வீடெங்கும் கார்... வியக்க வைக்கும் அர்ஜூன்!


என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

அர்ஜூனின் வீட்டுக்கு வரும் யாராக இருந்தாலும், ஒரு நிமிடம் ஆச்சரியத்தில் வாய் பிளந்துவிடுவார்கள். வீட்டுக்குள் எங்கு திரும்பினாலும் கண்ணில் படுவது கார்கள்தான். ஆனால் அவை கார்களாக அல்ல... அழகிய கலைப்பொருட்களாகவும், வீட்டு உபயோகப் பொருட்களாகவும் உருமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. இயல்பாகவே கலையுணர்வும் படைப்பூக்கமும் மிக்க அர்ஜூன், அவற்றுக்கெல்லாம் தன் கைவண்ணத்தின் மூலம் புத்துயிர் தந்திருக்கிறார்!

கேரளத்தின் இடுக்கி மாவட்டம், தொடுபுழாவில் உள்ளது அர்ஜூனின் வீடு. வீட்டுக்குள் நுழைந்ததுமே நம்மை வரவேற்று சோபா செட்டில் அமரவைக்கிறார் அர்ஜூன். ஆனால், அது உண்மையான சோபா அல்ல. பழைய ப்ரீமியர் பத்மினி காரின் பின் இருக்கைப் பகுதியை உருமாற்றம் செய்து, ஐந்து பேர் அமரும் சோபா செட்டாக மாற்றியிருக்கிறார். இதேபோல் எம்.இ.118 எனும் ப்ரீமியர் காரின் இருக்கை, மூன்று பேர் அமரும் சோபா செட்டாக உருமாறி வீட்டின் இன்னொரு பகுதியை அலங்கரிக்கிறது. மற்றொரு ப்ரீமியர் பத்மினி கார், உணவகங்களைப் போல் கேஷ் கவுன்டர் பாணியில் மாற்றியமைக்கப் பட்டிருக்கிறது.

இவற்றையெல்லாம் வியப்புடன் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே, “இதுமட்டும் இல்லைங்க… பழைய பஜாஜ் ஸ்கூட்டரை ஒருவர் அமரும் வகையில் நாற்காலியாக மாற்றியுள்ளேன். அம்பாசிடர் காரின் முன்பகுதியில் தான் எங்கள் வீட்டில் சாவிகள் கோர்த்துப் போடுவோம்” என்று சொல்லி மேலும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார் அர்ஜூன்!

எப்படி இந்த ஆர்வம் என்று கேட்டால், மெல்லிய புன்னகையுடன் பேசுகிறார். “சின்ன வயதில் இருந்தே பைக், கார் மீது ரொம்பப் ப்ரியம். பார்க்கிற கார், பைக்கை எல்லாம் மனசுல குறிச்சு வச்சுக்குவேன். அதுதொடர்பாக எந்நேரமும் ஆராய்ச்சி பண்ணிக்கிட்டே இருப்பேன். பிஎஸ்சி எலெக்ட்ரானிக்ஸ் படிச்சேன். ஆனாலும் கார், பைக் மேல இருக்கும் ஆர்வத்தால் எங்க ஊருலயே சொந்தமாக ஒர்க் ஷாப் போட்டு நடத்திட்டு இருக்கேன். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி பழைய மாருதி 800 காரை விலைக்கு வாங்கினேன். ஆர்.சி-யே காலாவதியாகி பழைய இரும்புக் கடைக்கு வந்த  கார் அது. அதைத்தான் மீன் வளர்க்கும் அக்வேரியமாக மாற்றியிருக்கேன். காரின் பின்பகுதிக்கு அழகிய வண்ணம் தீட்டி, சின்னச் சின்ன நகாசு வேலை பார்த்தேன். இப்போ அதில் ‘கோல்ட் ஃபிஷ்’ வளர்க்கிறேன். மீன்களுக்கு இயற்கையான சூழல் இருக்கணும்ங்கிறதால கடல் பாறை, பாசிகளும் அதில் போட்டிருக்கேன்” என்று அவற்றையெல்லாம் நமக்குக் காட்டுகிறார் அர்ஜூன்.

தொடர்ந்து, “திருச்சூரில் பழைய வாகனங்கள் விற்பனைக்கு வரும் ஒரு இடம் இருக்கு. அங்கே மூன்று மாதத்துக்கு ஒருமுறை போய்விடுவேன். அங்கேயிருந்து இன்ஜின் இல்லாத வெறும் கார் மட்டும் வாங்கி வருவேன். இன்ஜின் இல்லாமல் வாங்குவதால் அதிக விலை இருக்காது. அதையெல்லாம் முதலில் என்னோட ஒர்க் ஷாப்பில்தான் வச்சிருந்தேன். அப்புறம்தான் அதையெல்லாம் வீட்டிலேயே வைத்து, வீட்டை இன்னும் கொஞ்சம் அழகாக்கலாமேங்கிற எண்ணம் வந்தது. உடனே செயல்ல இறங்கினேன். இப்போ என் வீட்டைப் பார்க்க சுற்றுவட்டாரத்தில் இருந்து அதிகம் பேர் வர்றாங்க. அவங்க மூலமாக என் ஒர்க் ஷாப் தொழிலும் சூடுபிடிச்சிருக்கு. என்னோட இந்த முயற்சிகளுக்கு என்னோட மொத்த குடும்பமும் ஆதரவா இருக்காங்க. இந்தப் பொருள்கள் ஒவ்வொன்றும் செய்ய 3 மாசம் வரை ஆகும். இது தொடர்பான ரசனை உணர்வு இயல்பாகவே இருக்கிறதால ஒவ்வொன்றையும் ரசித்துச் செய்கிறேன். தவிர, சொந்த உபயோகத்துக்குச் செய்கிறதால என் வேலை நேரம் போக இதற்கு நேரம் ஒதுக்குவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை” என்கிறார் அர்ஜூன்.

இந்தக் கலைக்கென பிரத்யேக பயிற்சி எதுவும் இவர் எடுத்தது இல்லை. இயல்பாகவே தனக்குள் இருந்த ஆர்வத்தால் இதைச் சாத்தியப்படுத்தி இருக்கிறார். வாகன பாகங்களை வீட்டு உபயோகப் பொருட்களாக மாற்றுவது மட்டும் அல்லாமல், இன்னும் சில முயற்சிகளிலும் ஈடுபட்டுவருகிறார் அர்ஜூன்.

“இப்போது கூகுளில் தேடினால் நாம் விரும்பும் டிசைன்கள் கொட்டிக் கிடக்கிறது. அதில் ஒரு டிசைனைத் தேர்ந்தெடுத்து அதற்கேற்ப உழைப்பைச் செலுத்துவேன். மோட்டார் வாகனங்களின் மீதான இடைவிடாத ப்ரியத்தால் நானே சொந்தமாக ஒரு எலெட்ரிக் ஸ்கூட்டரை தயாரிக்கும் முயற்சியிலும் இருக்கிறேன். 80 சதவீதப் பணிகள் முடிந்துவிட்டது. அது வெற்றி பெற்றதும் காப்புரிமை பெற்று சந்தைக்குக் கொண்டுவருவேன்.

இதேபோல் கார்களில் நவீன டிசைன், வடிவமைப்பிலும் நிறைய ஐடியாக்கள் வைத்திருக்கிறேன். ஆனால், முன்னணி கார் நிறுவனங்களை எப்படித் தொடர்புகொள்வது எனத் தெரியவில்லை. உரிய வாய்ப்புகள் வந்தால் இன்னும் புதிய, புதிய நவீன முன்னெடுப்புகளையும் செய்வேன். அதை நோக்கித்தான் இப்போது ஓடிக்கொண்டிருக்கிறேன்’’ என்கிறார் காரிலே கலைவண்ணம் காணும் அர்ஜூன்.

ரசனையும் திறமையும் இருந்தால், வாழ்க்கையே வண்ணமயமாக இருக்கும் என்பதற்கு உதாரணமாகியிருக்கிறார் இந்தக் கேரள இளைஞர்!

x