வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in
கையறு நிலையில் தவித்துக்கொண்டிருக்கிறார்கள் ஆப்கானியர்கள். ஒருபுறம், ஆப்கானிஸ்தானில் தங்கியிருந்த அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியிருக்கின்றன. மறுபுறம், அதை நல்வாய்ப்பாகக் கருதி தாலிபான்கள் மீண்டும் தலையெடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். கூடவே மின்சாரம், இணையம் என நவீன உலக வாழ்க்கைக்கு அடிப்படையான கட்டமைப்புகளையும் தகர்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஆம்! மீண்டும் இருண்டகாலத்தை நோக்கி ஆப்கன் மக்களை அந்தப் பழமைவாத பயங்கரவாதிகள் தள்ளுகிறார்கள்.
அமெரிக்கப் படைகளின் வருகை
2001 செப்டம்பர் 11-ல், உலக வர்த்தக மையம் உட்பட அமெரிக்காவின் முக்கிய தலங்கள் மீது தாக்குதல் நடத்தி உலகை அதிரவைத்தது அல் கொய்தா. அப்போது ஆப்கனில் ஆட்சியில் இருந்த தாலிபான்களின் ஆதரவில் செழித்திருந்த அல் கொய்தா அமைப்பை ஒழித்துக்கட்ட, அமெரிக்க ராணுவத்தினர் அடங்கிய நேட்டோ படைகள் ஆப்கனில் வந்திறங்கின. தாலிபான்களின் ஆட்சி அகற்றப்பட்டு அமெரிக்க ஆதரவு ஆட்சியாளர்களின் வசம் ஆப்கன் வந்தது. எனினும், ஆப்கனில் அமைதி முற்றிலுமாகத் திரும்ப வாய்ப்பளிக்காமல் தாலிபான்கள் அவ்வப்போது தாக்குதல் நடத்திவந்தனர்.
ட்ரம்ப் காலத்திலேயே அமெரிக்கா தனது படைகளைக் குறைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளை தொடங்கிவிட்ட நிலையில், அவருக்குப் பின் அதிபரான ஜோ பைடன் ஆகஸ்ட் இறுதிக்குள் ஆப்கனிலிருந்து முழுமையாகப் படைகளைத் திரும்பப் பெற முடிவெடுத்துவிட்டார். காபூலில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தையும், விமான நிலையத்தையும் பாதுகாப்பதற்காகத் தங்கியிருக்கும் 650 அமெரிக்க வீரர்களைத் தவிர வெளிநாட்டு ராணுவத்தினர் யாரும் ஆப்கனில் இருக்கப்போவதில்லை. மறுபுறம், செப்டம்பர் 11-ம் தேதிக்குள் வெளிநாட்டுப் படைகள் அனைத்தும் வெளியேறிவிட வேண்டும் என்று தாலிபான்களும் எச்சரித்திருக்கிறார்கள்!
பலம் பெற்றிருக்கும் தாலிபான்கள்
“அமெரிக்காவின் ஆதரவு இல்லையென்றால், பயங்கரவாதிகளை எதிர்க்க முடியாமல் ஆறு மாதங்களுக்குள் ஆப்கன் ராணுவமே காலியாகிவிடும். அரசும் கவிழ்ந்துவிடும்” என்று அதிபர் அஷ்ரஃப் கனியே சில ஆண்டுகளுக்கு முன் அச்சம் தெரிவித்திருந்தார். அதேபோல், ஏப்ரல் மாதம் அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கிய சமயத்தில், “இதைப் பயன்படுத்திக்கொண்டு தாலிபான்கள் தாக்குதலைத் தொடங்கியிருக்கிறார்கள். வன்முறை மூலம் ஆட்சியைப் பிடிக்கவும் அவர்கள் முயல்வார்கள்” என்று ஆப்கன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹம்துல்லா மோஹிப் சுட்டிக்காட்டியிருந்தார். கிட்டத்தட்ட அதுதான் தற்போது நடந்துகொண்டிருக்கிறது.
பல இடங்களில் தாலிபான்களுடன் சண்டையிட பயந்து ஆப்கன் ராணுவப் படையினர் பலர் பின்வாங்கிவிட்டார்கள். பலர் அண்டை நாடான தஜிகிஸ்தானுக்கு ஓடிவிட்டார்கள். அந்த அளவுக்குத் தாலிபான்கள் முன்பைவிட அதிக பலத்துடன் இருக்கிறார்கள். இத்தனை ஆண்டுகளாக அமெரிக்கப் போர் விமானங்களின் கண்காணிப்பில் தரையில் போரிடும் துணிச்சலைப் பெற்றிருந்த ஆப்கன் படைகள், தற்போது தார்மிக ரீதியில் பலவீனமடைந்திருப்பதிலும் வியப்பில்லை.
தலைநகர் காபூலைச் சுற்றியிருக்கும் மாகாணங்களைத் தாலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவந்துவிட்டனர். விரைவில் காபூலும் வீழ்ந்துவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. முன்பு தெற்குப் பகுதியில் ஆதிக்கம் செலுத்திவந்த தாலிபான்கள் தற்போது வடக்குப் பகுதிகளையும் கைப்பற்றிவிட்டனர். தெற்கில் உள்ள கந்தஹாரையும் அவர்கள் கைப்பற்றுவார்கள் எனக் கருதப்படுகிறது. தாலிபான் அமைப்பின் பிறப்பிடமாகக் கருதப்படும் கந்தஹார் மீண்டும் அந்த அமைப்பின் வசம் சென்றுவிட்டால், தார்மிக ரீதியாக தாலிபான்கள் மேலும் பலம் பெற்றுவிடுவார்கள். ஒருவேளை, தாலிபான்கள் ஆட்சிக்கு வராமல் தடுக்கப்பட்டாலும் உள்நாட்டுப் போர் உக்கிரமாக நடக்கும் எனும் சூழல்தான் நிலவுகிறது.
சர்வதேச எதிர்வினைகள்
ஆப்கன் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் இந்தியாவின் பங்களிப்பைத் தவிர்க்க, பாகிஸ்தான் தன்னாலான முயற்சிகளை எடுத்துவருகிறது. இத்தனைக்கும் மத்தியில் உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கென்ட்டில் அதிபர் அஷ்ரப் கனியைச் சந்தித்துப் பேசியிருக்கிறார் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர். கத்தார் தலைநகர் தோஹாவில் தாலிபன்களுடனான பேச்சுவார்த்தையிலும் ஆப்கன் அரசு ஈடுபட்டிருக்கிறது.
சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், ஈரான் போன்ற நாடுகள் இவ்விஷயத்தில் தங்கள் சுயநலன் சார்ந்து காய்நகர்த்தி வருகின்றன. ஜின் ஜியாங் மாகாணத்தைச் சேர்ந்த உய்குர் முஸ்லிம்கள் தாலிபான்களால் தாக்கம் பெற்றுவிடக்கூடாது எனும் கவலை சீனாவுக்கு உண்டு. அப்படி ஏதும் நடக்காது என்று தாலிபான்கள் சீனாவுக்கு உறுதியளித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. தனது ‘ஒரு பாதை, ஒரு சாலை’ வணிகத் திட்டம் ஆப்கனில் தடைபட்டுவிடக் கூடாது என்றும் சீனா அஞ்சுகிறது.
தாலிபான்கள் மீது ராணுவ ரீதியான நடவடிக்கைகள் எதையும் எடுக்கப்போவதில்லை என்று ரஷ்யாவும் கூறியிருக்கிறது. ஈரானும் ரஷ்யாவும் கடந்த பல ஆண்டுகளாகவே தாலிபான்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கின்றன. ஆப்கன் குறித்த மேற்கத்திய நாடுகளின் பார்வையும் மாறியிருக்கிறது. தாலிபான்கள் ஆட்சிக்கு வந்துவிட்டால், அவர்களுடன் ராஜதந்திர ரீதியிலான உறவை வைத்துக்கொள்வதில் பிரிட்டன் உட்பட பல நாடுகளிடம் எந்தத் தயக்கமும் இருக்காது என்பதே நிதர்சனம்.
கடந்த 20 வருடங்களில் தாலிபான்களின் உலகப் பார்வை மாறியிருக்கிறதா அல்லது அதே பழமைவாதச் சிந்தனைகளில் அவர்கள் மூழ்கியிருக்கிறார்களா என்று கணிக்க முடியவில்லை. எனினும், பயங்கரவாத அமைப்பான அல் கொய்தாவுடனான நெருக்கத்தை தாலிபான்கள் இன்று வரைதொடர்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.
நாசமாக்கிய அமெரிக்கர்கள்
அமெரிக்க ராணுவத்துக்கு இத்தனை ஆண்டுகளாக உதவிவந்த ஆப்கானியர்களையும் நாட்டைவிட்டு பத்திரமாக வெளியேற்றும் பணிகள் தொடங்கியிருக்கின்றன. ஆனால், மீதம் உள்ள ஆப்கானியர்களின் நிலைமை என்னவாகும் என்று யாராலும் சொல்ல முடியவில்லை. தற்காப்புக்காகப் பல இடங்களில் பொதுமக்களே துப்பாக்கியை ஏந்தத் தொடங்கியிருக்கின்றனர்.
வெளியேறும் அமெரிக்கப் படைகள் தாங்கள் பயன்படுத்திய வாகனங்கள், சாதனங்களை உடைத்து நொறுக்கிய வடிவத்தில்தான் விட்டுச்செல்கின்றன. பழைய பொருட்களை வாங்கும் வியாபாரிகளிடம் அவை விற்கப்படுகின்றன. பயங்கரவாதிகளின் கைகளில் அவை கிடைத்துவிடக் கூடாது என்பது அமெரிக்க ராணுவத்தின் நோக்கம் என்கிறார்கள். ஆனால், கண்ணி வெடிகளை அகற்றும் சாதனங்கள் போன்றவை தங்கள் வசம் ஒப்படைக்கப்படும் என்று காத்திருந்த ஆப்கன் ராணுவம் செய்வதறியாது திகைத்து நிற்கிறது.
எல்லாவற்றையும் தாண்டி, “தங்கள் வாகனங்களைச் சிதைப்பதுபோல எங்கள் வாழ்க்கையையும் சிதைத்துவிட்டார்கள் அமெரிக்கர்கள்” என ஆப்கானியர்கள் குமுறிக்கொண்டிருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானின் கட்டமைப்புக்கு உதவுவதாகச் சொல்லி வந்தவர்கள், குப்பைக்கூளங்களைத்தான் விட்டுச் செல்கிறார்கள் என்று அவர்கள் புலம்புகிறார்கள்.
வரலாறு ஏன் தான் இப்படி ஆப்கனை வதைக்கிறதோ என்று, மனசாட்சியுள்ள உலக மக்கள் வருத்தத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்!
என்ன செய்யும் இந்தியா?
ஆப்கனுக்கும் இந்தியாவுக்கும் இடையில் எப்போதும் ஒரு நட்பிழை தொடர்கிறது. கரோனா தடுப்பூசிகளை இந்தியா முதல் வேலையாக அனுப்பி வைத்தது ஆப்கனுக்குத்தான். எனவேதான், அந்நாட்டில் ஏற்பட்டிருக்கும் பதற்றச் சூழல் இந்தியாவையும் பதறவைத்திருக்கிறது.
தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேயில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் பேசிய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், “ஆப்கானிஸ்தானின் எதிர்காலம் அதன் கடந்த காலத்தைப் போல் அமைந்துவிடக் கூடாது. முற்றிலும் புதிய தலைமுறை ஆப்கானியர்கள் அங்கு வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்குப் பல்வேறு எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. அவர்களை நாம் பின்னடையச் செய்துவிடக் கூடாது. வன்முறை மூலமாகவும், வலுக்கட்டாயமாகவும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதை உலகம் எதிர்க்கிறது” என்று கூறியிருக்கிறார்.
1989-ல் ஆப்கானிஸ்தானிலிருந்து ரஷ்யப் படைகள் வெளியேறிய பின்னர், முஜாஹிதீன்கள் காஷ்மீர் வரை தாக்கம் செலுத்தினர். அதன் பின்னணியில் பாகிஸ்தானின் பங்கும் இருந்தது. அதுபோன்ற சூழல் மீண்டும் உருவாகுமோ எனும் அச்சம் இந்தியாவிடம் இருக்கிறது. தாலிபான்கள் ஆட்சிக்கு வந்துவிட்டால், ஆப்கனின் கட்டமைப்புப் பணிகளில் செய்துவந்த முதலீடுகள் முடங்கிவிடுமோ என்றும் இந்தியா கவலைப்படுகிறது. அமெரிக்காவே கைகழுவிவிட்ட பின்னர், இந்தியா மிகுந்த எச்சரிக்கையுடன் தான் இனி ஆப்கனுடனான உறவைப் பேண வேண்டியிருக்கும்.