ரெய்டு... அடுத்த கட்டத்துக்குத் தயாராகும் சசிகலா!


குள.சண்முகசுந்தரம்
shanmugasundaram.kl@kamadenu.in

நாம் சொன்னபடியே, தனது அரசியல் நகர்வின் அடுத்தகட்டமாக ஜெயா டிவியில் மனம் திறந்துவிட்டார் வி.கே.சசிகலா. அடுத்து அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை அதிமுக வட்டாரம் மட்டுமல்ல... ஒட்டுமொத்த தமிழக அரசியல் களமும் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறது.

சசிகலா சிறை மீண்ட பிறகு, அவரது உடல்நலம் குறித்து அக்கறையுடன் அவருக்கு போன்போட்டு விசாரித்தவர்களில் அதிமுக அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய தலைகளும் உண்டு. அதில் முக்கியமானவர் அவைத் தலைவர் மதுசூதனன். எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டு அணிகளாகப் பிரிந்தபோது, ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தின் மீது ஜானகி அணியினர் தாக்குதல் நடத்தினர். அந்த சமயத்தில், அங்கே தனது ஆட்களைத் திரட்டி பாதுகாப்பு அரணாக நின்றவர் மதுசூதனன். அதனால், அப்போதிருந்தே சசிகலாவுக்கு மதுசூதனன் மீது தனிப்பட்ட பிரியம் உண்டு.

சூழ்நிலையால் இப்போது அந்தப் பக்கம் நின்றாலும் மதுசூதனனுக்கும் சசிகலா மீது தனிப்பட்ட மரியாதை உண்டு. இதையெல்லாம் மனதில் வைத்துத்தான், சிகிச்சையில் இருக்கும் மதுசூதனனை பார்த்து நலம் விசாரிக்க  அப்போலோ மருத்துவமனைக்கு கிளம்பினார் சசிகலா. யாராவது பிரச்சினையைக் கிளப்புவார்கள் என்பதை உணர்ந்தே காரில் அதிமுக கொடியுடன் புறப்பட்டார் அவர். அந்த சமயத்தில் அப்போலோவில் மதுசூதனனை நலம் விசாரித்துக் கொண்டிருந்த முன்னாள் முதல்வர் ஈபிஎஸ், சசிகலா வருகிறார் என்றதுமே அவசர அவசரமாக அங்கிருந்து இடத்தைக் காலி செய்தார். மருத்துவமனையில் தான் இருக்கும் நேரத்தில் சசிகலாவும் வந்து, யாராவது ஏதாவது ரகளை செய்துவிட்டால் ஒட்டுமொத்த பழியும் தன் மீது விழுந்துவிடும். அதைவைத்தே சசிகலா அரசியல் அனுதாபம் தேடிவிடுவார் என்று பயந்ததே,  ஈபிஎஸ் அங்கிருந்து அவசரமாக கிளம்பியதற்கு முக்கிய காரணம்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய சசிகலாவுக்கு நெருக்கமான வட்டத்தினர்,  “ஜெயலலிதாவும் சசிகலாவும் எதிர்ப்பு அரசியலை எதிர்கொண்டே வளர்ந்தவர்கள். காரில் அதிமுக கொடியைக் கட்டிக்கொண்டு போனால், யாராவது பிரச்சினை செய்வார்கள் என்பது சசிகலாவுக்குத் தெரியும். ஆனாலும் துணைக்கு ஆளில்லாமல் தனியாகவே போனார். மதுசூதனனைப் பார்க்க முந்தைய நாள் ஓபிஎஸ் வந்ததோ, மறுநாள் ஈபிஎஸ் வந்ததோ கவனிக்கப்படும் செய்தியாகவில்லை. சசிகலா போனதுதான் தேசிய அளவில் ட்ரெண்ட் ஆனது. இதற்கே அதிமுக கூடாரம் பதறுகிறது. ‘அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் என்ன சம்பந்தம்?’ என்று முன்பு கேட்டுக் கொண்டிருந்த ஜெயக்குமார், ‘ஜானகி அம்மையாரைப் போல சசிகலா அவர்கள் பெருந்தன்மையோடு விட்டுக் கொடுக்க வேண்டும்’ என்று இப்போது கெஞ்சுகிறார்.

சசிகலா இன்னும் கொஞ்சம் கீழே இறங்கி வந்தால், பலபேர் கதற ஆரம்பித்துவிடுவார்கள். ஆனால், அதிரடி அரசியலில் இறங்க வேண்டிய அவசியம் இப்போதைக்கு இல்லை என்பதால் அவர் அடக்கியே வாசிக்கிறார். திமுக அடுத்து என்ன செய்யப் போகிறது என்பது குறித்து அவருக்கும் சில தகவல்கள் கிடைத்திருக்கின்றன. அதன்படி, அதிமுக அரசில் கோலோச்சிய முக்கிய அமைச்சர்கள் சிலர் மீது வழக்குகளைத் தொடுத்து அவர்களை முடக்கப் போகிறது திமுக அரசு. அதன் தொடக்கமாகத் தான் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டுக்கு லஞ்ச ஒழிப்புது துறையை அனுப்பி இருக்கிறார்கள். அடுத்தடுத்த வாரங்களில் இன்னும் சில முக்கிய தலைகளின் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு அடிக்கும். அப்போது ஒட்டுமொத்த அதிமுகவே கலகலத்து நிற்கும்.

சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் தோல்வியை எதிர்பார்த்துக் காத்திருந்த சசிகலா, இப்போது அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் வழக்கு நடவடிக்கைக்காக காத்திருக்கிறார். முன்னாள் அமைச்சர்கள் ஒவ்வொருவராக சிறை செல்லும்போது அதிமுக ஆட்டம் காணத்தொடங்கும். அந்த சமயத்தில் தனக்கு ஆதரவாக அதிமுகவில் இன்னும் பலர் வாய்திறப்பார்கள் என்று நம்புகிறார் சசிகலா. அதற்கான சூழல் அமையும்போது அவர் அம்மா சமாதிக்குச் சென்றுவிட்டு, தொண்டர் தரிசனத்துக்குப் புறப்படலாம் அல்லது அதிமுக தலைமைக் கழகத்துக்குள்ளேயேகூட அதிரடியாக நுழையலாம்” என்று சொன்னார்கள்.

 இதனிடையே, அமமுகவின் முக்கிய தளபதிகள் பலரும் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் தாவிக் கொண்டிருக்கிறார்கள். தினகரனோ மவுனமாகவே இருக்கிறார். சசிகலாவின் தற்போதைய அரசியல் நடவடிக்கைகளுக்கும் தினகரனுக்கும் சம்பந்தமில்லை என்கிறார்கள்.  “உங்களைவிட தினகரனை கண்டுதான் அதிமுக தலைவர்கள் பயப்படுகிறார்கள். அதனால் அவரைக் கொஞ்சம் ஒதுக்கி வையுங்கள்” என்று தனக்குத் தரப்பட்ட ஆலோசனையை ஏற்று தினகரனை சசிகலா தற்காலிகமாக ஒதுக்கிவைத்திருப்பதாகவும் ஒரு பேச்சு இருக்கிறது.

 ஆனால் தினகரன் விசுவாசிகளோ, “அப்படியெல்லாம் ஏதும் இல்லை. கரோனாவால் தள்ளிவைக்கப்பட்ட தனது மகளின் திருமணத்தை செப்டம்பர் 16-ல் நடத்த திட்டமிடுகிறார் தினகரன். அதற்கான வேலைகளுக்காக அவர் புதுச்சேரியில் தங்கி இருப்பதால் சித்தியை நேரில் சந்திக்காமல் இருக்கிறார். மற்றபடி இருவரும் தினமும் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள்” என்கிறார்கள்.

சசிகலாவின் அடுத்தடுத்த மூவ்களை பார்த்துவிட்டு, மதில் மேல் பூனையாக இருந்த முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட சிலர் இப்போது தீர்க்கமான ஒரு முடிவுக்கு வந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். அவர்களில் சிலர் தங்களுக்கு நெருக்கமான பத்திரிகையாளர்களிடம், “சின்னம்மா பற்றி மட்டும் ஏதும் கேக்காதீங்க. அதுக்கு நாங்க எந்த பதிலைச் சொன்னாலும் தேவையில்லாத சிக்கல் வரும்” என்று பம்முகிறார்களாம்.  இதனிடையே, அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பெங்களூரு புகழேந்தியுடன் சரத்குமார், தனியரசு, செ.கு. தமிழரசன், கருணாஸ் உள்ளிட்டோர் திங்கள் அல்லது செவ்வாய்கிழமை சசிகலாவைச் சந்தித்துப் பேசவிருக்கிறார்களாம். இது  ‘மரியாதை நிமித்தமான சந்திப்பு’ என்று சொல்லப்பட்டாலும், இந்த சந்திப்புக்குப் பிறகு அதிமுகவுக்குள் சலசலப்பு இன்னும் கொஞ்சம் அதிகரிக்கலாம்!

x