கரு.முத்து
muthu.k@kamadenu.in
செந்தில் பாலாஜி கரூர் அதிமுகவில் கோலோச்சிய காலத்தில், தனது சாதுரியமான காய்நகர்த்தல்களால் கட்சியின் சீனியர்களை எல்லாம் வரிசையாக காலிசெய்தார். மாவட்டச் செயலாளர், அமைச்சர் என்ற ஏககோதாவில் வலம்வந்த அவர், 2015-ல் தனது பொறுப்புகள் பறிக்கப்பட்டபோது ஆடிப்போனார். அவருக்குப் பதிலாக தான்தோன்றிமலை ஒன்றியச் செயலாளரான ‘ரெயின்போ’ பாஸ்கரை மாவட்டச் செயலாளராக்கினார் ஜெயலலிதா. அப்படி தனக்குப் போட்டியாக வந்த ‘ரெயின்போ’ பாஸ்கர், 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் எம்.ஆர்.விஜயபாஸ்கராக அவதாரமெடுத்து, கரூர் தொகுதியில் போட்டியிட்ட போது செந்தில் பாலாஜி இன்னும் அதிர்ந்துபோனார்.
பழிதீர்க்கும் தருணம்
அந்தத் தேர்தலில் செந்தில் பாலாஜி அரவக்குறிச்சியில் போட்டி யிட்டாலும், கரூரில் விஜயபாஸ்கரைத் தோற்கடிக்க மெனக்கிட்டு உழைத்தார். எதிரணி வேட்பாளருக்கு அவரது ‘உதவிகள்’ தாராளமாகவே கிடைத்தன. ஆனாலும் 441 வாக்குகள் வித்தியாசத்தில் விஜயபாஸ்கரே வென்றார். அதுமட்டுமல்லாமல், செந்தில் பாலாஜி வகித்த அதே போக்குவரத்து துறைக்கே அமைச்சராகவும் ஆனார். தனக்குப் போட்டியாக உருவெடுத்து, தன்னால் வெல்ல முடியாத நபராக மாறிப்போன விஜயபாஸ்கரை வீழ்த்த நேரம் பார்த்து காத்திருந்தார் செந்தில் பாலாஜி.
அரசியல் புயலில் திசைமாறி திமுகவுக்குச் சென்ற செந்தில் பாலாஜி, அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் விஜயபாஸ்கரால் நிறுத்தப்பட்ட அதிமுக வேட்பாளரைத் தோற்கடித்து தனது செல்வாக்கை நிரூபித்தார். இந்தத் தேர்தலில் கரூரில் விஜயபாஸ்கரையே தோற்கடித்து பழிதீர்த்தார். இப்போது தமிழக அமைச்சராகவும் பவனிவரும் அவர், இதோ லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் அடுத்தகட்ட பாய்ச்சலை ஆரம்பித்துவிட்டார். ஆம், விஜயபாஸ்கர் மீது தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை எடுக்கத் தொடங்கியிருக்கும் நடவடிக்கைகளின் பின்னணியில் செந்தில் பாலாஜிக்கும் பெரும்பங்கு இருக்கிறது.
போட்டுக்கொடுத்த செந்தில் பாலாஜி?
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஏராளமான ஊழல் புகார்கள் எழுந்த நிலையில், அவர்களில் முதல் நபராக விஜய்பாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தி நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை. அவரது உறவினர்கள் வீடுகள், நிறுவனங்கள் உள்ளிட்ட 26 இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 25 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. விஜயபாஸ்கர், அவரது மனைவி விஜயலட்சுமி, தம்பி சேகர் ஆகியோர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
எம்.ஆர்.விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்தபோது பணி நியமனம், பேருந்துகள் கொள்முதல் உள்ளிட்டவற்றில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
நெடுஞ்சாலைகளில் அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்காணிப்பதற்காக வேகக்கட்டுப்பாட்டுக் கருவிகளைப் பொருத்த டெண்டர் விடப்பட்டது. பலமுறை அது ஒத்திவைக்கப்பட்டது. ஆரம்பத்தில் 23 கோடி ரூபாய் மதிப்பிடப்பட்ட அப்பணிகளுக்கு 900 கோடி ரூபாயாக மதிப்பு உயர்த்தப்பட்டதாகவும், வேண்டிய நிறுவனங் களுக்காக ஒப்பந்தங்கள் வழங்குவதற்காகப் பல விதிமீறல்கள் நடந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறுகிய காலத்தில் விஜயபாஸ்கரின் உறவினர்கள் பல சொத்துகளை வாங்கிக் குவித்திருப்பதாகவும் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக செந்தில் பாலாஜி மூலமாகவே லஞ்ச ஒழிப்பு துறைக்குத் தகவல்கள் அனுப்பி வைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
தேர்தல் நேரத்திலேயே, விஜயபாஸ்கருக்கு எதிராக ஏராளமான சொத்துக்குவிப்புப் புகார்களை செந்தில் பாலாஜி அடுக்கினார். அவரது சொத்து ஆவணங்களை ஒவ்வொன்றாக வெளியிடப்போவதாக குறிப்பிட்ட அவர், ஒருசிலவற்றை அப்போது செய்தியாளர்களிடம் காண்பித்தார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இதற்கெல்லாம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேர்தல் பிரச்சாரத்தின்போது திமுக தலைவர் ஸ்டாலினும் கூறியிருந்தார். அதன்படியே தற்போது நடவடிக்கைகள் வேகம் எடுத்திருக்கின்றன.
‘மணி’களுக்குக் குறி!
திமுக ஆட்சி வந்ததும் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராகக் கந்தசாமி நியமிக்கப்பட்டு, அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து தீவிர விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. சுமார் ஒன்றரை மாத காலமாக நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத் துறையின் ரகசிய விசாரணையில், முன்னாள் அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட ஊழல்கள் தொடர்பான ஆதாரங்களும், ஆவணங்களும் போதுமான அளவுக்குத் திரட்டப்பட்டன. அதன் அடிப்படையில், இப்போது முன்னாள் அமைச்சர்கள் மீதான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. அதில் முதல் போணியாக விஜயபாஸ்கர் சிக்கியுள்ளார்.
கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களான வேலுமணி, தங்கமணி மீதுதான் முதலில் நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டிருப்பது அதற்கான ஒரு முன்னோட்டம் தான் என்கிறார்கள். சோதனை நடந்து முடிந்த பின்னர் வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் விஜயபாஸ்கர் வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசியதும் பேசுபொருளாகியிருக்கிறது.
கடந்த ஆட்சியில் எடப்பாடியை வழிநடத்தியதும், கட்சியை நடத்தியதும் இந்த இருவர்தான். அதன் காரணமாகவே ஏராளமான ஊழல் முறைகேடுகளைச் செய்து வருமானம் ஈட்டியிருக்கிறார்கள் என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதற்கான ஆவணங்கள், ஆதாரங்கள் அனைத்தையும் திரட்டிய லஞ்ச ஒழிப்புத் துறை அவர்கள் மீதான நடவடிக்கைகளுக்குத் தயாராகவே இருக்கிறது. அதற்கு முன் விஜயபாஸ்கர் மீதான நடவடிக்கைகளை ஆரம்பித்து, அதிமுக தரப்பிலிருந்து என்ன எதிர்வினை இருக்கும் என்பதை நோட்டம் பார்க்கிறார்கள். சோதனையின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு ஆஜராகும்போது, விஜயபாஸ்கரைக் கைதுசெய்யவும் திட்டமிடப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
இது தொடக்கம்தான்
கொங்கு மண்டலத்தில் திமுக பெரும் தோல்வியைச் சந்தித்தாலும், அந்த மண்டலத்துக்கு உட்பட்ட கரூர் மாவட்டத்திலுள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வென்று தனது செல்வாக்கை நிரூபித்தார் செந்தில் பாலாஜி. தேர்தலோடு அவரது பணிகள் முடியவில்லை. தேர்தலுக்குப் பிறகு, கொங்கு மண்டலத்தில் கட்சியை வலுப்படுத்தத் தேவையான அதிகாரங்கள் அவருக்குக் கொடுக்கப்பட்டன.
இதையடுத்து, எடப்பாடி தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பழனிசாமி வெல்லக் காரணமான தொகுதிப் பொறுப்பாளர் செல்லத்துரை, முன்னாள் எம் எல்ஏ-வான கணேசன் உள்ளிட்ட முக்கியமான நபர்களைத் திமுகவுக்குக் கொண்டுவந்தார். தோப்பு வெங்கடாசலம் உட்பட கொங்கு மண்டலத்தில் உள்ள முக்கியத் தலைகள் அவர் மூலமாகத் திமுகவுக்கு இடம்பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள். அதிமுகவில் இருந்தபோது கொங்கு பகுதியில் பலருக்கு நெருக்கடி கொடுத்த செந்தில் பாலாஜி, தற்போது திமுகவில் இருக்கும் நிலையிலும்கூட அதிமுகவில் பெரிய தலைகள் யாரும் இருக்கக் கூடாது என்கிற ரீதியில் சுழன்றடித்து வருகிறார்.
விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனைகளைக் கண்டித்து, செய்தியாளர்களைச் சந்தித்து கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள் ஈபிஎஸ்ஸும் ஓபிஎஸ்ஸும். விஜயபாஸ்கருக்கு அதிமுக என்றும் ஆதரவாக நிற்கும் என்றும் கட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள மற்ற அரசியல் கட்சிகள் இதற்கு என்ன எதிர்வினை ஆற்றுகிறார்கள் என்பதைப் பொறுத்து, ஊழலுக்கு எதிரான திமுக அரசின் ஆட்டம் சூடுபிடிக்கும்!