ரஜினி சரிதம் 26: ஆறிலிருந்து எழுபது வரை- ரஜினிக்கு தேவர் தந்த அட்வைஸ்!


எம்ஜிஆர் தமிழக முதல்வராக அமர்ந்து விட்டாலும், அவரது விரலசைவு இல்லாமல் திரையுலகில் எதுவும் அசையாது என்கிற நிலை சில ஆண்டுகள் நீடித்ததாக, பல மூத்த தயாரிப்பாளர்களும் பத்திரிகையாளர்களும் நினைவுகூர்ந்திருக்கிறார்கள்.

எம்ஜிஆரின் ஆளுமையால் வெகுசிலரைத் தவிர, திரையுலகில் பெரும்பாலும் அவருக்கு பயந்தார்கள். அந்த வெகுசிலரில் ரஜினியும் இருந்தார். 

ஆனால், முதல்வரான பிறகு திரையுலகைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கவேண்டும் என்று எம்ஜிஆர் நினைக்கவில்லை. அவருக்கு அரசியல் ரீதியாக பல சவால்கள் காத்துக்கொண்டிருந்தன. அதேநேரம், திரையுலகில் தன்னுடன் தொடர்புடைய விவகாரங்கள் வரும்போது அதில் தலையிட்டு அதை சரிய செய்ய எம்ஜிஆர் தயங்கியதில்லை. ரஜினி விஷயத்திலும் அப்படி பல சம்பவங்கள் நடந்தன.

எம்ஜிஆரின் தீவிர பக்தர்களாக, திரையுலகிலும் அரசியலிலும் இருந்த சிலர், ரஜினியின் வளர்ச்சியில் விருப்பம் இல்லாதவர்களாக மனம் புழுங்கிப்போய், அவரைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் எம்ஜிஆருடைய காதில் ஓதினார்கள். ஆனால், எம்ஜிஆர் அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளவில்லை. அதற்கு ஒரு காரணம் இருந்தது. ‘பைரவி’ படத்தைப் பார்த்த சாண்டோ எம்.எம்.ஏ. சின்னப்பா தேவர், ரஜினியை தங்களுடைய படநிறுவனத்தில் நடிக்க வைப்பது என்று முடிவு செய்தார்.

எம்ஜிஆருக்குப் பிறகு வெகுமக்களை கவரும் ஆற்றல் ரஜினிக்கு இருக்கிறது என்பதை அவதானித்த அவர், கலைஞானத்தை அழைத்து, “ரஜினியிடம் கால்ஷீட் வாங்கிக்கொடு… அவரிடம் கேட்டபோது, அடுத்த இரண்டு வருடங்களுக்கு தேதி இல்லை என்று எனது மருமகனிடம் சொல்லியிருக்கிறார். தேவர் பிலிம்ஸ் பற்றி அவருக்கு எதுவும் தெரியவில்லை... நீ கொஞ்சம் எடுத்துச் சொல். இதுக்கெல்லாம் சின்னவர்கிட்ட போய் நிக்கக்கூடாது” என்று சொன்னார்.

தேவர் சொன்னதைக் கேட்டு, அலறியடித்து ரஜினியிடம் போனார் கலைஞானம். அவரிடம் தேவர் பிலிம்ஸ் வரலாற்றை எடுத்துக் கூறியதுடன் உழைப்பால் உயர்ந்த தேவரின் ஆளுமையையும் தனது படங்களுக்கான கதையை உருவாக்குவதில் அவர் எத்தனை கெட்டிக்காரர் என்பதையும் எடுத்துச் சொன்னார். ”தேவர் உருவாக்கிய கதைகள் பெரும்பாலும் எம்ஜிஆரை மனதில் வைத்துதான். ஹீரோயிசம் தான் அவருடைய கதைகளின் வெற்றிக்கான காரணம். நிச்சயமாக நீங்கள் எம்ஜிஆருக்கு எழுதிய கதையில் நடிக்கிறீர்கள் என்று நினைத்துகொள்ளுங்கள்” என்று சொன்ன கலைஞானம், தேவருக்கும் எம்ஜிஆருக்கும் இடையிலான நட்பு, ஊடல் பற்றியெல்லாம் விளக்கிச் சொன்னார்.

அனைத்தையும் பொறுமையாக கேட்டுக்கொண்ட ரஜினி, “நான் ‘நல்ல நேரம்’ படத்தைப் பார்த்து வியந்திருக்கிறேன். தேவர் பிலிம்ஸ் பற்றி விரிவாகச் சொன்னதற்கு நன்றி. நீங்கள் சொல்லாவிட்டால் ஒரு நல்ல தயாரிப்பாளரை மிஸ் செய்திருப்பேன்” என்று சொன்னார். அப்புறமென்ன... ரஜினியிடம் கால்ஷீட் பெற்றுக்கொடுப்பது கலைஞானத்துக்கு எளிதாகிவிட்டது. அப்படித்தான் தேவர் பிலிம்ஸுக்காக ரஜினி நடித்த ‘தாய் மீது சத்தியம்’ உருவானது.

ஒரு பிரம்மாண்ட வெற்றி

எம்ஜிஆர். கட்சி தொடங்குவதற்கு சரியாக 2 வருடங்களுக்கு முன் வெளியான ‘என் அண்ணன்’ படத்தில், எம்ஜிஆர் குதிரையில் சவாரி செய்தபடி பாடிக்கொண்டு வரும் ‘நெஞ்சம் உண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ பாடல் காட்சி, அவருடை அரசியல் வருகையை அதிரடியாக உறுதிப்படுத்தி விட்டதாக அப்போது பத்திரிகைகள் பரபரப்பாக எழுதின. அந்தப் படம் வெளியாகி அடுத்த ஐந்து வருடங்கள் கழித்து எம்ஜிஆர் ஆட்சியைப் பிடித்துவிட்டார். அவர் சர்வ வல்லமையோடு ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருந்த சூழலில் அதேபோன்றதொரு அட்டகாசமான பாடல்காட்சியை ‘தாய் மீது சத்தியம்’ படத்தில் ரஜினிக்கு வைத்தார் தேவர். அதுதான் ‘புறப்படடா... தம்பி புறப்படடா...’ 1978, தீபாவளித் திருநாளில் வெளியானது ‘தாய் மீது சத்தியம்’. அந்தப் பாடல் காட்சியின்போது ரஜினியின் ரசிகர்கள் திரையரங்குகளில் பூமாரி பொழிந்தார்கள். அந்தப் பாடல்காட்சியைக் குறிப்பிட்டு, ‘ரஜினியெல்லாம் எம்ஜிஆர் ஆகமுடியுமா?’ என்று கரித்துக்கொட்டியவர்கள் உண்டு. அப்படிப்பட்டவர்களை கொம்பு சீவிவிடும் வேலையையும் அப்போது சில அரசியல் கட்சிகள் செய்தன.

‘தாய் மீது சத்தியம்’ வெளியான அதே தீபாவளித் திருநாளில், சிவாஜி நடித்த ‘பைலட் பிரேம்நாத்’, கலைஞர் கதை, வசனத்தில் ஜெய்சங்கர் நடித்த ‘வண்டிக்காரன் மகன்’, கே.பாலசந்தர் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘தப்புத் தாளங்கள்’, ருத்ரையா இயக்கத்தில் கமல் - ரஜினி நடித்த ‘அவள் அப்படித்தான்’, ஆர்.சி. சக்தி இயத்தில் ஸ்ரீதேவி - கமல் நடித்திருந்த ‘மனிதரில் 
இத்தனை நிறங்களா?’, பாரதிராஜா இயக்கத்தில் கமல் - ஸ்ரீதேவி நடித்திருந்த ‘சிகப்பு ரோஜாக்கள்’ என முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்த பல படங்களும் ரிலீஸ் ஆயின. அத்தனை படங்களையும் வசூலில் பின்னுக்குத் தள்ளி, சூப்பர் டூப்பர் வெற்றியைப் பெற்றது ‘தாய் மீது சத்தியம்’.

தேவர் பிலிம்ஸ் அதுவரை எடுத்த படங்களில், எம்ஜிஆர் படங்களின் வசூலுக்கு இணையான வசூலை ‘தாய் மீது சத்தியம்’ குவித்தது. இந்த வெற்றியைக் காண தேவர் உயிரோடு இல்லை. ‘தாய் மீது சத்தியம்’ படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடந்தபோது, படப்பிடிப்பில் கம்பீரமாக வேலைகளை ஒருங்கிணைப்பு செய்து கொண்டிருந்த தேவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. அன்றே, அவரைக் கோவை மருத்துவமனையில் சேர்த்தார்கள். ஆனாலும் பலன் இல்லாமல் போய்விட்டது. தேவர் மறுநாள் இறந்துவிட்டார்.

தேவரின் அறிவுரை

எம்ஜிஆருக்குப் பின் தன்னுடைய தயாரிப்பில் ரஜினியால் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கப் போகிறது என்று குதூகலித்தார் சின்னப்பா தேவர். ரஜினி, தேவரின் கண்ணில் படுவது போல் சிகரெட் குடித்ததில்லை. ஆனால், ரஜினி அதிகமாக சிகரெட் குடிப்பதைப் பற்றிக் கேள்விப்பட்டு கவலையடைந்த தேவர், ‘தாய் மீது சத்தியம்’ படப்பிடிப்பு சமயத்தில் ரஜினி அலுவலகம் வந்தபோது, “தம்பி... சிகரெட் நம்ம ஜீவ சக்தியையும் உயிர் சக்தியையும் கெடுத்துரும். நரம்பு மண்டலத்தை மெல்ல மெல்ல பலகீனமாக்கிடும். சிகரெட் பிடிக்கிறத குறைச்சுக்கோப்பா… சிகரெட் பிடிக்கணும்னு தோணும்போது ஒரு ஏலக்காயையும் ஒரு கிராம்பையும் எடுத்து வாயில போட்டு இடுக்கிக்கோ. முப்பது நாள் பல்லைக் கடிச்சுக்கிட்டு இதை செஞ்சு பாரு. உன்னோட தகப்பன் மாதிரி சொல்றேன். நான் சொல்றதைக் கேளு” என்றார்.

இதைக் கேட்டதும் தேவரின் கைகளைப் பாந்தமாகப் பிடித்துக் கொண்டார் ரஜினி. அவர் தன்மீது காட்டிய அக்கறையில் நெகிழ்ந்தார். தேவர் கேட்காமலேயே அடுத்த படத்துக்கான கால்ஷீட்டை கொடுக்க வேண்டும் என்று எண்ணியிருந்தார் ரஜினி. தேவர் தற்போது உயிரோடு இல்லாவிட்டாலும், தனது எண்ணத்தை மாற்றக்கூடாது என்று தேவரின் மருமகன், இயக்குநர் ஆர். தியாகராஜனை அழைத்து ‘அன்னை ஓர் ஆலயம்’ படத்துக்கான கால்ஷீட்டைக் கொடுத்தார். ‘அன்னை ஓர் ஆலயம்’ படத்தின் படப்பிடிப்பில் ஒரு சம்பவம்.

ரஜினியின் துணிவு

அந்தப் படத்தில், பழக்கப்படுத்தினால் அடிபணியும் குதிரை, சிறுத்தை, யானை, குரங்கு உள்ளிட்ட விலங்குகளை வனப்பகுதிக்குச் சென்று உயிருடன் பிடித்து, அவற்றை சர்க்கஸ் கம்பெனிகளுக்கு விற்றுவிடும் வேட்டைக்காரர் வேடம் ரஜினிக்கு. சிறுத்தைகளையும் அவற்றின் குட்டிகளையும் ரஜினி தன்னுடைய வேட்டைக் குழுவுடன் துரத்திப் பிடிக்கும் காட்சிகளைப் படமாக்கினார்கள். இதற்காக நியூ கிராண்ட் சர்க்கஸிலிருந்து பத்துக்கும் அதிகமான சிறுத்தைகளையும் நான்கு சிறுத்தைக் குட்டிகளையும் படப்பிடிப்புக்கு கொண்டுவந்திருந்தார் அவற்றைப் பழக்கப்படுத்திவர்.

ஒரு குழிக்குள் விழும் பெரிய சிறுத்தையைப் பிடிப்பதுபோன்ற காட்சியில் “டூப் வேண்டாம்... நானே நடிக்கிறேன். காயம் பட்டால் பார்த்துக்கொள்ளலாம்” என்றார் ரஜினி. ஆனால், இயக்குநர் அதை அனுமதிக்கவில்லை. நகங்கள் வெட்டப்பட்ட சிறுத்தைகள் தான் என்றாலும், சிறுத்தைகள் பல்லால் பதம் பார்த்துவிடும் என்பது தியாகராஜனுக்குத் தெரியும். மாமனாரிடம் நிறையப் பாடங்களைப் படித்தவர் அவர். ஆனால், ரஜினி பிடிவாதம் பிடிக்க.. அந்த வட்டக் குழிக்குள் சில ஷாட்களை மட்டும் ரஜினியை வைத்து எடுத்தார்.
டூப் இல்லாத பல சேஸிங் ஷாட்களில் அநாயாசமாக சிறுத்தைகளை டீல் செய்தார் ரஜினி. கதாநாயகன், 50 கிலோ எடைகொண்ட ஒரு தாய் சிறுத்தையை அலேக்காக தோளில் தூக்கிப்போய் ஜீப்பில் ஏற்ற வேண்டும். “இதை ரஜினியின் முகத்தைக் காட்டாமல், டூப் வைத்து எடுத்துக்கொள்ளலாம்” என்றார் இயக்குநர்.

ஆனால், ரஜினி அதை அனுமதிக்க வில்லை. “என்னால் தூக்கமுடியாது என்று நீங்களாகவே முடிவு செய்துவிட்டீர்களா?” என்று சொல்லிக்கொண்டே.. அலேக்காக சிறுத்தையை ஒரே தம்மில் தூக்கி தோளில் போட்டு நடந்துக் காட்டினார் ரஜினி. இயக்குநர் தியாகராஜனுக்கோ பயம். “தூக்கும்போது சிறுத்தை கடித்துவிடக் கூடாதே” என்று சிறுத்தையின் வாயைக் கட்டச் சொல்லிவிட்டார். இயக்குநர் எதிர்பார்த்ததை விட, ரஜினியின் அர்பணிப்பு அட்டகாசமாக இருந்தது.

இதுபற்றி குறிப்பிடுகையில், “பல விஷயங்களில் சின்னவரை நினைவுபடுத்துகிறார் ரஜினி என்று ரஜினியைப் பற்றி மாமா என்னிடம் சொல்லி பெருமைப்பட்டார். அது உண்மைதான்” என்று தன்னுடைய மைத்துனரும் தேவரின் மகனுமாகிய தண்டாயுத பாணியிடம் புகழ்ந்தாராம் தியாகராஜன்.

ஒரு நாள் ராமாவரம் தோட்டத்திலிருந்து தேவர் பிலிம்ஸ் அலுவலகத்துக்கு ஒரு போன். போன் போட்டவர் எம்ஜிஆர். போனை எடுத்தவர் இயக்குநர் தியாகராஜன். “யோவ் தியாகு... நாளைக்கு சத்யா ஸ்டுடியோவுக்கு வர்றேன்… ரஜினிகிட்ட பேசணும்” என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார் எம்ஜிஆர்.

(சரிதம் பேசும்)

படங்கள் உதவி: ஞானம்

x