வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in
வடகிழக்கு மாநிலங்களான அசாமுக்கும் மிசோரத்துக்கும் இடையில் கடந்த வாரம் நிகழ்ந்த மோதல், நாடு முழுவதும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
மாநிலங்களுக்கு இடையிலான முரண்களும், வழக்குகளும் சகஜம்தான் என்றாலும், அசாம் – மிசோரம் இடையில் நடந்த துப்பாக்கிச்சூடும் உயிர்ப் பலியும் சுதந்திர இந்தியாவில் நடந்தேறியிருக்கும் அபூர்வமான அசம்பாவிதங்கள். கிட்டத்தட்ட பகை நாடுகள் கணக்காக இரண்டு மாநிலங்களும் முறுக்கிக்கொண்டு நிற்கின்றன. என்ன நடக்கிறது வட கிழக்கில்?
பலியான போலீஸார்
ஜூலை 26-ல் மிசோரமில் உள்ள வைரேங்தே எனும் சிறுநகரில் நிகழ்ந்த சம்பவம் அது. 200 சொச்சம் அசாம் போலீஸாருக்கும் மிசோரம் போலீஸாருக்கும் இடையே மோதல் வெடித்து தாக்குதல் நடந்துகொண்டிருந்தது. அப்போது மிசோரம் போலீஸார் சுட்டதில், ஒரு சிவிலியனும், ஆறு அசாம் காவலர்களும் உயிரிழந்தனர். அசாமின் கசார் மாவட்டத்தின் போலீஸ் எஸ்.பி உட்பட 42 பேர் காயமடைந்தனர்.
மிசோரம் போலீஸார் இலகுரக இயந்திரத் துப்பாக்கிகளால் சுட்டதாகவும், கிட்டத்தட்ட அரை மணி நேரத்துக்கு அந்த மோதல் நீடித்ததாகவும் அசாம் முதல்வர் ஹிமந்த் பிஸ்வ சர்மா கூறினார். துப்பாக்கிச்சூடு நடத்தியதை மிசோரம் தரப்பு மறுக்கவில்லை. எனினும் அத்துமீறி உள்ளே நுழைந்து, மிசோரம் போலீஸ் முகாமையும், சிஆர்பிஎஃப் முகாமையும் அடித்து நொறுக்கியதாலும், மக்கள் மீது தாக்குதல் நடத்தியதாலும்தான் அதைச் செய்ய நேர்ந்ததாக அம்மாநில அரசு விளக்கம் சொன்னது. விவகாரம் முற்றிய நிலையில், மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா இரு முதல்வர்களையும் போனில் அழைத்துப் பேசி, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர அறிவுறுத்தினார். இரு மாநில எல்லைப் பகுதிகளிலிருந்து பரஸ்பரம் போலீஸார் விலக்கிக்கொள்ளப்பட்டதாகச் சொல்லப்பட்டது.
தணியாத பதற்றம்
மோதல் முடிவுக்கு வந்துவிட்டாலும், பதற்றம் இன்னமும் தணியவில்லை. மிசோரத்துக்கு அசாமியர்கள் யாரும் செல்ல வேண்டாம் என்றும், ஏற்கெனவே அங்கிருக்கும் அசாமியர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் அசாம் அரசு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. எல்லையிலிருந்து மிசோரம் போலீஸார் இன்னமும் விலக்கிக்கொள்ளப் படவில்லை என்றும் அசாம் அரசு சுட்டிக்காட்டுகிறது.
உண்மையில், எல்லைப் பகுதிகளில் மத்திய ஆயுதப் படைகள் குவிக்கப்பட்டிருந்தாலும், இரு மாநிலப் போலீஸாரும் தத்தமது எல்லைக்குள் 100 மீட்டர் தொலைவில் இன்னமும் முகாமிட்டிருக்கிறார்கள்.
மிசோரம் தரப்பிலிருந்து பகிரங்கமாகவே மிரட்டல் வந்திருப்பதும் கவனிக்கத்தக்கது. மிசோரம் எம்பி-யான வன்லல்வேனா, “அசாம் போலீஸார் அனைவரையும் நாங்கள் கொல்லாமல் விட்டது அவர்களது அதிர்ஷ்டம். ஆனால், மீண்டும் அவர்கள் வந்தால் அனைவரையும் கொன்றுவிடுவோம்” என்று எச்சரித்திருக்கிறார். மிசோ மாணவர் சங்கத்தின் தலைவரான ஜே.லால்முவான்சுவாலா இவ்விஷயத்தில் அசாம் முதல்வர் ஹிமந்த் பிஸ்வ சர்மாவைக் கடுமையாகக் குற்றம்சாட்டியிருக்கிறார். “இதுவரை ‘ஏழு சகோதரிகள்’ எனும் பெயரில் ஒரே குடையின்கீழ் அமைதியாக இருந்த வடகிழக்கு மாநிலங்களில் உங்கள் அரசியல் வரவின் காரணமாக அமைதி குலைந்துவிட்டது” என்று விமர்சித்திருக்கிறார் அவர். இப்படியான சம்பவங்கள் தொடர்ந்தால், மிசோரம் மீண்டும் கிளர்ச்சியில் இறங்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். இதனிடையே, மிசோரத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையை அசாம் அடைத்துவிட்டதாக மிசோரம் குற்றம்சாட்டுகிறது. இரு மாநிலங்களுக்கு இடையிலான ரயில் பாதை சேதப்படுத்தப்பட்டிருக்கிறது.
பலன் தராத பேச்சுவார்த்தை
இத்தனைக்கும், சம்பவம் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் வடகிழக்கு மாநிலங்களின் முதல்வர்களுடன் அமித் ஷா முக்கிய ஆலோசனை நடத்தியிருந்தார். அதில் அம்மாநிலங்களுக்கு இடையிலான எல்லைப் பிரச்சினைதான் பிரதானமாகப் பேசப்பட்டது. குறிப்பாக, அசாமுக்கும் அதன் அண்டை மாநிலங்களுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சினைதான் அதில் முக்கிய இடம்பெற்றது. முன்னதாக ஜூலை 9-ல் அசாம், மிசோரம் மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களை டெல்லிக்கு அழைத்து எல்லைப் பிரச்சினை தொடர்பாக மத்திய உள்துறைச் செயலாளரும் பேச்சுவார்த்தை நடத்தினார். இத்தனைக்குப் பின்னரும் இப்படியான மோதல் நடந்திருப்பதுதான் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இன்னொரு விஷயமும் கவனிக்கத்தக்கது. அசாமை ஆள்வது பாஜக என்றால், மிசோரத்தை ஆட்சி செய்வது பாஜகவின் கூட்டணிக் கட்சியான மிசோ தேசிய முன்னணி. வடகிழக்கு ஜனநாயகக் கூட்டணியில் இரு கட்சிகளும் அங்கம் வகிக்கின்றன. ஜூலை 26-ல் பிரச்சினை முளைவிட்டபோதே, பதற்றத்தைத் தணிக்க இரு மாநில அரசுகளும் கூட்டாக முயற்சி எடுத்திருக்க வேண்டும். ஆனால், இரு முதல்வர்களும் அன்றைய தினம் ட்விட்டரில் ஒருவரை ஒருவர் சாடிக்கொண்டு, பதற்றம் ஏற்படுத்தும் வீடியோக்களைப் பதிவேற்றி நிலைமையை மேலும் மோசமாக்கிவிட்டனர். குறிப்பாக, அசாம் முதல்வர் ஹிமந்த் பிஸ்வ சர்மா, தொடர்ந்து ட்வீட்டுகளை எழுதிக்கொண்டே இருந்தார்.
இருவரும் ட்விட்டரில் வார்த்தைப் போரில் ஈடுபட்டிருந்தபோது, அதுகுறித்து பிரதமர் மோடியோ, உள்துறை அமைச்சர் அமித் ஷாவோ எந்த ட்வீட்டும் பதிவிடவில்லை. சொல்லப்போனால், ஹிமந்த் பிஸ்வ சர்மாவின் ட்வீட்டுகளில் பிரதமர், உள் துறை அமைச்சர் ஆகியோர் டேக் செய்யப்பட்டிருந்தனர். மாலை 5 மணி வரை ட்வீட் செய்துகொண்டிருந்த மிசோரம் முதல்வர் ஜோராம்தங்கா, அதற்குப் பின்னர் ட்விட்டரில் எதையும் பதிவிடவில்லை. ஆனால், அசாம் முதல்வர் இரவு முழுவதும் ட்வீட் செய்துகொண்டே இருந்தார். சுட்டுக்கொல்லப்பட்ட அசாம் போலீஸாருக்கு அஞ்சலிக் குறிப்பு எழுதினார். ஒவ்வொரு பதிவிலும் இரு தரப்புக்கும் இடையிலான மோதல் தொடர்பான காணொலிகளையும் அவர் இணைத்திருந்தார். மறுநாள், உயிரிழந்த போலீஸாரின் உடல்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதுடன், காயமடைந்தவர்களை மருத்துவமனையில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.
மோதலின் வரலாறு
1972 வரை, லுஷாய் ஹில்ஸ் எனும் பெயரில் அசாமின் மாவட்டங்களில் ஒன்றாக மிசோரம் இருந்தது. பின்னர் அது அசாமிலிருந்து பிரிக்கப்பட்டு ஒன்றியப் பிரதேசமாக்கப்பட்டது. 1987-ல் மாநில அந்தஸ்து கிடைத்தது. இரு மாநிலங்களுக்கு இடையில் இன்றைக்கு நிலவும் எல்லைப் பிரச்சினைக்கு பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலிருந்தே வரலாறு உண்டு. 1875-ல் தென்கிழக்கு அசாமில் இருக்கும் கசார் சமவெளிப் பகுதியிலிருந்து லுஷாய் ஹில்ஸ் பகுதிக்கு எல்லை வகுக்கப்பட்டது. பின்னர் 1933-ல், கலாச்சாரம், மொழி, இன அடிப்படையில் வட கிழக்கு மாநிலங்களின் எல்லைகளைப் பிரிப்பதற்காக, லுஷாய் ஹில்ஸ், கசார், மணிப்பூர் ஆகியவற்றுக்கு இடையில் புதிய எல்லையை வகுத்தது பிரிட்டிஷ் அரசு. அப்போது லுஷாய் ஹில்ஸின் சில பகுதிகள் மணிப்பூரில் சேர்க்கப்பட்டன. இன்றைக்கு, 1933-ல் வகுக்கப்பட்ட எல்லைகளையே பின்பற்றுவதாக அசாம் சொல்கிறது. ஆனால், 1875-ல் வகுக்கப்பட்ட எல்லையையே பின்பற்ற வேண்டும் என்று மிசோரம் பிடிவாதம் காட்டுகிறது.
பரவும் அச்ச உணர்வு
இதற்கு முன்பும் எல்லையில் இரு மாநிலங்களுக்கு இடையில் பிரச்சினை ஏற்பட்டதுண்டு. 2020 அக்டோபரில் மிசோரத்தைச் சேர்ந்த சிலர் அசாம் எல்லைக்கு உட்பட்ட பள்ளிகளில் குண்டு வீசினர். ஆனால், பெரும் உயிர்ப் பலி என்பது இப்போதுதான் நிகழ்ந்திருக்கிறது. இரு மாநிலங்களுக்கிடையில் வெடித்திருக்கும் இந்த மோதல், வடகிழக்கின் பிற மாநிலங்களுக்கு மத்தியிலும் அச்ச உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கெனவே நாகாலாந்து, அருணாசல பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கும் அசாமுக்கும் இடையில் எல்லைப் பிரச்சினைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே கடந்த வெள்ளிக்கிழமை, அசாம் முதல்வர் உள்ளிட்டோர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து, பதற்றத் தீயில் பெட்ரோலை ஊற்றி இருக்கிறது மிசோரம் போலீஸ். இந்நிலையில், வட கிழக்கில் மேலும் பதற்றம் பரவாமல் தடுப்பது மத்திய அரசின் முக்கியப் பொறுப்பாகியிருக்கிறது. இவ்விஷயத்தில் பிரதமர் மோடியைவிடவும், உள் துறை அமித் ஷா என்ன நடவடிக்கை எடுப்பார் என்பதுதான் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.