ம.சுசித்ரா
susithra.m@hindutamil.co.in
போலி பல்கலைக்கழகங்கள் குறித்து வருடாவருடம் வெளியாகும் செய்திகள் மாணவர்கள், பெற்றோர்களின் வயிற்றில் புளியைக் கரைக்கின்றன. மறுபுறம், விவரமறியாமல் விட்டில் பூச்சிகளாய் போலி பல்கலைக்கழகங்களின் வலையில் சிக்கிக்கொண்டு பலரும் தவிப்பது தொடர்கதையாகிவிட்டது.
இந்தியாவில் 24 போலி பல்கலைக்கழகங்கள் இயங்கிக்கொண்டிருப்பதாகச் சமீபத்தில் வெளியாகியிருக்கும் செய்தி இப்பிரச்சினையின் தீவிரத்தை உணர்த்துகிறது. போலி பல்கலைக்கழகங்கள் குறித்து, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பல்கலைக்கழக மானியக் குழுவும் (யூஜிசி), மத்திய அரசும் எச்சரிக்கத்தான் செய்கின்றன. ஆனால், காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை என்பதுதான் கவலையளிக்கும் விஷயம்.
இன்றைய தேதியில் தமிழகத்தில் போலி பல்கலைக்கழகம் ஒன்றுகூட இல்லை என்பது தமிழர்களுக்கு ஆறுதல் அளிக்கும் செய்தி. 2015 வரை தமிழகத்தில், ‘டிடிபி சம்ஸ்கிருத பல்கலைக்கழகம்’ என்ற ஒன்று சட்டத்துக்குப் புறம்பாகத் திருச்சியில் செயல்பட்டுவருவதாகப் பட்டியலிடப்பட்டது. அடுத்த ஆண்டிலிருந்து அந்தப் பல்கலைக்கழகத்தின் பெயர் பட்டியலில் காணப்படவில்லை. அதேவேளையில், வேறுவிதமான பிரச்சினைகள் தமிழகத்தில் நிலவத்தான் செய்கின்றன.
பெயரில் மயங்கிவிடாதீர்!
தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி எச்சரித்தும், ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளிவருவதற்குள்ளாகவே பல நூறு கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை ஆரம்பித்துவிட்டன. தற்போது தேர்வு முடிவுகள் வெளியான பிறகு அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை இன்னும் பரபரப்பாக நடந்துவருகிறது. புதிய போக்குகளுக்கு ஏற்ப கவர்ச்சிகரமான பெயரில் பல பட்டப்படிப்புகள் அண்மைக்காலமாக அறிமுகப்படுத்தப்படுகின்றன. செயற்கை நுண்ணறிவு, நானோ டெக்னாலஜி, ரோபோட்டிக்ஸ் போன்ற பெயர்களைக் கண்டதும் மயங்கிவிடக் கூடாது. படிக்கப்போகும் கல்லூரி, பல்கலைக்கழகத்தை மட்டுமல்ல அங்கு வழங்கப்படும் பட்டப் படிப்பின் தரத்தையும் தீர விசாரித்த பிறகே இணைவது நல்லது என்பதை வலியுறுத்துகிறார் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் அகாடமிக் கவுன்சில் முன்னாள் உறுப்பினரான பேராசிரியர் முரளி.
“வசூல் வேட்டையில் இறங்கவோ அல்லது நூதனமான போக்குகளைப் புதிய தலைமுறையினருக்குக் கொண்டு சேர்க்கவோ புதுப்புது பெயர்களில் பட்டப் படிப்புகள் கொண்டுவரப்படுகின்றன. 2015 வாக்கில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.டெக்.விஷூவல் கம்யூனிகேஷன், எம்.எட்.டெக்னாலஜி ஆகிய முதுநிலைப் பட்டப்படிப்புகள் கல்லா கட்டவே கொண்டுவரப்பட்டன. தொழில்நுட்பப் படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கும் அதிகாரம் ஏஐசிடிஇ-க்கே உரித்தானது. அந்தப் படிப்புகளுக்கு அங்கீகாரம் பெறும் எந்த அதிகாரமும் பல்கலைக்கழகத்துக்கு இல்லை என்பதினாலேயே அந்தப் படிப்புகள் நிராகரிக்கப்பட்டன. பாவம் அதைப் படித்து முடித்த பட்டதாரிகள் அல்லாடிக்கொண்டிருக்கிறார்கள்.
இதுபோன்ற எத்தகைய குறுக்குப் புத்தியும் இன்றி நல்லெண்ண அடிப்படையிலும் சில நேரம் தவறுகள் நிகழ்ந்துவிடுவதுண்டு. அப்படித்தான் எம்.ஏ., கல்சுரல் ஸ்டடீஸ் பட்டப்படிப்பு தொடங்கப்பட்டது. அதை யூஜிசி அங்கீகரிக்க மறுக்கவே, அதைப் படித்தவர்கள் நெட், செட் போன்ற ஆசிரியர் தகுதி தேர்வுகளை எழுதவோ அப்படிப்பை வைத்து அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்கவோ தகுதியற்றவர்களாகிப் போயினர்” என்று வருத்தத்துடன் கூறுகிறார் முரளி.
தொலைநிலை படிப்பிலும் கவனம்
ப்ளஸ் 2 முடித்துவிட்டு நேரடி எம்.ஏ. படிப்பைத் தொலைநிலையில் படித்தவர்கள் அரசுப் பணிக்கோ, பதவி உயர்வுக்கோ தகுதி கோர முடியாது என்று அண்மையில் தான் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கல்வி நிறுவனத்தின் நோக்கம் எதுவாயினும் நமக்கு அந்தப் படிப்பு பயனளிக்குமா என்பதைத் தீர விசாரிக்க வேண்டும். அதிலும் அரசு வேலைவாய்ப்புக்குக் குறிவைத்தால் கூடுதல் கவனம் வேண்டும்.
கலை படிப்புக்கு அரசு கல்லூரிகள்
இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சி ஆகிய மூன்று நிலைகளைக் கொண்டது உயர்கல்வி. அதில் மந்தை மனோபாவத்தைத் தவிர்த்து பத்தாண்டுகள் கழித்து அந்தப் படிப்புக்கு எத்தகைய முக்கியத்துவம் நீடிக்கும் என்பதை நுட்பமாகக் கண்டறிய வேண்டும். இதுகுறித்து விரிவாக நம்மிடம் பேசினார் விளிம்புநிலை மாணவர்களுக்கு வழிகாட்டிவரும் ஐஆர்எஸ் அதிகாரி நந்தகுமார். “தங்கள் நண்பர்கள் பணக்காரக் கல்லூரிகளில் சேர்வதைப் பார்க்கும் ஏழை / நடுத்தர வர்க்கங்களைச் சேர்ந்த மாணவர்கள் பலர் நாமும் முண்டியடித்து அங்கு சேர வேண்டும் என்கிற போலித்தனத்தில் சிக்கிக்கொள்கிறார்கள். கலை, சமூக அறிவியல் படிப்புகளை பொறுத்தமட்டில் அரசு கல்லூரிகளில் தான் அற்புதமான பேராசிரியர்கள், ஆராய்ச்சி வழிகாட்டிகள் இருக்கிறார்கள்” என்று சுட்டிக்காட்டுகிறர் நந்தகுமார்.
வேலைவாய்ப்பு தருவது யார்?
இன்றைய நிலையில் தடுக்கிவிழுந்தால் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் தனியார் கல்லூரிகளும் கண்முன்னால் வானுயர நிற்கின்றன. இணையத்தில் துழாவி தரவரிசைப் பட்டியலை அலசினாலும் பல தனியார் பல்கலைக்கழகங்கள் முன்னணியில் இடம்பெற்றிருக்கின்றன. ‘எங்களிடம் படித்தால் 100 சதவீதம் கேம்பஸ் வேலைவாய்ப்பு’ என்று வாக்குறுதிகள் அள்ளிவீசப்படுகின்றன.
இதுகுறித்தும் பேசிய முரளி, “பெரும்பாலான தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான ஊழியர்களைத் தயார்படுத்தும் நோக்கத்தில் செயல்பட்டுவருகின்றன. அவற்றில் சில சிறப்பான உள்கட்டமைப்பு வசதிகளுடன், தகுதி வாய்ந்த பேராசிரியர்களுடன் உள்ளன. அதேநேரம் 100 சதவீத வேலைவாய்ப்பு என்றால் பெருநிறுவனங்களிலா அல்லது துக்கடா நிறுவனங்களிலா என்பதைச் சுதாரிப்பாக விசாரிக்க வேண்டும்” என்றார்.
பாடத்தில் செயல்வழி முறைக்கு முக்கியத்துவம் அளித்து சுயமாகச் சிந்திக்கத் தூண்டும் ஆசிரியர்கள் ஒரு கல்லூரியில் உள்ளனரா என்பதை முன்னாள் மாணவர்களிடம் விசாரித்தாலே தெரிந்துவிடும்.
“தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் படித்த இறையன்பு, சைலேந்திரபாபு போன்றோர் சமூக முன்மாதிரியாக உயர்ந்திருக்கிறார்கள். அதேபோன்று குடிமைப்பணிக்காகத் தயாராகும்போதுதான் நான் படித்த மாநிலக் கல்லூரியின் பாரம்பரியத்தை உணர்ந்தேன். இத்தகைய கல்வி நிறுவனங்களில் அறிவார்ந்த கல்விச்சூழல் உருவாக்கப்பட்டிருப்பதால் அங்கு சேரும் யாரும் சோடை போவதில்லை. இதுதான் முக்கியமே தவிர கேம்பஸ் வேலைவாய்ப்புக்காகப் பின்னால் ஓட வேண்டியதில்லை. வேலைவாய்ப்பிலும் மாநில மற்றும் மத்திய பொதுத்துறை பணி இடங்கள் பல உள்ளன. அவற்றைக் குறித்த விழிப்புணர்வை ஒவ்வொரு மாணவரும் வளர்த்துக்கொள்ள வேண்டும்” என்றார் நந்தகுமார்.
வாழ்க்கையில் பல உயரங்களுக்கு உங்களை அழைத்துச் செல்லக்கூடிய உயர்கல்வியைத் தேர்ந்தெடுப்பதில் கண்மூடித்தனம் வேண்டாம் மாணவர்களே... உஷாராக இருங்கள்!