சினிமா ஒரு பொழுதுபோக்கு அம்சம் என்பதைக் கடந்து, உலக மொழியாகப் பரிணமித்ததன் பின்னணியில் நீண்ட வரலாறு உண்டு. மொழியென்றால் இலக்கணம் அவசியம் அல்லவா? சினிமா இலக்கண உருவாக்கத்தின் ஆரம்பக் காரணிகளில் ஒருவர்தான் எட்வின் ஸ்டான்டன் போர்ட்டர் (சுருக்கமாக எட்வின் எஸ்.போர்ட்டர்). கேமரா நகர்வுகளின் மூலம் கதை சொல்லுதல், காணொலித் துணுக்குகளைத் திரை மொழியாக மாற்றுதல் என்று அவர் முன்னெடுத்த முயற்சிகள் காட்சி ஊடகத்தின் ஆழமான அஸ்திவாரங்களாக இன்று போற்றப்படுகின்றன.
இயக்குநரான கதைசொல்லி
1870 ஏப்ரல் 21-ல் அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் பிறந்தார் போர்ட்டர். பெற்றோர் அவருக்கு எட்வர்டு என்று பெயரிட்டாலும், ஆபிரகாம் லிங்கன் ஆட்சியில் போர் நடவடிக்கைகளில் ஆற்றலுடன் செயலாற்றிய எட்வின் ஸ்டான்டனின் பெயரைத் தனக்குத்தானே சூட்டிக்கொண்டார் போர்ட்டர். பள்ளிப்படிப்பை முடித்ததும், விளம்பரப் பலகை எழுதுபவர், தந்தி அலுவலர், எலக்ட்ரிசியன் எனப் பல வேலைகளைப் பார்த்தார் போர்ட்டர். அறிவியலில் ஆர்வம் கொண்டிருந்த அவர் இளம் கண்டுபிடிப்பாளராகவும் இருந்தார். சீராக விளக்கை எரியச் செய்யும் கருவியைக் கண்டுபிடித்து அதற்கான காப்புரிமையையும் பெற்றிருந்தார்.
1893-ல் அமெரிக்கப் பங்குச் சந்தையில் ஏற்பட்ட ‘பெரும் பதற்றம்' காரணமாக நொடித்துப்போனார் போர்ட்டர். வேறு வழியில்லாமல் ராணுவத்தில் சேர்ந்தார். மூன்று வருட ராணுவ சேவைக்குப் பிறகு ஊர் திரும்பியவர், திரைத் துறையில் நுழைந்தார். ஆரம்ப காலங்களில் ஊர் ஊராகச் சென்று திரைப்படங்களைத் திரையிடும் டூரிங் நிறுவனத்தில் பணிபுரிந்தார். அந்தக் காலத்தில் வந்த படங்கள் மவுனப் படங்கள் என்று அழைக்கப்பட்டாலும், அவை ஒலியின்றி திரையிடப்படவில்லை. ஒலியைக் காட்சியுடன் பதிவுசெய்யும் தொழில்நுட்பங்கள் பிறந்திராத அக்காலகட்டத்தில் வசனங்கள் இன்றி எடுக்கப்பட்ட திரைப்படங்களைத் திரையிடும்போது திரைக்குக் கீழே ஒரு வாத்தியக் குழு அமர்ந்து, காட்சிக்கு ஏற்ப இசையமைப்பார்கள். சில திரையரங்குகளில் திரையில் ஓடும் காட்சிக்கு ஏற்ப வசனங்களைப் பேச பணியாட்கள் அமர்த்தப்பட்டதும் உண்டு.
துண்டு துண்டான காணொலித் துணுக்குகளை ஊர் ஊராகச் சென்று மக்கள் கூடும் இடங்களில் காட்சியிடும் வேலையைச் செய்துவந்த போர்ட்டர், அதிலும் தன் திறமையை வெளிப்படுத்த ஆரம்பித்தார். தான் காட்சியிடும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத காணொலித் தொகுப்புகளைத் தோராயமான ஒரு கதை வடிவமாகப் பார்வையாளர்களிடம் காட்டும் முயற்சியில் இறங்கிய அவர், காட்சி வரிசை, இசை, பின்னணிக் குரல்கள் என்று அனைத்தையும் வடிவமைத்து அதிலும் வெற்றிகண்டார். இத்திறமையே அவருக்கு தாமஸ் ஆல்வா எடிசனின் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ‘எடிசன் மேனுஃபாக்ச்சரிங் கம்பெனி’யில் வேலை வாங்கிக் கொடுத்தது. 1900-ல் அந்நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த போர்ட்டர் மிக விரைவில் அதன் இயக்குநர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பு மேற்பார்வையாளர் போன்ற பல முக்கிய பொறுப்புகளைக் கவனிக்க ஆரம்பித்தார். இச்சூழல் அவரது கற்பனைத் திறனுக்குப் பல கதவுகளைத் திறந்துவிட்டது.
கேமரா நகர்வு மூலம் கதை
திரைப்படங்களின் ஆரம்ப காலங்களில் கேமராவை நிலையாக வைத்து, வரையறுக்கப்பட்ட இடத்துக்குள் நடக்கும் காட்சிகள் மட்டுமே படம்பிடிக்கப்பட்டன. அப்போது, கேமராவை மைய அச்சில் பொருத்திவிட்டு இடம் வலமாகத் திருப்பும் ‘பேனிங்’ என்ற அசைவின் மூலமும், மேலும் கீழுமாகத் திருப்பும் ‘டில்ட்’ என்ற அசைவின் மூலமும் கதை சொல்லும் முறையை சுவாரசியம் ஆக்கலாம் என்பதைச் செய்துகாட்டி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் போர்ட்டர்.
உதாரணமாக, அவரது பிரசித்திபெற்ற திரைப்படமான ‘தி கிரேட் ட்ரெயின் ராபரி’ படத்தை எடுத்துக் கொள்வோம். அதில் ரயிலைக் கொள்ளையடித்துவிட்டு காட்டின் ஊடாக ஓடிவருவார்கள் கொள்ளையர்கள். வலமிருந்து இடமாக அவர்கள் ஓடிவரும்போது கேமராவும் நகரும். எப்படித் தப்பிக்கப் போகிறார்கள் என்று நமக்குத் தெரியாதபோது, கேமரா வலமிருந்து இடமாக நகர்வதால், திரையின் இடப்பக்கம் குதிரைகள் தயாராக நம் பார்வையில் படும். அதன் மூலம் அவர்களது திட்டம் நமக்கு விளங்கிவிடும். இங்கு வசனங்களே தேவையில்லை. கேமராவின் நகர்வுகளே போதும். இன்றைய சினிமாவில் ‘பேனிங்’, ‘டில்ட்’ பொன்ற நுணுக்கங்கள் சர்வ சாதாரணமான அடிப்படை அம்சங்களாக இருந்தாலும், அவற்றை முதலில் யோசித்து நடைமுறைப்படுத்திய பெருமை போர்ட்டரையே சேரும்.
‘தி கிரேட் ட்ரெயின் ராபரி’ திரைப்படத்தில் மேலும் வியக்கவைக்கும் விஷயங்கள் பல உள்ளன. முதல் கௌபாய் திரைப்படம் இது என்பதால், வைல்ட் வெஸ்ட் ஜானரின் ஆரம்பமே இத்திரைப்படம்தான் என்ற கூற்றும் உள்ளது. படத்தின் இறுதியில் கௌபாய் ஒருவர் க்ளோஸ்-அப்பில் நம்மை நோக்கி நேராகத் துப்பாக்கியை முழக்குவது போல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். 1903-ல், போர்ட்டர் வடிவமைத்த இந்த அழுத்தமான காட்சியை இன்றும் பல இயக்குநர்கள் தங்கள் படங்களில் பயன்படுத்துகின்றனர். உதாரணத்திற்கு, 1990-ல் மார்ட்டின் ஸ்கார்சஸி இயக்கிய ‘குட்ஃபெல்லாஸ்’ திரைப்படத்தில் டாமி டிவிட்டோ கதாபாத்திரம் அதேபோல் திரையை நோக்கி நேராகத் துப்பாக்கியை முழக்கும்.
புதிய நுட்பங்களைப் புகுத்தியவர்
கேமராவின் மூலம் கதை சொன்னாலும், மவுனத் திரைப்படங்களில் சிக்கலான கதைக்களத்தைக் கையாள முடியாத நிலை தொடர்ந்தது. இதற்கான தீர்வையும் போர்ட்டர் உருவாக்கினார். மவுனக் காட்சிகளுக்கு இடையே அந்தக் காட்சியை விவரித்து எழுதிய ஒரு ‘ஸ்லைட்’-ஐ புகுத்தினார். இது கதாபாத்திரத்தின் பாங்கு, காட்சியின் நிலை ஆகியவற்றை எளிதில் புரிந்துகொள்ள மக்களுக்கு உதவியாக இருந்தது. மேலும், அக்காலகட்டத்தைச் சேர்ந்த இயக்குநர்கள் சாதாரணமான காணொலித் துணுக்குகளை உருவாக்குவதிலிருந்து காட்சி மொழி ஊடாகக் கதை சொல்லுவதற்கு இந்த முறை உதவியாக இருந்தது. மேலும், ஒரு இடத்தில் நடக்கும் காட்சி முடிந்ததும் உடனே அடுத்த இடத்தில் நடக்கும் காட்சி தோன்றினால், அது கண்களை உறுத்துவதாக இருக்கிறது என்று உணர்ந்த போர்ட்டர், ஒரு காட்சி முடிந்தவுடன் அது மெல்லத் தேய்ந்து அதன் மேல் அடுத்த காட்சி மெதுவாக உருவாகி ஆரம்பிக்கும் ‘டிஸ்ஸால்வ்’ என்ற எடிட்டிங் முறையை முதன்முதலில் தன் படங்களில் பயன்படுத்த ஆரம்பித்தார். திரைக்கதை தங்கு தடையின்றி காட்சிமொழியாக விரிவதை இது எளிதாக்கியது. இவ்விஷயத்தில் மேலும் பல சோதனைகளைத் தொடர்ந்தார் போர்ட்டர்.
ஒரே நேரத்தில், இருவேறு இடங்களில் நடக்கும் காட்சிகளை மாற்றி மாற்றிக் காட்டும் ‘க்ராஸ் கட்டிங்’ முறையைத் தன்னுடைய ‘லைஃப் ஆஃப் அன் அமெரிக்கன் ஃபைர்மேன்’(1903) திரைப்படங்களில் முயற்சித்துப் பார்த்திருப்பார் போர்ட்டர். அந்த முறை நேர்த்தியாக வரவில்லையென்றாலும், அவருக்கு அடுத்து சினிமாவில் பெரும் புரட்சிகளை ஏற்படுத்திய ஜி.டபுள்யூ.க்ரிஃபித் எப்படி க்ராஸ் கட்டிங் முறையைச் செம்மைப்படுத்தினார் என்பதை அடுத்த வாரத்தில் விரிவாகப் பார்ப்போம்.
3டி தொழில்நுட்பத்துக்கு விதை போட்டவர்
எடிசன் நிறுவனத்திலிருந்து 1909-ல் விலகிய போர்ட்டர், திரையிடும் ப்ரொஜக்டர் கருவிகளைத் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். பின்னர் ‘டிஃபண்டர் ஃபிலிம் கம்பெனி’, ‘ரெக்ஸ் மோஷன் பிக்ச்சர் கம்பெனி’ என்று இரண்டு நிறுவனங்களைத் தொடங்கினார். எனினும், அவற்றை அவரால் வெற்றிகரமாக நடத்த முடியவில்லை. அதன் பின்னர், ‘ஃபேமஸ் ப்ளேயர்ஸ் ஃபிலிம் கம்பெனி’யின் ஆஸ்தான இயக்குநரானார். 1915-ல் முதல் முறையாக, ‘அனாக்கிளிப் 3டி’ முறையில் இவர் உருவாக்கிய ‘நயாகரா ஃபால்ஸ்’ காணொலித் துணுக்கு திரையிடப்பட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இன்றைக்கு உலகம் முழுவதும் 3 டி திரைப்படங்களுக்குப் பெரும் வரவேற்பு உண்டு. அதற்குத் தொடக்கப்புள்ளி வைத்தவர் போர்ட்டர்தான்!
திரைத் துறையிலிருந்து விலகிய பின் தொடர்ந்து கேமரா, புரொஜெக்டர் கருவிகளில் பல தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை உருவாக்கிய போர்ட்டர், 1941 ஏப்ரல் 30-ல் தன்னுடைய 71-ம் வயதில் இயற்கை எய்தினார். பிற்காலத்தில் வந்த பலர், இவரது கண்டுபிடிப்புகளைத் தங்களுடையவை என்று சொந்தம் கொண்டாடிய சம்பவங்களும் நடந்தேறின. ஆனால், வரலாறு எட்வின் எஸ்.போர்ட்டரை சினிமாவின் உச்சத்தில் வைத்து அழகு பார்த்துவருகிறது.