வீடு முழுவதும் விருது கோப்பைகள்!- ‘கராத்தே’ கனவால் உயர்ந்த அம்மா - பிள்ளைகள்


என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

உயர்ந்த லட்சியத்தை நோக்கிப் பயணிப்பவர்கள், தங்கள் இலக்கை அடைய முடியாவிட்டாலும் அந்தப் பயணத்தில் கிடைக்கும் அனுபவங்கள் மூலம் வேறு பல அனுகூலங்களைப் பெற முடியும். கேரளத்தைச் சேர்ந்த பிந்துவின் போராட்ட வாழ்க்கையே இதற்கு உதாரணம்.

போலீஸாக வேண்டும் எனும் முனைப்புடன் கராத்தே கற்றுக்கொண்ட பிந்து, அந்த லட்சியத்தை எட்ட முடியாவிட்டாலும் ஆர்வமுள்ள இளம் தலைமுறையினருக்கு அந்தத் தற்காப்புக் கலையைக் கற்றுத்தந்து பிரபலமாகியிருக்கிறார். கூடவே, தன் மகள்களையும் கராத்தேயில் சாம்பியன்களாக்கிச் சாதித்துக்காட்டியிருக்கிறார்.

துணை நின்ற கணவர்

எர்ணாகுளத்தில் இருக்கிறது பிந்து சத்தியநாதனின் இல்லம். பிந்துவும், அவரது மகள்கள் பாவனா, பாக்கியலெட்சுமி ஆகியோரும் உள்ளூர் கராத்தே போட்டிகள் முதல் உலகளாவிய போட்டிகள் வரை கலந்துகொண்டு பரிசுகளைக் குவித்து வருகின்றனர். வீடு முழுவதும் இவர்கள் பெற்ற விருதுக்கோப்பைகளே நிறைந்துள்ளன.

கராத்தே குடும்பத்தின் நாயகி பிந்துவிடம் ‘காமதேனு’வுக்காகப் பேசினோம். “போலீஸ் ஆக வேண்டும் எனும் ஆசை எனக்குச் சின்ன வயதிலிருந்தே இருந்தது. ஆனால், குடும்பச் சூழலால் அது நிறைவேறவில்லை. போலீஸ், ராணுவம், கடற்படை என எனக்குள் இருந்த ஆசைகளே என்னை கராத்தே நோக்கி நகர்த்தின. 13 வயதிலிருந்து கராத்தே கற்றுக்கொள்ளத் தொடங்கினேன். ஆனால், அதில் நிபுணத்துவம் பெற்றதெல்லாம் திருமணத்திற்குப் பின்புதான். என்னுள் தேக்கி வைத்திருந்த ஆசைகளுக்கெல்லாம் என் கணவர் சத்தியநாதன் உயிர் கொடுத்தார். அதன் பின்புதான் கராத்தேவில் முழுக் கவனம் செலுத்தினேன்” என்று தன் கணவருக்கு மரியாதை சொல்லிப் பேசத் தொடங்கினார் பிந்து.

தலைமுறையாகத் தொடரும் லட்சியம்

“என்னால் போலீஸ் ஆக முடியவில்லையே எனும் வருத்தம் எனக்குள் இருந்தது. எனினும், அதையெல்லாம் போக்கும் வகையில் என் மகள்களை நன்கு படிக்க வைத்து வருகிறோம். அவர்களுக்குக் கராத்தேயும் கற்றுக் கொடுக்கிறேன். மூத்த மகள் பாக்கியலெட்சுமி சட்டக் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கிறாள். இளைய மகள் பாவனா கல்லூரி முதலாமாண்டு படிக்கிறாள். இருவருமே கராத்தேவில் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார்கள். என்னைப் பார்த்துப் பார்த்தே வளர்ந்ததால் அவர்களுக்கும் குழந்தைப் பருவத்தில் இருந்தே கராத்தே மீது கொள்ளைப் பிரியம்” என்று பிந்து சொன்னதும், புன்னகையுடன் அதைத் தொடர்ந்தார் மூத்தவர் பாக்கியலட்சுமி. “அம்மா, கராத்தே படிக்கத் தொடங்கிய ஆறு மாதத்திலேயே பிளாக் பெல்ட் வாங்கிட்டாங்க. அம்மாவோட விடாத முயற்சிதான் அதுக்குக் காரணம். திருமணம் முடிஞ்சவுடனே, அதுலயும் குழந்தை பிறந்துட்டாலே பல பெண்கள் தங்கள் லட்சியத்தைக் கைவிட்டுருவாங்க. குழந்தைகளைப் படிக்கவைப்பதிலும், அவர்களைக் கண்ணும் கருத்துமாக வளர்ப்பதிலேயுமே மூழ்கிடுவாங்க. ஆனா அம்மா, இது இரண்டையுமே வெற்றிகரமாகச் செஞ்சுருக்காங்க” என்றவாறே தாயின் கரம் பற்றுகிறார் பாக்கியலட்சுமி.

ஏழைக் குழந்தைகளுக்கு இலவசம்

இப்போது எர்ணாகுளத்தில் உள்ள தன்னுடைய வீட்டின் மாடியிலேயே கராத்தே பள்ளி வைத்து நடத்துகிறார் பிந்து. இதற்கென்று மிகக் குறைவான கட்டணமே நிர்ணயித்துள்ளார். கட்டணம் கொடுக்க வசதியில்லாத சிறார்கள் ஆர்வத்தோடு கற்றுக்கொள்ள வந்தால், அவர்களுக்கு இலவசமாகக் கற்றுக்கொடுக்கவும் பிந்து தயங்கியதில்லை. அதிலும் பெண் குழந்தைகளுக்குக் கராத்தே கற்றுக் கொடுப்பதென்றால் பிந்துவுக்கு மிகவும் இஷ்டம்.

இதைப் பற்றியும் நம்மிடம் பேசினார் பிந்து. “இன்றைய காலத்தில் பெண்களுக்குத் தற்காப்புக் கலை ரொம்பவும் முக்கியம். கராத்தே போன்ற தற்காப்புக் கலை தெரிந்த பெண் தைரியமாக யார் துணையும் இல்லாமல் எங்கும் சென்றுவர முடியும். அதனால்தான் எனது இரு மகள்களுக்கும் கராத்தே கற்றுக்கொடுத்தேன். இலங்கை தொடங்கி பல நாடுகளுக்கும் சென்று கராத்தே போட்டிகளில் பரிசு பெற்றிருக்கிறோம். இப்போது கரோனா காலம் என்பதால் கராத்தே போட்டிகள் நடத்தப்படுவதில்லை. என்றாலும் நாங்கள் பயிற்சியை விடவில்லை. இடைவிடாமல் கராத்தே பயிற்சிகள் எடுத்துவருவதன் மூலம் நம் உடலும் உறுதியாகும். இதனால் உடல் ஆரோக்கியம் மேம்படும்” என்றார் பிந்து.

முயற்சி திருவினையாக்கும்

இல்லத்தரசி, கராத்தே மாஸ்டர் என்பது மட்டுமே பிந்துவின் அடையாளங்கள் அல்ல. இவ்வளவு பரபரப்பான வேலைகளுக்கு மத்தியில் மகளிர் சுய உதவிக் குழுவால் நிர்வகிக்கப்படும் உணவகம் ஒன்றிலும் பணிசெய்கிறார். காலை 6 மணிக்கெல்லாம் உணவகத்துக்குப் பணிக்குச் சென்றுவிடும் பிந்து, அங்கு வேலையை முடித்துவிட்டு இல்லம் வந்து வீட்டில் சமையல் வேலைகளைச் செய்கிறார். அந்த வேலைகளும் முடிந்த பின்னர் கராத்தே மாஸ்டராகி விடுகிறார்.

எப்படி இதெல்லாம் சாத்தியமாகிறது என்று கேட்டால், பிந்துவின் முகத்தில் பெருமிதப் புன்னகை பூக்கிறது. “இன்றைய பெண்கள் பலரைப் பார்க்கிறேன். ஏதாவது முயற்சி செய்யக் கூடாதா எனக் கேட்டால், வீட்டு வேலைக்கே நேரம் சரியாக இருக்கிறது என அலுத்துக்கொள்கிறார்கள். நான் உணவகத்திலும், என் இல்லத்திலும் வேலை செய்துவிட்டுத்தான் கராத்தே கற்றுக்கொடுக்கிறேன். இங்கே நேரம் ஒரு பிரச்சினையே இல்லை. மனது தான் விஷயம். மனது வைத்தால் நேரம் தானாகவே அமைந்துவந்துவிடும். நான் இரு குழந்தைகளைப் பெற்றெடுத்த பின்னர்தான் கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கினேன்” என்கிறார் பிந்து.

தனது தாயின் பெருமைகளைப் பற்றிச் சொல்லும்போது, இளைய மகள் பாவனாவின் முகத்திலும் அப்படியொரு பூரிப்பு. “எங்க ரெண்டு பேருக்குமே அம்மாதான் ரோல் மாடல். தன்னம்பிக்கையே அம்மாகிட்ட இருந்துதான் எங்களுக்கு வந்தது. வீட்டில் அன்பான அம்மாவா இருப்பாங்க. அதேநேரம், கராத்தே களத்துக்கு வந்துட்டா கண்டிப்பான மாஸ்டரா மாறிடுவாங்க. கராத்தே கற்றுக்கொண்டாலே போதும். ஒவ்வொரு பெண்ணுக்கும் மனோதைரியம் வந்திடும். மனைவி, இரண்டு பிள்ளைங்களுக்கு அம்மாவான பின்னாடியும் மனதில் ஏற்றி வைத்திருந்த கராத்தே ஆசையை அம்மா விடவே இல்லை. அதுதான் அவரை இந்த வயதிலும் சுறுசுறுப்பாக இயங்க வைத்துக்கொண்டிருக்கிறது” என நெகிழ்ச்சியோடு பாவனா சொல்ல, அதை பாக்கியலட்சுமி ஆமோதித்துத் தலையாட்ட, மகள்களை ஆனந்தப் பெருக்கோடு பார்க்கிறார் பிந்து சத்தியநாதன்.

லட்சியக் குடும்பத்தின் வெற்றிகள் தொடரட்டும்!

x