சிறகை விரி உலகை அறி 09: குழந்தையும் இயற்கையும்!


மனித வாழ்க்கை, வியந்து பார்க்கும் பண்புடன் தொடங்குகிறது. செவி நுழையும் ஒலி, விழி சேரும் ஒளி, தொடுதல், பாசம், இயற்கை, உயிரினங்கள், விளையாட்டுப் பொருட்கள் எல்லாம் குழந்தைகளுக்கு வியப்பின் குறியீடாகவே அமைகின்றன. “தத்துவவியலின் தொடக்கமே வியக்கும் பண்புதான்” என்றார் அரிஸ்டாட்டில். வளர்ந்தவுடன், வியந்து நோக்குதலை நம்மில் பலர் தொலைத்துவிடுகிறோம். தொலைத்த வியப்பை மீண்டும் முகிழ்க்கச் செய்கிறது சுற்றுலா.

குளோவர் பூங்காவின் பூவிதழ் வருடிய பின், நாகசாகி தொடர்வண்டி நிலையத்துக்கு வந்தபோது எதிரே ஒருவர் புகைபிடித்தபடி வந்தார். ‘இவர் கண்டிப்பாக வெளிநாட்டுக் காரராகத்தான் இருப்பார்’ என உள்மனது உரைத்தது. ஏனென்றால், கடந்த நான்கு நாட்களாகச் சாலையிலோ கடைத்தெருவிலோ புகைபிடித்த ஒருவரையும் நான் பார்க்கவே இல்லை.

இரவு நேரத் தொடர்வண்டி

நாகசாகியில் இருந்து டோக்கியோவுக்கு லிமிட்டட் எக்ஸ்பிரஸ் தொடர்வண்டியில் கிளம்பி, இரண்டு புல்லட் ரயில்களில் மாறிப் பயணித்தேன். இரவு நேர பயணத்துக்கான புல்லட் ரயில் நட்சத்திர விடுதி போன்று இருந்தது. பயணிகள் தூங்குவதற்காகக் கீழே ஒரு வரிசை, மேலே ஒரு வரிசை இருந்தது. எனக்குக் கிடைத்திருந்த மேல் தளத்துக்குப் படியேறுவது, வீட்டின் மாடிப்படி ஏறுவது போல் எளிதாக இருந்தது. படுக்கையில் கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொருவருக்கும் தனி விளக்கு, தனி ஸ்விட்ச், தனி தம்ளர், சுத்தமான போர்வைகள் இருந்தன. நிம்மதியான தூக்கம். காலையில் டோக்கியோ மத்திய தொடர்வண்டி நிலையத்தில் இறங்கினேன்.

ஒன்றரைக் கோடி மக்கள் வாழும் நவநாகரிக நகரம் டோக்கியோ. கலாச்சாரம், பொழுதுபோக்கு, தொழில் வளர்ச்சி என கலவையான நகரம். நியூயார்க் மற்றும் லண்டன் நகரங்களுடன் சேர்ந்து உலகப் பொருளாதாரத்தின் மூன்று முக்கிய கட்டுப்பாட்டு மையங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. மற்ற நகரங்களைப் போலவே இங்கும் தனியார் தொடர்வண்டிகள் ஓடுகின்றன. நகரங்களுக்குள் சுற்றிவர நகரத்துக்கு நகரம் சலுகை அட்டைகளில் வேறுபாடுகள் இருக்கின்றன. நாம் எந்த நகருக்குப் போகிறோம், எத்தனை நாட்கள் அங்கே தங்குகிறோம், என்னென்ன இடங்களைப் பார்க்கத் திட்டமிட்டுள்ளோம் என்பதைப் பொறுத்தே சலுகை அட்டைகளைத் தேர்வு செய்ய வேண்டும்.

நான்கு நாள் பயணத்துக்குப் பிறகு மிகவும் களைத்திருந்ததால், யுனோ உயிரியல் பூங்காவை (Ueno Zoo) மட்டும் பார்க்க முடிவெடுத்தேன். மத்திய தொடர்வண்டி நிலையத்தில் இருந்து பத்து நிமிட பயணத்தில், ஜே.ஆர்.பாஸ் உதவியுடன் யுனோ நிறுத்தத்தில் இறங்கினேன்.

குழந்தைகள் இலக்கியத்துக்கு சர்வதேச நூலகம்

பூங்கா திறப்பதற்கு இன்னும் நேரம் இருந்ததால், அங்கிருந்த சதுக்கத்தில் நடந்தேன். மேலும் சில அருங்காட்சியகங்கள் (Western Art Museum, Tokyo Metropolitan Art Museum, Tokyo National Museum) அப்பகுதியில் இருப்பதைக் கண்டேன். அப்போது அந்த அதிசயம் நடந்தது. ஆம், ‘குழந்தைகள் இலக்கியம் சார் சர்வதேச நூலகம் (International Library for Children’s Literature) போகும் வழி' எனும் தகவல் பலகை என் விழியை வருடியது. வழி தேடி நடந்தேன். நூலகத்தைக் கண்டு வியந்தேன். இந்நூலகத்தில் ஏறக்குறைய நான்கு லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றில், 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்காக ஜப்பானில் வெளியான அனைத்துப் புத்தகங்களும் உண்டு. மேலும், நன்கொடைகள் அல்லது பன்னாட்டு பரிமாற்றம் வழியாக 160 நாடுகளில் இருந்து தருவிக்கப்பட்ட புத்தகங்களும் வாசிக்கக் கிடைக்கின்றன.
நூலகம் திறந்தவுடன் முதல் ஆளாக உள்ளே சென்றேன்.

பாதுகாப்புப் பெட்டகத்தில் பையை வைக்குமாறு வரவேற்புப் பகுதியில் சொன்னார்கள். பெட்டகத்தில் நாணயம் செலுத்தி பொருட்களை வைத்துப் பூட்ட வேண்டும். திறக்கும்போது நாம் செலுத்திய நாணயம் வெளியே வந்துவிடும். எடுத்துக்கொள்ளலாம். பையை உள்ளே வைத்து பூட்டிவிட்டு, வியப்புடனே நடந்தேன். குழந்தைகளின் வயதுக்கு ஏற்ப பல்வேறு அறைகள் அங்கே இருப்பதைக் கண்டேன்.

அறைகள்தோறும் அறிவாலயம்!

குழந்தைகளுக்கான அறை: தொடக்கப்பள்ளி படிக்கும் வயதுவரை உள்ள குழந்தைகளுக்கான தனி அறை இது. படக்கதை, கதை, பொது அறிவு புத்தகங்கள் என, ஜப்பானில் வெளியான புத்தகங்கள் இந்த அறை முழுவதும் இருக்கின்றன. உலகை அறிந்துகொள்: இந்த அறையில், பல்வேறு நாடுகளின் புவியியல், வரலாறு, சமயம், நாட்டுப்புறவியல் புத்தகங்கள் கிடைக்கின்றன. வெளிநாடுகளில் வெளியான கதைப் புத்தகங்களும் உண்டு. கதை நேர அறை: சனிக்கிழமைதோறும் கதைநேரம் நடைபெறுகிறது. நான்கு மற்றும் ஐந்து வயது குழந்தைகள் மதியம் இரண்டு மணிக்கு வருகிறார்கள். ஏழு வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகள்  மதியம் மூன்று மணிக்கு வருகிறார்கள். கதை சொல்ல விரும்புகிறவர்களைப் போலவே, கதை கேட்க விரும்புகிறவர்களும் வருகிறார்கள். பதின்பருவத்தினருக்கான ஆய்வு அறை: விடலைப் பருவத்தினரைப் புரிந்துகொள்ள, வழிகாட்ட, ஆய்வு செய்யத் தேவையான புத்தகங்கள் இங்கே இருக்கின்றன.

மேலும், ஆய்வாளர்களுக்கான வாசிப்பு அறை, குழந்தைகள் இலக்கியம் தொடர்பான கண்காட்சிகள் நடத்தும் இடம், குழந்தைகள் ஓய்வெடுக்க, உணவருந்த, மற்றும் குழந்தைகளைப் பராமரிப்பதற்கான இடம் போன்றவையும் உள்ளன. நாற்காலி மற்றும் மேசைகளுடனும் போதுமான இடவசதியுடனும் ஒவ்வோர் அறையையும் வடிவமைத்துள்ளார்கள். குழந்தைக்குரிய மனநிலையோடு கண்டு வியந்த பிறகு, வெளியில் வந்து முப்பது நிமிடங்கள் நடந்து, யுனோ உயிரினக் காட்சி சாலைக்குள் நுழைந்தேன்.

இயற்கையின் பிரம்மாண்டம்

ஜப்பானின் மிகப் பழமையான உயிரினக் காட்சி சாலை இது. 35 ஏக்கர் பரப்பளவில் 1882-ல் உருவாக்கப்பட்டுள்ளது. கொரில்லா காடுகள், புலி காடுகள், யானை காடுகள் என 63 பகுதிகளாகப் பிரித்து ஏறக்குறைய 400 இனங்களைப் பராமரிக்கிறார்கள். விலங்குகளும், பறவைகளும் தங்கள் வாழ்விடங்களில் எப்படி வாழுமோ அதே போன்ற சூழ்நிலையை இங்கே உருவாக்கியுள்ளார்கள்.

இங்கு வரும் அனைவரையும் அதிகம் ஈர்ப்பது, கறுப்பு - வெள்ளை நிறத்திலான பெரிய பாண்டா கரடிதான். அது, மூங்கில் இலைகளைச் சாப்பிடும் அழகே தனி. இத்தகைய பெரிய பாண்டா கரடிகளை மூன்று காட்சி சாலைகளில் மட்டுமே ஜப்பானில் பார்க்க முடியும் என்பதால், இங்கு எல்லா நாட்களுமே கூட்டம் அலைமோதுகிறது. காங்கோ போன்ற மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் ஒகாபி (Okapi) எனும் விலங்கு இங்கே இருக்கிறது. குதிரை போல இருந்தாலும் இதன் கால்கள் வரிக்குதிரைகள் போலவே உள்ளன. கலபாகோஸ் தீவில் இருந்து கொண்டுவரப்பட்டு இங்கு பராமரிக்கப்படும் (Galapagos Tortoise) ஆமைதான் உலகிலேயே மிகப் பெரிய ஆமையாகும். போலார் கரடிகள், நீர் நாய்கள், சிறிய இனப் பாலூட்டிகளுக்கான வீடுகள், இரவில் மட்டும் நடமாடும் உயிரினங்களுக்கான இடங்கள், கொறித்துத் தின்னும் பிராணிகளுக்கான இடங்கள் என பிரம்மாண்டமாக உள்ள காட்சி சாலையில் இயற்கையின் வீடுகளுக்குள் விருந்தாளியாகிறோம் நாம். சிறு விலங்குகளுக்குக் குழந்தைகள் உணவளிக்கும் இடத்தில், எப்போதும் அவர்கள் குதூகலிப்பதையும் காண முடிகிறது.

குழந்தைகளின் நல்லொழுக்கம்

பல்வேறு நர்சரி பள்ளிக்கூடங்களில் இருந்து குழந்தைகள் சுற்றுலா வந்திருப்பதைப் பார்த்தேன். மதிய நேரம், சிறிய துண்டு விரித்து அதன் மேல் உணவுப் பாத்திரத்தை வைத்துச் சாப்பிட்டார்கள். “அமைதியாகச் சாப்பிடு”, “சிந்தாமல் சாப்பிடு” என எந்த ஆசிரியரும் சொல்லவில்லை. அதற்கான தேவையும் இல்லை. ரசித்துச் சாப்பிட்டார்கள். சாப்பிட்டு முடித்த பிறகு துண்டில் சிந்திய உணவையும், மற்ற கழிவுகளையும் குப்பைத் தொட்டியில் போட்டார்கள். உணவுக்கும் தூய்மைக்கும் அந்தச் சிறு குழந்தைகள் கொடுத்த முக்கியத்துவத்தில், குடும்பங்களின் ஒழுங்கு தெரிந்தது. வெகுநேரம் அங்கிருந்துவிட்டு, ஜே.ஆர்.பாஸ் உதவியுடன் தொடர்வண்டியில் பயணித்து நாரிடா விமான நிலையம் வந்தேன். நெஞ்சம் நிறை நினைவுகளுடன் இந்தியாவுக்குத் திரும்பினேன்.

(பாதை நீளும்)

x