சினிமா சிற்பிகள் - 1: ஜார்ஜ் மிலியஸ் எனும் மாயாஜாலக்காரர்


நாம் காணும் இன்றைய உலகத்தை, சமூக மாண்பை, நாகரிகத்தை, அரசியல் பார்வையை வடிவமைத்ததில் திரைப்படத்தின் பங்கு பெரியது. மானுட வாழ்க்கையின் மீது சினிமாவின் வீச்சைப் புரிந்துகொள்ள சினிமாவை மட்டும் பார்க்காமல், அதன் உருவாக்கத்தின் ஆதாரப் புள்ளியாக இருக்கும் இயக்குநர்களைப் படிக்கும்போதே சினிமாவின் பல பரிமாணங்களை உணர முடியும்.

1895-ல் லூமியர் சகோதரர்கள் தங்களுடைய ‘சினிமோடோகிராப்’ கருவியை அறிமுகப்படுத்தியதே, நவீன சினிமாவின் தொடக்கப் புள்ளி. அதிலிருந்து இன்றுவரை சினிமாவின் வளர்ச்சிக்குப் பங்களித்த, அற்புதமான படைப்புகளை மனிதகுலத்துக்கு வழங்கிய திரை மேதைமைகளைப் பற்றி இத்தொடரில் காணலாம்.

தொடக்கப்புள்ளிவைத்த மாயாஜால வித்தகர்

சினிமாவை ஒரு மாயக்கலை என்று நாம் சொல்லுவது உண்டு. இன்றைய சினிமாவின் வளர்ச்சிக்கு ஆரம்பப் புள்ளியாக இருந்தவர்களில் மிக முக்கியமானவரே, ஒரு மாயாஜால வித்தகர்தான். 1861 டிசம்பர் 8-ல், பாரிஸ் நகரில் காலணி தயாரிக்கும் குடும்பத்தில் மூன்றாவது மகனாகப் பிறந்த ஜார்ஜ் மிலியஸ்தான் இன்றைக்கு சினிமாவில் பயன்படுத்தும் எடிட்டிங், மல்டிபிள் எக்ஸ்போஷர், ஸ்டாப் ட்ரிக் போன்ற பல நுணுக்கங்களை உருவாக்கியவர். அறிவியல் புனைகதைகள், மாயாஜாலக் கதைகளின் முன்னோடியே ஜார்ஜ் மிலியஸ்தான். அவருடைய கணிக்க முடியாத மவுனப் படக்காட்சிகளைப் போலவே சுவாரசியமானது, அவரது திரை வாழ்க்கை.

கல்லூரிப் படிப்பை முடித்த பின் மாயாஜால வித்தகர் ஆகும் பயிற்சியில் கற்றுத் தேர்ந்த மிலியஸ், தன் குருவிடமிருந்து ‘தியேட்டர் ராபர்ட் ஹூடின்’ அரங்கை விலைக்கு வாங்கி, மாயாஜாலக் காட்சிகளை நடத்த ஆரம்பித்தார். 1895-ல் லூமியர் சகோதரர்களுடைய ‘சினிமாடோகிராப்’ கருவியின் செயல்விளக்கத்தை நேரில் பார்த்த மிலியஸ், இக்கருவியைக் கொண்டு பல மாயாஜால வித்தைகள் செய்யலாம் என்பதை உணர்ந்து, லூமியர் சகோதரர்களிடம் அக்கருவியை 10 ஆயிரம் பிராங்குகளுக்கு விலைக்குத் தருமாறு கேட்டார். அவர்களோ, தங்கள் கண்டுபிடிப்பை தற்போது விற்பதாக இல்லை என்று கூறினர். மனம் தளராத மிலியஸ் தேடியலைந்து, ராபர்ட் பால் என்பவர் உருவாக்கிய அனிமோடோகிராப் என்ற திரைப்பட புரொஜக்டர் கருவியை வாங்கினார். இங்குதான் மிலியஸின் அசாத்திய திறமை வெளிப்பட்டது. திரைப்படத்தை ஒளிக்கோர்வையாக வெளியிடும் அக்கருவியைத் தானே மாற்றி அமைத்து, அதைப் படம் பிடிக்கும் கேமராவாக மாற்றினார்.

ஆரம்ப காலங்களில், லூமியர் சகோதரர்கள் எடுத்த காணொலித் துணுக்குகளைக் காப்பி அடித்தே எடுத்தார் மிலியஸ். எனினும், குறுகிய காலத்தில் தனக்கென தனி பாணியைத் திரைமொழியில் கையாள ஆரம்பித்தார். ஆரம்பத்தில் உருவான படங்கள் பெரும்பாலும் 1 நிமிடம் முதல் 5 நிமிடம் வரை ஓடக்கூடிய காணொலித் துணுக்குகள் மட்டுமே. அதுவும் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளின் பதிவுகளே. இப்படி இருக்கையில், ஸ்டார் ஃபிலிம் கம்பெனி என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து, தன்னுடைய மாயாஜால வித்தைகளைக் கேமராவில் பதிவுசெய்து அதைத் திரையிட்டு பார்வையாளர்களைக் கவர்ந்தார் மிலியஸ்.

விபத்தில் கிடைத்த அறிவு

ஒருமுறை பாரிஸ் தெருக்களை மிலியஸ் படம் பிடித்துக்கொண்டிருந்தபோது, அவரது கேமரா சில மணித்துளிகள் நின்றுவிட்டது. கேமராவை ஓங்கித் தட்டி மீண்டும் ஓடச் செய்தார் மிலியஸ். எடுத்த காட்சிகளைத் திரையில் ஓட்டிப் பார்த்தபோது அதிசயித்துப் போனார். கேமரா நிற்பதற்கு முன்பு இருந்த காட்சியில் உள்ள பெண்கள் எல்லாம் ஆண்களாகவும், போக்குவரத்து வாகனம் அமரர் ஊர்தியாகவும் அடுத்த காட்சியில் மாறியதையும் பார்த்து என்ன நடந்துள்ளது என்பதை மிலியஸ் புரிந்துகொண்ட அந்தத் தருணமே, சினிமாவில் இன்று பயன்படுத்தப்படும் ‘ஸ்டாப் ட்ரிக்’ முறை உருவான தருணம். காட்சியில் சில கதாபாத்திரங்கள் சட்டென்று மறைவது, ஒரு கதாபாத்திரம் மின்னல் நொடியில் வேறொரு உருவம் எடுப்பது எல்லாம் இந்த முறையைப் பயன்படுத்தித்தான்.

அதற்குப் பிறகு புதுப் புது கேமராக்கள் வர, மிலியஸ் பல பரிசோதனைகளைச் செய்து புதிய நுணுக்கங்களை உருவாக்கினார். ஒரே காட்சியில், ஒரே நபரைப் பல்வேறு கதாபாத்திரங்களாகத் தோன்றச் செய்யும் முறையின் மூலம் அவர் உருவாக்கிய காணொலி துணுக்கான ‘ஒன் மேன் பாண்ட்’ அக்காலகட்டப் பார்வையாளர்களை வாய் பிளக்க வைத்தது. அதில், ஒரே காட்சியில் வரிசையாக ஏழு நாற்காலிகளில் அமர்ந்து இசைக் கச்சேரி நடத்துவார். இது மல்டிபிள் எக்ஸ்போஷர் என்ற முறையில் எடுக்கப்பட்ட காட்சி. ஒரு காட்சிப் பதிவான படச்சுருளை மறுபடியும் ஓட்டி அதன்மேல் வேறு காட்சியைப் பதியும் முறை இது. இதையே மெருகேற்றி ‘மாஸ்க்கிங்’ முறையையும் உருவாக்கினார் மிலியஸ். அதாவது, படச்சுருளின் ஒரு பகுதியை டேப் ஒட்டி மறைத்துவிட்டு ஒரு காட்சியை எடுக்க வேண்டும். இப்போது, எடுக்கப்பட்ட காட்சிகள் இருக்கும் படச்சுருள் பகுதியை டேப் ஒட்டிவிட்டு முன்பு மறைத்த பகுதியில் இருக்கும் டேப்பை அகற்றிவிட்டு அதே படச்சுருளில் இன்னொரு காட்சியை எடுக்க வேண்டும். இந்த முறையைப் பயன்படுத்தி ஒரே காட்சியில் ஒரு பாதியில் பொங்கும் கடலையும், இன்னொரு பகுதியில் வறண்ட பாலைவனத்தையும் காட்ட முடியும்.

கேமரா சிக்கல்களுக்குத் தீர்வு

தொழில்நுட்பம் எவ்வளவு வளர்ந்தாலும் கேமராவில் சில சிக்கல்கள் உள்ளன. கதாபாத்திரத்துக்கு முன்னாள் கேமராவை வைத்து படம் பிடிக்கும்போது, கேமராவை இடம் வலமாக நகர்த்திக்கொள்ளலாம். ஆனால், கதாபாத்திரத்தை நோக்கி கேமராவை நகர்த்தினால், ‘ஃபோகஸ் பாயின்ட்’ அதாவது காட்சியின் குவியப் புள்ளி மாறி காட்சி மங்கலாகிவிடும். அதற்காகவே தற்பொழுதும்  கேமராவை கதாபாத்திரத்தை நோக்கி நகர்த்தும் போது, ஃபோகஸ் மாறாமல் இருக்க ஒருவர் கேமரா லென்ஸில் உள்ள ஃபோகஸ் வளையத்தைச் சரி செய்து கொண்டே இருப்பார். அவருக்குப் பெயர் ‘ஃபோகஸ் புல்லர்’.

கேமராவை முன்னும் பின்னும் நகர்த்துவதால் ஒரு பொருள் அல்லது கதாபாத்திரத்தின் அளவைப் பெரிதுபடுத்தியும், சிறியதாகவும் காட்டலாம் என்று உணர்ந்த மிலியஸ் கேமராவைச் சரியான அச்சில் நகர்த்த ஒரு இயந்திர நாற்காலியையும் உருவாக்கினார். இந்த வழிமுறையையும், மாஸ்க்கிங் வழிமுறையையும் பயன்படுத்தி தன் தலைக்குக் காற்று அடித்து பெரியதாக ஆக்குவது போல் அவர் எடுத்த குறும்படம்தான் ‘தி மேன் வித் தி ரப்பர் ஹெட்’.

காலத்தை முந்தி நின்ற மிலியஸ்

வண்ணத் திரைப்படங்களின் முன்னோடியும் மிலியஸ்தான். பொதுவாகக் கேமராக்கள் ஒரு நொடிக்கு 24 ஃப்ரேம்கள் என்று காட்சிகளைப் பதிவு செய்யும். கறுப்பு வெள்ளையில் காட்சிகளை எடுத்து முடித்துவிட்டு, எடுத்த படச்சுருளைப் பரிசோதனைக் கூடத்தில் வைத்து ஒரு ஒரு ஃப்ரேமாக வண்ணம் தீட்டினார் மிலியஸ். அதாவது ஒரு நொடிக் காட்சியை வண்ணமாகக் காட்ட 24 ஃப்ரேம்களுக்கு ஒரே மாதிரியாக வண்ணம் பூச வேண்டும். ஒரு நிமிட காட்சிக்கு 1,440 ஃப்ரேம்கள். மலைப்பாகத் தோன்றும் இவ்விஷயத்தைக் கச்சிதமாகச் செய்து வண்ணங்களைத் திரையில் வார்த்தெடுத்தார் மிலியஸ். மனிதன் 1969-ல் தான் முதன்முறையாக நிலவுக்குப் போனான்.

ஆனால், மிலியஸ் தன் திரைப்படத்தின் மூலம் 1902-ம் ஆண்டே மனிதனை நிலவுக்கு அனுப்பினார். அவருடைய ‘எ ட்ரிப் டூ தி மூன்’ திரைப்படம், அவரை உலகம் முழுக்க புகழ்பெறச் செய்தது. அந்தப் படத்தைப் போன்றே திரையம்சம் கொண்ட ‘தி இம்பாசிபிள் வாயேஜ்’ திரைப்படமும் திரை அதிசயம்தான்.

தீக்கிரையான படைப்புகள்

1914-ல் முதல் உலகப்போரின்போது பொருளாதார ரீதியாகப்பெரிதும் பாதிக்கப்பட்டார் மிலியஸ். கடன் சுமை காரணமாக மனமுடைந்துபோய், தான் எடுத்த பல படங்களின் படச்சுருள்களைநெருப்பில் போட்டுக் கொளுத்தினார். போர் நெருக்கடியில் தன்னுடைய இருப்பிடத்தையும், திரையரங்கையும் கைவிட்டு வெளியேறி தன் குடும்பத்துடன் ரயில்வே நிலையம் ஒன்றில் பொம்மைக் கடை போட்டு தன் வாழ்க்கையை ஓட்டினார். அவரது திரைப்பட அரங்கைக் கைப்பற்றி, காயமுற்ற ராணுவ வீரர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையாக பிரெஞ்சு ராணுவம் மாற்றியது. மிலியஸின் பல படச்சுருள்கள் வெள்ளி மற்றும் செல்லுலாய்ட் எடுப்பதற்காக தீக்கிரை யாக்கப்பட்டன. மிலியஸ் எடுத்த ஆயிரத்துக்கும் அதிகமான திரைப்பதிவுகளில் இன்று எஞ்சி இருப்பது 200-க்கும் குறைவான பதிவுகளே.

போருக்குப் பிறகு 1924-ல் மிலியஸை தேடிக்கண்டுபிடித்தார் மைக்கேல் கோசைக் என்ற பத்திரிகையாளர். மிலியஸின் படங்கள் ஆவணப்படுத்தப்பட்டு அவருக்கான அங்கீகாரம் தரப்பட்டது. பிரான்ஸ் அரசின் உயரிய ‘செவாலியே விருது’ மிலியஸுக்கு வழங்கப்பட்டது. இதை அடிப்படையாகக் கொண்டு, 2011-ல் மார்டின் ஸ்கார்சசி இயக்கத்தில் ‘ஹியூகோ’ என்ற திரைப்படமும் எடுக்கப்பட்டது. என்ன நடந்தாலும் பெரும் கடன் சுமையிலிருந்த மிலியஸின் கடைசிக்காலம் வறுமையில் தான் உழன்றது. இறுதியில், 1938 ஜனவரி 21-ல் தனது 76-வது வயதில் புற்றுநோய்க்குப் பலியானார் மிலியஸ்.

இன்று சினிமாவில் சூப்பர் ஹீரோக்கள் சீறிப்பாயும் போதும், டைனோசர்களும், கிங்காங்கும் கர்ஜிக்கும்போதும் இதற்கெல்லாம் ஆரம்பப் புள்ளி... ஜார்ஜ் மிலியஸ் என்ற மாமேதை வைத்தது என்று நினைத்துப் பார்ப்பதைவிட, அவருக்கு வெறென்ன சிறப்பான அஞ்சலி செலுத்திவிட முடியும் நம்மால்?

மிலியஸ் படைப்பில் முத்திரை பதித்தவை!

* A Trip to the Moon
* The Impossible Voyage
* Humanity  Through  Ages
* Gulliver's  Travels  Among  the  Lilliputians  and the  Giants
* Rip's  Dream

x