இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கேரள மாநிலத் தலைவராக இருப்பவர், செய்யது ஹைதர் அலி ஷிகாப் தங்கல். இவர் கேரள முஸ்லிம்கள் மத்தியில் தனிப்பட்ட செல்வாக்கு பெற்றவர். கேரள முஸ்லிம்களின் ஆன்மிக குருவான இவரிடம், தேர்தல் நேரத்தில் அனைத்துக் கட்சி அரசியல் தலைவர்களும் வந்து ஆசிபெற்றுச் செல்வது வழக்கம். அப்படிப்பட்டவர் மீது திடீரென அமலாக்கத் துறை விசாரணையைத் தொடங்கி உள்ளது. முஸ்லிம் லீக் கட்சியின் அதிகாரபூர்வ மலையாள பத்திரிகையான ‘சந்திரிகா’வின் மூலம் கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றியதாக இவர் மீது குற்றம்சாட்டி, விசாரணைக்கு அழைத்துள்ளது அமலாக்கத் துறை. இதைக் கண்டிக்கும் கேரள முஸ்லிம் லீக் கட்சியினர், “இது மத்திய பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை” என ஆத்திரப்படுகிறார்கள்.