அண்ணாமலையின் உண்ணாவிரதம் ஓவர் ஆக்டிங்!- சு.திருநாவுக்கரசர் சுளீர்


கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

பயணங்கள், கூட்டங்கள் என பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சு.திருநாவுக்கரசரைத் திருச்சி மண்டலத்திற்குள்ளேயே முடக்கி வைத்திருக்கிறது கரோனா காலம். எனினும், அவ்வப்போது அவர் தெரிவிக்கும் கருத்துகள் கவனிக்கவைப்பவை. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றுள்ள அவர், அங்கிருந்து அலைபேசி மூலம் ‘காமதேனு' இதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி இது.

10 நாட்களுக்கு மேலாக நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்க நிஜ காரணம் என்ன?

பெகாசஸ் விவகாரம், ரபேல் ஊழல், பெட்ரோல் டீசல், சமையல் எரிவாயு விலை அபரிதமாக உயர்த்தப்பட்டது, விவசாயிகளுக்கு எதிரான கறுப்புச் சட்டங்கள், பொதுத் துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் முயற்சி என்று நாட்டில் ஏராளமான பிரச்சினைகள் இருக்கின்றன. இதைப் பற்றி எல்லாம் விவாதிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை எதையும் பொருட்படுத்தாமல், தாங்கள் நிறைவேற்ற விரும்புகிற சட்டங்களை மட்டும் நிறைவேற்றத் துடிக்கிறது மத்திய அரசு. அவர்கள் விரும்புகிறபடியெல்லாம் எதிர்க்கட்சிகள் ஆதரவுக்கரம் நீட்ட முடியாது. சிலவற்றை விவாதிக்கவும், சிலவற்றை நாடாளுமன்றக் கூட்டுக் கமிட்டிக்கு அனுப்பவும் எதிர்க்கட்சிகள் சார்பில் சொல்லப்படுகிற ஆலோசனைகள் ஏற்கப்படுவதில்லை. இப்படியான சூழலில்தான் எதிர்க்கட்சிகள் எதிர்த்துக் குரல் எழுப்ப வேண்டியதிருக்கிறது. ஆனாலும், இவ்வளவு கூச்சல்களுக்கு மத்தியிலும் சில சட்டங்களை குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றிவிடுகிறார்கள். அதனால்தான் அவை முடங்கும் அளவுக்குப் பிரச்சினை ஏற்படுகிறது.

எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை அவமதிக்கின்றன என்று பிரதமர் சொல்லியிருக்கிறாரே?

பிரதமர் சொல்லவில்லை. அவர் எங்கே பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்? பிரதமர் அப்படிச் சொன்னதாக ஒரு மத்திய அமைச்சர் சொல்லியிருக்கிறார். பிரதமர் சொன்னாலும் சரி, அமைச்சர் சொன்னாலும் சரி நாடாளுமன்றத்தில் மக்களின் எண்ணங்களை எடுத்துச் சொல்ல வேண்டியது எதிர்க்கட்சிகளின் கடமை. தொடர்ந்து 3 வாரமாக விவாதமின்றி சட்டங்கள் நிறைவேற்றும் கூட்டத் தொடராக இது அமைந்திருப்பது எங்களுக்கும் வருத்தம் தருகிறது. நாடாளுமன்றத்தை நடத்துவதில் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் கூட்டுப் பொறுப்பு இருக்கிறது என்றாலும், அனைத்துக் கட்சிகளையும் அரவணைத்து நாடாளுமன்றத்தை ஜனநாயக ரீதியில் நடத்த வேண்டிய கூடுதல் பொறுப்பு ஆளுங்கட்சிக்கே உண்டு.

ஜெயலலிதா படத்திறப்பு விழாவுக்கு பாஜகவின் கூட்டணி கட்சியான அதிமுக அழைத்தபோது வராத குடியரசுத் தலைவர், கருணாநிதி படத் திறப்பு விழாவுக்கு திமுக அழைப்பை ஏற்று வந்திருக்கிறார். ஒரு காங்கிரஸ்காரராக இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இருவரும் முன்னாள் முதல் அமைச்சர்கள்தான் என்றாலும், கலைஞருக்கும் ஜெயலலிதாவுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. தொடர்ந்து 13 தடவை தோல்வியே காணாமல் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருந்தலைவர், 5 முறை முதல்வராக இருந்தவர், அரசியல்வாதி என்பதைத் தாண்டி பெரும் தமிழறிஞர்களுடன் ஒப்பிடக்கூடிய அளவுக்குத் தமிழ்ப்பணி ஆற்றியவர் என்று பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர் கலைஞர். இப்படியான தலைவரின் படத்தைத் திறந்து வைப்பதற்குக் குடியரசுத் தலைவர் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டதைப் பாராட்டுகிறேன்.

ஜெயலலிதாவோ ஊழல் வழக்கில் தண்டனை பெற்றவர். இயற்கை எய்தாமல் இருந்திருந்தால் தண்டனைக் கைதியாக சிறைக்குச் சென்றிருக்க வேண்டியவர் என்பது போன்ற காரணங்களால், அவரது படத்தைத் திறக்க குடியரசுத் தலைவர் தயக்கம் காட்டியிருக்கலாம். தேவையில்லாத சர்ச்சையில் சிக்க வேண்டாம் என்று குடியரசுத் தலைவர் அந்நிகழ்ச்சியைத் தவிர்த்திருப்பார் என்று நினைக்கிறேன்.

எடப்பாடி பழனிசாமி காலத்தில் சென்னைக்கு வெளியிலும் வளர்ச்சித் திட்டங்கள் வந்தன. திமுக ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் சென்னையை மையப்படுத்தியே வளர்ச்சித் திட்டங்களை திட்டமிடுகிறது என்றொரு குரல் தென்தமிழகத்தில் ஒலிக்கிறதே?

சென்னை தமிழ்நாட்டின் தலை போன்றது. எனவே, அதற்கு இயல்பாகவே முக்கியத்துவம் கொடுக்கத்தான் தோன்றும். மனித உடலில் எப்படி எல்லா பாகங்களும் முக்கியமானவையோ, அதைப் போலவே தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களுமே முக்கியமானவைதான். சென்னைக்கு ஏற்கெனவே நிறைய முக்கியத்துவம் கொடுத்தாகிவிட்டது. மக்கள்தொகையும், நெருக்கடியும் அதிகரித்துவிட்டது. அதனால்தான் திருச்சியை இரண்டாம் தலைநகரமாக மாற்றக் கேட்கிறோம். திமுக ஆட்சிக்கு வந்து சில மாதங்கள்தான் ஆகிறது. எனவே, முதலில் சென்னைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அடுத்து தென்மாவட்டங்களுக்கும் முக்கியத்துவம் தருவார்கள் என்று நம்புகிறேன்.

கர்நாடகத்தில் பாஜக ஆளுங்கட்சியாக இருந்தாலும், மேகேதாட்டு விவகாரத்தில் தமிழக பாஜக போராட்டம் நடத்துகிறது. காங்கிரஸோ, கம்யூனிஸ்ட் கட்சிகளோ இப்படி மேகேதாட்டு, முல்லைப் பெரியாறு பிரச்சினைகளில் நடந்துகொள்வதில்லையே, ஏன்?

நான் காங்கிரஸ் தலைவராக இருந்தபோதும் சரி, எனக்கு முன்பும், பின்பும் தலைவராக இருந்தவர்களும் சரி காவிரி பிரச்சினையில் தமிழ்நாட்டிற்காகக் குரல் கொடுக்காமல், கர்நாடகத்திற்கு ஆதரவாகவா குரல் கொடுத்தோம்? அதேமாதிரிதான் அண்ணாமலையும், தமிழக பாஜக தலைவர் என்கிற முறையில் தமிழ்நாட்டிற்காகக் குரல் கொடுக்கிறார். அதைத் தாண்டி இந்த உண்ணாவிரத நாடகம் எல்லாம் ஓவர் ஆக்டிங். பிரதமர் அலுவலகத்திற்கு முன்போ, கர்நாடகத் தலைமைச் செயலகம் முன்போ அவர் போராட்டம் நடத்தியிருந்தால் அதைப் பற்றி பேசலாம். தமிழ்நாட்டில் போராடுவதை எல்லாம் கட்சி வளர்ச்சிக்கான நிலைப்பாடாகத்தான் பார்க்க வேண்டுமே தவிர, பெரிய சாதனையாகவெல்லாம் பார்க்க முடியாது.

நீங்கள் 6 முறை வென்ற அறந்தாங்கி தொகுதியின் எம்எல்ஏ-வாக இப்போது உங்கள் மகன் இருக்கிறார். அவரது செயல்பாடு திருப்தி தருகிறதா?

அடிக்கடி தொகுதிக்குப் போகிறார். தொகுதி மக்களை ஊராட்சி வாரியாகப் போய்ச் சந்திக்கிறார். மக்கள் குறைகளை மனுக்களாக வாங்கி, அவற்றை அதிகாரிகள், அமைச்சர்களுக்கு அனுப்பி தீர்வு காண்கிறார். தொலைபேசி வழியில் வருகிற புகார்களையும் சரி செய்கிறார். இந்த மக்கள் பணிகளைத் தொடர்ந்து அவர் செய்வார். அதில் மக்கள் எந்தளவிற்குத் திருப்தியாக இருக்கிறார்கள் என்பதை நான் சொல்வதைவிட அந்த மக்கள் சொல்வதே சிறப்பாக இருக்கும். அவரது ஆர்வத்தையும், அக்கறையையும் பார்க்கும்போது அறந்தாங்கி தொகுதி மக்கள் பாராட்டும் வகையில் அவர் கண்டிப்பாகச் செயல்படுவார் என்றே தோன்றுகிறது.

2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவைத் தோற்கடிக்க வேண்டும் என்றால் காங்கிரஸ் என்ன செய்ய வேண்டும்?

காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பைப் பலப்படுத்தவும், கட்சியை வலுப்படுத்தவும் முதலில் ராகுல் காந்தி அகில இந்திய தலைவராகப் பொறுப்பேற்க வேண்டும். அதன் பிறகு எல்லா மாநிலங்களிலும் அந்தந்த மாநிலங்களில் செல்வாக்குள்ள தலைவர்களை மாநிலத்தின் கட்சித் தலைவர்களாக, பொறுப்பாளர்களாக நியமித்து, காலத்திற்கேற்ற மாற்றங்களைச் செய்து, அடிப்படைக் கட்டமைப்பை வலுப்படுத்தி, உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரித்து, காங்கிரஸை மேலும் பலப்படுத்த வேண்டும். அப்போது தோழமைக் கட்சிகள் காங்கிரஸ் பின்னால் கண்டிப்பாக அணி திரள்வார்கள். காங்கிரஸ்தான் தேசிய கட்சிகளில் பெரிய கட்சி. அதன் துணை இல்லாமல் மத்தியில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவர முடியாது. இப்போது நாடாளுமன்றத்தில் செயல்படுவது போலவே, காங்கிரஸுக்கு தோழமைக் கட்சிகள் துணை நிற்கும் செயல்பாடுகள் தொடருமேயானால், மத்தியில் ஆட்சி மாற்றம் மிக எளிதாகவே நடந்துவிடும்.

x