இசைவலம்: காந்தியின் பஜனுக்கு ராஜாவின் இசை!


‘நம்ரதா கே சாகர்’ எனத் தொடங்கும் காந்தியின் புகழ்பெற்ற பஜன் பாடலுக்கு, இளையராஜா இசையமைத்தது நம்மில் பலரும் அறியாதது. ஆம், 2008-ல் வெளியிடப்பட்ட இந்த பஜன் பாடலை இந்தியாவின் மதுரமான குரலுக்குச் சொந்தக்காரர்களான பண்டிட் பீம்சென் ஜோஷி, பண்டிட் அஜய் சக்ரவர்த்தி ஆகியோர் பாடியிருக்கிறார்கள்.

பாடலுக்கான ஆவணப்படத்தை ஜார்ஜ் மங்களத் தாமஸ், அனூப் ஜோத்வானி ஆகியோர் எழுதி இயக்கியிருக்கின்றனர். அஷ்வினி சவுத்ரி, நீடா புலானி தாமஸ், சுபாஷ் தாமஸ் ஆகியோரும் இந்தப் பாடல் படைப்பில் பங்கெடுத்திருக்கின்றனர். இயற்கையான காட்சிப் பதிவுக்கு ஒத்திசைவாக ஓடை நீரின் ஜலதரங்க ஒலி பாடல் நெடுகிலும் நம் செவியைப் பரவசப்படுத்துகிறது.

மகாத்மா எனும் மாமனிதர் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக சிம்ம சொப்பனமாக இருந்த கதை வரலாற்றின் பக்கங்கள் நெடுகிலும் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் குழந்தைகளும் கொண்டாடும் குழந்தையாக மகாத்மா இருந்திருக்கிறார் என்பதை ரத்தினச் சுருக்கமாக நம் மனத்தில் பதியவைக்கின்றன இந்தப் பாடலுக்கான காட்சிகள். வெறுமே பாடலுக்கான காட்சிகளை வெட்டி ஒட்டாமல், குழந்தைகளின் உலகத்தை, மகாத்மாவுக்குள் இருக்கும் ஒரு குழந்தையின் உள்ளத்தைச் சித்தரிக்கிறது இந்தப் பாடலின் காணொலி.

இந்தப் பாடலின் மூலம் மக்களிடம் பணிவு வேண்டும் என்றும் நாட்டுக்கு செல்வம், புகழ் அனைத்தும் கிட்ட வேண்டும் என்றும் இறைவனிடம் காந்தி தன்னுடைய வேண்டுகோளை வைக்கிறார். ‘மக்கள் அனைவரும் அன்பு, கருணையால் பிணைக்கப்பட வேண்டும். அனைவரும் ஒற்றுமையாக இருந்து மனிதநேயம் காக்க வேண்டும். இது நமது நாடு. அதன் பெருமையை உலகுக்கு உணர்த்த வேண்டும். அனைவருக்கும் பணிவு அவசியம். கங்கை, யமுனை, பிரம்மபுத்திரா போன்ற நதிகள் எப்படி அனைவருக்கும் உதவுகின்றனவோ அதுபோல் மக்களுக்குள் உதவி செய்யும் மனப்பான்மை வர வேண்டும். அனைத்து நதிகளும் எப்படி கடலில் சங்கமிக்கின்றனவோ, அதுபோல் அனைவரும் இந்த நாட்டில் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இந்த நாடு செழிக்க வேண்டும். இந்த நாட்டுக்காகத் தியாகம் செய்துள்ளவர்களை நினைக்க வேண்டும். இந்த நாட்டின் மீது பக்தி வேண்டும்’ எனும் காந்தியின் உயர்ந்த சிந்தனைகள் இந்த பஜனைப் பாடலில் வெளிப்படுகின்றன.

பாடலின் ஒட்டுமொத்த கருத்தையும் இந்தியில் தன்னுடைய ஈர்ப்பான குரலில் நடிகர் அமிதாப் பச்சன் மீண்டும் அறிவுறுத்துவதோடு பாடலின் காணொலி முடிகிறது. ஆனால், ‘நம்ரதா கே சாகர்’ எனும் பாடலின் வரிகள் மட்டும் அனிச்சையாக நம் மனத்தில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. இந்தச் சுதந்திர தினத்தையொட்டி நாம் கேட்டு நெகிழ வேண்டிய பாடல் இது.

காந்தியின் பஜனையில் நீங்களும் இணைய: https://www.youtube.com/watch?v=Z86LscyJhNY

* * *

நான்கு பெண்களின் மூவர்ண நடனம்!

அனுசுயா, அனு, ரும்பா, சஞ்சாரி ஆகிய நான்கு நடனக் கலைஞர்களும் ‘பிரங்கா’ எனும் தொலைக்காட்சிக்காக தங்களின் நடனத்தின் மூலமாக, இந்திய நாட்டின் சுதந்திர வேள்விக்கு வீர வணக்கத்தை தெரிவிக்கின்றனர். மூவர்ணக் கொடியைக் கொண்டு பல விதமான நடன அசைவுகளின் மூலமாக மாயத் தோற்றத்தைக் கொண்டுவருவதை, `பருந்துப் பார்வை’ உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் ஒளிப்பதிவு செய்து நம்முடைய கண்களுக்கு விருந்தாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிப்லாப் சாஹா. நடனக் கலைஞர்கள் தங்களின் சீரிய பயிற்சிகளின் மூலமும் முகபாவனைகளின் மூலமும் நாட்டுப்பற்று, ஒற்றுமையின் அவசியத்தைப் பார்ப்பவர்களின் மனதுக்கு எளிமையாகக் கடத்துகிறார்கள்.

நடனப் பின்னலைக் கண்டு ரசிக்க: https://www.youtube.com/watch?v=PacqBw0dbSs

* * *

இந்தியாவின் வீரப் பெண்!

‘சலாம் இந்தியா’ எனும் தலைப்பில் 14 தேசபக்திப் பாடல்களைக் கொத்தாகத் தயாரித்து வெளியிட்டுள்ளது ‘ஜீ மியூசிக்’ நிறுவனம். இதில் `பாரத் கி பேட்டி’ (பாரதத்தின் புதல்வி) எனும் பாடல் மிகவும் நெருக்கமாக இருந்தது. இந்தப் பாடலுக்கு இசையமைத்துத் தயாரித்துள்ளார் அமித் திரிவேதி. கவுஸர் முனீர் எழுதிய பாடலை உருக்கமான குரலில் பாடியிருக்கிறார் ஹர்ஜித் சிங்.

இந்திய விமானப் படையில் ஃபிளைட் லெப்டினென்ட்டாகப் பணிபுரிந்த குஞ்சன் சக்சேனாவின் தீரத்தைப் பேசுகிறது இந்தப் பாடல். குஞ்சன் சக்சேனா 1994-ல் இந்திய விமானப் படையில் சேர்ந்தார். 1999-ல் கார்கில் போரில் பங்கெடுத்த இரு பெண்களில் இவரும் ஒருவர். இன்னொரு பெண்ணின் பெயர் வித்யா ராஜன். போர்முனையில் காயமடைந்த இந்திய வீரர்களைக் காப்பாற்றி சீட்டா ஹெலிகாப்டரின் மூலம் முகாம்களுக்கு அழைத்துவருவது, போர்முனையில் வீரர்களுக்குத் தேவைப்படும் தளவாடங்களைக் கொண்டு சேர்ப்பது போன்ற பணிகளில் இருவரும் ஈடுபட்டனர்.

கார்கில் போரில் காயம்பட்ட, உடல் நலம் குறைந்த எண்ணற்ற இந்திய வீரர்களைப் போர்முனையிலிருந்து மீட்டெடுத்து காப்பாற்றியவர் குஞ்சன் சக்சேனா.  விமானப் படையில் சேர்வதற்கு பயிற்சிகளைச் செய்வது, தோல்வி அடைவது, மீண்டும் முயற்சித்து வெற்றி பெறுவது, போர்முனையில் ஹெலிகாப்டர் பைலட்டாகப் பணிபுரிவது என போர்முனையில் இவரின் தீரச் செயல்களை நினைவுபடுத்தும் விதமாக இந்தப் பாடல் எடுக்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஆண்டில் குஞ்சன் சக்சேனாவின் தீர வாழ்க்கையைச் சித்தரிக்கும் ‘குஞ்சன் சக்சேனா: கார்கில் கேர்ள்’ எனும் பெயரில் திரைக் காவியம் வெளியானது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நாயகியாக நடித்திருந்தார். திரைப்படம் வெளிவரும் போதே, எழுத்தாளர்கள் கிரண் - நிர்வன் ஆகியோர் இணைந்து குஞ்சனின் சுயசரிதையை வெளியிட்டனர். இதை, 
`தி கார்கில் கேர்ள்’ எனும் பெயரில் பெங்குயின் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

வீர மங்கையின் வெற்றிக் கதையைக் காண: https://www.youtube.com/watch?v=q5HLqoYUUaY

x