சிறகை விரி உலகை அறி 10: கலைகள் சொல்லும் வரலாறு!


ஒவ்வொரு நாடும் தன் வரலாற்று வேர்களுக்குள் ஊன்றி நிற்கின்றது. அதன் அடையாளம், பண்பாடு, வளர்ச்சி அனைத்தும் அவ்வேர்களைச் சுற்றியே சுழல்கின்றன. அந்நாடுகளின் குறைகளை அறிந்து நிறைகளைப் போற்றவும், தன் நாட்டு வரலாற்றைப் பாதுகாக்கவும் பயணங்கள் மிகவும் உதவுகின்றன. அப்படித்தான், ‘கேளிக்கை நாடு’ என கேலிக்குள்ளாகும் தாய்லாந்து நாட்டின் வரலாற்றைப் புரிந்துகொள்ள இரண்டு நாள் பயணம் எனக்கு உதவியது.

பாங்காக் விமான நிலையம்

தாய்லாந்து செல்வதற்கு இந்தியர்கள் முன்கூட்டியே விசா வாங்கத் தேவையில்லை. எனவே, என் வருகையை, இணையத்தில் பதிவுசெய்து அதன்படிவத்தைக் கையில் வைத்திருந்தேன். சுவர்ணபூமி விமான நிலையத்தில் காலையில் இறங்கியவுடன், பணியாளர்கள் அறிவுறுத்திய வழியில் சென்று இந்தியர்களுடன் சேர்ந்து நின்றேன். அங்கே, அமர்வதற்கெல்லாம் இடமில்லை. ‘விசா கட்டணத்தை பாட் (Baht- தாய்லாந்து கரன்ஸி) பணமாகக் கட்ட வேண்டுமா அல்லது அமெரிக்க டாலராகச் செலுத்த வேண்டுமா?’, ‘எவ்வளவு செலுத்த வேண்டும்?’ போன்ற பலவற்றைக் குறித்துக் கலந்துரையாடி நேரத்தைப் போக்கினோம். உண்மை என்னவென்றால், ‘பாட்’ மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். எனவே, தாய்லாந்து செல்லும்போதே பாட் பணம் நம் கையில் இருக்க வேண்டும்.

ஏறக்குறைய ஒரு மணி நேரத்துக்கும் மேல், வரிசையில் நின்ற பிறகு ஓர் அதிகாரி என்னை அழைத்தார்.  கடவுச்சீட்டு செல்லுபடியாகும் காலம் ஆறு மாதத்துக்கு மேல் உள்ளதா எனப் பார்த்தார். “செலவுக்குப் போதுமான பணம் கொண்டுவந்துள்ளீர்களா?” என கேட்டார். தங்குமிடத்தின் முன்பதிவு நகல் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் நிழற்படம் வாங்கினார். கட்டணமாக, 2 ஆயிரம் பாட் செலுத்திய பிறகு கடவுச்சீட்டில் விசா பதித்தார். மற்றொரு தாளில் அச்சு பதித்துக் கொடுத்தார். அந்தத் தாளைக் கவனமாக வைத்திருந்து, நாட்டைவிட்டு வெளியேறும்போது விமான நிலையத்தில் திருப்பிக் கொடுக்க வேண்டும்.

சுற்றுலாவின்போது எனக்கு சிம் கார்டின் தேவை இருப்பதை அறிந்து, Klook.com இணையதளத்தின் மூலம் ஏற்கெனவே பணம் கட்டியிருந்தேன். விமான நிலையத்துக்குள்ளேயே அவர்கள் குறிப்பிட்டிருந்த கடைக்குச் சென்று, ஆவணத்தைக் காட்டி சிம் கார்டு வாங்கினேன். அங்கிருந்து தங்கும் அறைக்குச் சென்று பையை வைத்துவிட்டு, பயணத்தைத் தொடங்கினேன்.

ஜிம் தாம்சன்

அமெரிக்காவில் பிறந்தவர் ஜிம் தாம்சன் (Jim Thompson). நியூயார்க் நகரில் கட்டிடக் கலைஞராக வேலை செய்த பிறகு, ராணுவத்தில் சேர்ந்தார். இரண்டாம் உலகப் போரின்போது, ஜப்பானின் கட்டுப்பாட்டில் இருந்த தாய்லாந்துக்கு உளவு பார்க்கிறவராக வந்தார். ஜப்பான் சரணடைந்த சூழலில், அமெரிக்காவின் தூதராகத் தாய்லாந்தில் நியமிக்கப்பட்டார். பணிக்காலம் முடிந்தாலும், தாய்லாந்திலேயே தங்கிய தாம்சன், தன்னுடைய நண்பருடன் சேர்ந்து தாய் பட்டு (Thai Silk) நிறுவனத்தை நிறுவினார். தன்னுடைய அயரா உழைப்பாலும் கற்பனைத் திறனாலும் தாய்லாந்து நாட்டின் பட்டுத் தொழிலுக்குப் புது வெளிச்சம் பாய்ச்சினார். தாய் பட்டுக்கென்று தனிச் சந்தையை உருவாக்கி பட்டு உற்பத்தியை அந்நாட்டின் அடையாளமாக்கினார்.

தாம்சனுக்குக் கலைப்பொருட்களைச் சேகரிப்பதிலும் தீரா காதல் இருந்தது. எனவே, தென்கிழக்கு ஆசியாவின் பல நாடுகளில் இருந்தும் ஓவியங்களையும் புத்தர் உருவங்களையும் சேகரித்தார். கலைப்பொருட்களைச் சேகரிப்பதற்காகவே பயணங்கள் மேற்கொண்டார். 1967-ல் அவ்வாறான பயணமாக மலேசியா சென்றிருந்தார். அங்கு நடைபயிற்சிக்குச் சென்றவர், திரும்பி வரவே இல்லை. தாம்சன் எங்கே சென்றார், அவருக்கு என்ன ஆனது என்பது இந்நாள்வரை மர்மமாகவே உள்ளது.

தான் சேகரித்த கலைப் பொக்கிஷங்களை அலங்கரித்துப் பாதுகாக்க விரும்பிய தாம்சன், நாட்டின் வெவ்வேறு இடங்களிலிருந்து நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமையான ஆறு தேக்கு வீடுகளை வாங்கினார். அந்த வீடுகளைப் பிரித்து எடுத்து பாங்காக்கில் கால்வாய் ஓரம் கலைநுட்பத்துடன் புதிய வீட்டை வடிவமைத்தார். ஆணிகளே இல்லாத இந்த வீட்டில், தான் சேகரித்த அனைத்தையும் அழகுறச் சேமித்தார். அந்த வீடுதான், இப்போது ஜிம் தாம்சன் அருங்காட்சியகமாக வசீகரிக்கிறது.

அருங்காட்சியகம்

பசுங்குடிலுக்கு மத்தியில் அமைந்திருக்கும் அருங்காட்சியகத்துக்குள் நுழைந்தேன். வீட்டைச் சுற்றிக்காட்ட ஜப்பானிய, தாய், ஆங்கில மற்றும் சீனமொழிகளில் வழிகாட்டிகள் இருக்கிறார்கள். ஆங்கில வழிகாட்டிக்காகக் கட்டணம் கட்டி, சிறிது நேரம் காத்திருந்தேன்.  என்னைப் போலவே பதிவு செய்திருந்த மற்றவர்களையும் அழைத்துச் சென்று, வீட்டைச் சுற்றிக்காட்டிய வழிகாட்டி ஒவ்வொன்றின் தனித்தன்மையையும் விளக்கினார். பல நாடுகளிலிருந்தும் கொண்டுவரப்பட்ட புத்தர் சிலைகள், அரிதான ஓவியங்கள், கல்லாலும் மரத்தாலும் வெண்கலத்தாலும் ஆன  சிற்பங்கள், கலைநயமிக்க வீட்டு பயன்பாட்டுப் பொருட்கள், கதவுகள், தோரணங்கள், பீங்கான் பொருட்கள் என அருங்காட்சியகம் கலைக்கோட்டையாகத் திகழ்கிறது. வீடு, வீட்டைச் சுற்றிலும் பூவனம், அருகிலேயே நீரோடை, நீரோடையில் நீந்தும் கொய் (Koi) மீன்கள் என உள்ளமும் கொள்ளை போனது.

ஆவிகள் மீதான நம்பிக்கை

வீட்டுக்குள் நடந்தபோது, ஒரு குறிப்பிட்ட அறையின் வாசலில் ஒரு அடி உயரத்துக்குப் பலகை வைத்து தடுத்திருந்தார்கள். காலைத் தூக்கி வைத்து மறுபக்கம் சென்றோம். ஏன் தடுத்துள்ளார்கள் எனக் கேட்டபோது, “இது செப அறை. புனிதமான இடம். இதற்குள் வரும்போது, மிதிக்கக் கூடாது என்பதற்காகக் காலை தூக்கி வைத்து வர வேண்டும். இது எங்கள் கலாச்சாரம்” என்றார். மேலும், இறந்தவர்களின் ஆவியை மதித்துப் போற்றுகிற பழக்கம் தாய் கலாச்சாரத்தில் இருப்பதாகவும் விளக்கினார்.

கலைநுட்பத்தையும், இன்னும் கலையாத அவர்களின் நம்பிக்கையையும் பார்த்து அறிந்த பிறகு, வாடகை இரு சக்கர வாகனத்தில் ஏறி, கம்பீரமான அரண்மனைக்குச் (The Grand Palace) சென்றேன்.  

கம்பீரமான அரண்மனை

தாய்லாந்தின் பாரம்பரிய கட்டிடக் கலை மற்றும் 19-ம் நூற்றாண்டின் ஐரோப்பிய கட்டிடக் கலையின் கலவையாகத் திகழ்கிறது பெருமைமிகு அரண்மணை. பெயருக்கு ஏற்றார்போல 60 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஈர்க்கக்கூடிய எண்ணற்ற கட்டிடங்கள் உள்ளே இருக்கின்றன. கலை ஆர்வம் உள்ளவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய இந்த அரண்மனைக்கு, ஏறக்குறைய 80 லட்சம் பயணிகள் ஒவ்வொரு வருடமும் வருகிறார்கள்.

அரண்மனை வளாகத்துக்குள் செல்வதற்கு ஆடைக் கட்டுப்பாடுகள் உள்ளன. ஆண்கள் முழு காற் சட்டையும், கை உள்ள சட்டையும் அணிய வேண்டும். எளிதில் உடலைக் காட்டும்படி அல்லது தோள்பட்டைத் தெரியும்படி ஆடை அணிந்து செல்ல பெண்களுக்கு அனுமதி இல்லை. தங்களுக்கான உடையில் சுதந்திரமாக வரும் வெளிநாட்டினர், வாசலில் உள்ள கடையில் தங்கள் உடலை மறைக்க பணம் கட்டி துணி வாங்க வேண்டும். துணியைத் திருப்பிக் கொடுக்கும்போது பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடுவார்கள்.

அரசர் முதலாம் ராமா, பாங்காக்கைத் தலைநகராக அமைத்தபோது உருவாக்கிய இந்த அரண்மனையில் ஐந்தாம் ராமா வரையிலான அரசர்கள் தங்கள் குடும்பத்துடன் வாழ்ந்தார்கள். தற்போது அரச குடும்பம் சித்ராலயா அரண்மனையில் இருப்பதால் இந்த அரண்மனையின் ஒரு பகுதி, அரச அலுவலகங்களாக வும், அரச விருந்தினர்களை வரவேற்கும் இடமாகவும் இருக்கிறது.

அரண்மனையின் மற்றொரு பகுதியில், 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மரகத புத்தரின் கோயில் உள்ளது.  பச்சை மாணிக்கக் கல்லால் செய்யப்பட்டிருந்தாலும் அதன் மேல் உள்ள பச்சை நிறம் காரணமாக மரகதம் என அழைக்கப்படுகிறது. இவ்வளாகத்தில், புராணம் சார்ந்த விலங்குகளின் அடையாளங்கள் நிறைய உள்ளன. உதாரணமாக, பாதி மனிதன் - பாதி பறவை; பாதி பேய் - பாதி பறவை; பாதி மனிதன் - பாதி சிங்கம்; பாதி சிங்கம் - பாதி குரங்கு; பாதி மனிதன் - பாதி மான். கொதிக்கும் வெயிலில் கலைப்படைப்பைக் கண்டு களித்த பிறகு, அறைக்குத் திரும்பினேன். 

ஆவிகளை அமைதிப்படுத்தும் தலம்

தாய்லாந்தில் புத்த மதத்தினர் வாழும் வீடுகள் மற்றும் வணிக வளாகங்களின் முகப்பில், சிறிய குடில் ஒன்று இருக்கின்றது. அது, “ஆவிகளை அமைதிப்படுத்தும் தலம் ” (Spirit House) என்று சொன்ன வழிகாட்டி, “இப்போது நாம் இந்த இடத்தை நமது பெயரில் வைத்திருக்கிறோம். முந்தைய தலைமுறையை நமக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால், பல தலைமுறைகளுக்கு முன்பு இந்த இடம் என்னவாக இருந்தது, இங்கே எப்படிப்பட்ட மனிதர்கள் வாழ்ந்து எப்படி இறந்தார்கள் என்பது நமக்குத் தெரியாது. எனவே, மூதாதையர்களின் ஆவிகளை அமைதிப்படுத்த இக்கோயிலைக் கட்டுகிறோம். தினமும் ஊதுபத்தி, பூ வைத்து மரியாதை செய்கிறோம். வருடத்திற்கு ஒருமுறை துறவி வந்து சடங்கு செய்வார். ஆங்காங்கே சாலையோரங்களிலும் ஆவி கோயில்கள் இருக்கின்றன. அது, சாலை விபத்தில் இறந்தவர்களின் ஆவிகளை அமைதிப்படுத்த அவர்களது வீட்டினர் கட்டியது” எனக் கூடுதலாகச் சொன்னார்.

(பாதை நீளும்)

x