இசை வலம்: பிரிவை நீக்கும் அன்பு கானம்


வா.ரவிக்குமார்
ravikumar.cv@hindutamil.co.in

சாதி, மதம், இனம், பொருளாதார ஏற்றத்தாழ்வு... இப்படிப் பல விஷயங்களும் காதலுக்கு முட்டுக்கட்டை போடும். அதையும் எதிர்கொண்டு காதலர்கள் ஒன்றுசேர்வார்கள். இப்படி ஏராளமான திரைக்கதைகள் ‘சுபம்’ போடுவதோடு முடிந்துவிடும். ஆனால், இப்படி எல்லாவற்றையும் எதிர்த்து ஒன்றுசேரும் காதலர்கள் திருமண பந்தத்துக்குள் வருகிறபோது, அவர்களுக்குள் ஏற்படும் பிரச்சினைகள் அதிகம் அலசப்படுவதில்லை.

‘காதலிக்கும்போது நான் சொன்ன எல்லாவற்றுக்கும் தலையாட்டிய காதலனா இவன்?’, ‘எப்போதும் கண்களில் புன்னகையைக் காட்டியகாதலியா இவள்?’ என்று பரஸ்பரம் குற்றம்சாட்டும் மனித இயல்பு, ‘ஈகோ’வினால் ஏற்படும் தடுமாற்றங்கள் போன்றவை காதல் தம்பதியினரை அவசர முடிவுகளை எடுப்பதற்குத் தூண்டுகின்றன. இவற்றைப் பற்றியெல்லாம் அரிதாகவே திரைப்படங்கள் வருகின்றன. இந்தச் சூழலில், இயக்குநர் ராஜு முருகன் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் ‘கொஞ்சம் பேசு’ காணொலிப் பாடல் முக்கியத்துவம் பெறுகிறது.

‘அற்றை நிலா தேய்ந்துவிட்டது அன்பே நீயில்லை
ஜன்னல் மழை ஓய்ந்துவிட்டது நீ ஏன் இல்லை’ 

எனும் யுகபாரதியின் வரிகளும் பாடலுக்கான நரேனின் இசையும் கேட்பவர்களின் காதலையும் நிச்சயம் தாலாட்டும். பிரதீப் குமார், நித்யஸ்ரீ  வெங்கடரமணனின் குரலில் தொனிக்கும் நெகிழ்ச்சி காட்சியின் தன்மையை மேலும் கனமாக்குகிறது. ‘பிரிவு’ எனும் மூச்சுத்திணறலைச் சரிசெய்வதற்கு, ‘அன்பு’ எனும் ஆக்ஸிஜன் எவ்வளவு அவசியம் என்பதைப் பேரிடர் காலத்தில் உணர்த்தும் பாடல் இது.

‘கொஞ்சம் பேசு’ பாடலைக் காண: https://www.youtube.com/watch?v=O18c0dhb7Y0

* * *

புலிகள் நாங்கள் புயலாய் வருவோம்!

டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கெடுக்கும் இந்திய வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஒரு பாடலை எழுதி, இசையமைத்து தயாரித்து வெளியிட்டுள்ளார் ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான். அனன்யா பிர்லா, தன்னுடைய சிந்தனையில் தோன்றிய `இந்துஸ்தானி வே’ (HINDUSTANI WAY) எனும் இந்தப் பாடலுக்கான வடிவத்தை ரஹ்மானின் உதவியோடு செயல்படுத்தியிருக்கிறார். பாடலுக்கான காட்சியில் தோன்றுவதோடு பாடலையும் அவரே பாடியிருக்கிறார். இந்தி, ஆங்கிலம் என இரண்டு மொழிகளில் இந்தியாவின் நிலப்பரப்புகள், இந்தியர்களின் போராட்ட குணம், இந்தியாவின் பெருமைமிகு விளையாட்டு வீரர்களின் திறமை, பல விளையாட்டுகளில் பளிச்சிட்ட இந்தியர்களின் சாதனை போன்றவை துள்ளல் இசையோடு இந்தப் பாட்டில் வெளிப்பட்டிருக்கின்றன.

பாடலை ஏ.ஆர்.ரஹ்மான், அனன்யா, நிர்மிகா சிங், மேடி யநோவ்ஸ்கி, ஷிஷிர் சமந்த் ஆகியோர் எழுதியிருக்கின்றனர். இதற்கு முன் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கெடுத்த காட்சிகளும், ஒலிம்பிக் போட்டிகளை ஆவலோடும் பரபரப்போடும் காணும் ரசிகர்களின் உற்சாகமும் காணொலியில் இடம்பெற்றுள்ளன. இந்தியாவின் நான்கு திசைகளிலிருந்தும் ஒலிம்பிக் போட்டியில் பங்கெடுக்கும் வீரர்களை உற்சாகப்படுத்தும் இந்தப் பாடலுக்கான இசையையும் துள்ளல் பாணியில் (சதுஸ்ர நடையில்) வடிவமைத்திருப்பது ரஹ்மானின் அக்மார்க் ஸ்டைல்!

இதுவரை இந்தப் பாடலை ஒரு கோடி பேர் பார்த்திருக்கின்றனர். இப்படிப்பட்ட ஒரு பாடலை ஐபிஎல் போட்டிக்காக வெளியிட்டிருந்தால், பல கோடி பேர் பார்த்திருப்பார்கள். அதுசரி, என்னதான் ஒலிம்பிக் என்றாலும் அதில் கிரிக்கெட் இல்லையே!

‘இந்துஸ்தானி வே’ பாடலைக் காண: https://www.youtube.com/watch?v=oWqIc2dbU9I

* * *

மனங்களின் சங்கமம்!

“நல்ல இசை என்பது எதுவாக இருக்க முடியும்? கர்னாடக இசை, மேற்கத்திய இசை எனப் பல பாணிகளை அடிப்படையாகக் கொண்டதா, குறிப்பிட்ட வாத்தியங்களை, அதிலிருந்து வெளிப்படும் ஒலிகளில் இருந்து வெளிப்படுவதா..? இப்படிப் பலவற்றையும் அந்தக் கேள்விக்குப் பதிலாய்ப் பொருத்திப் பார்த்ததில், மனங்களைச் சங்கமிக்கச் செய்யும் இசையே நல்ல இசையாக இருக்க முடியும் எனும் முடிவுக்கு வந்தோம்” என்கிறார் கார்த்திக்.

ஐக்கிய நாடுகளின் ‘கிளாஸ்டன்பரி’, அமெரிக்காவின் ‘கென்னடி சென்டர் ஃபார் பெர்ஃபார்மிங் ஆர்ட்ஸ்’, ஸ்பெயினின் ‘வுமேட்’ போன்ற உலகின் முக்கிய இசை சார்ந்த நிகழ்ச்சிகளில் தன்னுடைய இசைப் பங்களிப்பைத் தந்திருப்பவர் கார்த்திக்.
கார்த்திக்கின் குழுவில் இருக்கும் கலைஞர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு பாணிகளில் இசையைக் கற்றிருந்தாலும், அவர்களுடைய இசை ஒரே புள்ளியில் சங்கமிக்கிறது. இதை வெளிப்படுத்தும் விதமாகவே இண்டோசோல் (Indosoul) எனும் தலைப்பின்கீழ் தங்களின் இசைப் பங்களிப்பை அவர்கள் செய்துவருகின்றனர். மேற்கத்திய பாணி, நாட்டுப்புற இசை, கர்னாடக இசை எனப் பல பாணி இசை வடிவங்களில் இருக்கும் ஒற்றுமையை வெளிப்படுத்துவதே இவர்களுடைய இசையின் சிறப்பாக அமைந்திருக்கிறது.

நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல், எதிரெதிர் துருவங்களைப் போல் இரண்டு விதமான உணர்ச்சி அலைகளை நம்முள் உண்டாக்குகிறது இந்த இசை. சிறு தூறலாகத் தொடங்கி கனமழை பொழிந்து முடித்தவுடன், மீண்டும் தூவானம்போல் அமைதியாகிறது நம்முடைய மனம்.

மதுரை மணி அய்யர் போன்ற இசை மேதைகளால் கற்பனைச் செறிவுடன் மேடைகளில் பாடப்பட்ட தியாகராஜரின் க்ருதி ‘ஒர ஜுபு’. இறைவனின் மீதான பக்தியையும் அன்பையும் ஒருங்கே சொல்லும் இந்தப் பாடலில் உருக்கமும் கருணையும் போட்டி போடும். இந்த கீர்த்தனையை அதன் உருக்கமும் தெய்வாம்சமும் மாறாமல் தன்னுடைய வயலினில் ஒலிக்கவைத்திருக்கிறார் கார்த்திக். 

அவருடைய ‘இண்டோசோல்’, கர்னாடக இசைப் பாணியையும் மேற்கத்திய இசைப் பாணியையும் ஒருங்கே கொண்டு, பரீட்சார்த்த முறையில் புதிய இசை அனுபவத்தைக் கேட்பதற்கு நம்முடைய காதுகளைத் தயார்படுத்துகிறது. புத்துணர்வான இசை அனுபவத்தையும் வழங்குகிறது.

ஃப்யூஷனில் ஒலிக்கும் தியாகராஜரின் க்ருதி: https://www youtube.com/watch?v=KXTEHLCjRAU 

x