மதிப்பெண் வழங்க பேரம் பேசும் தனியார் பள்ளிகள்!- ‘ஆயிஷா’ இரா.நடராஜன் பேட்டி


ம.சுசித்ரா
susithra.m@hindutamil.co.in

கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில், தமிழக கல்விச் சூழலில் அதிகம் ஒலித்த பதம் ‘ஆல் பாஸ்’. கடந்த ஆண்டு பெருந்தொற்றை எதிர்கொள்ளும் ஆற்றலும் திட்டமும் இல்லாத காரணத்தால், பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதில் ஒரு நியாயம் இருந்தது. ஆனால் இந்த ஆண்டும், “9, 10, 11-ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்” என்று பிப்ரவரியில், சட்டப்பேரவையில் அறிவித்தார் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி. மறுபுறம் மாணவர்களின் உயர்கல்விக்கு 10-ம் வகுப்பு மதிப்பெண்கள் அவசியம் என்பதால், அதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை ஆலோசித்து வந்தது. 9-ம் வகுப்பு மதிப்பெண்களைப் பிரதானமாக வைத்து, 10-ம் வகுப்புக்கான மதிப்பெண்களை நிர்ணயிக்க முடிவெடுத்தது. இந்நிலையில், தற்போது 10-ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. நன்றாகப் படிக்கும் பல மாணவர்களுக்கு மிகக் குறைந்த மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருப்பது இதில் தெரியவந்துள்ளது. இது மாணவர்களையும் பெற்றோர்களையும் கவலையில் ஆழ்த்தி யிருக்கிறது. இதுகுறித்து கல்வியாளர் ‘ஆயிஷா’ இரா.நடராஜனுடன் பேசினோம்.

10-ம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில்தான் ப்ளஸ் 1-ல் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்நிலையில், 9-ம் வகுப்பை முன்வைத்து வெளிவந்துள்ள 10-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

எப்போது 10-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வை நடத்த முடியாமல் போனதோ, அப்போதே, ‘மாணவர்களின் விருப்பப்படி ப்ளஸ் 1-ல் குரூப் வழங்கப்படும்’ என்ற அரசாணையை மத்திய - மாநில அரசுகள் வெளியிட்டிருக்க வேண்டும். அப்படி நடந்திருந்தால் கல்வி சரியான திசையில் பயணிப்பதாக வரவேற்கலாம். சொல்லப்போனால், 10-ம் வகுப்புக்கு மட்டுமல்ல, 9-ம் வகுப்புக்கும் கடந்த ஆண்டு இறுதித் தேர்வு நடத்தப்படவில்லை. அப்படியிருக்க 9-ம் வகுப்பின் காலாண்டுத் தேர்வா அல்லது அரையாண்டுத் தேர்வா எதன் அடிப்படையில் தற்போது மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன என்பதில் தெளிவில்லை. அடுத்து, இந்த ஆண்டு ஜனவரி மாதம் 10-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டன. அந்த வருகைப்பதிவும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. இதுதவிர, 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுத மாணவர் பதிவு செய்திருந்தாரா என்பதைக் கண்டறிய உதவும் ஆதார் எண்ணுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. உண்மை யாதெனில் பல பள்ளிகளில் 9-ம் வகுப்புக்குக் காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் முறைப்படி நடத்தப்பட்டதற்கான அத்தாட்சி இல்லை. மொத்தத்தில் இது கற்பனையில் வடிக்கப்பட்ட மதிப்பெண் பட்டியல். இதைவைத்து மாணவர்களின் எதிர்காலத்தை எப்படித் தீர்மானிப்பது?

x