வானம் வசப்படும் என நினைப்பது எழுத்தாளர்களும் கவிஞர்களும் மட்டும் அல்ல; வானியல் அறிஞர்களும்தான். ஆரம்பத்தில் வெறும் கண்களாலும், பின்னர் தொலைநோக்கிகளாலும் வான வெளியில் தேடியவர்கள், அறிவியல் நிகழ்த்திக்கொண்டிருக்கும் பாய்ச்சலால், இப்போது ஏ.ஐ துணையோடு பிரபஞ்சம் வசப்படும் எனும் முனைப்போடு ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆம், அறிவியலின் ஆரம்பகாலத் துறைகளில் ஒன்றான வானியலிலும் ஏ.ஐ நுட்பத்தின் தாக்கம் தீவிரமாக இருக்கிறது. ஆர்யபட்டா, கலீலியோ, கோபர்நிகஸ், கெப்லர் போன்ற வானியல் அறிஞர்கள் வளர்த்தெடுத்த துறையில் ஆய்வில் ஈடுபட்டுள்ள இக்கால விஞ்ஞானிகள், அதிநவீன தொலைநோக்கிகளோடு, ஏ.ஐ நுட்பங்களையும், அவற்றின் அல்கோரிதம்களையும் முக்கியக் கருவிகளாகக் கையில் எடுத்துள்ளனர்.
நடைமுறை சார்ந்த பயன்பாடு
வானியல் துறையில் ஏ.ஐ பயன்படும் விதம் சுவாரசியமானது, உற்சாகம் அளிக்கக்கூடியது மட்டும் அல்ல. இதன் தேவையையும் புரியவைக்கக் கூடியது. ஏ.ஐ என்றதும் தானாகச் சிந்திக்கும் இயந்திரங்கள், மனிதரை விஞ்சும் ரோபோக்கள் என்றெல்லாம் முன்வைக்கப்படுவது புனைவுலகுக்கு ஏற்றதாக இருந்தாலும், பெரும்பாலான துறைகளில் ஏ.ஐ பயன்பாடு நடைமுறை சார்ந்ததாகவே இருக்கிறது. அதாவது, மனிதர்கள் தங்களுக்குச் சிக்கலாகவும் மலைப்பாகவும் தோன்றும் பணிகளில் ஏ.ஐ நுட்பத்தைத் துணைக்கு அழைத்துக் கொள்கின்றனர்.
இப்படித்தான், வானியலிலும் பிரபஞ்ச ரகசியத்தின் பல புதிர்களை விடுவிக்கும் முயற்சியில் ஏ.ஐ நுட்பங்களைத் தங்கள் சார்பாக அவர்கள் ஆய்வில் ஈடுபடுத்துகின்றனர்.
சில உதாரணங்கள்
ஜப்பானில் விண்வெளி ஆய்வாளர்கள் பிரபஞ்சத்தின் அமைப்பைக் கணிப்பதற்காக ஏ.ஐ உதவியை நாடியுள்ளனர். இன்னொரு பக்கம் விஞ்ஞானிகள் வானியல் தொலைநோக்கிகள் மூலம் விண்வெளியில் உள்ள பொருட்களைக் கண்டறிய ஏ.ஐ துணையை நாடியுள்ளனர். இவை தவிர, ‘எக்ஸோபிளானட்’ எனப்படும் வெளிக் கிரகங்களைக் கண்டறியவும், நியூட்ரான் நட்சத்திரங்களை இனம் காணவும் ஏ.ஐ நுட்பத்திடம் தஞ்சம் அடைந்துள்ளனர். இதே போல, நட்சத்திர மண்டலங்கள் இணையும் நிகழ்வையும் அலசி ஆராய ஏ.ஐ தான் சிறந்த வழி எனத் தீர்மானித்துள்ளனர். இன்னும் உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
வானியல் ஆய்வைப் பொறுத்தவரை தொலைநோக்கி கள்தான், பிரபஞ்சத்தை நோக்குவதற்கான சாளரங்கள். கலீலியோ காலத்து தொலைநோக்கியில் இருந்து விஞ்ஞான உலகம் மிகவும் முன்னேறிய, மேம்பட்ட அதிநவீன தொலைநோக்கிகளை உருவாக்கியிருக்கிறது. இந்தத் தொலைநோக்கிகள் மனிதக் கண்களுக்குப் புலப்படாத ஒளி ஆண்டுகளுக்குத் தொலைவில் உள்ள பிரபஞ்சக் காட்சிகளையும், பொருட்களையும் படம் எடுக்கும் ஆற்றல் கொண்டிருக்கின்றன.
இத்தகைய ஆய்வுகள் மூலம் சேகரிக்கப்படும் தரவுகள் ‘டெராபைட்’ கணக்கில் குவிகின்றன என்பதுதான் சிக்கல். தொலைநோக்கிகள் எடுக்கும் படங்கள் ஒன்றிரண்டு என்றால் மனிதக் கண்கள் அலசி ஆராய்ந்துவிடும். நூறு, ஆயிரம் என்றாலும் சமாளித்துவிடலாம். ஆனால், லட்சக்கணக்கில் குவியும் படங்களையும், அவற்றில் கொட்டிக் கிடக்கும் கோடானு கோடி தரவுகளையும் ஆராய்வது மனிதர்களால் முடியாதது.
அதனால் தான், தொலைநோக்கிக் காட்சிகளை ஓய்வில்லாமல் அலசி ஆராய்ந்து அவற்றில் இருந்து பொருட்படுத்தக்கூடிய விஷயங்களைக் கண்டறியும் பொறுப்பை ஏ.ஐ அல்கோரிதம் வசம் ஒப்படைத்துள்ளனர். இந்த நோக்கில் அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள மோர்பியஸ் (Morpheus) ஏ.ஐ மென்பொருள் நட்சத்திர மண்டலங்களின் தரவுகளில் இருந்து முக்கிய விஷயங்களைக் கண்டறிந்து சொல்கிறது.
ஆழ் கற்றல் துணை
ஆனால், வானில் என்ன தேட வேண்டும், எப்படித் தேட வேண்டும் என்பதை ஏ.ஐ மென்பொருளுக்கு முதலில் கற்றுத்தர வேண்டும். நாசா விஞ்ஞானிகள் ஆயிரக்கணக்கான நட்சத்திர மண்டலப் படங்களைக் காண்பித்து அவற்றில் உள்ள தகவல்களை அலச, மென்பொருளைப் பழக்கியுள்ளனர். இதற்கான நுட்பம் ஆழ் கற்றல் எனப்படுகிறது.
ஆழ் கற்றல் என்பது செயற்கை நுண்ணறிவின் முக்கிய அங்கமான இயந்திரக் கற்றலின் பிரிவாக அமைகிறது. இதில், கணினியைக் கொண்டு உருவாக்கப்படும் செயற்கை நியூரான் வலைப்பின்னல்கள் மனித மூளை இயங்கும் விதம் போலவே செயல்பட்டு தரவுகளில் ஒளிந்துள்ள சூட்சுமங்களைக் கண்டறிகின்றன. தொலைநோக்கிப் படங்கள் மூலம் பெறப்பட்ட தரவுகளைக் கொண்டு இவற்றுக்குப் பயிற்சி அளித்தால், புதிய தரவுகளை அலசி ஆராய இவை தயாராகிவிடும்!
வெளிக் கிரகங்கள் மீது வெளிச்சம்
இதே நுட்பத்தைக் கொண்டு, ‘எக்ஸோபிளானட்’ என அழைக்கப்படும் வெளிக் கிரகங்களையும் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். நம் சூரியன் போலவே பிரபஞ்சத்தில் எண்ணற்ற நட்சத்திரங்கள் இருப்பது தெரிந்ததுதான். இவற்றுள் சூரிய மண்டலம் போலவே, நட்சத்திரங்களை வலம்வரும் கிரகங்களும் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இவையே வெளிக் கிரகங்கள் எனச் சொல்லப்படுகின்றன.
கோட்பாடு அளவில் மட்டும் இருந்த இந்தக் கருத்தாக்கத்தை அண்மை ஆண்டுகளில்தான் நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளனர். அதாவது, 1990-களில் இருந்து தான் வெளி கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இப்போது, பிரபஞ்சத்தில் ஆயிரக்கணக்கில் வெளி கிரகங்கள் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
வெளி கிரகங்கள், நம்மைவிட்டு பல ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பதால் அவற்றைக் கண்டறிவது எளிதல்ல. ஆனால் தொலைநோக்கிகள் அவற்றைப் படம் எடுக்கும் திறன் பெற்றுள்ளன. இந்தப் படங்களில் உள்ள தரவுகளை ஆய்வு செய்வது சிக்கலான விஷயம். தொலைதூர நட்சத்திரங்களைச் சுற்றியிருக்கும், கிரகங்கள் ஒளியின் பாதையில் குறுக்கிடும்போது, வெளிச்சம் மங்கலாவது பதிவாகும். இந்தப் பதிவைக் கொண்டு கிரகங்களின் இருப்பைக் கணிக்கலாம். இந்தப் பணியை ஏ.ஐ அல்கோரிதம்கள் திறம்படச் செய்வதால், வானியல் ஆய்வாளர்களின் பணி எளிதாகிறது.
அதேபோல, தொலைநோக்கிப் படங்களில் காணப்படும் அமைப்பைப் பார்த்து, அவற்றைச் சுற்றியுள்ள பொருட்களை அல்கோரிதம்கள் கணித்துச் சொல்கின்றன. இவை பெரும்பாலும் துல்லியமாகவே இருக்கின்றன. ஆக, வானியல் ஆய்விலும் மலையென குவியும் தரவுகளைக் கையாள்வதிலும், அவற்றுக்கு நடுவே மறைந்திருக்கும் விஷயங்களைக் கண்டறியும் திறனிலும் ஏ.ஐ மனித குலத்துக்கு வழிகாட்டிவருகிறது!
கருந்துளைப் படம்
கடந்த 2019-ல் ‘ஈவென்ட் ஹொரைஸன்’ தொலைநோக்கி, முதல்முறையாகக் கருந்துளையைப் படம் எடுத்தது. இது அறிவியல் உலகின் மாபெரும் மைல் கல்லாக அமைந்தது. ஒரு காலத்தில் கற்பனை செய்துகூட பார்க்க முடியாமல் இருந்த இந்த அற்புத நிகழ்வைச் சாத்தியமாக்கியது ஏ.ஐ திறன் கொண்ட அல்கோரிதம்தான். உலகின் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்ட தொலைநோக்கி மையங்கள் மூலம் திரட்டப்பட்ட தரவுகளில் இருந்து தொகுக்கப்பட்டே இந்தப் படம் இறுதிசெய்யப்பட்டது. ஆம், தொலைநோக்கி தரவுகளை ஆய்வுசெய்து அவற்றை ஒன்றாக்கி அல்கோரிதம் தைத்த படம் இது!
(தொடரும்)