நிமோன்டே எனும் வனமகள்!- இயற்கையைக் காக்கும் வோரானி சமூகப் பெண்


வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in

பருவநிலை மாற்றத்தின் கொடும் விளைவுகள் குறித்து, இன்றைக்கு நாம் பேசிக்கொண்டிருக் கிறோம். ஆனால், இயற்கை வளங்கள் சூறையாடப்படுவதால் பருவநிலை மாற்றம் ஏற்படும்; அதன் விளைவாகப் பேரழிவுகள் நிகழும் என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்து முதலில் எச்சரித்தவர்கள் இந்த பூமியின் பூர்வகுடிகள்தான்.

ஈகுவெடார் நாட்டின் அமேசான் மழைக்காடுகளில் வசிக்கும் வோரானி பூர்வகுடிகள், இயற்கையுடனான பந்தத்தை இன்றுவரை தொடர்பவர்கள். இந்தப் பூர்வகுடிகளில் ஒருவரான நிமோன்டே நென்கிமோ எனும் 36 வயது பெண்ணின் வாழ்க்கை, உலகெங்கும் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்களை உத்வேகம் கொள்ளச் செய்யும் போராட்ட வாழ்க்கை. பருவநிலை மாற்றம் தொடர்பான ஐநா அமைப்பான யு.என்.எஃப்.சி.சி.சி, சமீபத்தில் இவரது பேட்டியை வெளியிட்டுச் சிறப்பித்திருக்கிறது.

பிரேசில், பெரு, ஈகுவெடார் என பத்து நாடுகளில் பரந்து விரிந்திருக்கின்றன அமேசான் மழைக்காடுகள். இதில் ஈகுவெடார் நாட்டில் அமைந்திருக்கிறது வோரானி பிரதேசம். அமேசான் பாஸ்தாசா மாகாணத்தில் உள்ள 20 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருக்கும் வனப் பகுதி இது. 1950-களின் இறுதியிலேயே இங்குள்ள மழைக்காடுகள் ஆக்கிரமிப்புக்குள்ளாகிவிட்டன. எண்ணெய் வளம் மிக்க பகுதி என்பதால் எண்ணெய் நிறுவனங்களுக்கு இந்த வனப்பகுதியைத் தாரைவார்த்தது ஈகுவெடார் அரசு. இதனால் இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டன. அதுவரை இயற்கையின் விதியில் எந்த மாற்றமும் இல்லாமல் இயங்கிக்கொண்டிருந்த வனம், தன் குணத்தை மாற்றிக்கொள்ள நேர்ந்தது. ஆறுகளில், அடிக்கடி ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு போன்ற பேரிடர்கள் பூர்வகுடிகளைக் கலக்கத்தில் ஆழ்த்தின. அதுதொடர்பாக அவர்கள் எழுப்பிய கூக்குரல்கள் கண்டுகொள்ளப்படவில்லை.

x