புகளை முன்வைத்து கிளப்பியிருக்கும் விநோத விவாதம் ஒன்றும் தனியாக அனல் பரத்துகிறது.

அப்பாவிகளை வளைத்த ஆபாச வலை

பிப்ரவரி முதல் வாரத்தில், மும்பை மால்வானி காவல் நிலையத்தை அணுகிய ஐந்து இளம்பெண்கள் கண்ணீருடன் ஒரு புகாரைப் பதிவு செய்தனர். அதன் பின்னணியை விசாரிக்கத் தலைப்பட்ட மும்பை சைபர் க்ரைம் போலீஸார் கிறுகிறுத்துப் போனார்கள்.
பெருந்தொற்று காலத்தில் ஓடிடி செயலிகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் வளர்ச்சி கண்டுள்ளன. இதே பாணியில் முழுக்கவும் ஆபாச வீடியோக்களை வலையேற்றிய ‘ஹாட்ஷாட்ஸ்’,  ‘ஹாட்ஹிட்’,  ‘நியூஃப்ளிக்ஸ்’ முதலான செயலிகளும் கரோனா காலத்தில் பிரபலமாகி இருக்கின்றன. இந்தச் செயலிகளுக்கான படைப்புகளுக்காக(!) சினிமா கனவிலிருந்த பல அப்பாவிப் பெண்களின் வாழ்க்கையையும் திட்டமிட்டு சீரழித்திருக்கிறார்கள்.

‘உலகின் முதல் 18+ செயலி’ என்ற அடைமொழியுடனான ‘ஹாட்ஷாட்ஸ்’ செயலி சாதாரணமாக கூகுள் ப்ளே ஸ்டோரில் தரவிறக்கம் செய்யும் வகையில் இருந்ததும், அதற்கு 20 லட்சத்துக்கும் மேலான கட்டண சந்தாதாரர்கள் இருந்ததும் சைபர் க்ரைம் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இந்தியச் சட்டங்களிலிருந்து தப்பிக்க இந்தச் செயலிகள் கெர்னின் என்ற நிறுவனத்தால் பிரிட்டனிலிருந்தே இயக்கப்பட்டன.

அந்த நிறுவனத்தை மறைமுகமாக நிர்வகித்தது ராஜ் குந்த்ரா என்றும், ஆபாச வீடியோக்களைத் தயாரித்ததும் அவர்தான் என்றும் விசாரணையில் தெரியவந்தது. கெர்னின் நிறுவனத்தை நடத்திவந்த பிரதீப் பாக்‌ஷி என்பவர் குந்த்ராவின் சகோதரியின் கணவர். வீடியோக்கள் எடுத்து விநியோகித்தது குந்த்ரா -ஷில்பாவின் குடும்ப நிறுவனமான வியான். ஆனால், இந்தத் தம்பதியின் அரசியல் அதிகார செல்வாக்குகளால் குந்த்ராவைக் காவல் துறை நெருங்குவது தள்ளிப்போனது. மற்றொரு விவகாரமே கடைசியில் ராஜ் குந்த்ராவை வீழ்த்தியது.

மாஃபியா பின்னணியும் கிரிக்கெட் சூதாட்டமும்

பஞ்சாப்பைப் பூர்விகமாகக் கொண்ட குந்த்ரா குடும்பத்தினர், பிழைப்புக்காக லண்டன் போனவர்கள். குந்த்ராவின் தந்தை பேருந்து நடத்துனர்; தாய் ஒரு தொழிற்சாலையில் சாதாரண சிப்பந்தி. குடும்பச் சூழல் காரணமாக கல்லூரிப் படிப்பைப் பாதியில் விட்ட குந்த்ராவுக்கு அப்போதிருந்தே பணம் சம்பாதிப்பதில் வெறி ஊறியிருந்தது. வர்த்தகத் துறையில் கால் பதித்தவர் வளைகுடா நாடுகளில் தொடங்கி நேபாளத்திலும் இந்தியாவிலும் பல்வேறு நிறுவனங்களைப் படிப்படியாக நிர்வகித்தார்.

இதனிடையே முதல் மனைவி கவிதாவுடனான விவாகரத்துக்குப் பின்னர், ஷில்பா ஷெட்டியுடனான புதிய வாழ்க்கையில் குந்த்ராவின் கவனம் பாலிவுட் பக்கம் திரும்பியது. பாலிவுட் படங்களுக்கு முதலீடு செய்துவந்தவர், ஐபிஎல் சூடுபிடித்தபோது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளராகவும் உயர்ந்தார்.

தள்ளுபடி விலையில் தங்கம் தருவதாக ஏமாற்றியது, ரியல் எஸ்டேட் தகராறுகள், அந்நிய செலாவணி மோசடி என பல்வேறு புகார்களில் இக்பால் மிர்ச்சி என்ற நிழலுலக தாதாவுடன் இணைந்து குந்த்ரா செயல்பட்டார். அப்படித்தான் ஐபிஎல் ஆட்டத்தைச் சூதாட்டக் களமாகவும் ஆக்கினார். குட்டு வெடித்தபோது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 2 ஆண்டுகள் தடையும், குந்த்ராவுக்கு வாழ்நாள் தடையும் விதிக்கப்பட்டன. அந்த அனுபவத்தில் தற்போது ஆபாச ஓடிடி மூலம் கிடைத்த கொள்ளை லாபத்தைக் கொண்டு கிரிக்கெட் சூதாட்டத்தில் முதலீடு செய்ய முயன்றபோது தான் குந்த்ரா வகையாகச் சிக்கினார். போலீஸார் விசாரணையில் மேற்படி சூதாட்ட மாஃபியாக்களுடனான குந்த்ராவின் தொடர்புகளும் வெளிப்பட, அவரைக் காபந்து செய்துவந்த அதிகார வட்டாரங்கள் விலகிக்கொண்டன.

‘பிளான் பி’ சுதாரிப்புகள்

போலீஸ் நடவடிக்கைகளை எதிர்பார்த்திருந்ததுபோல, பல ‘பிளான் பி’ சுதாரிப்புகளையும் செய்துவைத்திருந்தார் குந்த்ரா. ஆபாசப் படங்களைக் கையாண்ட குடும்ப நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பிலிருந்து ஷில்பாவின் ராஜினாமா, குந்த்ரா வசமிருந்து ஓடிடி நிறுவனத் தொடர்புகள் அனைத்துமே லண்டன் சகோதர நிறுவனத்துக்கு மாற்றம், இந்திய சர்வர்களிலிருந்து ஆபாச வீடியோக்கள் அனைத்தும் அழிப்பு... என இந்தச் சுதாரிப்புகள் வேகம் பிடித்தன. ஆனால், தென்னாப்பிரிக்க  சூதாட்ட நிறுவனத்துடனான குந்த்ராவின் வங்கிப் பரிவர்த்தனைகள் அவரது ‘ஸ்பாட் ஃபிக்சிங்’ திருவிளையாடல்களைச் சந்திக்கு இழுத்திருக்கின்றன. கிரிக்கெட் சூதாட்ட புகார்களை அதிகம் தோண்டினால் இன்னும் நிறையத் தலைகள் உருளும் என்பதால், குந்த்ரா மீதான குற்றச்சாட்டுகள் இப்போதைக்கு ஆபாச வீடியோக்களைச் சுற்றியே வருகின்றன.

ஷில்பா கிளப்பிய விவாதம்

 “ராஜ் குந்த்ராவின் பாலியல் படைப்புகள் அனைத்துமே ‘எரோடிகா’ என்பதன்கீழ் வரக்கூடியவை. அவையெல்லாம் இந்தியச் சட்டங்களுக்கு எதிரான ‘போர்னோகிராபி’யில் சேராது” என்று திருவாய் மலர்ந்திருக்கிறார் ஷில்பா ஷெட்டி. கணவரின் செயலி வர்த்தகத்தை அறிந்திருந்தபோதும் அதன் உள்ளடக்கம் தெரியாத அப்பாவியாகக் காட்டிக்கொண்ட ஷில்பாவின் வாதத்தை குந்த்ராவின் வழக்கறிஞரும் மும்பை உயர் நீதிமன்றத்தில் முன்வைத்தார். ஆனால், குந்த்ராவின் வீடியோக்கள் அப்பட்டமான ஆபாசக் குப்பை என்பதை சைபர் போலீஸார் ஆதாரங்களுடன் நிரூபித்து அந்த வாதத்தை உடைத்துள்ளனர். ஆனபோதும் ‘எரோடிகா Vs போர்னோ’ விவாதம் பொதுவெளியில் பற்றிக்கொண்டிருக்கிறது.

பணத்தை எப்படி சம்பாதிக்கக் கூடாது?

ஆபாச ஓடிடி வழக்கை இந்தியாவின் பலவீனமான சட்டங்களைக் கொண்டே தகர்க்கக் காத்திருக்கிறார் குந்த்ரா. பல்வேறு நாடுகளின் நாற்பதுக்கும் மேலான நிறுவனங்களில் சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்குச் சொத்து சேர்த்திருக்கும் குந்த்ரா, 20 வயதில் கனவு கண்டதை 45 வயதுக்குள் சாதித்துவிட்டார். ஆனால், அதற்காக அவர் கடந்துவந்த பாதையே அவரைக் கம்பி எண்ண வைத்திருக்கிறது. பல்துறை வித்தகரான குந்த்ரா, 7 வருடங்களுக்கு முன்னர் எழுதிய ஒரு புத்தகம், தற்போது சமூக ஊடகங்களில் அதிகம் கேலிக்குள்ளாகியிருக்கிறது. அப்படி அவர் எழுதிய புத்தகத்தின் தலைப்பு, ‘How not to make money'!.

‘எரோடிகா Vs போர்னோ’

எரோடிகா என்பது சமூகத்தின் உயர் நிலையில் உள்ளவர்களுக்கான பாலியல் படைப்பு; போர்னோ என்பது அதற்கு கீழுள்ள மக்களுக்கான பாலியல் படைப்பு என்பதே பெரும்பாலானோரின் புரிதலாக இருக்கிறது. இரண்டுமே பாலியல் இச்சை சார்ந்த படைப்புகள் என்றபோதும் நுட்பமான வேறுபாடுகள் கொண்டவை. சுய லாபத்துக்காக ஷில்பா ஷெட்டி தொடங்கி வைத்த இந்த விவாதம் தற்போது ஆரோக்கிய பாதையில் சென்றுகொண்டிருக்கிறது.

எரோடிகா என்பதில் கண்ணியத்துக்கும், கலைக்கும், காதலுக்கும் இடமிருக்கும். எழுத்து, இசை, நாடகம், சிலை, ஓவியம், திரைப்படம், இலக்கியம் என சகலத்திலும் கலை சார்ந்த எரோடிக் படைப்புகளைப் பார்க்கலாம். போர்னோவில் பால் இச்சை எனும் மலினத்தைத் தவிர்த்து கலை என்பதற்கே இடமிருக்காது. எரோடிகாவில் பாலியல் கல்விக்கு வாய்ப்புண்டு. அதனால்தான் ஆதிகாலம் தொட்டே கோயில்களில்கூட எரோடிக் சிற்பங்கள், ஓவியங்களை வடித்துவைத்தார்கள்.

உறவில் ஆண் மட்டுமே ஆதிக்கம் செலுத்துவதோடு, பெண்ணின் உணர்வுகள், கண்ணியம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாததும் போர்னோவின் கேடுகள். மாறாக எரோடிகா பெண்ணியமும் பேசும். ஆனபோதும் இந்தியா போன்ற பாலியல் வறட்சி கொண்ட, பாலியல் கல்வியைப் புறங்கையில் ஒதுக்கக்கூடிய, பாலியலைப் பொதுவில் விவாதிக்கத் தயங்கும் தேசத்தில் எரோடிகாவுக்கும், போர்னோவுக்கும் இடையிலான மெல்லிய கோட்டுக்கு எந்த மதிப்பும் இல்லை!

ஆபாசப் படம் பார்த்தால் ஆபத்தா?

வயது வந்தவர்கள் தங்கள் தனியிடத்தில் அந்தரங்கமாக என்ன பார்க்கிறார்கள் என்பதில் எப்போதும் சட்டம் மூக்கை நுழைப்பதில்லை. ஆனால், அவற்றில் 18 வயதுக்குக் கீழானோர் சம்பந்தப்பட்ட படங்கள், வீடியோக்கள் இருப்பின் சைபர் போலீஸாருக்கு நிச்சயம் மூக்கு வியர்க்கும். அம்மாதிரியான படங்களை வைத்திருப்பதும், பார்ப்பதும், பரப்புவதும், தரவிறக்கம் செய்வதும் பெருந்தவறு. குற்றம் உறுதியானால் போக்சோ சட்டத்தின் கீழான நடவடிக்கைகள் நிச்சயம் பாயும்.

இணையத்தின் ஆபாசக் குப்பைகளில் பெரும்பாலானவை ‘ஸ்கேண்டல் வீடியோஸ்’. அதாவது, சம்மந்தப்பட்ட பெண் அறியாமல் தந்திரமாக எடுக்கப்பட்டு பரப்பப்படும் காணொலிகள். அந்த வகையில் பெண்களின் அந்தரங்கத்தில் அத்துமீறி அவர்களின் மாண்புக்குப் பங்கம் விளைவிப்பவர்கள் மீது பாய இந்திய தண்டனைச் சட்டமான 354 C, தகவல் தொழில்நுட்ப சட்டம் 66 E ஆகியவை தயாராக உள்ளன. மற்றொரு தகவல் தொழில்நுட்பச் சட்டமான 67, ஆபாச உள்ளடக்கம் எதுவானாலும் அவற்றை மின்னணு ஊடகவெளியில் பரப்புவோரை அபராதத்துடன் சிறைக்கு அனுப்பச் சொல்கிறது. ஆபாச உள்ளடக்கத்தை 20 வயதுக்கும் குறைவானோருக்குப் பகிர்ந்தாலோ, விற்றாலோ, காண்பித்தாலோ பாயக் காத்திருக்கிறது தண்டனைச் சட்டத்தின் 293-வது பிரிவு.

x