பெண் கல்வியில் வளர்ந்த நாடுகளை முந்திவிட்டதா இந்தியா?


ம.சுசித்ரா
susithra.m@hindutamil.co.in

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியைப் பார்த்தவர்களெல்லாம், ‘ரெக்க கட்டி பறக்குதடி அன்னா கைசன்ஹாஃபர் சைக்கிள்’ என பாடிக் கொண்டிருக்கிறார்களாம். ஆஸ்திரியப் பெண்ணான அன்னா கைசன்ஹாஃபர் மூலம், 1896-க்கு பிறகு ஆஸ்திரியா நாடு மிதிவண்டிப் போட்டியில் முதல் தங்கத்தை வென்றிருக்கிறது. பயிற்சியாளரோ, ஊட்டச்சத்து நிபுணரின் வழிகாட்டுதலோ இன்றி தானாகவே இந்த சாதனையை நிகழ்த்த தனக்கு கணித அறிவு மட்டுமே கைகொடுத்ததாக சொல்கிறார் அன்னா.

ஆம், உலகின் புகழ்வாய்ந்த கேம்பிரிஜ் பல்கலையில் கணிதத்தில் முதுநிலைப் பட்டம் முடித்துவிட்டு, பார்சிலோனாவில் உள்ள கடலோனியா பாலிடெக்னிக் பல்கலையில் கணிதவியலில் முனைவர் பட்டம் பெற்றவர் இவர். ஒரு கையில் ஒலிம்பிக் தங்கப்பதக்கம், இன்னொரு கையில் கணிதவியல் முனைவர் பட்டம் என சைக்கிள் ஹேண்டில் பாரை பிடிக்காமலே வாழ்க்கையைப் பிரமாதமாக ஹேண்டில் செய்கிறார் இந்த தங்க மங்கை. ஒரே நேரத்தில் விளையாட்டிலும் உயர்கல்வியிலும் ஒரு பெண் சாதிக்க அவருடைய திறமையும் முயற்சியும் மட்டும் காரணங்களாக இருக்க முடியாது. ஒட்டுமொத்த சமூகமும் அதற்கான வாய்ப்பு வசதிகளை ஏற்படுத்தித் தந்திருக்கிறது என்பதுதான் நிதர்சனம்.

இந்தியப் பெண்களின் நிலையுடன் ஒப்பிட்டால் அன்னா படைத்த சாதனையின் முக்கியத்துவம் துலக்கமாகும். இருந்தபோதும், நமக்கு ஆறுதலான ஒரு செய்தி அண்மையில் வெளியாகி உள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய வளர்ந்த நாடுகளைக் காட்டிலும் கூடுதலான எண்ணிக்கையில் இந்தியாவில் பெண் பட்டதாரிகள் ‘ஸ்டெம்’ படிப்புகள் என்றழைக்கப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய படிப்புகளில் சிறப்பாக உருவாக்கப்பட்டிருப்பதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மக்களவையில் அண்மையில் தெரிவித்தார்.

‘ரெஃபரன்ஸ்’ கொடுப்பதில்லை!

2007-ல், தமிழகத்தில் 3.9 சதவீத பெண்கள் மட்டுமே கணினி அறிவியல் போன்ற தொழில்நுட்ப படிப்புகளைப் படித்தார்கள். அங்கிருந்து இன்று 29.86 சதவீதத்தை எட்டியிருக்கிறோம். ஆனாலும், “ஐ.டி துறையில் ஒருசில பிரிவுகளைத்தான் பெண்கள் படிக்கிறார்கள். அதில் மிகக் குறைவானவர்களே வேலைக்குச் செல்கிறார்கள்” என்கிறார் கணினி தொழிலதிபரும் பயிற்றுநருமான முனைவர் விஜயலட்சுமி ஸ்டீபன்.

பயோ இன்ஃபோமேட்டிக்ஸ், கிரிப்டோ அனலிஸ்ட், சிஸ்டம்ஸ் ஆடிட், செக்கியூரிட்டி இன்ஜினீயரிங், சிமுலேஷன் இன்ஜினீயரிங், டேடா அனாலிசிஸ் போன்றவற்றை பெண்கள் தேர்ந்தெடுப்பதில்லை. அப்படியே வேலையில் சேர்ந்தாலும் தனக்கு தெரிந்த மற்ற பெண்களுக்கு ‘ரெஃபரன்ஸ்’ கொடுத்து வேலைக்குள் இழுக்கும் பெண்கள் மிகவும் குறைவு. ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு ஐடி துறையில் 10 சதவீதம் குறைவான ஊதியம் வழங்கப்படுகிறது.

“தான் செய்யும் வேலையில் நேர்மையாக இருந்தாலும் நவீன வளர்ச்சிக்குத் தன்னை தகவமைத்துக் கொள்வதில் பெண்களுக்குத் தயக்கம் உள்ளதைக் கடந்த முப்பதாண்டுகளாகக் கண்கூடாகப் பார்க்கிறேன். ஆகவேதான் தமிழகத்தில் உள்ள வேலையில்லா பெண் பொறியியல் பட்டதாரிகளுக்கு புதிய தொழில்நுட்பங்களை ஒரு வார பயிலரங்காக இலவசமாகக் கற்பித்து வருகிறேன். கணினி தொழில்நுட்பத் துறையில் வளர விரும்பும் பெண்கள் 9597957519, md@vijayalakshmi.com மூலம் என்னை தொடர்பு கொள்ளலாம்” என்றார் விஜயலட்சுமி.

பெயருக்குப் பின்னால் பி.இ...

அறிவியல் தொழில்நுட்ப படிப்புகளைப் படிக்கும் பெண்களின் எண்ணிக்கையை வைத்து, ஆண் பெண் சமத்துவத்தை நோக்கி நாம் நகர்ந்திருப்பதாகக் கருதுவதற்கில்லை என்கிறார், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வறிஞர் முனைவர் ஆனந்தி.
“தமிழகத்தின் சிறுநகரங்களில்கூட தனியார் பொறியியல் கல்லூரிகள் ஸ்தாபிக்கப்பட்டுவிட்டன. ஆகையால் கீழ் நடுத்தர முதல், மேல் நடுத்தர வர்க்கத்தினர் வரை தங்களது பெண் பிள்ளைகளையும் பொறியியல், தொழில்நுட்பப் படிப்புகளில் சேர்க்கும் போக்கு அதிகரித்துள்ளது. இதனால் என்ன சமூக மாற்றம் நிகழ்ந்துள்ளது, இதை படித்தப் பெண்களில் எத்தனை பேர் வேலைக்குச் செல்கிறார்கள், ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார்கள் என்பதெல்லாம் தனி கதை” என்றார் ஆனந்தி.

அவர் சுட்டிக்காட்டும் பார்வையில் தேடினால், அறிவியல், பொறியியல் துறைகளில் பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கை அடிப்படையிலான தரவரிசைப் பட்டியல் உண்மையைப் போட்டுடைக்கிறது. இது தொடர்பான ‘டாப் 30’ நாடுகளின் பட்டியலில் இலங்கை, மியன்மார் ஆகிய அண்டை நாடுகள்கூட உள்ளனவே தவிர இந்தியா இடம்பெறவில்லை.

“இதற்குக் காரணம், திருமண அழைப்பிதழில் மணமக்களின் பெயருக்கு பின்னால் ‘பி.இ.’ பட்டம் என்பது அந்தஸ்தின் அடையாளமாகிவிட்டது. அதன் பிறகு அந்தப் பெண்களில் வேலைக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை சொற்பமாகவே அதிகரித்துள்ளது. அப்படியே வேலைக்கு சென்றாலும் மேலாளர் பொறுப்பு ஆணுக்கும் அதற்கு கீழான வேலைகள் பெண்களுக்கும் வழங்கப்படும் போக்கு நீடித்துவருகிறது” என்கிறார் ஆனந்தி.

இவை அல்லாது அறிவியல் துறையில் ஆராய்ச்சியில் ஈடுபடும் பெண்கள் பாகுபாட்டைச் சந்திக்க நேருவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

“சமூக அறிவியல் படிப்புகளைப் பெண்கள் படிக்கும்போது அவர்களுக்கு இட ஒதுக்கீடு, சாதிய கட்டமைப்பு, பாலின சமத்துவம் குறித்த புரிதல் ஊட்டப்படுகிறது. ஆகவே, சமூக அநீதிகளைத் தட்டிக் கேட்கும் உணர்வும் துணிச்சலும் அவர்களிடம் வெளிப்படுகிறது. அதுவே அறிவியல் துறைகளில் மெத்த படித்தாலும் கெட்டித்தட்டிப்போன வழமைகள் கேள்விக்கு உள்ளாக்கப்படுவதில்லை. இதனாலேயே அங்கு ஆராய்ச்சிப் பணியில் ஈடுபடும் பெண்களும் காலங் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் ஏற்றத்தாழ்வுகளுக்கு அடிபணிய நிர்பந்திக்கப்படுகிறார்கள்” என்றார் ஆனந்தி. 

திருமணமும் குடும்பச் சுமையும் இந்தியாவில் அறிவியல் துறையில் ஆராய்ச்சி மேற்கொள்ளப் பெண்களுக்கு பெரும் தடையாக இருப்பதாக சொன்னார் முனைவர் சசிகலா.

சேலத்தில் கீழ் நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்து சண்டிகர் மாநிலத்தில் உயிரி தொழில்நுட்பத்தில் முதுநிலை பட்டப்படிப்பை முடித்தவர் சசிகலா. தைவான் தேசத்தில் உள்ள புகழ்பெற்ற அகடமியா சினிக்கா கல்வி நிறுவனத்தில் உயிரி மருத்துவத்தில் முதுநிலை முனைவர் பட்ட ஆராய்ச்சி செய்து வருகிறார்.

“அறிவியல் ஆராய்ச்சிக்குப் பெண்கள் வருவதை இந்தியக் கல்வி நிலையங்கள் வரவேற்பதில் தயக்கம் காட்டவே செய்கின்றன. பிஎச்.டி. செய்ய வேண்டுமானால், 6 வருடங்கள்வரை குழந்தை பெற்றுக்கொள்ளக்கூடாது என நிபந்தைகள் விதிக்கும் ஆராய்ச்சி வழிகாட்டிகள் இந்தியாவில் இன்றும் உள்ளனர். இதுதவிர கணவர், மாமியார், மாமனார் என எல்லோரும் நம் கண்முன்னே வரிசையாக முட்டுக்கட்டையாக இருப்பது இந்தியக் குடும்ப அமைப்புக்கே உரிய பண்பு.

தைவான் போன்ற வெளிநாடுகளில் அப்படி இல்லை. தைவானில் திருமணம் முடித்துவிட்டு சில வருடங்கள் வரை குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டுவிட்டு, மீண்டும் வேலைக்கு வரும் பெண்களை ஊக்குவிக்க உதவித்தொகை திட்டங்கள் உள்ளன. பேறு கால விடுப்பானது 6 மாதங்களிலிருந்து 2 ஆண்டுகள் வரை இங்கு வழங்கப்படுகிறது. மொத்தத்தில் ஆண்/பெண் இருவருக்குமே சமமான கல்வி, சமமான குடும்பப் பொறுப்பு, சமமான பணிவாழ்க்கை சூழல் ஏற்படுத்தித் தரப்படுகிறது” என்று தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார் சசிகலா.

நோபல் பரிசு புகழ் சர் சி.வி. ராமனே, “பெண்களுக்கு அறிவியல் வராது” என்று, பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தில் பெண்களுக்கு இடமளிக்க மறுத்ததாக வரலாறு சுட்டிக்காட்டுகிறது. அப்படி இருக்க, எண்ணிக்கையின் அடிப்படையில் வளர்ந்த நாடுகளை இந்தியா மிஞ்சிவிட்டதாகப் பெருமை பேசுவதை விடுத்துச் சிக்கல்களைக் களைய முற்பட வேண்டும்.

x