அதிமுக வாக்குகளுக்குக் குறிவைக்கிறது பாஜக!- கே.சி.பழனிசாமி அதிரடி


டி.கார்த்திக்
karthikeyan.di@hindutamil.co.in

தமிழக அரசியலில் தற்போதைய ‘ஹாட் டாபிக்’ கொங்கு நாடுதான். இதை மையமாக வைத்து, சமூக ஊடகங்களில் பாஜகவினரும் திமுகவினரும் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்பி-யான கே.சி. பழனிசாமியிடம் பேசினோம். அவர் அளித்த பதில்களின் தொகுப்பு:

கொங்கு பகுதியைச் சேர்ந்தவர் எனும் முறையில், ‘கொங்கு நாடு’ விவகாரத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?

கொங்கு நாடு என்ற ஒன்றைப் பிரித்துகொடுங்கள் என்று இந்தப் பகுதியைச் சேர்ந்த யாரும் கேட்கவில்லை. எந்த அடிப்படையில் அப்படி ஒரு செய்தி வெளியிடப்பட்டது என்று தெரியவில்லை. அந்தந்தப் பகுதி மக்கள் கேட்பதைக் கொடுப்பது அரசின் கடமை என்று நயினார் நாகேந்திரன் போன்ற பாஜக தலைவர்கள் சொல்கிறார்கள். ஒரு வாதத்துக்கு வைத்துக்கொள்வோம். காஷ்மீர் மக்கள் தனி நாடாகப் போக வேண்டும் என்கிறார்கள் என்றால், இந்திய அரசாங்கம் கொடுத்துவிடுமா? மக்கள் கேட்டால் கொடுத்துவிடுவோம் என்பது தவறான வாதம். மக்களிடமிருந்து எந்தக் கோரிக்கையும் வராமல், வாக்கு வங்கிக்காகவோ அல்லது மத்தியில் ஆளும் அரசுக்கு சவுகரியமாகவோ மாநிலத்தைப் பிரிப்பது தவறு.

இந்த விஷயத்தை பாஜக தீவிரமாகப் பேச என்ன காரணம் என நினைக்கிறீர்கள்?

கொங்கு மண்டலத்தில் அதிமுக பலமான கட்சி. இப்போது மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள எல்.முருகனும், பாஜக தலைவராகியுள்ள அண்ணாமலையும் கொங்கு பகுதியைச் சேர்ந்தவர்கள். இதன்மூலம், இந்தப் பகுதியில் உள்ள அதிமுக வாக்குகளைத் தங்கள் கையில் எடுக்க வேண்டும் என்று பாஜக நினைக்கிறது போலும்! 2026-ல் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று அண்ணாமலை சொல்கிறார். அதிமுக கூட்டணியில் இருந்துகொண்டு பாஜக ஆட்சி என்று எப்படிச் சொல்ல முடியும்? இதெல்லாம் பாஜகவை வளர்ப்பதற்கான உத்தியாகத்தான் தெரிகிறது.

ஆனால், கொங்கு நாடு பிரிவினைப் பேச்சை அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கண்டித்துள்ளாரே?

அவரது கருத்து அதிமுக தொண்டர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தாது. இப்படி ஒரு பிரிவினைவாதத்தை முதலில் முன்வைத்தது டாக்டர் ராமதாஸ். கே.பி.முனுசாமி, ராமதாஸின் ஆதரவாளராக அறியப்படுபவர். வட மாவட்டங்களைப் பிரிக்க வேண்டும் என்று ராமதாஸ் சொன்னபோது எதுவும் பேசாத அவர், இன்று இப்படிப் பேசுவது எடுபடாது.
    
இவ்விஷயத்தை அதிமுக தலைமை கண்டிக்காமல் போனது ஏன்?

இப்போதெல்லாம் ஆங்கில மொழிபெயர்ப்பு என்றால்கூட சில மணி நேரத்திலேயே அறிக்கை வெளியிடுகிறார் ஓபிஎஸ். இதற்கு ஏன் அவர் இன்னும் அறிக்கை வெளியிடவில்லை? பாஜக கூட்டணியை உறுதிப்படுத்த ஓபிஎஸ்-ஈபிஎஸ் உடனே அறிக்கை வெளியிட்டார்கள். கொங்கு விஷயத்தில் ஏன் கூட்டறிக்கை இல்லை? கொங்கு மண்டலத் தளகர்த்தகர்களான வேலுமணியும் தங்கமணியும் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தோல்விக்கு பாஜக கூட்டணிதான் காரணம் என்று தெரிந்தும், இன்றும் பாஜகவுக்கு அடிமைகளாகத்தான் இவர்கள் இருக்கிறார்கள் என்பதைத்தான் இது காட்டுகிறது.

தமிழகத்தில் கொங்கு மண்டலம்தான் அதிக வருமானம் கொடுக்கிறது. ஆனால், இந்தப் பகுதி புறக்கணிப்படுகிறது என்று சிலர் சொல்கிறார்களே?

தமிழ்நாட்டின் மொத்த வருவாயில் 45-50 சதவீதம் மேற்கு மண்டலத்திலிருந்துதான் வருகிறது. ஜிஎஸ்டி உற்பத்தி விகிதங்களும் மேற்கு மண்டலத்திலிருந்துதான் அதிகம் வருகின்றன. ஆனால், இந்தப் பகுதியில் உள்கட்டமைப்பு செய்யவில்லை என்று கூறும்பட்சத்தில், அதற்குப் பிரிவினைவாதம்தான் சரி என்று கூறுவதை ஏற்க முடியாது. இந்தப் பகுதியை முன்னேற்ற மத்திய அரசு இன்னும் அதிக நிதியை ஒதுக்கலாம். திட்டங்களைக் கொண்டு வரலாம். பிரிப்பதால் என்ன நடந்துவிடப்போகிறது? பழையபடி சேரர், சோழர், பாண்டியர் காலத்துக்குள் செல்வதா?

அறிஞர் அண்ணா திராவிட நாடு கோரிக்கையை முன்வைத்தார். ஆனால், சீனப் போர் வந்தபோது, அதைச் சொல்லி அந்தக் கொள்கையைக் கைவிட்டார். ஆனால், உண்மையான காரணம் சீனப் போர் மட்டுமல்ல. தமிழக மக்களிடத்தில் திராவிட நாடு கோரிக்கைக்கு ஆதரவில்லாததும் ஒரு காரணம். அந்தக் கோரிக்கையைக் கைவிட்ட பிறகுதான் அன்று அண்ணா தலைமையில் திமுக ஆளுங்கட்சியானது. ஆக, எந்தக் காலத்திலுமே தமிழ்நாட்டு மக்கள் பிரிவினைவாதத்தை ஏற்கமாட்டார்கள். பாஜக சொல்லும் கொங்கு நாடு பேச்சை அதிமுக கடுமையாக எதிர்க்காவிட்டால், அதிமுகவின் வாக்கு வங்கியை அது பாதிக்கும்.

ஒன்றியம் என்பதற்கு பதிலடியாகத்தான் கொங்கு நாடு என்று கூறப்படுகிறது என்ற கருத்தும் உள்ளதே?

‘யூனியன்’ என்பதற்குத் தமிழ் அர்த்தம் ஒன்றியம்தானே? அதை ஒரு சிறப்புப் பெயராகப் பயன்படுத்துகிறார்கள் என்றுகூட வைத்துக்கொள்வோம். அதற்காகப் பிரிவினைதான் பதிலடி என்று எப்படிச் சொல்ல முடியும்? இது சர்வாதிகாரத்தைவிட மோசமான செயலாகத்தானே இருக்கும்?!

பாஜகவை விமர்சித்தீர்கள் என்று உங்களையும், பாமகவை விமர்சித்தார் என்று புகழேந்தியையும் அதிமுகவிலிருந்து நீக்கினார்கள். ஆனால், சி.வி.சண்முகம் மீது இதுவரை நடவடிக்கை இல்லையே?

காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டால், அதிமுக எதிர்த்து நிற்கும் என்று 2018-ல் சொன்னேன். உடனே என்னை நீக்கினார்கள். அதன்பிறகு 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக தோல்வி. அதற்குக் காரணம் பாஜக கூட்டணி என்று அன்வர் ராஜா, தம்பிதுரை, சி.வி.சண்முகம் போன்றவர்கள் சொன்னார்கள். இப்போதும் சி.வி.சண்முகம், அன்வர் ராஜா ஆகியோர் அதைத்தான் சொல்கிறார்கள். அப்படியென்றால் நான் சொன்னது சரிதானே?

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவி கிடையாது. பொதுச்செயலாளரை தொண்டர்கள்தான் தேர்வு செய்ய வேண்டும் என்று சசிகலா சொல்லியிருக்கிறாரே?

அப்படியென்றால், ஏன் அந்தம்மா பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட பொதுச்செயலாளர் என்று தன்னைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்? அவர் நடத்தும் வழக்கில், ‘நான் அடிமட்டத் தொண்டர்களால் தேர்வு செய்யப்படவில்லை. 
அதனால், அந்தப் பதவியை கேட்கமாட்டேன்’ என்று சொல்ல வேண்டியதுதானே?

ஒரு பக்கம் நான்தான் பொதுச்செயலாளர் என்று நீதிமன்றத்தில் வழக்கு நடத்துகிறார். இன்று தொண்டர்கள்தான் பொதுச்
செயலாளரைத் தேர்வு செய்ய வேண்டும் என்கிறார். இதில் எது உண்மை, எது பொய்?

ஆக, இந்தக் கட்சியை தனது சுயநலத்துக்குப் பயன்படுத்தவே சசிகலா நினைக்கிறார்.

மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடம் கிடைத்தது. அதிமுகவுக்கு இடம் கிடைக்காதது ஏன்?

எங்களுக்கு ஏன் அமைச்சரவையில் இடம் கொடுக்கவில்லை என்று எந்த அதிமுக தொண்டரும் கேட்கவில்லை. ஓபிஎஸ் மட்டும்தான் அதைக் கேட்கிறார். பாஜக கூட்டணியே வேண்டாம்; அவர்களால்தான் தோற்றோம் என்று சொல்கிறபோது, அவர்கள் கொடுக்கிற பதவி மட்டும் எதற்கு?

கொங்கு மண்டலத்தில் தங்களைப் பலப்படுத்திக் கொள்ள திமுக பல முயற்சிகளை எடுக்கிறது. அதெல்லாம் வேலைக்கு ஆகுமா?

அதிமுக வலிமையான வாக்கு வங்கி உள்ள கட்சி. தலைவர்களால் இந்தக் கட்சி இல்லை. தொண்டர்களை நம்பி உள்ள கட்சி. பாஜக இல்லாத கூட்டணி, சாதி, மதம், ஊழலுக்கு அப்பாற்பட்ட ஒன்றுபட்ட தலைமை தேவை என்று தொண்டர்கள் விரும்புகிறார்கள். அப்படிச் செய்தால், என்றுமே அதிமுகதான் இங்கு வலிமையாக நிற்கும்.

x