வெற்றியை நோக்கிய எதிர்நீச்சல்!- ஓர் ஏழைத்தாயின் சபதம்


ம.சுசித்ரா
susithra.m@hindutamil.co.in

டோக்கியோ ஒலிம்பிக் நீச்சல் போட்டியில், ‘ஏ’ தரவரிசை நிலையைக் கடந்து கலந்துகொள்ளவிருக்கும் முதல் இந்தியர் எனும் பெருமையைப் பெற்றிருக்கிறார் சாஜன் பிரகாஷ். இத்தாலியில் நடைபெற்ற 200 மீட்டர் பட்டர்ஃப்ளை பிரிவில், நீச்சல் குளத்தின் எல்லைக்கோட்டை 1 நிமிடம் 56.38 விநாடிகளில் எட்டி சாதனை படைத்ததன் மூலம் இந்த வாய்ப்பு இவருக்குக் கிட்டியிருக்கிறது.

கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் பிறந்தவர் சாஜன். தற்போது திருவனந்தபுரத்தில் காவல் துறை அதிகாரியாகப் பணியாற்றி
வரும் இவர், திருச்சியில் உள்ள மண்டல ரயில்வே பயிற்சி இன்ஸ்டிடியூட்டில் தேர்ச்சி பெற்றவர். 2016-ல் ரியோ ஒலிம்பிக்கில் கலந்துகொண்டு வெற்றி வாய்ப்பை நழுவவிட்ட சாஜன், இம்முறை தன்னுடைய தாய் சாந்திமாளுக்காகவேணும் நிச்சயம் வெற்றி பெறப்போவதாகச் சபதம் எடுத்திருக்கிறார். சாந்திமாளும் விளையாட்டுடன் தொடர்புடையவர்தான். முன்னாள் தடகள வீராங்கனை அவர். உண்மையில், தன் வாழ்நாள் முழுவதும் மகனுக்காக எதிர்நீச்சல் போட்டுக்கொண்டிருக்கும் சாந்திமாளின் கதை பலருக்கும் உத்வேகம் அளிக்கக்கூடியது!

நம்பிக்கையே துணை

1987-ல் உலக மற்றும் ஆசிய இளையவர் போட்டிகளில் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் தடகளப் பிரிவில் போட்டியிட்டவர் வி.ஜே.சாந்திமாள். 1992-ல் அவருக்குத் திருமணம் நடந்தது. 93-ல் சாஜன் பிறந்தார். பிள்ளை பெற்றவள் என்றுகூட பாராமல், சாந்திமாளை அவரது குடிகாரக் கணவர் அடித்துத் துன்புறுத்தினார். சாஜன் கைக்குழந்தையாக இருக்கும்போதே, குடும்பத்தைக் கைவிட்டுக் கண்காணாமல் போனார் கணவர். அப்போது 18 வயது மட்டுமே நிரம்பியிருந்த சாந்திமாள், உள்ளுக்குள் நொறுங்கிப் போனாலும் தன்னுடைய குழந்தைக்காகப் புதிய உலகைப் படைக்க உறுதிபூண்டார். ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் வேலை கிடைக்க, பச்சிளம் குழந்தையுடன் நெய்வேலிக்குப் பயணமானார். மின்நிலைய ஊழியர்களுக்கான விளையாட்டு உள்ளரங்கமும் நீச்சல் குளமும் அவர்களது குடியிருப்புப் பகுதியில் இருந்தன. அங்கு மூன்று வயதிலிருந்து நீச்சல் பழகத் தொடங்கினான் சிறுவன் சாஜன்.

நீச்சலில் மட்டுமல்லாமல், எல்லாவற்றிலும் தன்னுடைய மகன் சகலகலாவல்லவனாக வளர வேண்டும் என சாந்திமாள் கனவு கண்டார். மேற்கத்திய நடனம், கீபோர்ட் இசை என அவனுக்குப் பிடித்த எல்லாவற்றிலும் ஈடுபடுத்தினார். மற்ற குழந்தைகளைப் போலவே சாஜனுக்கும் விலை உயர்ந்த விளையாட்டுப் பொருட்களை வாங்கிக் குவிக்கும் ஆசை இருந்தது. ஆனால், 10 வயதை எட்டியதும் தன்னுடைய தாய் படும்பாட்டை நன்குணர்ந்து புத்தாடைகூட கேட்பதைத் தவிர்த்தான். நீச்சல் பயிற்சியாளரான சபி சபாஸ்டீன் தந்த ஊக்கத்தால், தன்னையும் தன் வீட்டையும் பதக்கங்களால் அலங்கரித்தான்.

கையில் மூன்று டார்ச் லைட்டுகள்

ஆனால், வாழ்க்கைப் பயணம் அவ்வளவு சுலபமாக இல்லை. கந்தக நெடியும் பழுப்பு நிலக்கரியும் நெய்வேலியைத் தகிக்கும் பூமியாக மாற்ற, சாந்திமாளுக்கு உடல் உபாதைகள் உண்டாகின. கடும் கோடைகாலத்தை நெட்டித்தள்ளி கடந்தால், குளிர் காலத்தில் சருமத்தில் ஒவ்வாமைகள் ஏற்பட்டன. தனக்கு என்னவானாலும் பரவாயில்லை, எப்படியாவது மகனைப் பாதுகாக்க வேண்டும் என நினைத்த தாய் பெங்களூருவுக்கு சாஜனை அனுப்பிப் படிக்க வைத்தார். அங்கு சாஜனுக்கு நீச்சலிலும் சிறப்புப் பயிற்சி கிடைக்க ஏற்பாடு செய்தார். நாளடைவில் வைட்டமின் குறைபாட்டினால் நோய்வாய்ப்பட்டார் சாந்திமாள். இருந்தாலும் வார இறுதியில் மகனைக் காண கண்ணில் தென்படும் வெளியூர் அரசுப் பேருந்தில் ஏறிவிடுவார். 380 கிலோமீட்டர் தொலைவைக் குண்டும் குழியுமான வீதிகளில் கடப்பதற்குள் பலமுறை பேருந்து பஞ்சர் ஆகி நின்றுபோகும். அப்போதெல்லாம் பேருந்து சக்கரத்தில் பஞ்சர் ஒட்ட சாந்திமாளே இறங்கிவிடுவார்.

இரவு நேரப் பயணத்தில் இப்படி அசம்பாவிதம் நிகழ்வது பழக்கப்பட்டுப்போகவே, மூன்று டார்ச் லைட்டுகளையும் கையோடு எடுத்துச் செல்வதை அவர் வழக்கமாக்கிக்கொண்டார். சனிக்கிழமை இரவு நெய்வேலியிலிருந்து புறப்பட்டு அல்லல்பட்டு 11 மணிநேரம் பயணம் முடித்து, ஞாயிறு காலை பெங்களூரு சென்றடைவார். மகனுடன் முக்கால் நாளைக் கழித்துவிட்டு அன்றிரவே 8.30 மணிக்கு நெய்வேலி திரும்பும் பேருந்தைப் பிடித்தாக வேண்டும். திங்கள் காலை 8.30 மணிக்குள் நெய்வேலி அலுவலகத்தில் பணியைத் தொடங்கத் தவறினால், அரை நாள் சம்பளம் துண்டிக்கப்படுமே! பயணம் நெடுக கொறிக்கக் கொஞ்சம் பழங்களும் பஞ்சர் ஒட்டும் கருவிகளும் டார்ச் லைட்டும்தான் கைகொடுக்கும். இப்படியே வருடங்கள் உருண்டோடின.

கோப்பைக்கு இடமில்லை!

பெங்களூருவில் நீச்சல் பழகுதல் என்பது பணம் படைத்தவர்களுக்கானதாகக் கருதப்பட்டது. இருந்த போதும் தன்னுடைய சேமிப்பையெல்லாம் செலவழித்து, சாஜனின் விளையாட்டுத் திறனை சாந்திமாள் வளர்த்தெடுத்தார். ஐந்து தேசிய போட்டிகளில் பதக்கங்களை வென்ற சாஜன், பெங்களூருவிலேயே ரயில்வே துறையில் பணிவாய்ப்பு பெற்றார். ஆனால், வேலை பளுவையும் நீச்சல் பயிற்சியையும் ஒரு சேர மேற்கொள்ளும் வலு சாஜனுக்கு இல்லை. தாயின் துணையின்றி சர்வதேசப் போட்டிகளிலும் தடுமாறினார். ஆகவே தாய்லாந்து, துபாயில் நடைபெற்ற சர்வதேச நீச்சல் போட்டிகளுக்கு சாந்திமாளும் உடன் சென்றார். சாஜனின் பயிற்சியாளரின் மனைவி கவுரி அம்மாளும், சுவையான பிரியாணி கிண்டிக் கொடுத்து சாஜனை உற்சாகப்படுத்தினார். 2014 வரை நான்கு ஆண்டுகள் பல மேடு பள்ளங்களை சாந்திமாளும் சாஜனும் சந்தித்தனர் என்றால், அடுத்த ஆண்டு அதைவிட கொடூரமானது.

2015-ல் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் நெய்வேலி மூழ்கி தத்தளித்தது. சாந்திமாளின் வீட்டுக்குள் வெள்ளம் புகவே, தன்னுடைய விளையாட்டுச் சான்றிதழ்கள் அத்தனையையும் பறிகொடுத்தார் சாந்திமாள். சாஜனின் சான்றிதழ்களும் பதக்கங்களும் மேலடுக்கில் இருந்ததால் அதிர்ஷ்டவசமாகத் தப்பின. அதனால், கேரளக் காவல் பணியில் சேரும் வாய்ப்பு சாஜனுக்குக் கிட்டியது.

ஆனாலும், 2016-ல் ரியோ ஒலிம்பிக் போட்டிக்குச் செல்வதற்கான விமான பயணச்சீட்டையும் விசாவையும் வாங்க தன்னுடைய ஒரு பதக்கத்தை 3 லட்சம் ரூபாய்க்கு விற்க வேண்டிய நிலைக்கு சாஜன் தள்ளப்பட்டார். 2018-ல் நடந்த சர்வதேச நீச்சல் போட்டியில் பிரம்மாண்டமான தங்கக்கோப்பையை சாஜன் வென்றாலும், அதை எடுத்துவந்து வைக்குமளவுக்கு விசாலமான வீடில்லை. அதனால் இன்றுவரை அந்தக் கோப்பை, கேரள விளையாட்டு கவுன்சிலில் உள்ள ஷோகேஸில் தான் சாஜனுக்காகக் காத்துக்கிடக்கிறது.

தனது மகன் இதுவரை வென்ற, இனி வெல்லப்போகும் பதக்கங்களையெல்லாம் அடுக்கி வைக்க ஒரு வீடு கட்ட வேண்டும் என்பதே, சாந்திமாளின் தற்போதைய கனவு. டோக்கியோவில் ஒலிம்பிக் தீபத்தைக் கண்டதும் ஒவ்வொரு வீரருக்கும் வெவ்வேறான விஷயங்கள் மனதில் நிழலாடியிருக்கும். சாஜனுக்கோ கரடுமுரடான வாழ்க்கைப் பயணத்தைக் கடக்க, தன் தாய் ஏந்திய மூன்று டார்ச் லைட்டுகள் தான் கண்முன்னே தெரிந்திருக்கும்!

x