ஓபிஎஸ் இருக்கிறவரை அதிமுக உருப்படாது!- தங்கத்தமிழ்ச் செல்வன் தடாலடி


கே.சோபியா
readers@kamadenu.in

எந்த நோக்கத்துக்காகத் திமுகவில் தனக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு கொடுக்கப்பட்டதோ, அதைச் சிறப்பாகச் செய்துகொண்டிருக்கிறார் தங்கத்தமிழ்ச் செல்வன். தேர்தலின்போது ஓபிஎஸ்ஸை போடி தொகுதிக்குள்ளேயே முடக்கியவர், இப்போதும் அவரை மாவட்ட அரசியலுக்குள் இழுத்துப் போடுகிறார்.

“அவர் தங்கத்தமிழ்ச் செல்வன் அல்ல. தகரத் தமிழ்ச் செல்வன். அம்மா ஒரு இடர்ப்பாட்டில் சிக்கி வழக்கில் வெற்றிபெற்றபோது, முதல்வராவதற்காக ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட விரும்பினார். ஆனால், ஆண்டிப்பட்டி தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய தங்கத்தமிழ்ச் செல்வன் மறுத்தார். நாங்கள்தான் விடிய விடிய பேசி அவரைச் சம்மதிக்க வைத்தோம்” என்று ஓபிஎஸ் பேட்டி கொடுக்க, “ஜெயலலிதா இருக்கும்போதே சசிகலாவுடன் சேர்ந்து அந்தம்மாவுக்கு எதிராகச் செயல்பட்டவர் ஓபிஎஸ்” என்று பதிலுக்கு தங்கம் எகிற, தேனி மாவட்டம் பரபரப்பாக இருக்கிறது. இந்தச் சூழலில் தங்கத்தமிழ்ச் செல்வனுடன் ஒரு பேட்டி.

உங்க சண்டையோட தொடக்கப்புள்ளி எது?

ஓபிஎஸ்தான் ஆரம்பிச்சி வெச்சாரு. போடியில ஜெயிச்ச நாள்ல இருந்து சென்னை, டெல்லின்னு ஊர் சுத்திக்கிட்டே இருக்காரு அவரு. நான் தோத்தாலும் தொகுதி மக்களோடேயே இருக்கேன். மக்கள் பிரச்சினைகளைக் கேட்டு, அதிகாரிகள்கிட்ட சொல்லி தீர்த்து வெக்கிறேன். அதைத் தாங்கிக்க முடியாம, நான் ராஜினாமா பண்ண மறுத்ததா பொய்யா பேட்டி கொடுத்துக்கிட்டு இருக்கிறாரு. அப்படி ஒருவேள நான் ஜெயலலிதாகிட்ட முரண்டு பிடிச்சிருந்தா, என்னோட நிலைமை என்னாகியிருக்கும்னு ஒரு அடிமுட்டாளுக்குக்கூடத் தெரியும். அதுக்குப் பிறகும் 10 வருஷம் மாவட்ட செயலாளர், ராஜ்யசபா எம்பி-ன்னு பதவி கொடுத்திருப்பாங்களா? அதைவிடுங்க. இப்ப எதுக்கு அந்தத் தேவையில்லாத பேச்சு. வாயக்கொடுத்து வாங்கிக்கிட்டாரு அவ்வளவுதான்.

உண்மையில் ஓபிஎஸ் டெல்லி போனது எதற்காக? தமிழகத்தின் நீண்ட கால கோரிக்கைகளை வலியுறுத்தத்தான் என்று சொல்கிறார்களே..?

அவர் பையன் தனி விமானத்துல, சில பொண்ணுங்களோட மொரீஷியஸ் தீவுக்கு இன்பச் சுற்றுலா போன விவகாரத்தை அமலாக்கத் துறையும் சிபிஐயும் கையில எடுத்திருக்கு. அந்தக் கேஸை க்ளோஸ் பண்றதுக்காகத்தான் ஓபிஎஸ் டெல்லிக்குப் போயிருக்காரு. என்னமோ ஏதோன்னு எடப்பாடியும் திடுதிப்புன்னு கிளம்பிப் போயிருக்காரு. என் பையன் மேலயும் நிறைய பிரச்சினை இருக்கு துன்னு சொல்லி, ரெண்டு பேரும் மோடி கால்ல நெடுஞ்சாண் கிடையா விழுந்து கும்பிட்டிருக்காங்க. ஆனா, அதெல்லாம் முடியாதுன்னு மத்திய அரசு சொல்லிட்டதா தேனியில பேசிக்கிறாங்க.

முன்னாள் அதிமுககாரராக அந்தக் கட்சியின் இன்றைய நிலையை எப்படிப் பார்க்கிறீர்கள்?

ஓபிஎஸ்ஸை நம்பிப் போன 11 எம்எல்ஏ-க்கள்ல அவர் மட்டும்தான் மறுபடியும் எம்எல்ஏ ஆகியிருக்காரு. ஒண்ணாம் நம்பர் சுயநலவாதி அவரு. அவரை நம்பிப்போன யாரும் நல்லாயிருந்ததா சரித்திரம் இல்ல. எடப்பாடி பழனிசாமி பதவியைக் காலி பண்றதுக்காக, கட்சியை அடகு வெக்கக்கூட தயங்க மாட்டாரு ஓபிஎஸ். ஆக, அவரு இருக்கிற வரைக்கும் அதிமுக உருப்படாது.

அமமுகவில் இருந்து உங்கள் நண்பர்கள் நிறைய பேர் திமுகவுக்கு வந்திருக்கிறார்களே?

முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜன், அவர் மகன் ஆனந்த் என்று வலுவான ஆட்கள் எல்லாம் திமுகவுக்கு வருவது ரொம்ப மகிழ்ச்சியான விஷயம்.

ஸ்டாலினின் தலைமையையும், திமுகவின் நல்லாட்சியையும் பார்த்து அந்தக் கட்சியில இருந்து மட்டுமின்றி எல்லாக் கட்சியில் இருந்தும் நிறையப் பேர் வர்றாங்க.

ஒருவேளை... தனது விசுவாசிகளை ஸ்லீப்பர் செல்களாக திமுகவுக்கு அனுப்பி வைக்கிறாரா தினகரன்?

அட ஏங்க? இந்த ஸ்லீப்பர் செல்லுங்கிற பேச்செல்லாம் இனிமே எடுபடாது. ஒரு அளவுக்குத்தான் மனுஷங்கள ஏமாத்த முடியும். இன்னும் எத்தனை நாளைக்கு இந்தக் கதையைச் சொல்லுவாரு தினகரன்? அதிமுகவுல என்னோட ஸ்லீப்பர் செல்கள் இருக்காங்கன்னு 4 வருஷமாச் சொன்னாரு. எந்த செல்லும் வெடிக்கலியே?

இப்போது தினகரன் என்ன தான் செய்கிறார்?

அதை நீங்க அவர்கிட்டதான் கேட்கணும். எனக்கும் அவருக்கும் டச் இல்ல. நான் அமமுகவுல இருந்து வரும்போதே சொல்லிட்டுத்தானே வந்தேன். இந்தக் கட்சி நாசமாப் போகும்னு. அதே மாதிரி ஆகிப்போச்சே!

ராஜ்ய சபா சீட்டைக் குறிவைத்துத்தான் நீங்கள் தேனியில் பரபரப்பு அரசியல் செய்வதாகச் சொல்கிறார்களே?

ஏங்க இதென்ன சின்னப் புள்ளைங்க விளையாட்டா? திமுக ஒரு பெரிய கட்சி. கொடுக்கிற இடத்துல இருப்பது அண்ணன் தளபதி. யாருக்கு எம்பி பதவி கொடுத்தா நல்லாயிருக்கும்னு அவருக்குத் தெரியாதா. எல்லா முடிவையும் அவர்தான் எடுப்பாரு. இதுல எனக்குத்தான் கிடைக்கும், உனக்குத்தான் கிடைக்கும்னு யாரும் சொல்ல முடியாது.

கர்நாடக அரசை கண்டித்து தமிழக பாஜக போராடுகிறது. ஆனால், முல்லை பெரியாறில் நிறைய தண்ணீர் வந்தாலும், 142 அடி தண்ணீரைக்கூட தேக்கவிடாமல் தடுக்கிறது கேரள அரசு. உங்கள் கூட்டணி கட்சியான கம்யூனிஸ்டோ, காங்கிரஸோ கேரளத்துக்கு எதிராகப் போராடவில்லையே?

திமுக தலைவர் அண்ணன் தளபதி, அழகாச் சொல்லிட்டாரு. முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி தண்ணீரைத் தேக்கியே தீருவோம்னும், மேகேதாட்டுவில் அணை கட்டவிடமாட்டோம்னும் சொல்லிட்டாரு. ரெண்டுலேயுமே அவர் உறுதியா இருக்காரு. கேரளாவுல எந்தக் கட்சி ஆண்டா என்ன, கர்நாடகாவுல எந்தக் கட்சி ஆண்டா என்ன? மத்தியில யார் ஆண்டா என்ன? தமிழ்நாட்டுல திமுக ஆட்சியில இருக்குது. தமிழ்நாட்டின் உரிமைகள் பாதுகாக்கப் படும், நிலைநாட்டப்படும். அதைவிட்டுக் கொடுக்கவே மாட்டாரு ஸ்டாலின்.

கரோனா இரண்டாவது அலையின்போது கேரள எல்லையோர மாவட்டங்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டன. இப்போது அம்மாநிலத்தில் தொற்று அதிகரிக்கும் சூழலில், தேனிக்குப் பரவாமல் இருக்க தமிழக அரசு என்ன செய்திருக்கிறது?

கேரளாவில்தான் சிறப்பா நடவடிக்கை எடுத்து கரோனாவைக் கட்டுப்படுத்துறாங்கன்னு முன்னாடி செய்தி வந்துது. இப்ப ஏன் அங்க கரோனா நோய் இப்படி அதிகமாக பரவுதுன்னு ஒண்ணும் புரியல. ஆனாலும், தேனி மாவட்டத்துக்கு அது பரவாம இருக்கிறதுக்கு அரசும், மாவட்ட நிர்வாகமும் நல்ல நடவடிக்கை எடுத்திருக்குது. இங்கன்னு இல்லை.. எல்லா எல்லையோர மாவட்டங்களிலுமே 
இந்த முறை கூடுதல் விழிப்போட அரசு இருக்குது. 

x