ம.சுசித்ரா
susithra.m@hindutamil.co.in
புதிய கல்வி ஆண்டில் இந்திரா காந்தி திறந்தநிலைப் பல்கலைக்கழகம் (இக்னோ) 12 விதமான புதிய பட்ட, பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றில் ஒன்றாக ஜோதிடம் முதுநிலைப் பட்டப் படிப்பும் சேர்க்கப்பட்டிருப்பது கல்வியாளர்கள், விஞ்ஞானிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுதொடர்பாக பல உயர்கல்வி நிறுவனங்களுக்கு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வியாளர்களும் விஞ்ஞானிகளும் கடிதம் எழுதியுள்ளனர். “ஜோதிடம் அறிவியலாகாது என்று உலகம் முழுவதும் அறுதியிட்டு வாதாடப்பட்டிருக்கும்போது, அதைப் பாடமாக அறிமுகப்படுத்துவது அறிவியலுக்குப் புறம்பானது” என்று அதில் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அந்தக் கடிதத்தை எழுதியவர்களில் முதன்மையானவர் சென்னை கணிதவியல் அறிவியல் மையத்தில் இருந்து அண்மையில் ஓய்வுபெற்ற முனைவர் ஆர்.ராமானுஜம். அறிவொளி இயக்கச் செயற்பாட்டாளர், தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தலைவர், ‘துளிர்’ சிறார் அறிவியல் பத்திரிகையின் ஆசிரியர் எனப் பல்வேறு முகங்களைக் கொண்ட ராமானுஜத்திடம் இதுகுறித்துப் பேசினோம்.
எம்.ஏ., ஜோதிடம் முதுகலைப் படிப்பை நீங்கள் எதிர்க்க முதன்மையான காரணம் என்ன?
கல்லூரியில் படிக்கும் வயதும் தகுதியும் உள்ளபோதும் இன்றும் 22 சதவீத இந்தியர்களுக்கு மட்டுமே உயர்கல்வி படிக்கும் சூழல் கிட்டியுள்ளது. அப்படியிருக்க, உயர்கல்வியை அடைய முடியாதவர்கள், வாய்ப்பிழந்தவர்களுக்கெல்லாம் கல்வியைக் கொண்டு சேர்க்கும் உயர்ந்த நோக்கத்தில் இயங்கிவருகிறது இந்திரா காந்தி திறந்தநிலைப் பல்கலைக்கழகம். அதன் அகாடமிக் கவுன்சில் உறுப்பினராக ஐந்தாண்டுகள் பதவி வகித்து பல்கலைக்கழகத்தின் சிறப்பான செயல்பாடுகளிலும் பங்கேற்றிருக்கிறேன். அப்படிப்பட்ட பல்கலைக்கழகம் ஜோதிடத்தை முதுநிலைப் பட்டப்படிப்பாகக் கொண்டுவர முயல்வது மிகவும் பிற்போக்குத்தனமானது.
ஜோதிடமும் ஒருவிதமான கணித அறிவியல் என்றும் வானியலை அடிப்படையாகக் கொண்டது என்றும் வாதிடப்படுகிறதே?
வானியல் அடிப்படையில் சூரியன் உள்ளிட்ட நட்சத்திரங்கள், சந்திரன், கோள்களின் நிலையை இந்தியர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கணக்கிட்டார்கள். அதற்கான தரவுகள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. சமஸ்கிருதத்தில் மட்டுமல்ல தமிழ், அசாமிய மொழி, ஒடியா ஆகிய மொழிகளிலும் இந்தியாவில் வானியல் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தியாவுக்கு இணையாகச் சீனாவும் வானியல் ஆராய்ச்சியில் நெடுங்காலமாக ஈடுபட்டு வந்திருக்கிறது. மேற்கத்திய நாடுகளிலும் கணிதவியல் வளர்ச்சிக்குத் தொடக்கப்புள்ளியாக வானியல்தான் இருந்தது. கோப்பர்நிக்கஸ், கெப்ளர், நியூட்டன் போன்றோரின் கணித - இயற்பியல் ஆராய்ச்சிகளுக்கு ஊற்றுக்கண் வானியலே. ஆனால், அந்தச் சாதனைகளை வைத்துக்கொண்டு கோள்களின் நிலைப்பாடு நம்முடைய அன்றாட வாழ்க்கையில் தாக்கம் செலுத்துவதாக அறிவியல் ஆதாரமின்றி ஜோடிக்கிறார்கள்.
சூரியனை பூமி, சனி போன்ற இன்ன பிற கோள்கள் சுற்றிவருவ தெல்லாம் உண்மைதான். அதனால் ‘உங்களுக்கு நல்ல காலம் பிறக்கும்’,‘கஷ்டங்கள் உண்டாகும்’, ‘குழந்தை பிறக்கும்’ என்றெல்லாம் சொல்வது அறிவியலுக்குப் புறம்பானது. பூமியிலிருந்து கோடிக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள மற்ற கோள்களால் தனிப்பட்ட மனிதர்களின் வாழ்க்கைப் போக்கில் எந்தத் தாக்கமும் செலுத்த முடியாது. பிறந்து, வளர்ந்து, படித்து, வேலைக்குச் செல்வது, திருமணம் செய்வது என்பதெல்லாம் எல்லோரும் வழக்கமாகச் செய்வதுதானே? அவற்றை முன்பின் ஊகத்தின் அடிப்படையில் கணிப்பதெல்லாம் அறிவியலாகாது. அப்படிப்பட்ட போலி அறிவியலைக் கல்வி நிலையங்கள் அங்கீகரித்துப் பரப்புவது, அதுவும் பொதுமக்களின் வரிப்பணத்தில் செய்வது மிகவும் தவறான நடவடிக்கை.
2001-ல் வாஜ்பாய் பிரதமாக இருந்தபோதே மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் முதற்கொண்டு ஜோதிடத்தைப் படிப்பாக அறிமுகப்படுத்த முயன்றார்கள். அப்போது அறிவியல் இயக்கம் சார்பாகக் கடுமையாகப் போராடி அதைத் தடுத்து நிறுத்தினோம். தமிழகத்தில் அது சாத்தியப்பட்டது. ஆனால், உத்தர பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் தடுத்து நிறுத்த முடியவில்லை.
“இந்தியாவின் பாரம்பரிய அறிவுப் பெட்டகத்தை வளர்த்தெடுக்க தேசிய கல்விக் கொள்கை பரிந்துரைப்பதனால்தான் ஜோதிடத்தைப் பட்டப்படிப்பாக அறிமுகப்படுத்துகிறோம்” என இந்திரா காந்தி திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நாகேசுவர ராவ் கூறியிருக்கிறாரே?
பாரம்பரியத்தை முன்னிறுத்துவதெனில் இந்திய வானியல், இந்திய மருத்துவம் போன்ற படிப்புகளை அறிமுகப்படுத்தலாமே! இதுபோன்ற பாடங்களையெல்லாம் இக்னோ முன்னிறுத்தவில்லையே? இங்குதான் உள்நோக்கத்தைச் சந்தேகிக்க வேண்டி வருகிறது. முதலாவதாக, பாரம்பரிய இந்தியாவெனில் தற்போதைய தேசத்துக்குண்டான வரையறை அன்று கிடையாது. இந்திய நாகரிகம் எனும்போது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானையும் உள்ளடக்கிப் பேச இவர்கள் தயாரா? இதுபோன்று ஆயிரம் கேள்விகள் இருக்கின்றன.
பாரம்பரியத்தைக் கொண்டாடுவது தவறா?
கற்பனையில் ஜோடிப்பதுதான் தவறு. கணிதவியலை எடுத்துக் கொண்டாலே வரலாற்று ரீதியாக இந்தியா, சீனா, அரேபிய நாடுகளில் கணிதம் வளர்ந்த பிறகே ஐரோப்பாவில் வளர்ச்சியடைந்தது. ஆனால், வரலாற்றுணர்வு நம்மில் பலருக்கு இல்லாததால் பெரும்பாலான மாணவர்கள் ஐரோப்பிய கணிதவியலாளர்களின் பெயரைத்தான் முதலில் அடுக்குவார்கள். பாரம்பரியத்தை அறிய நினைத்தால் இதையெல்லாம் ஆராயலாம். அதேநேரம் விமர்சனப் பார்வையுடன் அணுகுவதும் இன்றியமையாதது.
சமீபகாலமாக அறிவியல் மாநாடுகளிலேயே ‘கவுரவர்கள் டெஸ்ட் டியூப் குழந்தைகள்’, ‘ராவணனிடம் பல விமானங்களும் விமான நிலையமும் இருந்தன’, ‘ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு தவறானது’ என்பன போன்ற வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. இதற்கு மத்திய பாஜக அரசின் அழுத்தம்தான் காரணம் என நினைக்கிறீர்களா?
புராணங்களையும் கட்டுக்கதைகளையும் அறிவியலாக்கும்படி கல்வியாளர்களுக்கும் கல்வி நிலையங்களுக்கும் மத்திய அரசு அழுத்தம் கொடுக்கிறதா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், நிச்சயமாக அனுதாபம் காட்டுகிறது. அதிலும் அறிவியல் மாநாட்டிலேயே இவ்வாறு பேராசிரியர்களும் விஞ்ஞானிகளும் பிதற்றுவது அங்கு அரசியல் எவ்வளவு ஊடுருவியுள்ளது என்பதற்கான அத்தாட்சியே!
இந்தப் போக்கை ஆதரித்துப் பேசுபவர்கள் சொற்ப எண்ணிக்கையில் இருந்தாலும் அதிகார மையத்துக்கு நெருக்கமாகவும் உரத்துப் பேசக்கூடிய அந்தஸ்துடையவர்களாகவும் இருக்கிறார்கள். ஒரு கணக்கெடுப்பு எடுத்தீர்களானால், இத்தகைய அபத்தங்களை எதிர்த்து நிற்கும் அறிவியலாளர்களின் எண்ணிக்கைதான் அதிகம் என்பது தெரியவரும்!