மிரட்டும் மேகேதாட்டு!- டெல்லியை முற்றுகையிடும் இரு மாநில தலைவர்கள்


கரு.முத்து
muthu.k@kamadenu.in

தமிழகம் முழுவதுமே பரவலாக மழைபெய்து மண் குளிர்ந்திருக்கிறது. ஆனால், மேகேதாட்டு அணை விவகாரத்தால் தமிழக விவசாயிகளும், அரசியல் கட்சிகளும் அனலாகத் தகித்துக்கொண்டிருக் கிறார்கள். எப்போதுமே சாத்வீக வழியில் போராடும் தமிழக விவசாயிகளோ, கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் உருவ பொம்மையை எரிக்கும் அளவுக்குக் கோபத்தில் கொந்தளிக்கிறார்கள்.

தொடங்கிய பணிகள்

பெங்களூரு மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்திசெய்யவே காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் புதிய அணை கட்டுவதாகக் கர்நாடகம் சொல்கிறது. இதற்காக 9 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கி, அணை கட்டுவதற்கான பூர்வாங்க வேலைகளையும் அம்மாநில அரசு தொடங்கியிருக்கிறது.

முதல்வர் எடியூரப்பாவும், அம்மாநில அமைச்சர்களும் அணையைக் கட்டியே தீருவோம் என்று சூளுரைத்துள்ள நிலையில், எதிர்க்கட்சியான காங்கிரஸிலிருந்தும் அணைக்கு ஆதரவான குரல் எழுந்திருக்கிறது. மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே சிவக்குமார், அணை கட்டும் பணிகளை உடனே தொடங்க வேண்டும் என்றும், இதில் தாங்கள் அரசின் பக்கம் நிற்பதாகவும் முழங்கியிருக்கிறார்.  மத்திய அரசின் அனுமதிக்காக கர்நாடகம் காத்திருக்கிறது. மத்திய அரசின் கரிசனப் பார்வையும் அவர்கள் பக்கமே இருப்பதுதான் தமிழகத்தைக் கோபத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

அரசியல் ஆதாயம்

இதுகுறித்து காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் தஞ்சை மாவட்டச் செயலாளரான சுவாமிமலை சுந்தரவிமல்நாதனிடம் பேசினோம். “கர்நாடகத்தில் ஏற்கெனவே நான்கு மிகப் பெரிய அணைகள் இருக்கும்போது ஐந்தாவதாக மேகேதாட்டுவில் புதிய அணையைக் கட்ட வேண்டிய தேவை இல்லை. அரசியல் ஆதாயத்துக்காகவே இதைச் செய்கிறார்கள். பெங்களூருவின் குடிநீர்த் தேவைக்காக அணை கட்டுவதாக கர்நாடகம் சொன்னாலும் அது உண்மையில்லை.

நடுவர் மன்றத் தீர்ப்பில் கொடுக்கப்பட்ட 205 டிஎம்சி நீரை பெங்களூருவின் குடிநீர்த் தேவை உள்ளிட்ட எல்லா காரணிகளையும் ஆராய்ந்து, அவற்றிற்காக சில டிஎம்சியை குறைத்துக்கொண்டு வெறும் 182 டிஎம்சி-யை மட்டும் கர்நாடகம் தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே, பெங்களூருவின் குடிநீர்த் தேவை என்ற காரணம் ஆரம்பத்திலேயே அடிபட்டுவிடுகிறது. அதுமட்டுமில்லாமல் அந்நகரில் குடிநீர் தட்டுப்பாடு என்றோ, கர்நாடகத்தின் இதர பகுதிகளில் விவசாயத்துக்குத் தண்ணீர் தட்டுப்பாடு என்றோ எந்தப் பிரச்சினையும் அங்கு எழவில்லை” என்றார் அவர்.

திசைதிருப்பும் முயற்சி

அவர் சொல்வது உண்மைதான். கர்நாடகத்தில் ஏதாவது அரசியல் சிக்கல் என்றால் அது காவிரியில்தான் பிரதிபலிக்கிறது. இப்போது அங்கு எடியூரப்பாவுக்கு பாஜகவுக்குள்ளேயே கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது. கட்சியே பிளவுபடும் சூழல் உருவாகியிருக்கிறது. அதையெல்லாம் சமாளிக்கத்தான் அவர் மேகேதாட்டு அணை விவகாரத்தை கையிலெடுத்திருக்கிறார். எடியூரப்பா மட்டுமல்ல, கர்நாடகத்தை எந்தக் கட்சி ஆண்டாலும் யார் முதல்வராக இருந்தாலும் தங்களுக்கோ, தங்கள் ஆட்சிக்கோ சிக்கல் வரும்போது மக்களின் அதிருப்தியை சமாளிக்க காவிரியைக் கையிலெடுப்பதை வழக்கமாகவே வைத்திருக்கிறார்கள்.

கடந்த கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்டது போன்ற தொங்கலான நிலை மீண்டும் ஏற்பட்டுவிடாமல், எதிர்வரும் தேர்தலில் பெரும்பான்மைக்கான இடங்களைப் பெற்றுவிட வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. வரும் மக்களவைத் தேர்தலில் தென் மாநிலங்களில் அதிக இடங்களைக் கைப்பற்ற உத்தேசித்திருக்கும் பாஜக, தாங்கள் வலுவாக இருக்கும் கர்நாடகத்தில் அதிக இடங்களில் வெற்றிபெற வேண்டும் என்று திட்டமிடுகிறது. அதற்கு காவிரி விவகாரமும் கைகொடுக்கும் என்று அக்கட்சி நம்புகிறது.

அதேபோல், அடுத்த தேர்தலில் எப்படியேனும் ஆட்சியமைக்கத் தேவையான இடங்களைப் பெற வேண்டும் என்று அங்கு காங்கிரஸ் கட்சியும் முனைப்பு காட்டிவருகிறது. அதன் விளைவாகவே டி.கே.சிவக்குமாரும் மேகேதாட்டு அணைக்கு ஆதரவாகப் பேசிவருகிறார்.

ஒன்றுகூடிய தமிழகக் கட்சிகள்

இவ்விவகாரத்தில், கர்நாடகத்தைப் போலவே தமிழகத்திலும் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டிருப்பது ஆறுதலான விஷயம். முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக டெல்லி சென்ற மு.க.ஸ்டாலின், மேகேதாட்டு அணைக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று பிரதமரிடம் வலியுறுத்தினார். பின்னர் தமிழக சட்டப்பேரவைக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி, மேகேதாட்டு அணைக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பைக் கேட்டுப் பெற்றிருக்கிறார். அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் குழு ஜூலை 16-ம் தேதி டெல்லி சென்று மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தைச் சந்தித்திருக்கிறது. மேகேதாட்டு அணைக்கு அனுமதி வழங்கக் கூடாது என்றும் அவரிடம் மனு அளித்துள்ளது. முன்னதாக மத்திய நீர்வளத் துறை அமைச்சரிடம், தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகனும் இதே கோரிக்கையை வலியுறுத்தினார்.

தமிழக அனைத்துக்கட்சிக் குழு டெல்லி சென்ற அதேநாளில், தனது அமைச்சரவை சகாக்களுடன் டெல்லி சென்ற எடியூரப்பா, பிரதமர் உள்ளிட்டவர்களைச் சந்தித்து மேகேதாட்டு அணைக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதோடு, அடிக்கல் நாட்டுவதற்குப் பிரதமர் வரவேண்டும் என்றும் அழைத்ததாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இதையடுத்து தமிழக முதல்வர் ஸ்டாலினும் ஜூலை 19-ல் டெல்லியில் பிரதமர், குடியரசு தலைவர் உள்ளிட்டோரைச் சந்திக்கப்போவதாகத் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டரீதியான சாதகம்

தமிழகத்தின் சம்மதம் இல்லாமல் காவிரியின் குறுக்கே புதிய அணை எதையும் கர்நாடகம் கட்ட முடியாது என்பதும், உச்ச நீதிமன்றத்தில் இதுகுறித்த வழக்கு நிலுவையில் இருப்பதும் தமிழகத்துக்குச் சாதகமான விஷயங்கள். தமிழக அரசின் கருத்தையும் கேட்டுத்தான் இந்த விஷயத்தில் முடிவெடுக்கப்படும் என்று மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கூறியிருப்பதும் ஆறுதல் அளிக்கக் கூடியதுதான். ஆனாலும், “அதெல்லாம் சட்டத்தை மதிப்பவர்களுக்குத்தானே? கர்நாடக அரசோ உச்ச நீதிமன்றம், நடுவர் மன்றம், காவிரி மேலாண்மை வாரியம் ஆகிய எதையுமே மதிப்பதில்லையே” என்கிறார்கள் விவசாயிகள்.

விவசாயிகளின் வேதனையை உணர்ந்துள்ள முதல்வர் ஸ்டாலின், மேகேதாட்டுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிகளைத் தடுத்து நிறுத்துவோம் என்று உறுதிபடக்கூறி, அதற்கான செயல்பாடுகளிலும் தீவிரமாக இறங்கியிருக்கிறார். இப்போதைக்குத் தமிழக விவசாயிகளின் ஒரே நம்பிக்கையும் அதுதான்!

மத்திய நீர்வளத் துறை அமைச்சர் சொன்னது என்ன?

டெல்லி சென்றிருக்கும் தமிழக அரசியல் கட்சித் தலைவர்களில் ஒருவரான மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் இதுகுறித்துப் பேசினோம். “நாங்கள் மத்திய நீர்வளத் துறை அமைச்சரைச் சந்தித்துப் பேசியபோது, மேகேதாட்டு அணை கட்டுவதற்கான ஆய்வுக்கு அனுமதி கொடுத்தது தவறு என்று அவரிடம் சுட்டிக் காட்டினோம். அதற்கு பதிலளித்த அமைச்சர், ‘மேகேதாட்டு அணை கட்டுவது என்றால் தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களிடம் ஒப்புதல் பெற வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்திடம் அனுமதி பெற வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளுடன்தான், அதுவும் ஆய்வுக்காகத்தான் கர்நாடகத்துக்கு அனுமதி வழங்கினோம். மற்றபடி அணை கட்டுவதற்கான அனுமதி வழங்கப் படவில்லை. கர்நாடகத்தின் அண்டை மாநிலங்களின் ஒப்புதல் இன்றி அனுமதி வழங்கப்படாது’ என்று உறுதியளித்தார்” என்றார் பாலகிருஷ்ணன்.

x