எஸ்.எஸ்.லெனின்
readers@kamadenu.in
ஆப்பிரிக்க தேசமான நமீபியாவில் தனது காலனியாதிக்க காலத்து வெறியாட்டம், இனப்படுகொலைதான் என ஒப்புக்கொண்டிருக்
கிறது ஜெர்மனி. நூறாண்டு தாமதம் என்றாலும் தனது செயலுக்காக மன்னிப்பையும் அந்நாடு கோரி இருக்கிறது. பெருந்தொகையை இழப்பீடாக வழங்கப்போவதாகவும் அறிவித்திருக்கிறது. நமீபியா மட்டுமன்றி மேலும் இரண்டு இனப்படுகொலைகளும் சர்வதேச சமூகத்தின் விவாதத்துக்கு வந்திருப்பதுடன், வல்லரசுகள் அது தொடர்பாக வருத்தம் தெரிவித்திருப்பது அண்மையில் நிகழ்ந்திருக்கும் ஆக்கபூர்வ மாற்றம்.
பெருந்தொற்றால் இனபேதமற்று பெரும் எண்ணிக்கையில் உலக மக்கள் பலியாவதன் மத்தியில், இனப்படுகொலை குறித்து வல்லாதிக்க நாடுகளின் நிலைப்பாட்டில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றம் மிகுந்த கவனம் பெறுகிறது. நமீபியாவில் ஜெர்மனியின் நேரடிப் பங்கு, ருவாண்டாவில் பிரான்ஸின் மறைமுகப் பங்கு என இரண்டு இனப்படுகொலைகளிலும் தொடர்புடைய ஆதிக்க நாடுகள் காலம் கடந்து மன்னிப்புக் கோரியுள்ளன. இத்துடன் நேரிடை தொடர்பில்லாதபோதும், இனப்படுகொலை சம்பவம் ஒன்றை இன்னொரு வல்லரசு வலிய முன்வந்து அங்கீகரித்திருக்கிறது. அந்த வகையில், நடப்பாண்டின் பரபரப்புக்குரிய பெருந்தொற்று மற்றும் ஒலிம்பிக் செய்திகளின் மத்தியில் இனப்படுகொலைகளுக்கு எதிராக தீனமாய் ஒலித்த இந்தக் குரல் ஆர்மீனியாவை மையமாகக்கொண்டே ஆரம்பித்தது.
அதிரவைத்த ஆர்மீனியப் படுகொலை
ஆட்டமன் பேரரசுகள் காலம் தொட்டே ஆர்மீனிய மக்கள் பெரும் நெருக்கடிக்கு ஆளானார்கள். சுல்தான்கள் தவணை முறையில் இனவாத அழிப்பை நிகழ்த்தியும் வந்தார்கள். முதலாம் உலகப்போரில் ஜெர்மனிக்கு ஆதரவாகக் குதித்த துருக்கி, தனது பிராந்திய எதிரியான ரஷ்யாவுடன் மோதி தோல்வியடைந்தது. தங்கள் தோல்விக்கு ஐந்தாம் படையாகச் செயல்பட்டதாக ஆர்மீனியர்கள் மீது துருக்கிப் படைகள் வெறியுடன் பாய்ந்தன. அதுவரை அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த இனவாதத் தாக்குதல்கள் அதன் பின்னர் கட்டவிழ்த்து விடப்பட்டன. ஆர்மீனியர்கள் என அடையாளம் காணப்பட்டவர்கள் அனைவரும் படுகொலைக்கு ஆளானார்கள். உயிருக்கு அஞ்சி சிரியாவுக்குத் தப்பிச்செல்ல முயன்ற ஆர்மீனியக் குடும்பங்கள், பாலைவனப் பயணத்தின் பாதியில் பரிதாபமாகச் செத்தனர். பல்லாயிரம் மக்கள் நேரடியாகவும் எஞ்சியவர்கள் இவ்வாறு விரட்டியடிக்கப்பட்டும் கொல்லப்பட்டனர்.
துருக்கியின் ராஜதந்திர அணுகுமுறையால் நீண்ட காலத்துக்கு இந்தக் கொடுமைகள், இனப்படுகொலையாக உலக அரங்கில் அங்கீகாரம் பெறவில்லை. துருக்கி தேசத்தில் இந்தச் சம்பவத்தைப் பொதுவில் பேசுவதோ, விவாதிப்பதோ தேச துரோகத்துக்கு இணையான குற்றமாக உள்ளது. மீறி குரல் கொடுத்ததற்காக, நோபல் பரிசு புகழ் துருக்கி எழுத்தாளர் ஓரான் பாமுக் தண்டனைக்கு ஆளாகி ஐரோப்பிய சமூகத்தின் நெருக்கடியால் விடுவிக்கப்பட்டது சமகால உதாரணம். தற்போதைய சிரிய போர்க்களத்தில் துருக்கியுடன் அமெரிக்கப் படைகள் இணைந்து செயல்பட்டுவரும் சூழலில், ஆர்மீனியர் மீதான தாக்குதலை இனப்படுகொலை என அமெரிக்க அதிபர் அறிவித்து அதற்காக வருந்தியிருப்பது துருக்கியை நெருக்கடியில் தள்ளியிருக்கிறது. இங்கிருந்தே சர்வதேசச் சமூகத்தின் இனப்படுகொலை தொடர்பான தற்போதைய விவாதங்கள் சூடுபிடித்தன.
ருவாண்டாவில் தடம்புரண்ட பிரான்ஸ்
ஆப்பிரிக்க தேசமான ருவாண்டாவில், இரண்டு எதிரெதிர் இனக்குழுக்களில் சிறுபான்மை இனமான டூட்ஸி இனத்தவரின் ஆட்சி தொடர்ந்ததில் பெரும்பான்மையான ஹூட்டு இனத்தவர்கள் அதிருப்தி கொண்டிருந்தனர். காலனியாதிக்க ஜெர்மனியின் ஆளுகையில் தொடங்கி முதல் உலகப்போர் முடிவில் பெல்ஜியத்தின் அரவணைப்புக்கு மாறிய பிறகும் இந்த நிலை தொடர்ந்தது. ஹூட்டு இனக்குழுவின் அதிருப்தி ஒருகட்டத்தில் ஆத்திரமாக மாறியது. கிளர்ச்சி வெடித்து, 1962-ல் ருவாண்டா விடுதலையில் முடிந்தது. குடியரசின் பெயரில் ஒரு கட்சி ஆட்சி, சர்வாதிகாரம் என ஹூட்டு குழு நாட்டை ஆள, டூட்ஸிகள் போராளிகளாக மாறினர்.
இந்தச் சகோதர யுத்தத்துக்கு முடிவுகட்ட அருகமை ஆப்பிரிக்க நாடுகள் முன்வந்தன. 1994-ல் தான்சானியாவில் அதற்கான அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி, விமானத்தில் ருவாண்டா திரும்பிய அதிபர் ஜுவெனல் ஹப்யரிமானா ஏவுகணைத் தாக்குதலில் ஆகாயத்திலேயே கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து ருவாண்டா வீதிகளில் ரத்த ஆறு ஓடியது.
ஐ.நா தலையீட்டில் ருவாண்டாவில் அமைதியை நிலைநாட்ட அனுப்பப்பட்ட பிரான்ஸ் படையினர், ஒருதலைபட்சமாக ஹூட்டு இனத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டனர். டூட்ஸி இனத்தைப் பூண்டறுக்க வீடுவீடாக குண்டர்கள் அனுப்பப்பட்டனர். அரசு வானொலியில் பகிரங்கமாய் பெயர் பட்டியல் வாசித்து படுகொலைகளையும் பாலியல் வன்கொடுமை களையும் அரங்கேற்றிய கொடுமை நடந்தது. டூட்ஸி இனத்தைச் சேர்ந்தவர்களை அவர்களின் அண்டை வீட்டாரான ஹூட்டுகளே கொன்றதும், கரம்பிடித்தவர் டூட்ஸி எனில் கணவன் அல்லது மனைவி கையாலே கொல்லப்பட்டதும் உயிரச்சத்தில் நடந்த அவலங்கள். நியாயம் பேசிய மிதவாத ஹூட்டுகளும் ஆயிரக் கணக்கில் பலியானார்கள்.
இப்படி ஒவ்வொரு நாளும் சுமார் எட்டாயிரம் உயிர்கள் என மூன்று மாதங்களுக்கும் மேலாக நீடித்த அட்டூழியத்தில், தேசத்தின் 20 சதவீத மக்கள்தொகை அழிந்தது. இந்தப் படுகொலைகளுக்கு மறைமுகக் காரணமான பிரான்ஸ், நடந்தது இனப்படுகொலை என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறது. அதுவும் ஆர்மீனிய இனப்படுகொலைக்கு சர்வதேச வெளிச்சம் கிடைத்த பிறகே நடந்திருக்கிறது. இந்த இரண்டையும் தொடர்ந்தே சர்வதேச சமூகத்தின் பார்வை ஜெர்மனி மீது பாய்ந்தது.
ஜெர்மனியின் நமீபிய நரபலி
இன்றைய நமீபியா, புருண்டி, ருவாண்டா, தான்சானியா உள்ளிட்ட ஆப்பிரிக்க தேசங்களின் ஒருங்கிணைந்த நிலப்பரப்பை 19-ம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கி முதல் உலகப்போர் முடியும்வரை ஜெர்மனியே ஆண்டுவந்தது. ஆப்பிரிக்க மண்ணின் கனிம வளங்களுக்காகவும், விவசாய தேவைக்காகவும் அந்நாடுகளைக் காலனியாதிக்கத்தில் அடிமைப்படுத்தி இருந்தது. நமீபியாவின் விவசாய நிலங்கள் ஜெர்மனியரால் பிடுங்கப்படுவது அதிகரிக்கவே, அவற்றை எதிர்த்துப் பூர்வகுடிகள் கிளர்ச்சியில் இறங்கினர். அப்படியான போராட்டம் ஒன்றின் எதிர்த் தாக்குதலில் ஜெர்மனிய வீரர்கள் கொல்லப்பட, ஜெனரல் வான் ட்ரோதா என்ற ராணுவ அதிகாரி அதற்குப் பழிவாங்க முடிவு செய்தார்.
அந்த வகையில் சொந்த நாட்டின் யூதப் படுகொலைக்கு முன்பே, 1904-1908 இடையிலான ஆண்டுகளில் மிகப்பெரும் இனப்படுகொலையை ஆப்பிரிக்க மண்ணில் பரிசோதித்திருக்கிறது ஜெர்மனி. நமீபிய ஆண்களை விரட்டிக் கொன்றவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை தாமாக சாகட்டுமென கலஹரி பாலைவனத்துக்கு விரட்டியடித்தனர். தேக திடம் கொண்டவர்களை அருகிலிருக்கும் சுறாத் தீவின் வதைமுகாம்களில் வைத்து, தங்கள் மருத்துவப் பரிசோதனைகளுக்கான எலிகளாக்கி கொன்றார்கள்.
முதல் உலகப்போரில் ஜெர்மனிக்குக் கிடைத்த தோல்வி, அந்நாட்டின் பிடியிலிருந்து நமீபியாவை விடுவித்து தென்னாப்பிரிக்க ஆளுகைக்கு தள்ளிவிட்டது. 75 ஆண்டுகால சுதந்திர போராட்டத்துக்குப் பின்னர், 1990-ல் விடுதலைக் காற்றை சுவாசித்தது நமீபியா. இரண்டாம் உலகப்போரின் பெயரிலான இதர வடுக்களில் புனுகு பூசி வந்த ஜெர்மனிக்குப் புத்தாயிரத்துக்குப் பிறகே, நமீபியாவின் நினைவு வந்தது. படிப்படியாக வருத்தம், மன்னிப்பெல்லாம் கோரியவர்கள் தற்போது யூரோ மதிப்பில் 110 கோடியிலான (1.1 பில்லியன்) இழப்பீட்டைத் தருவதாக அறிவித்துள்ளனர். இதில் கணிசமான தொகை, ஜெர்மனியரால் சாகடிக்கப்பட்ட நமீபியரின் சந்ததியினர் மேம்பாட்டுக்கு ஒதுக்க வேண்டும் எனவும் கோரியுள்ளது.
ஊழியில் வந்து உறுத்துகிறதா?
நடந்த துயரங்கள் அனைத்தும் கால் முதல் முழு நூற்றாண்டு கால பின்புலம் கொண்டவை என்றபோதும், இனப்படுகொலை அங்கீகரிப்பு, மன்னிப்பு கோரல், இழப்பீடு உதவி எல்லாம் இந்தப் பெருந்தொற்று காலத்தில்தான் வேகமெடுத்திருக்கின்றன. ஊழிக்கு நிகரான இக்காலத்தில் மனித மனசாட்சி ஓவர்டைம் பணியாற்றுவதும், உறுத்துவதும்கூட ஒரு காரணமாக இருக்கலாம். எப்படியோ இந்த இனப்படுகொலை என்ற அங்கீகாரமும், எஞ்சிய சந்ததியினரின் எதிர்காலத்துக்கான முன்னெடுப்புகளும், உலகமெங்கும் இனப்படுகொலையால் உறவுகளையும் வாழ்க்கையையும் இழந்து ஏதிலிகளாகத் தவிப்போருக்கு ஓரளவேனும் ஆறுதல் தரும். நாமறிந்த ஈழத்தமிழர் துயரம் வரை பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அதுவே தேறுதல் தரும்!