“உள்ளாட்சித் தேர்தலில் கோவையில் திமுகவை வெற்றிக் கொடிநாட்ட வைக்க வேண்டியது எனது பொறுப்பு. அதற்கான ‘அனைத்தை’யும் நானே பார்த்துக் கொள்கிறேன்” என்று உற்சாகம் பொங்கச் சொல்லித்தான் டாக்டர் மகேந்திரன் திமுகவில் இணைந்தாராம். ஆனால், அவரது வருகையை, ஏற்கெனவே திமுகவில் பழம் தின்று கொட்டைபோட்ட சீனியர்கள் அவ்வளவாய் ரசிக்கவில்லையாம். “சொந்தக் கட்சியில் இருப்பவர்களுக்கு திமுகவில் இப்போது மரியாதை இல்லை. மாற்றுக் கட்சியில் இருந்து வருகிறவர்களுக்கே இப்போது ராஜமரியாதை. இதைப் புரிந்துகொண்டு, அதிமுக ஆட்சியில் டாஸ்மாக் பார் நடத்தியவர்களும், ஆவின் பூத் குத்தகைக்கு எடுத்தவர்களும் இப்போது திமுகவிற்கு வந்து விட்டார்கள். இதில் மகேந்திரன்கள் வருகைக்கு கொண்டாட்டம் வேறு. வந்தேறிகளுக்கு வாழ்வளித்து காலங்காலமாய் கட்சிக்கு உழைத்தவர்களை எல்லாம் ஓரங்கட்டினால், கட்சி எப்படி வளரும்?” என்று கேள்வி எழுப்புகிறார்கள் அந்த சீனியர்கள்.