பென்னிகுவிக் வீட்டை இடித்து கலைஞர் நூலகமா?- வரலாற்றின் பெயரில் வெடித்த சர்ச்சை


கே.சோபியா
readers@kamadenu.in

மதுரை மண்ணுக்குப் பெருமை சேர்க்கும் எனும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் கலைஞர் நூலகம் திட்டத்துக்கு எழுந்திருக்கும் தடங்கல், வாசிப்பின் மீது ஆர்வம் கொண்டோர் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆதாரபூர்வமான புகாரா, அரசியல் காய்நகர்த்தலா எனும் விவாதத்தையும் கிளப்பியிருக்கிறது.

தென் தமிழகத்தின் கனவு

சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தைப் போன்ற வசதிகளுடன், தெற்கிலும் ஒரு பிரம்மாண்ட நூலகம் அமைய வேண்டும் என்பது தென்மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பு. அதை நிறைவேற்றும் வகையில், மதுரையில் 70 கோடி ரூபாய் மதிப்பில் கலைஞர் நூலகம் கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதற்காக மதுரையில் 6 இடங்கள் பட்டியலிடப்பட்டு கடைசியாக, மதுரை - நத்தம் சாலையில் நீதிபதிகள் குடியிருப்புக்கு எதிரே, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகத்துக்கு அருகில் உள்ள பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான இடத்தை இறுதி செய்தார்கள் அதிகாரிகள். சுமார் 2.5 ஏக்கர் பரப்புள்ள அந்த இடத்தில், 100 ஆண்டு பழமையான ஓட்டுக் கட்டிடம் ஒன்று மட்டுமே இருக்கிறது.

திடீரென எழுந்த எதிர்ப்பு

சட்டப்பேரவை அவைக்குள் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்தைத் திறந்துவைக்கும்போது, மதுரையில் கலைஞர் நூலகத்துக்கும் குடியரசுத் தலைவர் அடிக்கல் நாட்டுவார் என்று சொல்லப்பட்டது. ஆனால், நிகழ்வுக்கு 4 நாட்களுக்கு முன்பு திடீரென சில விவசாயிகள் கலைஞர் நூலகம் கட்டும் இடம் குறித்து சர்ச்சையை எழுப்பி எதிர்ப்பு காட்டினர்.

“மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட வறட்சியைப் போக்கும் வகையில் தன் சொந்தப் பணத்தைப் போட்டு அணை கட்டிய, ஜான் பென்னிகுவிக் வாழ்ந்த வீடு அது. விவசாயிகளை வாழ வைத்துக்கொண்டிருக்கும் கடவுளான அவர் மதுரையில் வாழ்ந்த இல்லத்தை இடித்துவிட்டு அங்கே கலைஞர் பெயரில் நூலகம் கட்டினால் தென்மாவட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்று அவர்கள் குரல் கொடுத்தனர். இந்தப் புகார் தீப்பொறி போல பற்றிக்கொண்டது.

அடுத்த நாளே, அது தவறான புகார் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துவிட்டார். எனினும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தமிழக அரசின் இந்தச் செயலைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.

“பென்னிகுவிக் வாழ்ந்த இல்லம் தமிழக அரசால் பாதுகாக்கப்பட்டு வந்த நிலையில், நூற்றாண்டிற்கும் மேற்பட்ட அந்த நினைவு இல்லத்தை இடித்துவிட்டு கலைஞர் நூலகம் அமைக்க திமுக அரசு திட்டமிட்டு இருப்பதாகச் செய்திகள் வந்துள்ளன. ஒரு வரலாற்றை அழித்து ஒரு வரலாற்றை எழுத நினைப்பது கண்டிக்கத்தக்கது. எதிர்ப்பை மீறி நூலகம் அமைத்தால் விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக போராட்டத்தில் குதிக்கும்” என்று அந்த அறிக்கையில் அவர்கள் கூறியிருந்தனர்.

மனு கொடுத்த விவசாயிகளில் சிலர் அதிமுகவினர் என்பதால், ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவரும் வெளியிட்ட கண்டன அறிக்கை பெரிய விளைவை ஏற்படுத்தவில்லை. ஆனால், பாமக நிறுவனர் ராமதாஸும் இதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டது ஒருவேளை புகாரில் உண்மை இருக்குமோ என்று சிந்திக்க வைத்துவிட்டது.

நிறுத்தப்பட்ட விழா

குடியரசுத் தலைவர் ஆகஸ்ட் 2-ம் தேதி மாலையில் கலைஞர் நூலகத்துக்கு அடிக்கல் நாட்டுவார் என்று சொல்லப்பட்ட நிலையில், காலையிலேயே அறிக்கைவிட்டு அந்த விழாவையே நிறுத்திவிட்டனர் எதிர்க்கட்சியினர். உண்மையில் அங்கேதான் ஜான் பென்னிகுவிக் வாழ்ந்தாரா என்றறிய அந்த இடத்தைப் பார்வையிட்டோம். பொதுப்பணித் துறை அதிகாரிகள், நீதிபதிகள் குடியிருப்பு என்று மிகப் பழமையான, அழகான பங்களாக்கள் நிறைந்த பகுதி அது. ஆனால், நூலகத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் உள்ள கட்டிடமோ சுமாரான தோற்றத்துடன் காட்சியளிக்கிறது. அங்கே அதன் பழமை, பெருமையைப் பறைசாற்றுகிற வகையிலான கல்வெட்டுகளோ, நினைவுச் சின்னங்களோ  அங்கு இல்லை என்பது கவனிக்கத்தக்கது.

ஆதாரங்கள் இல்லை

இதுகுறித்து மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகரிடம் கேட்டபோது, “இந்தப் புகார் குறித்து ஆய்வு செய்தோம். பென்னிகுவிக் 15.01.1841-ல் பிறந்து 09.03.1911-ல் மரணமடைந்துள்ளார். பொதுப்பணித் துறை ஆவணங்களை ஆய்வு செய்ததில் 1912-ல் பூமி பூஜை நடத்தப்பட்டு, 1913-ல் அந்தக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அவர் மறைவுக்குப் பின் கட்டப்பட்டது என்பதால் அவர் அந்தக் கட்டிடத்தில் வாழ்ந்ததற்கான சாத்தியக்கூறுகள் இல்லை” என்றார்.

இதுகுறித்து பேசிய தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்க (பபாசி) மதுரை பொறுப்பாளர் புருஷோத்தமன், “மதுரைக்குக் கிடைக்கவிருக்கும் மிகப் பெரிய வரப்பிரசாதம் கலைஞர் நூலகம். குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக அபாண்டமான ஒரு பொய்யைப் பரப்பி, அந்த நூலகத்தைக் கட்ட விடாமல் தடுப்பது நியாயமற்ற செயல்” என்று சொன்னார்.

“இந்தப் புகாரை முன்வைப்பவர்கள் தமிழகத்தின் முன்னாள் முதல்வர்கள். உண்மையிலேயே அது பென்னிகுவிக் வாழ்ந்த வீடு என்றால், அதற்கான ஆதாரத்தைக் காட்டுவது அவர்களுக்கு ஒன்றும் சிரமமான காரியமல்ல. அப்படி ஆதாரம் இல்லாமல் நூலகப் பணியைத் தடுப்பது மதுரைக்கு மட்டுமல்ல தென் தமிழகத்திற்கே செய்யும் துரோகம்” என்றார் புருஷோத்தமன்.

இதனிடையே, அரசியல் காரணங்களால் புகாரால் கலைஞர் நூலகம் திட்டம் தள்ளிப்போவது பலரிடமும் அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது. “நிலம் என்றால் அதில் வில்லங்கமும் இருக்கத்தான் செய்யும். அரசு ஒரு நிலைப்பாட்டை எடுத்துவிட்டால், பிரச்சினைகளைத் தாண்டி அதைச் செய்து முடிக்க வேண்டும். பொய்யான புகார்களுக்கு எல்லாம் இப்படி அரசு பணிகளைத் தள்ளிப்போட்டால், இனி எந்தத் திட்டத்தையும் தமிழ்நாட்டில் நிறைவேற்றவே முடியாது” என்று எச்சரிக்கிறார்கள் வாசிப்பு நேசர்கள்.

இவ்விஷயத்தில் தமிழக அரசு தெளிவான முடிவை எடுத்து, விரைவான நடவடிக்கையில் இறங்கி கலைஞர் நூலகத்தை காலம் கடத்தாமல் கட்டிமுடிக்க வேண்டும் என்பதே தென் மாவட்ட மக்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பு. 

x