விளையாட்டில் வெற்றி ஈட்டும் ஹரியாணா!- தமிழகம் படிக்க வேண்டிய பாடம் என்ன?


டி.கார்த்திக்
karthikeyan.di@hindutamil.co.in

ஒலிம்பிக்கில் முதன்முறையாக அதிகபட்சமாக ஒரு தங்கம், இரு வெள்ளி, நான்கு வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை வென்றிருக்கிறது இந்தியா. இதில், ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, மல்யுத்தப் போட்டிகளில் வெள்ளி வென்ற ரவி குமார் தாஹியா, வெண்கலம் வென்ற பஜ்ரங் பூனியா ஆகியோர் ஹரியாணாவைச் சேர்ந்தவர்கள். இந்தியாவில் ஹரியாணா மாநிலம் தொடர்ந்து விளையாட்டுகளின் சொர்க்கபுரியாக உள்ளது.

ஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை மொத்தம் 35 பதக்கங்களை வென்றிருக்கிறது. இதில் ஹாக்கியைத் தவிர்த்து தனிநபர் பிரிவுகளில் 23 பதக்கங்கள் இந்தியாவுக்குக் கிடைத்திருக்கின்றன. தனிநபர் பிரிவில் அதிகப் பதக்கங்களை வென்றவர்கள் பெரும்
பாலும் ஹரியாணாவைச் சேர்ந்தவர்கள்தான். இதற்கு முன்பு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற விஜேந்தர் சிங், யோகஸ்வர் தத், 
சாக் ஷி மாலிக் ஆகியோர் ஹரியாணா வாசிகள்தான். தற்போது ஹைதராபாத்தில் வசித்தாலும் பேட்மின்டனில் வெண்கலம் வென்ற சாய்னா நேவாலும் ஹரியாணாவைச் சேர்ந்தவர்தான். இப்போது டோக்கியோவில் 3 தனிநபர் பதக்கங்களை வென்றவர்களும் ஹரியாணா மண்ணின் மைந்தர்கள் தான்.

பதக்கங்களில் மட்டுமல்ல, ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதிலும் ஹரியாணாவே முன்னிலை வகிக்கிறது. வரலாற்றில் அதிக இந்தியர்கள் பங்கேற்றது இந்த ஒலிம்பிக்கில்தான். ஆடவர், மகளிர் என 127 பேர் பங்கேற்றார்கள். இதில் ஹரியாணாவிலிருந்து பங்கேற்றவர்கள் மட்டும் 31 பேர். இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் இந்த மாநிலத்தின் எண்ணிக்கை 2.2 சதவீதம். ஆனால், ஒலிம்பிக் பங்கேற்பில் 24.4 சதவீதம் என்பது சாதாரண விஷயமல்ல!

அதுமட்டுமல்ல. ஒலிம்பிக், காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் என எந்த மெகா விளையாட்டு நிகழ்வாக இருந்தாலும் ஹரியாணாவே எப்போதும் டாப். 2018 கோல்ட் கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில்கூட இந்தியா வென்ற 66 பதக்கங்களில் 22 ஹரியாணா கணக்கிலிருந்து வந்தவைதான்.

விளையாட்டில் சுயம்புவாக ஒருவரும் உருவாகிவிட முடியாது. ஆர்வமுள்ளவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு முறையான பயிற்சிகளை வழங்கினால் மட்டுமே அது சாத்தியமாகும். ஹரியாணாவில் அப்படித்தான் வீரர் / வீராங்கனைகள் உருவாக்கப்படுகிறார்கள். அதற்கு முக்கியக் காரணமாக இருப்பது அம்மாநிலத்தின் விளையாட்டுக் கொள்கை. அங்கு விளையாட்டில் ஒருவர் திறமையானவர் என்பது தெரியவந்தால், அவரைத் தத்தெடுத்து சிறந்த வீரராக உருவாக்குகிறார்கள். அதுமட்டுமல்ல, விளையாட்டில் ஜொலித்தால் வெகுமதி, பரிசு, பாதுகாப்பான அரசு வேலை என அவர்களுடைய வாழ்க்கையையே வசந்தமாக்கிவிடுகிறார்கள்.

இந்தியா இதுவரை வென்ற 7 மல்யுத்த ஒலிம்பிக் பதக்கங்களில் 5 பதக்கங்கள் ஹரியாணாவிலிருந்து வந்தவைதான். மல்யுத்தம் எப்போதும் ஹரியாணா கிராமப்புறப் பகுதிகளில் ஒருங்கிணைந்த ஓர் அங்கமாகவே இருந்துவருகிறது. ரொக்கப் பணம் அல்லது நெய் பானையைப் பரிசாகப் பெற ஹரியாணா கிராமப்புறங்களில் இளைஞர்கள் மல்யுத்தம் செய்வது அங்கே தினசரி வாடிக்கை. இப்படி விளையாடத் தொடங்கியவர்களைத்தான் வார்த்து இந்தியாவின் சிறந்த மல்யுத்த வீரர்களாக உருவாக்கிவிடுகிறார்கள்.

கடந்த 50 ஆண்டுகளாக, ஹரியாணாவாசிகளின் விளையாட்டு ஆர்வத்தை மோப்பம் பிடித்து அவர்களைக் கைதூக்கிவிட்டதில் இந்திய ராணுவத்துக்கும் பெரும் பங்குண்டு. பசுமைப் புரட்சிக்கு முன்பாக ஹரியாணா கிராமப்புறங்களில் விவசாய வருவாய் குறைந்தபோது, அதை ஈடு செய்ய இளைஞர்கள் ராணுவத்தை நோக்கிச் சென்றனர். இதில் விளையாட்டு ஆர்வமுள்ளவர்களைத் தனியாகப் பிரித்து, அவர்களுக்குப் பயிற்சி கொடுத்து சர்வதேச தரத்திலான வீரர்களாகச் செதுக்கியது ராணுவம். இன்னொருபுறம் இதே பணியை ஹரியாணா காவல் துறையும் செய்தது. அந்தப் பங்களிப்பு இப்போது வரை தொடர்கிறது. ஹரியாணாவிலிருந்து ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றவர்களின் பின்னணியைப் பார்த்தால், அவர்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களாகவும் ராணுவம் அல்லது காவல் துறை பின்னணி கொண்டவர்களாகவும் இருப்பதைக் காணலாம்.

ஒலிம்பிக் உட்பட எந்த சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்றவர்களையும், ஓய்வுக்குப் பிறகு ஹரியாணா அரசு சும்மா இருக்க விடுவதில்லை. இளம் தலைமுறையினருக்குப் பயிற்சி அளிக்க அழைத்து வந்துவிடுகிறார்கள். பல்வேறு காலகட்டங்களில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றவர்கள் எல்லோருமே இன்று ஹரியாணாவில் பயிற்சியாளர்களாக இருக்கிறார்கள். ஹரியாணா முழுவதுமே மாநில அரசின் சார்பில் முந்நூற்றுக்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள் வில்வித்தை, கோ-கோ, குத்துச்சண்டை, கபடி, மல்யுத்தம், ஜூடோ எனப் பல விளையாட்டுகளுக்குப் பயிற்சி அளித்துவருகிறார்கள்.

ஹரியாணாவில் மட்டும் ஹிசார், அம்பாலா, பிவானி, பானிபட், ஃபரீதாபாத், குருகிராம், சோனிபட், குருஷேத்ரா என 34 பகுதிகளில் மேம்படுத்தப்பட்ட விளையாட்டு மையங்கள் உள்ளன. இதுதவிர மாநிலம் முழுவதும் 46 பயிற்சி மையங்கள், கிராமங்களில் 232 மினி ஸ்டேடியங்கள் என விளையாட்டுக்கான அடிப்படை வசதிகளுக்குப் பஞ்சமில்லை. இதன் காரணமாக ஹரியாணாவின் சோனிபட், ரோஹ்தக் ஆகிய பகுதிகள் மல்யுத்த விளையாட்டின் சொர்க்கபுரியாகவும், பிவானி நகரம் குத்துச்சண்டையின் மையமாகவும் திகழ்கின்றன.

விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத் தொகையை வாரி வழங்குவதிலும் இந்தியாவிலேயே ஹரியாணாதான் முன்னோடி. 2000 சிட்னி ஒலிம்பிக்குக்கு முன்பாக ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றால் 1 லட்சம் ரூபாய் பரிசு என்றுதான் இருந்தது. 2000-ல், ஹரியாணாவில் அறிமுகப்படுத்தப்பட்ட விளையாட்டுக் கொள்கையில் இதெல்லாம் தலைகீழாக மாறியது. சிட்னி ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றால், ஒரு கோடி ரூபாய் பரிசு என்று அப்போதே அறிவித்தது ஹரியாணா அரசு. பாரா-தடகள வீரர்களுக்கும் பாகுபாடு காட்டாமல் சமமான பரிசுகளையும் விருதுகளையும் அம்மாநிலம் வழங்குகிறது. அதற்கு, ரியோ பாராலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற தீபா மாலிக் 4 கோடி ரூபாய் பரிசு பெற்றதே உதாரணம்.

தற்போது ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றால் 6 கோடி ரூபாய் பரிசு என்று முதன்முதலில் அறிவித்ததும் ஹரியாணாதான். மத்திய அரசே 75 லட்சம் ரூபாய்தான் வழங்குகிறது என்பது கவனிக்கத்தக்கது. இதனால், இன்று இந்தியாவின் விளையாட்டு மையமாக ஹரியாணா மாறியிருக்கிறது. ஹரியாணாவின் விளையாட்டுக் கொள்கையை எல்லா மாநிலங்களும் பின்பற்றினால், இந்திய விளையாட்டில் மாபெரும் மாற்றம் ஏற்படும்.

இந்த ஒலிம்பிக்கில் தமிழகத்திலிருந்து 12 பேர் பங்கேற்றனர். இதில் தடகளத்தில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகள் 5 பேர் பின்தங்கிய பகுதிகளிலிருந்து வந்தவர்கள். அதுவும் அவர்களுடைய ஒவ்வொரு கதையும் வலி மிகுந்தது. ஷூ வாங்கக்கூட கஷ்டப்பட்டவர்களும் இதில் இருக்கிறார்கள். தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலமே இங்கு எல்லாப் பணிகளும் நடக்கின்றன. ஆனால், தமிழகத்தில் பெரும்பாலான விளையாட்டுகளுக்கான அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் சென்னையிலேயே குவிந்து கிடக்கின்றன.

இந்தியாவின் கிராமங்களிலிருந்து வந்தவர்கள்தான், இன்று டோக்கியோ ஒலிம்பிக்கில் நாட்டையே தலைநிமிர வைத்திருக்கிறார்கள். இனி, திறமையான விளையாட்டு வீரர்களைக் கண்டறிய தமிழகமும் கிராமங்களை நோக்கிச் செல்ல வேண்டும். “தமிழகத்தில் நான்கு ஒலிம்பிக் மண்டலங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. கிராமப்புறங்களில் உள்ள விளையாட்டு வீரர்களை இளம் வயதிலேயே கண்டறிந்து அவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்சிகளை வழங்குவோம்” என்று தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் கூறியிருப்பது நிஜத்தில் நடக்க வேண்டும். அதற்கு முன்பு ஹரியாணாவின் வெற்றிக் கதையை தமிழகம் முழுமையாக உள்வாங்க வேண்டும்!

x