அமமுக உட்பட அனைவரும் ஒன்று சேர்வது காலத்தின் கட்டாயம்!- ‘நமது அம்மா’ மருது அழகுராஜ் பேட்டி


கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

திமுகவுக்கு எதிராக சும்மாவே சலங்கை கட்டி ஆடுவார் ‘நமது அம்மா' மருது அழகுராஜ். இப்போது எதிர்க்கட்சி வேறு. கவிதையும், கட்டுரையுமாக அடி தூள் பறத்துகிறார். ‘காமதேனு'வுக்காக அவருடன்  உரையாடியதின் சுருக்கம் இங்கே.

திருப்பத்தூரில் உங்கள் தோல்விக்கு என்ன காரணம்?

காரணங்கள் ஏராளம். திமுக சாதி ரீதியாக வாக்குகளைப் பிரித்துவிட்டது. நாதக, அமமுக வேட்பாளர்களும் அதிமுக ஓட்டுக்களையே பிரித்தார்கள். இன்னொரு விஷயம், பிரசாந்த் கிஷோர் டீமானது 234 தொகுதியிலும் ஸ்டாலினே போட்டியிடுவதாகக் கருதி கடுமையாக வேலை பார்த்தது. ஆனால், எங்களுக்கு அப்படியான வியூக அமைப்பு இல்லை. அந்தப் பணிக்கு நியமிக்கப்பட்டவர்களும் அப்படி வேலை செய்ததாக எனக்குத் தோன்றவில்லை. களத்தில் நான் கைவிடப்பட்டதாகவே உணர்ந்தேன். எங்களின் வெற்றிக்கு வழிகாட்டுவதில் எங்களுடைய மாவட்டத் தலைமை தொடங்கி மாநிலத் தலைமை வரையில் கொஞ்சம் சுணங்கிவிட்டதாகவே நினைக்கிறேன். அப்படியிருந்தும், கடந்த தேர்தலில் அம்மா இருந்தபோது, அதிமுக ஒற்றுமையாக இருந்தபோது எவ்வளவு வாக்குகளை பெற்றோமோ அதே வாக்குகளை வாங்கியிருக்கிறேன். எனவே, என்னைப் பொறுத்தவரையில் இந்தத் தேர்தலில் நான் வெற்றி பெற்றதாகவே கருதுகிறேன்.

x