வரதட்சணைக்கு எதிராக ஓர் உண்ணாவிரதம்!- ஆளுநரின் அக்கறையும் அரசியல் சலசலப்பும்


என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

கல்வியறிவில் முன்வரிசையில் நிற்கும் கேரளத்தில், வரதட்சணைக் கொடுமைகள் அதிகரித்துவருவதை எதிர்த்துப் பல பிரபலங்களும், ஆளுமைகளும் குரல் கொடுத்துவருகிறார்கள். அந்த வரிசையில் அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான், வரதட்சணை பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை முடிவுக்குக் கொண்டுவரவும் வலியுறுத்தி ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தது, பலரையும் புருவமுயர்த்தச் செய்திருக்கிறது. கூடவே அரசியல் சலசலப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

தென்னகத்தில் முதல் முறை

கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ராஜ்பவனில் காந்திய வழியில் மக்களுக்கான அறைகூவலாக ஆளுநர் முன்னெடுத்த இந்த உண்ணாவிரதத்துக்கு எதிர்க்கட்சிகளான காங்கிரஸும், பாஜகவும் ஆதரவு தெரிவித்தன. ஒருமாநிலத்தின் ஆளுநர் உண்ணாவிரதம் இருப்பது தென்னிந்தியாவிலேயே இதுதான் முதல் முறை. இதனாலேயே ஆளுநரின் உண்ணாவிரதம் தேசிய அளவிலும் கவனம் பெற்றுள்ளது.

இதுகுறித்து ஆளுநர் மாளிகையில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் ‘காமதேனு’விடம் கூறுகையில், “திருமணச் சந்தையில் வரதட்சணை முக்கியப் பங்கு வகிப்பதும், பணம், நகை என்னும் மதிப்பீட்டிலேயே விலைமதிக்க முடியாத உயிர்கள் போவதையும் பார்த்து ஆளுநர் ஆரிப் முகமது கான் மிகவும் கவலையில் இருந்தார். வரதட்சணைக் கொடுமைகளுக்கு எதிராக யாரேனும் விழிப்புணர்வு நிகழ்வுகளை ஒருங்கிணைக்க முன்வந்தால் அவர்களில் ஒருவராக இருக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். பொதுவாகவே ஆளுநருக்கு காந்தியக் கொள்கையில் அதிகப் பிடிப்பு உண்டு. இந்நிலையில்தான் கேரளத்தில் அதிகரித்துவரும் வரதட்சணைக் கொடுமைகளுக்கு எதிராக விழிப்புணர்வூட்டுமாறு பல்வேறு காந்திய அமைப்புகள் அவரிடம் வலியுறுத்தின. அதன் தொடர்ச்சியாகத்தான் ஆளுநர் இந்த உண்ணாவிரதத்தைக் கையில் எடுத்தார். அதன் மூலம் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படும் என்று அவர் நம்புகிறார். வரதட்சணை கொடுப்பதும், வாங்குவதும் குற்றம் எனும் மனப்போக்கு மக்கள் மத்தியில் ஏற்படுவதில்தான் ஆளுநரின் மகிழ்ச்சியே இருக்கிறது’’என்றார்.

எதிர்க்கட்சிகளின் அரசியல்

ஆளுநரின் உண்ணாவிரதம் ஆளும் இடதுசாரிகளுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. கேரளத்தில் நடந்துவரும் வரதட்சணைக் கொடுமைகளை முன்வைத்து பினராயி விஜயன் அரசுக்கு எதிராகக் காங்கிரஸ், பாஜக கட்சிகள் பேசத் தொடங்கியுள்ளன.

இதுகுறித்து நம்மிடம் பேசிய கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன், “ஒரு மாநிலத்தில் ஆளுநர் உண்ணாவிரதம் இருப்பது மிகவும் அரிதான சம்பவம். ஆளுநர் ஒரு நியாயமான பிரச்சினையை எழுப்பியிருக்கிறார். அவரது உண்ணாவிரதம் அர்த்தமுள்ளதாக மக்களால் பார்க்கப்படுகிறது. இதில் அரசியல் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. மாறாக, இது பொதுவெளியில் வரதட்சணை குறித்த புரிதலை உருவாக்கும்” என்றார். ஆளுநரின் உண்ணாவிரதத்தின்போதே மத்திய அமைச்சர் முரளிதரன், ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்ததோடு, இது அரிதான நிகழ்வு எனவும் சுட்டிக்காட்டியிருந்தார். ஆனால், இடதுசாரிகள் இதுவரை எந்தக் கருத்தும் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!

விமர்சிக்கப்படும் மார்க்சிஸ்ட்டுகள்

கேரளத்தில், இடதுசாரி ஆட்சிகளில் பெண்களின் பாதுகாப்புக்குத் தனிக்கவனம் செலுத்தப்படுவதில்லை எனும் குற்றச்சாட்டு பரவலாகவே உண்டு. மார்க்சிஸ்ட் கட்சியில் தீவிரமாகச் செயல்பட்டு, காலப்போக்கில் அதிலிருந்து பிரிந்து ‘ஜனாதிபத்ய சம்ரக் ஷன சமிதி’ எனும் கட்சியைத் தொடங்கியவர் கே.ஆர்.கெளரியம்மா. அண்மையில் மறைந்த இவர்தான் கேரளத்தின் முதல் பெண் அமைச்சர். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கேரள சட்டப்பேரவையில் பொன்விழா நிகழ்ச்சி நடந்தது. அதில் கேரளத்தின் முதல் அமைச்சரவையில் இருந்தவர் எனும் முறையில், சட்டப்பேரவைக்கு அழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார் கெளரியம்மா.

அந்த நிகழ்வில் பேசிய கெளரியம்மா, “நானெல்லாம் எம்எல்ஏ-வாக இருந்தபோது நள்ளிரவில்கூட பணிகளை முடித்துவிட்டு வீட்டுக்குப் போவேன். இப்போது பகலில்கூட அது முடியவில்லை. முதல்வர் பினராயி விஜயன் சேலைகட்டிப் போனால்தான் பெண்களின் கஷ்டம் புரியும்” என பெண்களின் பாதுகாப்பை மையப்படுத்திப் பகிரங்கமாகவே விமர்சித்தார். அதேபோல் வரதட்சணையும் கேரளத்தில் சமூக அந்தஸ்தாகவே பார்க்கப்படுகிறது. அதைக் கிள்ளி எறிய ஆக்கபூர்வமான முன்னெடுப்புகளைச் செய்யவில்லை என்பது இடதுசாரி அரசாங்கத்தைத் துரத்தும் நீண்டகாலக் குற்றச்சாட்டாக உள்ளது.

ஆளுநரின் வருத்தம்

அண்மையில் வரதட்சணைக் கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண் விஸ்மயா வீட்டுக்கே சென்று, அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார் ஆளுநர் ஆரிப் முகமது கான். கேரளத்தில் ஆளுநர் பொதுவான ஒரு நிகழ்வுக்கு சென்றதும் இதுவே முதல் முறை. ‘ப்ரோட்டோகால்’ நெறிமுறைகளின்படி இப்படியான சமூகப் பிரச்சினையைத் தாங்கிய துக்க நிகழ்வுகளுக்கு ஆளுநர் செல்வதில்லை. ஆனால், இளம்பெண்களின் மரணங்கள் ஆளுநரைத் தூங்கவிடாமல் செய்தது. அதனால்தான் விழிப்புணர்வுக்காக உண்ணாவிரதமும் இருந்தார் என்கிறது ராஜ்பவன் வட்டாரம்.

விமர்சனங்கள் அதிகரித்துவரும் நிலையில், “இது அரசுக்கு எதிரான உண்ணாவிரதம் இல்லை. இந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கும்போதே கரோனா தடுப்பு விஷயத்தில் பினராயி விஜயன் அரசு முன்னெடுக்கும் பணிகளை ஆளுநர் குறிப்பிட்டுப் பாராட்டினார்” என தங்களுக்குள் சமாதானம் சொல்லிக்கொள்கின்றனர் காம்ரேடுகள்!

எது எப்படியோ, கேரளத்தில் வரதட்சணை எனும் அரக்கனால் பெண்கள் துன்பத்தில் உழல்வதைத் தடுக்க, ஆளுநரின் உண்ணாவிரமும் ஒரு காரணியாக இருந்தால் நல்லதுதானே!

x