வனக் கதை சொன்ன வனிதாமணி!- பழங்குடிக் குழந்தைகளுக்கு சுவாரசியப் பாடம்


கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in

அந்தியூரிலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் மலைக்குன்றுகளிலும் பள்ளத்தாக்குகளிலும் விரவிக் கிடக்கின்றன பர்கூர் மலைக் கிராமங்கள். தாமரைக்கரை, தாளக்கரை, தொள்ளி, ஒண்ணகரை என வரும் 33 மலைக் கிராமங்களும் ஒரு காலத்தில் வீரப்பன் பெயரால் பாடாய்பட்டவை. இப்போதெல்லாம் குழந்தைகளுக்குக் கதை சொல்லும் கிராமங்களாக இவை மாறியிருக்கின்றன.

சமீபத்தில், இந்த வனாந்திர கிராமங் களில் ஒன்றான கொங்காடையில் கதை சொல்லும் நிகழ்வு ஒன்று நடந்தது. ‘காமதேனு’ வாசகர்களுக்கு அறிமுகமான கதைசொல்லியான வனிதாமணி இதில் பங்கேற்றார். நானும் அங்கு சென்றிருந்தேன்.

ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள ஆலமரத்தடியில் காலை முதலே குழந்தைகளின் கலகலப்புக்குப் பஞ்சமில்லை. ஆலமர விழுதுகளைப் பிடித்துக்கொண்டு ஊஞ்சலாட்டமும், பாறைகளைச் சுற்றிச்சுற்றி ஓடும் விளையாட்டுமாய் இருந்த சிறார்
கள் மத்தியில் வனிதாமணியின் குரல் ஒலிக்கிறது.

‘‘கண்ணுகளா... ஏற்கெனவே நான் இங்கே வந்திருக்கேன். யாருக்கெல்லாம் ஞாபகம் இருக்கு..?”

“எனக்கு ஞாபகம் இருக்கு...”

“எனக்குத் தெரியும்!’’

சொல்லிக் கொண்டே சில குழந்தைகள் ஆலமர விழுதுகளை விட்டுவிட்டு ஓடிவருகிறார்கள்.

“போன தடவை நான் ஒரு கதை சொன்னேனே. ஞாபகம் இருக்கா..?’’

‘‘ம்... எனக்கு ஞாபகம் இருக்கு..!’’ என்கிறார்கள் சில குழந்தைகள்.

‘‘வெள்ளாட்டுக் கதை, செம்மறியாட்டுக் கதை... அதுதானே..?’’ என்கிறாள் ஒரு சிறுமி.

‘‘ஆஹா... அறிவாளிக் குழந்தை’’ என அவளை உச்சிமோந்த வனிதாமணி, ‘‘சரி, அப்ப இங்கே வந்த கதை சொல்லி எழில்கூட சேர்ந்து ஒரு பாட்டுப் பாடினோமே. ஞாபகம் இருக்கா?’’ என்று கேட்க, தலையாட்டிய குழந்தைகள் பாடத் தயாராகிறார்கள்.
‘‘கொங்காடை மலைமேல...” முதல் வரியை எடுத்துக் கொடுக்கிறார் வனிதாமணி.

“காத்துக்கொரு பூ மாலை...’’

கோரஸாகப் பாடுகிறார்கள் குழந்தைகள். பாடல் தொடர்கிறது.

‘‘கண்டு வந்து சொன்னீங்கன்னா...’’

‘‘கொண்டு வந்து சாத்துவோம்...’’

‘‘கொங்காடை மலைமேல...’’

‘‘காத்துக்கொரு பூ மாலை!’’

பாடல் முடிந்ததும், குரலை கனைத்துக்கொண்டு கதை சொல்ல ஆரம்பிக்கிறார் வனிதாமணி. தமிழகத்தின் நதிகளில் தொடங்கி வட மாநிலங்களில் பாயும் பிரம்மபுத்திரா நதி வரை பல தகவல்களைக் கதையினூடே குழந்தைகளுக்குச் சொல்கிறார். இந்தியாவின் கானக மனிதர் என அழைக்கப்படும் ஜாதவ் பாயேங் தனி மனிதராகக் காட்டை உருவாக்கிய கதையை அவர் சொல்லச் சொல்ல... ஆர்வத்துடன் ஒன்றிப்போய் கேட்கிறார்கள் அங்கிருக்கும் அறுபத்திச் சொச்சம் குழந்தைகள்.

கதையைச் சொல்லி முடித்ததும் வனிதாமணி இப்படிப் பேசுகிறார்:

‘‘இந்தக் கதையை உங்களுக்கு ஏன் சொனேன்னா, நீங்க எல்லாம் சொர்க்கத்தில இருக்கீங்க. நாங்க எல்லாம் ந(க)ரகத்திலயிருந்து வந்திருக்கோம். ‘எங்களுக்கு ஏசி இல்லை. கார், பஸ் இல்லை. போட்டுக்க காலுக்கு ஒரு செருப்புக்கூட கிடையாது. அப்புறம் எப்படி நம்ம காடு சொர்க்கம் ஆகும்?’னு நீங்க நினைப்பீங்க. ஆனா பாருங்க, உங்களுக்குச் சுத்தமான காற்று, ஆக்ஸிஜன் கிடைச்சிருக்கு. எங்களுக்கு அது இல்லை. நீங்க எல்லாம் படிக்கணும்னு நான் சொல்றதுக்குக் காரணம் நீங்க நிறைய சம்பாதிக்கணும்; வீடு கட்டணும். வேலை பார்க்கணும். கார் வாங்கணும்னெல்லாம் இல்லை. சுயநலத்தோடதான் சொல்றேன். நீங்க எல்லாம் படிச்சு வந்தீங்கன்னா, அதிகாரத்துலயும், பதவியிலயும் இருந்தீங்கன்னா இந்தக் காட்டையும், மலையையும், ஆற்றையும், ஓடைகளையும் காப்பாத்த முடியும். அதுக்கான அறிவும் நுட்பமும் உங்ககிட்டத்தான் அதிகம் இருக்கு. படிப்பும், அறிவும், பதவியும், அதிகாரமும் உங்ககிட்ட இல்லைன்னா அதைக் காப்பாத்த முடியாது. நீங்க படிச்சு இதைக் காப்பாத்தி வச்சீங்கன்னா நாங்க சமவெளியில நிம்மதியா இருக்க முடியும். அதனால நீங்க படிக்கணும். அப்பத்தான் நீங்க ஒவ்வொருத்தருமே ஜாதவ் பாயேங்க் ஆக முடியும்!’’ என்று அறிவுறுத்துகிறார் வனிதாமணி.

ஈரோடு, கோவை, சேலம் என நகரப் பகுதிகளிலும், கிராமப்புறப் பகுதிகளிலும் பள்ளிக் குழந்தைகளுக்குக் கதை சொல்லும் வனிதாமணி, சமீப காலமாக மலைக்கிராமங்களுக்கும் சென்று பழங்குடி கிராமக் குழந்தைகளுக்கு ஏற்ற மாதிரி கதைகளைச் சொல்ல ஆரம்பித்துள்ளார்.

நிகழ்வுக்கு மத்தியில் வனிதாமணியிடம் பேசினோம். “குழந்தைகளுக்குப் பொதுவா எல்லாருக்கும் ஒரே கதையைச் சொல்லி விட முடியாது. கிராமத்துக் குழந்தைகளோட வாழ்வியல் சூழல் வேற, நகரத்துக் குழந்தைகள் நிலை வேற. அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது பழங்குடி குழந்தைகள் வாழ்வு. அவங்க வாழ்வு சம்பந்தப்பட்ட விஷயங்களைக் கதைக்குள்ளே கொண்டுவரணும். நகரத்துல சொல்ற ரோபோ கதையைக் கொண்டு வந்து இங்க சொன்னா புரியறது கஷ்டமா இருக்கும். இவங்க மண்ணோட, மக்களோட, பார்த்த, கேட்ட விஷயங்ளை வச்சு கதை சொல்லணும். நான் சொன்ன கதைகளைக் குழந்தைகள் கண்கள் விரிய கேட்டது மகிழ்ச்சியா இருக்கு’’ என்று நெகிழ்ந்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த சத்தியமங்கலம் சுடர் அமைப்பைச் சேர்ந்த நடராஜன் நம்மிடம் பேசுகையில், ‘‘பர்கூர் மலைக்கிராமங்களில் நிறைய இடைநிற்றல் மாணவர்கள் உள்ளனர். அவர்களை மீட்டுஅங்கங்கே மையங்கள் ஏற்படுத்தி அரசிடம்
உதவித்தொகை பெற்று கல்வி கற்றுக்கொடுத்து வருகிறோம். அதையும் தாண்டி குழந்தைகளின் கல்வியறிவு நம்பிக்கையற்றுப்
போய்விடக்கூடாது என்பதற்காக இது போன்ற கதை சொல்லல் நிகழ்வுகளை ஊருக்கு ஊர் நடத்திவருகிறோம். அப்படி இந்த
கிராமங்களில் இதுவரை பத்துக்கும் மேற்பட்ட கதை சொல்லும் நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறோம். பவா செல்லதுரை, வெங்கட், சதீஸ் போன்ற கதைசொல்லிகளும் இதில் பங்கேற்றிருக்கிறார்கள். உள்ளூரில் உள்ள அன்புராஜ் போன்றவர்களும் கதை சொல்வது உண்டு.

உலக புவிதினத்தை முன்னிட்டு வனிதாமணி ஜாதவ் பாயேங்க் கதையைச் சொன்னது எங்களைப் போன்ற பெரியவர்களையே சிலிர்க்க வைத்துவிட்டது. ஜாதவ் ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர். இவர் பிரம்மபுத்திரா நதி அருகே ஒருவனத்தையே உருவாக்கியுள்ளார். அப்பகுதிக்குஇவருடைய செல்லப்பெயரான ‘முலாய்’ எனப்பெயரிட்டு, முலாய் வனப்பகுதி என்று அழைக்கின்றனர். இவரின் கதைக்கருவை வைத்து Forest Man, The Molai Forest, Soul of the Forest போன்ற திரைப்படங்களே உருவாகியுள்ளன. அப்படிப்பட்ட கதையை ஒரு மணி நேரத்தில் இவ்வளவு எளிமையாக, பழங்குடி குழந்தைகளுக்குப் புரியும்படி வனிதாமணி சொல்வார் என நாங்களே நினைத்துப் பார்க்கவில்லை. இதுபோன்ற நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தி பழங்குடிக் குழந்தைகளுக்குப் பல்வேறு விஷயங்களைக் கற்றுத்தருவோம்’’ என்றார் உறுதியான குரலில்.

கதைகள் மூலம் காதில் விழும் அறிவு விதைகள், பழங்குடிக் குழந்தைகளின் வாழ்வில் விருட்சங்களாக வளரட்டும்; வாழ்க்கை செழிக்கட்டும்!

x