மதுரையில், 70 கோடி ரூபாய் செலவில் கலைஞர் நூலகம் கட்டுவதற்காக மாட்டுத்தாவணி அருகே 10 ஏக்கர் இடத்தைத் தேர்வுசெய்த உள்ளூர் அமைச்சர்கள், பந்தாவாக பொதுப்பணித் துறை, கல்வித் துறை அமைச்சர்களை அழைத்துச்சென்று இடத்தைக் காட்டினார்கள். ஆனால், அந்த இடம் முன்பே மாட்டுத்தாவணி மார்க்கெட் வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடமாம். அமைச்சர் மூர்த்தியிடம் இந்த விஷயத்தை எடுத்துச்சொன்ன வியாபாரிகள், அந்த இடத்தை வேறு பயன்பாடு எதற்கும் எடுக்கக்கூடாது என்று நீதிமன்றத்தில் தடையாணை பெற்றுள்ள விவரத்தையும் எடுத்துச் சொன்னார்களாம். “இதுகூட தெரியாம இந்த இடத்தைக் காட்டியது யாருய்யா?” என்று வருவாய்த் துறையினரை காய்ச்சி எடுத்துவிட்டாராம் மூர்த்தி. இதைத் தொடர்ந்து ரேஸ் கோர்ஸ் அருகே மாற்று இடத்தைப் பார்த்து இறுதி செய்திருக்கிறார்கள் அதிகாரிகள்.