சேட்டன் இனி எந்தா செய்வார்?


பாஜகவுக்கு எதிரான செய்திகளை அதிகம் வெளியிடுவதாக கேரள மாநில பாஜகவினர், ஏசியாநெட் டிவி நடத்தும் விவாத அரங்கங்களில் பங்கேற்பதில்லை என தீர்மானமே போட்டுள்ளனர். இத்தனைக்கும் அந்தச் சேனலின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் சந்திரசேகர், பாஜக சார்பில் கர்நாடகாவில் இருந்து ராஜ்ய சபாவுக்கு அனுப்பப்பட்டவர். ஆனாலும் தொழில் வேறு அரசியல் வேறு என இயங்கி வருவதால் சந்திரசேகர் மீது கேரள பாஜகவினருக்கு தீராத கோபம் உண்டு. அந்தக் கோபத்தில், மத்திய அமைச்சர் முரளிதரன் பேட்டியளித்தபோது அவருக்கு அருகில் இருந்த சந்திரசேகரை பாஜகவினர் வெளியேற்றிய வரலாறும் உண்டு. இந்நிலையில், அமைச்சரவை விரிவாக்கத்தில் ராஜீவ் சந்திரசேகரை மத்திய அமைச்சராக்கியுள்ளது பாஜக தலைமை. நாயர் சமூகத்தின் உட்பிரிவான நம்பியார் பிரிவைச் சேர்ந்த இவரை அமைச்சராக்கியதன் மூலம் கேரளத்தில் கணிசமாக இருக்கும் நாயர் சமூகத்தினரின் அபிமானத்தைப் பெறலாம் எனக் கணக்குப் போடுகிறது பாஜக. மத்திய அமைச்சர் ஆகிவிட்டதால் சேனல்கார சேட்டன் இனிஎந்தா செய்வார் என ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறது கேரள பாஜக!

x